Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-26

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-26

🌸

சென்னையில்

 

 சென்னை இளைஞர்களை  நம்புகிறேன்.

 

 சுவாமி விவேகானந்தரைக் கண்டு பிடித்தது தமிழ் நாடு என்று தாராளமாக உரிமை கொண்டாட முடியும். அதனால்  தானோ என்னவோ சுவாமிஜியும் தமிழ் நாட்டின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவரது தமிழ் நாட்டுச் சொற்பொழிவுகளில் இந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளையும் மிகத் தெளிவாக க் காண முடியும். சென்னை இளைஞர்களே, உங்கள் மீதே  என் நம்பிக்கை உள்ளது. என்று சுவாமிஜியும் அதனால் தான் தமது கடிதங்களில் குறிப்பிடுகிறார். அது மட்டுமின்றி, அவரது அறை கூவலுக்கு முதன் முதலில் செவி சாய்த்து , ஒரு நிலையான ஆன்மீக மையம் தமிழ்நாட்டில் வேண்டும்  என்று சென்னை மக்களே அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

 தான் கண்டு பிடித்த ஒரு துறவி மேலை நாட்டில்  இந்திய ஆன்மீகத்தின் வெற்றிக்கொடியை நாட்டிவிட்டு, தாயகம் திரும்பும்போது தமிழ் நாடு, குறிப்பாக சென்னை  எவ்வளவு குதூகலித்திருக்கும். அவருக்குக்கொடுத்த வரவேற்பு போல் அது வரை எந்த அரசியல் தலைவருக்கோ, வேறு எந்தத் தலைவருக்கோ கொடுக்கப் படவில்லை என்று   The hindu முதலான தினசரிகள் எழுதின.

 

சுவாமிஜியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் 1896 டிசம்பர் இறுதியில் துவக்கப் பட்டன. மிசம்பர் 21-ஆம் நாள் அளசிங்கரும் பிறரும் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கேஸில் கெர்னன் என்ற கட்டிடத்தில்  கூடி வரவேற்புக் குழு ஒன்றை அமைத்தனர். சுவாமிஜியின் சீடர்களான அளசிங்கர், பாலாஜி ராவ், பி. சிங்கார வேறு முதலியார் ஆகியோருடன் சென்னையின் முக்கியப் பிரமுகர்களான  வி. பாஷ்யம் ஐயங்கார், பேராசிரியர் எம். ரங்காச்சாரியார்,  வி. கிருஷ்ண சுவாமி ஐயர்,  வி. சி. சேஷாச்சாரியார், பேராசிரியர். கே. சுந்தரராம ஐயர், டாக்டர்- நஞ்சுண்ட ராவ். பி. ஆர். சுந்தர ஐயர் ஆகியோரும் இதில் பங்கு வகித்தனர். நீதிபதி சுப்பிரமணிய ஐயர் தலைவராக நியமிக்கப் பட்டார். தியாசபிகல் சொசைட்டியின் கர்னல் ஆல்காட்டும், இந்தியாவின் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக வந்த டாக்டர் பரோசும் இந்த வரவேற்புக் குழுவில் அங்கம் வகித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

 

 எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கேஸில் கெர்னன் வரை அலங்கார வளைவுகள், தோரணங்கள், முதலியவை அமைப்பதென்று ஏற்பாடாயிற்று, கேஸில் கெர்னனுக்கு முன்பாக  ஒரு பந்தல் எழுப்பப் பட்டது. சுவாமிஜி தங்குவதற்காகவும் அவரது வரவேற்பு ஏற்பாடுகளுக்காகவும் கர்னல் ஆல்காட் ஒரு பங்களாவையும்ஒரு ஹாலையும்  அளித்திருந்தார். ஆயினும் சுவாமிஜி கேஸில் கெர்னனில் தங்குவதென்று முடிவாயிற்று.சுவாமிஜி வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு தமிழ் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் சென்னை நகருக்கு வரத் தொடங்கினர். அவர்களுள் இளைஞர்களும் மாணவர்களும் அதிகமாக இருந்தனர். வெளியூரிலிருந்து தேர்வுகள்  எழுதுவதற்காக  வந்த மாணவர்கள் பலர் தேர்வுகள் முடிந்த பிறகும்  சுவாமிஜியைத் தரிசிப்பதற்காக சென்னையிலேயே தங்கினர். விடுதி வாடகை அதிகரிப்பதையும், உடனடியாக வருமாறு பெற்றோர் வற்புறுத்துவதையும் பொருட்படுத்தாமல்  அவர்கள் சுவாமிஜிக்காகக்  காத்திருந்தனர். நாட்கள் நெருங்க நெருங்க சுவாமிஜி எப்போது வருகிறார்? என்ற கேள்வி அனைவர் மனத்திலும் எழுந்து நின்றது.

 

மீனவர்களின் குதூகலம்

 

 சென்னைக்கு அருகில் ஒரு ரயில் நிலையத்தில்  சுவாமிஜியைத் தரிசிப்பதற்காக மக்கள் தண்ட வாளத்தில்  படுக்க நேர்ந்தது பற்றி ஏற்கனவே கண்டோம். அந்தக் கூட்டத்தில் இருந்தார் சூரஜ்ராவ் என்ற இளைஞர். மகாராஷ்டிரத்தைச்சேர்ந்த இவர்  சுவாமிஜி தாயகம் திரும்பியதைக்கேள்விப்பட்டு  வெரைக் காண வந்திருந்தார். ரயில் நிலையத்தில் அவரைக் கண்ட பிறகு  சென்னைக்கு வர எண்ணினார் அவர்.ஆனால் அவரிடம் பயணத்திற்கான பணம் இல்லை. எனவே அவர் கடற்கரை வழியாக நடக்கத் தொடங்கினார். வழியில் மீனவர் குடிசைகள் இருந்தன.  எல்லா குடிசைகளிலும்  வரிசை  வரிசையாக விளக்குகள் ஏற்றப்பட்டு அந்தப் பகுதி  ஒளி மயமாகக் காட்சி அளித்தது. காரணம் புரியாத சூரஜ்ராவ் அங்கே ஒருவரிடம் அது  பற்றி கேட்டார். ஏன்,  உங்களுக்குத் தெரியாதா? சென்னைக்கு ஜகத்குரு  வருகிறார் என்று பதில் வந்தது. சுவாமிஜியின் வரவு பற்றி ஏழை மீனவர்களும் அறிந்திருப்பது அவருக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது.

 

சுவாமிஜி வருகிறார்

 

 எழும்பூர் ரயில் நிலையம் முதல் மெரினா வரை அலங்காரங்களும் தோரணங்களும்  அழகு செய்தன. விவேகானந்தர் நீடூழி வாழ்க! இறைவனின் தொண்டன் வாழ்க! பண்டைய முனிவர்களின் தொண்டன் வாழ்க! புதிய பாரதம் வாழ்க! சுவாமி விவேகானந்தருக்கு நல்வரவு! அமைதியின் தூதனுக்கு நல்வரவு! ராமகிருஷ்ணரின் உன்னதப் புதல்வனுக்கு நல்வரவு! அரசிளங்குமாரனுக்கு அன்பான வரவேற்புகள்!  என்றெல்லாம் வாசகங்கள் கொண்ட அலங்கார வளைவுகள் வழியில் எழுப்பப் பட்டன.  உண்மை ஒன்றே, மகான்கள் அதைப் பலவாக அழைக்கிறார்கள். என்ற வேத  வாக்கியமும்  சம்ஸ்கிருதத்தில் பல இடங்களில் காணப் பட்டது. பிப்ரவரி 6-ஆம் நாள் அதிகாலையிலிருந்தே ரயில் நிலையத்தில் கூட்டம் திரளத் தொடங்கியது. டிக்கட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில்  நிலையத்திற்குள் போக முடியும் என்றிருந்தாலும்  நிலையத்தினுள்  கூட்டம் அலை மோதியது.  கொடிகளும் ஓலைத்தோரணங்களும் வளைவுகளுமாக ரயில்  நிலையம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

 சுவாமிஜி பயணித்த ரயில் காலை 7.30 மணியளவில் வந்து சேர்ந்தது. சுவாமிஜி பெட்டியிலிருந்து இறங்கியதும் ”ஜெய் விவேகானந்தா என்ற கோஷம் எங்கும் எழுந்தது. சுவாமிஜியின் மீது மழையென பன்னீர் தெளிக்கப் பட்டது. ரோஜா இதழ்கள்  தூவப்பட்டன. நீதிபதி  சுப்பிரமணிய ஐயர் சுவாமிஜிக்கு மலர் மாலை அணிவித்து, மல்லிகைச்செண்டு ஒன்றை அளித்து அவரை வழிநடத்தினார். சுவாமிஜியுடன் நிரஞ்ஜனானந்தரும் சிவானந்தரும்  இறங்கினர். அவர்களுடன் குட்வின் பஞ்சகச்சம் கட்டிய பிராமணக்கோலத்தில்  முற்றிலும் ஓர் இந்தியனாக இறங்கியது அனைவர் கருத்தையும்  கவர்ந்தது. நெரிசல் காரணமாக மிக  மெதுவாகவே சுவாமிஜி  வெளியில் வர முடிந்தது. பான்ட்கள் முழங்கின.

 

 இரண்டு கம்பீரமான வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் சுவாமிஜி ஏறினார். அதனைத்தொடர்ந்து பல வண்டிகள் ஊர்வலமாக வந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட போலிஸ்காரர்கள் போக்குவரத்தைச் சீர் செய்த வண்ணம் இருந்தனர். வழியெங்கும் சுவாமிஜியின் மீது மலர் மழை பொழியப்பட்டது. பழங்கள் போன்ற காணிக்கைப்  பொருட்கள் சமர்ப்பிக்கப் பட்டன.

  சுவாமிஜியின் வரவேற்பைக் காண்பதற்காக அவரது முதற் சீடரான சதானந்தர்  அங்கே வந்திருந்தார். கூட்டத்தில்  நிற்காமல் வழியில் ஓரிடத்தில் ஒதுங்கிநின்று தமது  குருவைத் தமிழ்நாடு போற்றி வணங்குவதைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாகச் செல்லும்போது சுவாமிஜி யின் கண்கள் அவர் மீது பட்டன. அன்பு , கரைபுரண்டோட, மகனே, சதானந்தா, இங்கே வா, என்று கூவினார் சுவாமிஜி. வண்டியை நிறுத்தி தம் அன்பு மகனை அருகில் அழைத்து தம் அருகில் அமர்த்திக்கொண்டார்.

 

வழியில் ஓரிடத்தில் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு  மூதாட்டி ஒருத்தி வந்து  சுவாமிஜியைப் பணிந்தாள். இலங்கையில்  ஆரம்பித்த  கருத்து இங்கேயும் பரவியிருந்தது. அந்த மூதாட்டி சுவாமிஜியைத்  திருஞான சம்பந்தரின் அவதாரம் என்றே கருதினாள். அவ்வாறே கூறி சுவாமிஜியை வணங்கிய அவள், ஞான சம்பந்த மூர்த்தியின் அவதாரமான சுவாமிகளை வணங்கி தான் தன் பாவங்களிலிருந்து கடைத்தேறுவதாக த் தெரிவித்தாள்.

 ஊர்வலம் ” ஆந்திர ப்ரகாசிகா, அலுவலகத்திற்கு எதிரில் வந்தபோது சற்று நிறுத்தப் பட்டது. அங்கே பந்தல் இடப்பட்டிருந்தது. சென்னை வாழ் தெலுங்கு மக்களின்  சார்பில் அங்கே சுவாமிஜிக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது. அன்று வசந்த பஞ்சமி நாள். மன்மதன் அல்லது மதனனைப்போற்றும் நாள் அது. அழகுக்குத் தலைவன் மன்மதன். அந்த வரவேற்பில்  மன்மதனையும் சுவாமிஜியையும்  ஒப்புமைப் படுத்திப் பேசப்பட்டிருந்தது. மன்மதன் மலர் அம்பினால்  வெல்கிறான் நீங்களோ உங்கள்  தெய்வீக ஆற்றலால்உங்கள் குரலால் , உங்கள் சொல்லாற்றலால் வென்றீர்கள் என்று அவர்கள், அந்த வரவேற்பில் கூறியிருந்தார்கள். மற்றோர் இடத்தில் சம்ஸ்கிருத வரவேற்புரை  அளிக்கப் பட்டது.

 

 சுவாமிஜியின் ஊர்வலம் சிந்தாதிரிப்பேட்டை, நேப்பியர் பார்க், மௌண்ட ரோடு, வாலாஜா ரோடு, சேப்பாக்கம், பைக்ராப்ட்ஸ், கடற்கரை சாலை வழியாகச் சென்றது. சிந்தாதிரிப்பேட்டையிலும்  வேறு பல இடங்களிலும் பெண்கள் சுவாமிஜிக்கு கற்பூர ஆரதி காட்டினர். தெய்வ விக்கிரகங்களை வீதி உலாவிற்காக வெளியே கொண்டு செல்லும்போது என் னென்ன மரியாதைகளும் வழிபாடுகளும் செய்யப்படுமோ அத்தனையும் சுவாமிஜிக்குச் செய்யப் பட்டது.

 ஊர்வலம் சேப்பாக்கத்தை அடைந்தபோது பஜனைகுழு ஒன்று இயைந்து கொண்டது. அங்கே ராஜா ஈஸ்வர தாஸ் பகதூர் எழுப்பிய அழகிய அலங்கார வளைவு ஒன்று இருந்தது. ஊர்வலம் அதைக் கடந்தபோது பான்ட் குழு ஒன்று சேர்ந்து கொண்டது. கேஸில் கெர்னன் வரை இந்தக் குழு வாத்தியக் கருவிகளை இசைத்தபடி வந்தது.

 கடைசியாக ஊர்வலம்  கடற்கரை சாலையை அடைந்தது. அங்கும் ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் இணைந்தார்கள். இவர்களில் மாணவர்கள் மிக அதிகமாக இருந்தார்கள். இந்த மாணவர்கள், சுவாமிஜி எவ்வளவோ தடுத்தும், குதிரைகளை  அவிழ்த்து விட்டு விட்டு, தாங்களே சுவாமிஜியின் வண்டியை இழுக்க ஆரம்பித்தார்கள். கேஸில் கெர்னன் வரை மாணவர்களே இழுத்தார்கள். அற்புதக் காட்சி அல்லவா அது!

சுமார் 9.30 மணிக்கு சுவாமிஜி கேஸில் கெர்னனை அடைந்தார். அங்கே இடப்பட்டிருந்த பந்தலில் அவருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது. அந்த மாளிகையும் சிறப்பாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.  அங்கேயும் சுவாமிஜிக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது. சம்ஸ்கிருதத்திலும் கன்னடத்திலும்  வரவேற்பு உரைகள் வாசிக்கப் பட்டன. சுவாமிஜியை வரவேற்றுப்பேசிய ஓரிரு சிறிய உரைகளுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. சுவாமிஜிக்கு  ஒய்வு தேவை என்பதற்காக, அனைவரும்  கலைந்து செல்லுமாறு சுப்பிரமணிய ஐயர் கேட்டுக்கொண்டார்.

சுவாமிஜி தமது சகோதரத் துறவிகளுடன் உள்ளே சென்று சிற்றுண்டி அருந்திவிட்டு ஓய்வெடுத்தார்.ஆனால் அது நீண்டநேரம் நீடிக்கவில்லை. அவர்  சென்னையில் தங்கும் நாட்களுக்கு உரிய  நிகழ்ச்சிகளை வகுப்பதற்காக அளசிங்கரும் பிறரும் அவரது அறைக்குச் சென்றனர். நான் எந்தெந்த தலைப்பில் பேச வேண்டுமோ, அவற்றை  நீங்களே தேர்ந்தெடுத்து எனக்குத் தெரிவித்தால் போதும் என்று சுவாமிஜி கூறிவிட்டார்.”எனது போர் முறை இந்திய ரிஷிகள்வேதாந்தமும் செயல்முறை வாழ்க்கையும்  ” ” இந்தியாவின் எதிர்காலம் ஆகிய நான்கு முக்கியத் தலைப்புகளை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

 

சுவாமிஜி சென்னையில் ஒன்பது நாட்கள் தங்கினார். அது சென்னை மக்களுக்கு  ஒரு நவராத்திரி தான். ஒவ்வொரு  நாளும் சுவாமிஜியின்  சொற்பொழிவு, பேட்டி என்று கேஸில் கெர்னன் ஓர் ஆனந்தச்சந்தையாக  மாறி விட்டிருந்தது. அந்தத் தெய்வ மனிதருடன் வாழும் பேற்றைப்பெற்ற  ஒவ்வொருவரும்  ஆனந்தத்தில் மிதந்தார்கள். குறிப்பிட்ட சில நேரம் தான் சுவாமிஜியைச் சந்திக்க இயலும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.ஆனால் நடந்தது வேறு. காலையிலிருந்து மாலை வரை, அது போல் இரவிலும் தொடர்ந்து ஆண்களும் பெண்களும் வந்து  சுவாமிஜியைத் தரிசித்த வண்ணம் இருந்தனர். சுவாமிஜி திரு ஞான சம்பந்தரின்  அவதாரம் என்ற கருத்து வேறு பரவத் தொடங்கியதால் கூட்டம் இன்னும் அதிகமாயிற்று.

 

 தினமும் பல பெண்கள் வந்து சுவாமிஜியின் திருப் பாதங்களில் மலரிட்டு வழிபட்டனர். திருப்பதியிலிருந்து வந்த முதியவர் ஒருவர்  சுவாமிஜியின் பாதங்களில் பணிந்து, மலர் மாலைகள் அணிவித்து,  நீங்கள் வைகானஸரின் அவதாரமே என்று கூறி, கண்களில் கண்ணீருடன் விடை பெற்றார்.

 வந்தவர்கள் அனைவரும் சுவாமிஜியை வரவேற்பதற்கும், வழிபடுவதற்கும் மட்டுமே வந்தார்கள் என்பதில்லை. அவருடன் வாதிட்டு, அவரைத் தங்கள் வழிக்குக்கொண்டு வந்து விடலாம் என்று சிலர், அவரது அறிவுத் திறமையைச் சோதிப்பதற்காகச் சிலர், அவரையே சோதிப்பதற்காக சிலர்  என்று பலதரப் பட்டவர்கள் அங்கே கூடினர். இவை ஒன்றும் சுவாமிஜிக்குப் புதியவை அல்ல. எல்லா சூழ்நிலைகளையும் அதற்கேற்ப எதிர்கொண்டு, வெற்றி வீரராகத் திகழ்ந்தார் சுவாமிஜி. உதாரணத்திற்கு ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம்.

 ஒரு நாள் ஒரு பண்டிதர் சுவாமிஜியைக் காண வந்தார். பிராமணர்களுக்கு மட்டுமே சன்னியாசத்திற்கு உரிமை உண்டு.  நீங்கள் ஒரு சூத்திரர். நீங்கள்  எப்படி சன்னியாசி ஆகலாம்? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, ஒவ்வொரு பிராமணனும், யமாய தர்ம ராஜாய சித்ரகுப்தாய வை நம. என்று ஓதிக்கொண்டு யாருடைய திருவடிகளில் மலர்களை அர்ப்பிக்கிறானோ அந்தச் சித்ரகுப்தனின் வழி வந்தவன் நான். எனவே பிராமணர்களுக்கு சன்னியாசம் பெற உரிமை உண்டு என்றால் எனக்கு அவர்களைவிட அதிக உரிமை உண்டு. என்று கூறினார். அதன் பிறகு அந்தப் பண்டிதரிடம், நீங்கள் சம்ஸ்கிருதத்தில்  என்னிடம் கேள்வி  கேட்டீர்கள், ஆனால் உங்கள்  சம்ஸ்கிருத உச்சரிப்பில்  மன்னிக்க முடியாத தவறு இருக்கிறது. வார்த்தைகளைத்  தரம் தாழ்த்தக் கூடாது, தவறாக உச்சரிக்கக் கூடாது என்று பாணினியே  கண்டிக்கிறார். எனவே இந்த விவாதத்தைத் தொடரும் தகுதி உங்களுக்கு இல்லை, என்று கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

பிப்ரவரி 7- கேள்வி- பதில்

 

 காலையில் சுமார் 200 பேர் கேஸில் கெர்னனுக்கு முன்னால் போடப் பட்டிருந்த பந்தலில்  பந்தலில் கூடினார்கள். அன்று-கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெறுவதாக  இருந்தது.  மனத்திற்கும் ஜடப்பொருளுக்கும்  உள்ள வேறுபாடு என்ன, கடவுளுக்கு உருவம் உண்டா இல்லையா, போன்ற பல கேள்விகள்  கேட்கப் பட்டன. சுவாமிஜி  அனைத்திற்கும்  பொறுமையாக, தெளிவாகப் பதில் அளித்தார். காலை ஒன்பது மணியளவில் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு, மீண்டும் மாலையில் தொடரும் என்று அறிவிக்கப் பட்டது.

 மாலையில் திருப்பத் தூரிலிருந்து சைவர்கள் சிலர் வந்திருந்தனர். அத்வைத நெறி சம்பந்தமாக ஒரு கேள்வித் தாளுடன் வந்தனர். சுவாமிஜி அவர்களுக்குப் பதில் அளிக்கத் தயாரானார்.

 

கேள்வி-  வெளிப் படாமல்  இருக்கின்ற பரம் பொருளிலிருந்து, வெளிப்பட்டுத் தோன்றுகின்ற இந்த உலகம் எப்படித் தோன்றியது?

 பளிச்சென்று வந்தது சுவாமிஜியின் பதில்

 

 சுவாமிஜி- எப்படி, ஏன், எங்கிருந்து போன்ற கேள்விகள், உலகத்தைச் சார்ந்தவை. பரம்பொருளோ உலகத்தைக் கடந்தவர். மாற்றங்கள், காரிய- காரண நியதி போன்ற வற்றைக் கடந்தவர். எனவே உங்கள் கேள்வி சரியானதல்ல. சரியான கேள்வியைக்கேளுங்கள், பதில் சொல்கிறேன்.

 இவ்வாறு அவர்கள் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் தகுந்த பதில் தாமதமின்றி வந்தது. கேள்விகள் கேட்டு இவரைத் திணறடித்துவிடலாம், மடக்கிவிடலாம் என்றெல்லாம் யாராவது நினைத்திருந்தால் அது தவறென்று அப்போது நிரூபணமாயிற்று. கேள்வி கேட்டவர்கள் அமைதியாயினர்.

 கேள்விகள் அனைத்திற்கும் கம்பீரமாகப் பதிலளித்த சுவாமிஜி பிறகு கருணையின் வடிவானார். அமைதியாகக் கூறினார். கடவுளுக்குத் தொண்டு செய்வதற்கும், அவரை நாடுவதற்கும்  மிகச் சிறந்த வழி ஏழைகளுக்குச்சேவை  செய்வது தான். பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது, துன்பத்தில் வாடுபவர்களைத்தேற்றுவது, வீழ்ந்தோரையும் ஆதரவற்றவர்களையும் கைகொடுத்துக் காப்பது நோயாளிகளைக் கவனித்துத் தொண்டு செய்வது- இவை தான் வேண்டியவை.

சுவாமிஜியின் இந்த அன்புக் குரலைக்கேட்ட பிறகு மனம் நெகிழ்ந்த சைவர்கள் புறப்பட்டனர். அவர்களுக்கு அன்று ஆன்மீகம் பற்றிய ஒரு புதிய ஒளி கிடைத்தது என்பதை அவர்களது முகம் காட்டியது.

 

பின்னர் சுவாமிஜியின் மீது இயற்றப்பட்ட சம்ஸ்கிருதக் கவிதை ஒன்று வாசித்து அளிக்கப்பட்டது. மீண்டும் கேள்விகள் தொடர்ந்தன.

 

 கேள்வி- வினை- விதி- இரண்டிற்கும் வேறுபாடு என்ன?

 

சுவாமிஜி- வினை என்பது ஒருவர்  செய்த செயல்களின் விளைவு, விதி என்பது யாரோ ஒருவர் நம் மீது திணிப்பதாகக் கருதப்படுவது. வினை என்பது செய்கின்ற, செய்த செயல்களின் விளைவாக இருப்பதால்  நம்மால் அதனை மாற்றி அமைக்க முடியும். அதாவது நம் வினையை நாம் நிர்ணயித்துக்கொள்ளலாம். ஆனால் விதி எதிர்மறையானது. நம் வாழ்க்கையை நாம் விரும்புவது போல் அமைத்துக்கொள்ளலாம் என்ற கருத்தை அது மறுக்கிறது.

 அன்றைய கேள்வி- பதில் நிகழ்ச்சி பேராசிரியர் பி. லட்சுமி நரசு கேட்க ஆரம்பித்த பிறகு சூடுபிடித்தது. அவர் புத்த மதத்திற்கு மாறியவர். அவரது நண்பரான என். கே. ராமசுவாமி ஐயர் ஏற்கனவே ( இந்தியாவை விழிப்புணர்த்தும் பத்திரிகை) என்ற பெயரில் பத்திரிகை ஒன்று  நடத்தி வந்தார். அதில் நரசு கட்டுரைகள் எழுதி வந்தார். இப்போது சுவாமிஜியின் துணையுடன் பிரபுத்த பாரதம், விழிப்புற்ற இந்தியா என்ற  வேதாந்தப் பத்திரிகை ஆரம்பிக்கப் பட்டிருப்பது  நரசுவிற்குப் பிடிக்கவில்லை. சுவாமிஜியின் பணிகள்  இந்தியாவை விழிப்புறச் செய்யவில்லை. மாறாக, தமது பத்திரிகையே இந்தியாவை விழிப்புறச் செய்திருக்கிறது.என்பது ராமசுவாமி ஐயரின் கருத்து. எனவே பௌத்த மதக் கருத்துக்கள் மற்றும் வேதாந்தம்  பற்றிய விவாதம் ஒன்று தேவை என்று நரசு கேட்டுக்கொண்டார். சுவாமிஜி அதனை ஏற்றுக்கொண்டார். வேதாந்தம் பற்றி நரசுவின் ஒவ்வொரு மறுப்புகளையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு தகுந்த பதில் அளித்தார் சுவாமிஜி.

 அன்று அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த நாள் . அன்று தான் மாலை 4.30 மணிக்கு சுவாமிஜிக்கு விக்டோரியா ஹாலில்  பொது வரவேற்புக்கான ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. விக்டோரியா ஹாலின் அருகில், செல்லும் வழிகளில், ரோட்டில் என்று கூட்டம் அலை மோதியது. சுவாமிஜி வந்து சேரும் முன்னரே ஹால் நிரம்பி வழிந்தது.குறைந்தது பத்தாயிரம் பேராவது வெளியில் நின்றார்கள். சுவாமிஜி கூட்டத்தில் மிகவும் சிரமப்பட்டே மேடையை அடைய முடிந்தது. பிரமுகர்கள் பலர் ஏற்கனவே மேடையில் அமர்ந்திருந்தனர். சென்னை வரவேற்புக் குழு, வைதீக வித்வத் கதாபிரசங்க சபா, சென்னை சமூக சீர்திருத்த சங்கம் ஆகியவை வரவேற்புரைகளை அளித்தன.கேத்ரி மன்னர் அனுப்பிய வரவேற்புரை படிக்கப் பட்டது. இவை தவிர சம்ஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இருபது வரவேற்புரைகள் படிக்கப் பட்டன.

 

கீதையின் பாணியில்

 

 இதற்குள் வெளியில்  நின்றிருந்த கூட்டம், கட்டுக்கடங்காததாக ஆகியது. சுவாமிஜி வந்து திறந்த வெளியில் பேச வேண்டும் என்று குரல்கள் எழத் தொடங்கின. அதன் பிறகு சுவாமிஜியால்  தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. அங்கிருந்து விருட்டென்று எழுந்து, நான்  மக்களுக்காக வந்தவன், வெயில் இருப்போரையும் நான் சந்தித்தாக வேண்டும் என்று கூறிவிட்டு வெளியில் வந்தார். அவருக்காக க் காத்திருந்த கோச் வண்டியின் மீது ஏறி நின்றார். அங்கே பெரும் திரளாக க் கூடியிருந்த மக்களிடம்  உற்சாகம் கரைபுரண்டோடியது. அந்தக் கூட்டத்தில் பேச வேண்டும். அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று பேச ஆரம்பித்தார்.

 நாம் ஒன்று நினைக்கிறோம். தெய்வம்  மற்றொன்று நினைக்கிறது. இந்த வரவேற்பும் சொற்பொழிவும் ஆங்கில முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆனால் கடவுளோ அதனை வேறு வகையில் நடத்தத் திருவுள்ளம் கொண்டுள்ளார். சிதறிக் கிடக்கின்ற இந்த மக்கள் கூட்டத்தில் இதோ இந்த ரதத்திலிருந்து கீதை பாணியில் பேசுகிறேன்...... என்று தொடங்கி சில நிமிடங்கள் பேசியிருப்பார். அதற்குள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போயிற்று. எனவே, நண்பர்களே! உங்கள் உற்சாகம் கண்டு மகிழ்கிறேன். மிகவும் மகிழ்ச்சி. எனக்கு உங்கள் மீது வருத்தம் என்று எண்ணிவிடாதீர்கள். மாறாக, உங்கள் ஆர்வம் எனக்கு எல்லையற்ற திருப்தியையே அளிக்கிறது. அளவு கடந்த உற்சாகமே நமக்குத்தேவை. ஆனால்  இது நிலையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்களே, இப்போதைக்கு விடைபெற்றுக்கொள்கிறேன். நீங்கள் எல்லோரும் கேட்கக் கூடிய வகையில் பேச முடியாது. எனவே இன்றைக்கு என்னைப் பார்த்த வரையில் திருப்தியடையுங்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் சொற்பொழிவு நிகழ்த்துவேன்.  உற்சாகம் மிக்க உங்கள் வரவேற்புக்கு நன்றி என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.

 

 பிப்ரவரி9

 

சவாமிஜி இரண்டு சொற்பொழிவுகள் ஆற்றினார். அளசிங்கர் திருவல்லிக்கேணி இலக்கிய சங்கத்திற்கு  சுவாமிஜியை அழைத்திருந்தார். அங்கே சுவாமிஜி ”நம் முன் உள்ள பணி என்ற தலைப்பில் பேசினார். அன்று மாலையில் விக்டோரியா ஹாலில் சுவாமிஜியின் முதல் பொதுச்சொற்பொழிவு நடைபெற்றது. அதன் தலைப்பு எனது போர் முறை.

 

 வெற்றிக்குக் காரணம் இறைவனே!

 

 சுவாமிஜியின் வெற்றிக்குச் சிலர் தாங்களே காரணம் என்பது போல் பிரச்சாரம் செய்திருந்தனர். அவற்றை மறுத்து  உண்மைநிலை என்ன என்பதை  இந்தச்சொற்பொழிவின் மூலம் எடுத்துக் கூறினார் சுவாமிஜி. அந்தச் சொற்பொழிவில் பலருடைய உண்மை நிலையை அவர் வெளிக்கொணர வேண்டியதாயிற்று. தியாசபிக் சொசைட்டியினர், பிரம்ம  சமாஜத்தினர், பாதிரிகள், ஆகியோர் உண்மையில் அவருக்கு உதவவில்லை. மாறாக அவருக்கு எவ்வளவு தடைகளை உண்டாக்க வேண்டுமோ அதையே செய்தனர் என்பதைத் துறவியான அவர் எந்தத் தயக்கமுமின்றி, துணிச்சலாகப்பேசினார். சுவாமிஜியின் நேரடியான தாக்குதல் பலருக்குப் பிடிக்கவில்லை. சுவாமிஜியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், சென்னை வரவேற்பு கமிட்டியின் தலைவராக இருந்தவருமான நீதிபதி சுப்பிரமணிய ஐயர் சுவாமிஜியிடம் தமது நெருக்கமான தொடர்பை விட்டு விட்டார். ஏனெனில் அவர் தியாபிகல் சொசைட்டியில் முக்கிய அங்கத்தினர்.ஆனால் இது போன்ற எந்தப் பிரச்சனைகளும் சுவாமிஜியைப் பாதிக்கவில்லை. தமது நிலைப்பற்றி அவர் பிரம்மானந்தருக்கு எழுதினார். தியாசபிக் சொசைட்டியினரும் பிறரும் என்னைப் பயமுறுத்த  விரும்பினர்.ஆதலால் நான்  என் மனத்தில்  உள்ளதை சிறிது அவர்களுக்குச் சொல்ல வேண்டியதாயிற்று. நான் அவர்களுடன் சேராததால்  அவர்கள் என்னை எப்போதும் அமெரிக்காவில் நெருக்கிக் கொண்டே இருந்தனர் என்பது  உனக்குத் தெரியும்....... நீ பயப்படவேண்டாம், நான் தனியாக வேலை  செய்யவில்லை. இறைவன் எப்போதும் என்னுடன் உள்ளார்.

 

 பிப்ரவரி 10

 

 சுவாமிஜி இந்து சமுதாயச் சீர்திருத்த சங்கத்தில் விருந்தினராக அழைக்கப் பட்டார். சீர்திருத்தம் , சீர்திருத்தவாதி, போன்றவைபற்றி தாம் கூறிய கருத்துக்களை இங்கே சுவாமிஜி விளக்கினார். அது பற்றி பல அன்பர்கள் எழுப்பிய சந்தேகங்களை அங்கிருந்து புறப்படும்போது அந்தச் சங்கத்தினர் ஓர் அழகிய விசிறியை சுவாமிஜிக்கு அன்பளிப்பாகத் தந்தனர்.

 

பிப்ரவரி 11

 

 காலையில் சுவாமிஜி லஸ் சர்ச் ரோடில் அமைந்துள்ள நீதிபதி சுப்பிரமணிய ஐயர் வீட்டிற்கு அழைப்பின்பேரில்  சென்றார்.

லட்டு, காப்பி ஆகியவை சுவாமிஜிக்கு  அளிக்கப் பட்டன. அவற்றை அவர் சிறிது சுவைத்தார். அன்று பேராசிரியர் சுந்தரம் ஐயரும் உடன் இருந்தார். திருவனந்தபுரத்திலும் அவர்  சுவாமிஜியுடன் நெருக்கமாகப் பழகியவர், சாப்பாட்டு விஷயத்தில் சுவாமிஜி பெரிய ஈடுபாடு காட்டியதில்லை என்கிறார் அவர். அன்று நீதிபதியிடம் சுவாமிஜிதமது ”சமயசமரசக்கோயில் கருத்து பற்றி கூறினார். இந்து, பௌத்தர், கிறிஸ்தவர், முஸ்லிம் அனைவரையும்  சகோதர உணர்வுடன் அந்தக்கோயிலின் கீழ் திரளச்செய்ய இயலும், அந்தக்கோயிலின்  அமைப்பே புதுமையாக இருக்கும். எல்லா மதத்தின்  தீர்க்கதரிசிகளின் சிலைகள்  அதில் இருக்கும். அந்தக் கோயிலுக்குப் பின்னால் திறந்த வெளியில் ஒரு தூணில் ”ஓம் என்ற எழுத்து பொறிக்கப் பட்டிருக்கும்.

 அன்று விக்டோரியா ஹாலில்  சுவாமிஜி இந்திய  ரிஷிகள் என்ற தலைப்பில் இரண்டாவது பொதுச்சொற்பொழிவு ஆற்றினார்.

 பிப்ரவரி 12

 கேஸில் கெர்னனில் தொடர்ந்து மக்கள் வண்ணம் இருந்தனர். மாலை 4-30-க்கு சுவாமிஜி இந்து தியாலஜிக்கல் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார். அங்கு அவருக்கு இரண்டு வரவேற்புரைகள் அளிக்கப் பட்டன. சுவாமிஜி அவற்றை ஏற்றுக்கொண்டு பதிலுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியைத்தொடர்ந்து பெரம்பூர் அன்னதான சமாஜத்தின் 6-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி பச்சையப்பா  ஹாலில் நடைபெற்றது. அங்கும் சுவாமிஜி சொற்பொழிவு ஆற்றினார்.

 

பிப்ரவரி 13

-

மாலையில் 3-ஆம் பொதுச்சொற்பொழிவு. பச்சையப்பா ஹாலில் ”வேதாந்தமும் இந்திய வாழ்க்கையும் என்ற தலைப்பில் நடைபெற்றது. அன்று மேடையில் ஜி. சுப்பிரமணிய ஐயரும் இருந்தார். சொற்பொழிவின் இடையில் சுவாமிஜி இளைஞர்களுக்கு அறைகூவுகின்ற பகுதி வந்தது.முதலில் நமது இளைஞர்கள் வலிமை பெற்றவர்களாக வேண்டும். மத உணர்ச்சி அதற்குப் பின்னரே வரும்.......... நீங்கள் கீதையைப் படிப்பதைவிட  கால்பந்து  ஆடுவதன் மூலம் சொர்க்கத்திற்கு  மிக அருகில் செல்ல முடியும். உங்கள் கை, கால் தசைகளில் இன்னும் கொஞ்சம் வலிமை சேர்த்தால் கீதையை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.என்று பேசினார். இதைக்கேட்டுக்கொண்டிருந்த சுப்பிரமணிய ஐயர் அருகிலிருந்த வரிடம்  தமிழில், இதைத் தான் நானும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒருவரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது சுவாமிகள் கூறுகிறார், எல்லோரும் ஆர்ப்பரிக்கிறார்கள் என்றாராம்.

 சொற்பொழிவை நிறைவு செய்துவிட்டு, சுவாமிஜி ராயப்பேட்டை பேட்டர்சன் தோட்டத்திலுள்ள எல். கோவிந்தாஸ் என்பவரின் வீட்டிற்குச்சென்றார். ஐரோப்பியர்கள் பலர் அங்கே திரண்டிருந்தனர். சுவாமிஜிக்கு  வரவேற்புரை அளிக்கப் பட்டது. வீணை மற்றும் கிடார் கச்சேரிகள் நடைபெற்றன. பின்னர் சுவாமிஜிக்கு ஆரஞ்சு வண்ண சில்க் துணிகள்வழங்கப் பட்டன. மாலை மரியாதைகள்செய்யப் பட்டன.

 

  பிப்ரவரி 14

 

 ஹார்ம்ஸ்டன் சர்க்கஸ் வளாகத்தில் சுவாமிஜியின் கடைசி பொதுச்சொற்பொழிவு நடைபெற்றது. சுமார் 3000பேர் வந்திருந்தனர். தலைப்பு ” இந்தியாவின் எதிர்காலம் சுவாமிஜியின் சொல்லாற்றல் அன்று உச்சத்தில் இருந்தது. மேடையில் அங்குமிங்குமாக நடந்த வண்ணம் அவர் சொற்பொழிவு ஆற்றியது ஒரு சிங்கம் தனிமையில் உலவிய படி கர்ஜிப்பது போல் இருந்தது. அவரது குரல் எங்கும் எதிரொலித்து, கேட்பவர் இதயங்களில் ஊடுருவியது போல்  இருந்தது என்று சுந்தரராம ஐயர் எழுதுகிறார்.

 

தமிழர்களிடம் நம்பிக்கை

 

 இந்தச் சொற்பொழிவில் தான்  சுவாமிஜி தமிழ் மக்களின் மீது தமது நம்பிக்கையை  வெளிப்படுத்தினார். சென்னை இளைஞர்களே, என் நம்பிக்கை உங்களிடம் தான் இருக்கிறது. உங்கள் நாட்டின்  அழைப்பிற்குச் செவி சாய்ப்பீர்களா? இது தமது கடைசிச்சொற்பொழிவு என்பதாலோ என்னவோ  அவர் தமிழ் மக்களிடம் அத்தகையதொரு பேரன்பை வெளிப்படுத்தினார். அவரது சொற்பொழிவு முடிந்த போது கை தட்டல்களும், வாழ்த்தொலிகளுமாக  எங்கும் பேரொலி பரந்தது. இனி சுவாமிஜி ஒவ்வொரு வருடமும் சென்னைக்கு வருவார் என்று அன்று அறிவிக்கப் பட்டது. ஆனால் இறைவனின் திருவுளம் என்னவோ அதுவாக இருக்கவில்லை.

 சுவாமிஜி தங்களுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற ஆவல் யாருக்குத் தான் இருக்காது?ஆனால் சென்னையுடன் நின்றுவிடுவதல்லவே அவரது பணி. அவர் தொடர்ந்து சென்றாக வேண்டும், இன்னும் எத்தனை எத்தனையோ உள்ளங்களுக்கு ஆறுதல் அளித்தாக வேண்டும். இன்னும்  எத்தனையோ பணிகளுக்கு உருவம் கொடுத்தாக வேண்டும். எனவே அவர் 15-ஆம் தேதி புறப்படுவதென்று  முடிவாயிற்று. இன்னும் ஒன்று. சுவாமிஜியே கூறுவது போல், துறவிகளுக்கும் உடம்பு  என்ற ஒன்று இருக்கிறது, தொடர்ந்த இந்தப் பயணமும் அலைச்சல்களும் அவரது வெகுவாகப் பாதித்திருந்தன.

 சிறிது ஓய்வாவது கிடைக்காவிட்டால் நான் இன்னும் 6 மாதம் உயிரோடு இருப்பேனா என்றே தெரியவில்லை என்று மிசஸ் சாராவிற்கு எழுதுகிறார் அவர்.

 

சுவாமிஜியின் பணி என்பது சாதாரண மானிட உடம்பு தாக்குப் பிடிக்கத்தக்க பணியா? உடல் ரீதியாக மட்டும் சிந்தித்தால் கூட திகைப்பாக இருக்கிறது! சாதாரணமாகப் பேசுவதிலேயே அதிக ஆற்றல் வீணாகிறது. அதிலும் ஒலி பெருக்கி இல்லாத காலத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடுகின்ற கூட்டத்தில் அனைவரும்  கேட்கும் படி ப் பேசுவது, எத்தனை ஆற்றலைச்செலவிட வேண்டிய ஒரு செயல்! இப்படி சொற்பொழிவுகள் எத்தனை? ஒன்றா, இரண்டா? இத்தனையையும் ஏற்றுக்கொண்டு, அவர் வாழ்ந்தாரே அது தான் ஆச்சரியம். நாம் செய்த பாக்கியம்! சுவாமிஜியை பிரேம மூர்த்தி அதாவது அன்பின் வடிவம் என்று போற்றுகிறது துதிப் பாடல் ஒன்று. நமக்கா, நாட்டிற்காக, தமது உடல் நிலை உட்பட அனைத்தையும் தியாகம் செய்த அன்பு வடிவம் அவர்!

 சுவாமிஜி சில நாட்கள் தங்களுடன் இருப்பார், பிறகு போய்விடுவார், என்பது சென்னை அன்பர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஆனாலும் உண்மை அது தான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. அவரது செய்தியைத் தக்க வைத்துக் கொள்வது அவரையே தங்களுடன் வைத்துக்கொள்வது போல் தான், இன்னும் சொல்லப்போனால், சுவாமிஜிக்கும் அதுவே, விருப்பமானதாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்த சென்னை அன்பர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள். சென்னையிலிருந்து சுவாமிஜி புறப்படுவதற்கு முந்தின நாள் அவரிடம் சென்னையில் நிரந்தர அமைப்பு ஒன்று ஏற்படுத்துவது பற்றி பேசினார்கள். சுவாமிஜி வருடத்திற்கு ஒரு முறையாவது வந்து அதனை உரிய வழியில் நடத்திச்செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். நிரந்தர அமைப்பு ஒன்று வேண்டும் என்ற வரையில் சுவாமிஜி அவர்களது விருப்பத்திற்கு இசைந்தார். ஆனால் தாம் வருவது பற்றி அவர் எதுவும் கூறவில்லை. மாறாக, நான் உங்களுக்காக என் சகோதரத் துறவி ஒருவரை அனுப்புகிறேன் இங்கே உள்ள வைதீகர்களுக்கெல்லாம் வைதீகராக இருக்கின்ற ஒருவர் அவர் என்று தெரிவித்தார்.

 

 ரயிலில் செல்வதைவிட கப்பலில் செல்வது உடல் நலத்திற்கு நன்மை செய்யும் என்பதற்காக சுவாமிஜி கல்கத்தாவிற்குக்  கப்பலில் புறப்படுவதென்று முடிவாயிற்று. பிப்ரவரி 15 காலை 8 மணிக்கு சுவாமிஜி துறைமுகத்திற்கு வருவதாக  இருந்தார். காலை 4 மணியிலிருந்தே அங்கே கூட்டம் கூடத் தொடங்கிவிட்டது. வழியனுப்பு விழாவிற்காக மரத்தளத்தின் மீது  பந்தல் போடப் பட்டிருந்தது. 7.30 மணிக்கு சுவாமிஜி வந்தார். கோமட்டி செட்டியார்கள் என்று கூறப்படும் ஆரிய- வைசிய குலத்தினரின் சார்பில் சுவாமிஜிக்கு ஒரு நன்றியுரை வாசித்து அளிக்கப் பட்டது. சுவாமிஜி பதிலுரை எதுவும் பேசவில்லை. பொங்கிவரும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மௌனமே  சிறந்த வழி என்று கூறிவிட்டு படகில் ஏறுவதற்காகச்சென்றார் சுவாமிஜி. கனத்த இதயங்களுடனும் கண்ணீர்த் துளிகளுடனும்  சுவாமிஜியை வழியனுப்பினர் தமிழன்பர்கள். அவருடன் சேவியர் தம்பதிகளும் குட்வின், அளசிங்களர், நரசிம்மாச்சாரியர், கிடி ஆகியோரும் சென்றனர்.

 

 சுவாமிஜிக்கு த் தமது நோய் மற்றும் களைப்பு காரணமாக அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. தண்ணீருக்குப் பதிலாக இளநீர் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்று டாக்டர்கள்  அறிவுறுத்தியிருந்தனர். இதை அறிந்த  பக்தர்கள் கப்பலில் இளநீர்க் குலைகளைக் குவித்து விட்டனர்.சுவாமிஜியுடன் பயணம் செய்ய இருந்த மிசஸ் சேவியருக்கு ஒன்றும் புரியவில்லை, அவர் சுவாமிஜியிடம், சுவாமிஜி, நாம் என்ன சரக்குப்  கப்பலிலா பயணம் செய்கிறோம்? என்று கேட்டார். சுவாமிஜி சிரித்துவிட்டு விஷயத்தை  விளக்கினார்.

 கப்பல் நங்கூரத்தை  எடுப்பதற்கு இன்னும் சிறிது நேரம்  இருந்தது. பேராசிரியர் சுந்தரராம ஐயரும் சுவாமிஜியை விட்டுவிட்டு வருவதற்காக கப்பலிற்குள் சென்றிருந்தார். அப்போது அவர் சுவாமிஜியிடம், சுவாமிஜி, மேலைநாட்டில் நீங்கள் செய்துள்ள பணி எந்த அளவிற்கு அவர்களுக்கு நிரந்தர நன்மை  செய்வதாக அமையும்? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, பெரிதாக எதுவும் சொல்வதற்கு இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக சில விதைகளை விதைத்துள்ளேன். காலப்போக்கில் அவை சிலருக்காவது பலன் தரலாம் என்றார் பணிவுடன். ஐயர் தொடர்ந்து, சுவாமிஜி  உங்களைநாங்கள் மீண்டும் காண முடியுமா? தென்னிந்தியப் பணிகளை நீங்கள் தொடர்வீர்களா? என்று கேட்டார். கட்டாயமாக, அதில் எந்தச்  சந்தேகமும் வேண்டாம். இமயமலையில் சிறிது ஓய்வெடுப்பேன், அதன் பிறகு நாடு முழுவதும் எரிமலைபோல்  வெடிப்பேன். என்றார் சுவாமிஜி. ஆனால் தேவியின் திருவுளம் என்னவோ அதுவாக இருக்கவில்லை.!

கப்பல் கல்கத்தாவை நோக்கிப் புறப்பட்டது.

 

 கல்கத்தாவில்   வரவேற்புக் குழு

 

 சுவாமிஜியை வரவேற்பதற்காக ஜனவரி இறுதியிலேயே கல்கத்தாவில் வரவேற்புக் குழு ஒன்று நிறுவப் பட்டது. தர்பங்கா மன்னர் அதன் தலைவராகவும் ராஜா பினய் கிருஷ்ண தேவ் பகதூர் செயலர் மற்றும் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ஆனால் ஓரிரு நாளில் மன்னர் தமது  இயலாமையைத்தெரிவித்து குழுவிலிருந்து விலகி விட்டார். சுவாமிஜியை வரவேற்பதில் பழைமவாத இந்துக்கள் காட்டிய  எதிர்ப்பே இதற்குக் காரணம். சுவாமிஜி பிராமணர் அல்ல, எனவே சன்னியாசியாக அவருக்குத் தகுதிகிடையாது. கடல் நடந்து சென்ற ஒருவரை இந்துவாகக் கருத முடியாது. வைதீக இந்துவிற்கு விலக்கப் பட்ட உணவுகளை உண்கிறார். போன்ற வழக்கமான எதிர்ப்புகள் எழுந்தன. வங்க வாஸி பத்திரிகையும் சுவாமிஜியை எதிர்த்து தொடர்ந்து எழுதியது. கல்கத்தா உயர் நீதி மன்ற நீதிபதியும், விவேகானந்தர் என்ற பெயர் அவரது குரு அளித்தது அல்ல. அது மட்டுமின்றி துறவியாக ஒரு சூத்திரருக்கு உரிமை கிடையாது என்று கூறி, வரவேற்புக் குழுவிற்குத் தலைவராக இருக்க இயலாது என்று மறுத்துவிட்டார். பின்னர் ”தி இன்டியன் மிரர் பத்திரிகையின் ஆசிரியரான நரேந்திர நாத் சேன் வரவேற்புக் குழுவின் தலைவர் ஆனார்.

 

உபேந்திரரின் முயற்சி

 

ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரும் ”வசுமதி என்ற தினசரியின்  நிறுவனருமான உபேந்திரநாத் சுவாமிஜி வருவதைக்கல்கத்தா மக்களுக்குத்  தெரியப்படுத்துவதில் மிகுந்த, சிரமம் எடுத்துக் கொண்டார். ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து நகரம் முழுவதும் வின்யோகித்தார். சுவாமிஜி வருகின்ற நேரம்,  இடம், ஆகிய அறிவிப்புகள் அடங்கிய விளம்பரப் பலகைகளை நகரத்தின்  முக்கியமான பகுதிகளில் வைத்தார். தமது செய்தித்தாளில் சுவாமிஜியின் படத்துடன் செய்தியை வெளியிட்டார். இருப்பினும் கூட்டம் வருமா என்ற சந்தேகம் எழுந்தது. ஏனெனில் அது கடுங்குளிர் காலம். ரயில் வந்து சேர்வதோ அதிகாலை வேளை. ஆனாலும் உபேந்திரர் உறுதியாக, விளம்பரப் பலகைகள் ஏராளம் வைக்கப் பட்டுள்ளன. 50, 000 துண்டுப் பிரசுரங்கள், 10, 000 வசுமதி செய்தித்தாள்கள் ஆகியவை மக்கள் மத்தியில் இலவசமாக வினியோகம் செய்யப் பட்டுள்ளன.எனவே குருதேவரின் கருணையால் நாளை சியால்தா  ரயில் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று கூறினார். அப்படித்தான்  நடக்கவும் செய்தது.

 ஒரு வார கப்பல் பயணம் சுவாமிஜியின் களைப்புற்ற உடம்பிற்குச் சிறிது ஓய்வைத் தந்தது. ஆங்கிலேயச் சீடர்களுடன் தமது அன்பிற்குரிய சென்னைச் சீடர்களான அளசிங்கர், நரசிம்மாச்சாரியர், கிடி ஆகியோர் இருந்தது அவரது மகிழ்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணமாயிற்று. கப்பலின் கேப்டன்  மற்றும் சக பயணிகளுடன் சுவாமிஜி நட்பை வளர்த்துக் கொண்டார். தமக்காகக் கொண்டு வரப்பட்ட இளநீர்க் காய்களை அவர்களுடன்  பகிர்ந்துக் கொண்டார்.

 கப்பல் கல்கத்தாவில் கங்கை நதியை அடைந்தபோது சுவாமிஜி அதன் கரையிலுள்ள இடங்களைத் தமது சீடர்களுக்கு விளக்கினார். பிப்ரவரி 18-ஆம் நாள்  கப்பல் பஜ்பஜ் துறைமுகத்தை அடைந்தபோது கல்கத்தா வரவேற்புக் குழுவைச்சேர்ந்த இருவர் வந்து வரவேற்பு  விவரங்களை சுவாமிஜிக்குத் தெரிவித்தனர்.

 கிட்டிர் பூர் துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிட்டதும் சுவாமிஜி இறங்கி, தமக்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த சிறப்பு ரயிலில்  காலை சுமார் 7.30 மணிக்கு சியால்தாவை  அடைந்தார். சுமார் 20, 000 பேர் அங்கே திரண்டிருந்தனர். அங்கிருந்து சுவாமிஜியை ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். கொடிகள், தோரணங்கள், மலர் மாலைகள், அலங்கார வளைவுகள் என்று கல்கத்தா அமர்க்களப் பட்டது. இங்கும் வண்டியிலுள்ள குதிரைகள் அவிழ்த்து விடப்பட்டு, இளைஞர்கள் அதனை இழுத்துச்சென்றனர். சுவாமிஜி வண்டியில் எழுந்து நின்று கைகூப்பி இரண்டு பக்கங்களிலும்  திரண்டிருந்த மக்களை வணங்கியபடியே சென்றார். சுவாமிஜியின் வண்டியைத்தொடர்ந்து பல வண்டிகள் சென்றன.

 ஊர்வலம் முதலில் ஹாரிசன் சாலை வழியாகச்சென்றது. அங்கே ஒரு வீட்டின் மாடி ஒன்றில் ஜடை தரித்த துறவி ஒருவர் நின்று இரண்டு  கைகளையும் உயர்த்தி சுவாமிஜியை ஆசீர்வதித்தார். சுவாமிஜியும் தலை வணங்கி அந்த ஆசிகளை ஏற்றுக் கொண்டார். அவர் விஜய கிருஷ்ண கோசுவாமி. அவர் குருதேவரின் சீடர்களில் ஒருவர். பிரம்ம சமாஜத் தலைவர்களில் ஒருவர். குருதேவரிடம் வரும்  முன்பே சுவாமிஜி இவரை அறிந்திருந்தார். இவரிடம்  மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்.

 

 ஊர்வலம் ஹாரிசன் ரோட்டிலுள்ள ரிப்பன் கல்லூரியை(தற்போதைய சுரேந்திரநாத் கல்லூரி) அடைந்தது. சிலருடைய கவனக்குறைவினால் கல்லூரி  வாசலில் குழப்பமும் நெரிசலும் உண்டாயிற்று. ஊர்வலம் கல்லூரி வாசலை அடைந்ததும், யாரோ கூறியதன் பேரில் வாசல் திடீரென்று திறக்கப் பட்டது. ஊர்வலத்தின் முன்பகுதியில் நின்ற இளைஞர்கள்  இதனை எதிர்பார்க்கவில்லை. அதனால் நிலைகுலைந்த அவர்கள் ஒருவர் மீது ஒருவராக விழுந்தனர். பலர் மிக மோசமாகக் காயமுற்றனர்.ஓரிருவர் தங்களிடம் இருந்த கைத்தடிகளைக் குறுக்கே நீட்டி மேலும் இளைஞர்கள் விழுவதைத் தடுத்துக் காத்தனர். பெரியக் கூட்டத்தை வரவேற்புக் குழுவினர் எதிர்பார்க்காததாலோ என்னவோ, அவர்கள் ஒழுங்கு முறைஏற்பாடுகளுக்குப் போலிஸின்  உதவியை நாடவில்லை. போலிஸ் இருந்திருந்தால் ஒருவேளை இந்த அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம்.என்று பத்திரிகைகள் எழுதின. அங்கே சிறிது நேரம் நின்றுவிட்டு, பாக்பஜாரிலுள்ள ராய் பசுபதி நாத் போஸ் பகதூர் என்பவரின் பங்களாவிற்கு அழைத்துச் செல்லப் பட்டார் சுவாமிஜி.

 

பழைய தொடர்புகள்

-

 வழியில் கார்னவாலிஸ் தெரு வழியாக வண்டி சென்றது. அந்தத் தெருவில் தான்  குருதேவரின் சீடரும், ஈசுவரகோடி என்று அவரால்  கூறப்பட்ட வருமான பூர்ணரின் வீடு இருந்தது. அந்த இடத்திற்குச் சென்றதும்  சுவாமிஜி வண்டியை நிறுத்துமாறு கூறிவிட்டு, திரிகுணாதீதரிடம், பூர்ணனுக்குத் தகவல் தெரிவி என்றார். அப்போது பூர்ணர் குளித்துக்கொண்டிருந்தார். ஈரத் துணியுடனேயே வந்து சுவாமிஜியை சாஷ்டாங்கமாக  நமஸ்கரித்தார். எழுந்து, நான் ரயில்  நிலையத்திற்கு வந்திருந்தேன். தூரத்திலிருந்தே உங்களைத் தரிசித்தேன். அலுவலகத்திற்குப்போக வேண்டும். அதனால் தான் விரைவில் திரும்பிவிட்டேன் என்றார். அதனால் என்ன! மாலையில் வாருங்கள் என்று அழைத்தார் சுவாமிஜி.

 

இவ்வாறே ஊர்வலம்சென்றது. ”ஜய த்வனி எங்கும் கேட்ட வண்ணம் இருந்தது. கடைசியாக பசுபதி போஸின் வீடு வந்தது. வீடு அழகிய தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. பசுபதி முதலானோர் வாசலில் வந்து சுவாமிஜியை  உள்ளே அழைத்துச்சென்றனர். அங்கே  பிரம்மானந்தரும் யோகானந்தரும்  கையில் மலர்  மாலையுமாக  மலர்ந்த முகத்துடன் நின்றிருந்தனர். மாலையை அணிவித்ததும் சுவாமிஜி, குருவின் பிள்ளைகள் குருவிற்குச் சமம் என்று கூறியபடி இருவரையும் வணங்கினார். பிரம்மானந்தரும் உடனே, ”மூத்த சகோதரன் தந்தைக்குச் சமம் என்று கூறிவிட்டு வணங்கினார். அப்போது ம- வந்து வணங்கினார். உடனே சுவாமிஜி, நண்பரே! என்றார். அதன்பிறகு  ஒவ்வொருவராக வந்து வணங்கினர். அந்தக் கூட்டத்தில் ஓர் ஓரமாக ஒரு பெஞ்சில் குருதேவரின் இளம் சீடர்களில் ஒருவரான ஹுட்கோ கோபால் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டதும் சுவாமிஜி, ஏ ஹுட்கா, நான்  அதே நரேனாகத் தான் இருக்கிறேனப்பா! அங்கே ஏன் ஒளிந்திருக்கிறாய்? இங்கே வா, வங்க மொழியை நான் இன்னும் மறக்கவில்லை என்றார்.

 

 இவ்வாறு பத்து நிமிடம் கழிந்தது, பசுபதி சுவாமிஜியை மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கே கிரீஷ் சுவாமிஜிக்கு மாலை அணிவித்து விட்டு பணிந்து வணங்கச்சென்றார். சுவாமிஜி உடனே அவரது கையைப் பிடித்து தடுத்து விட்டு, என்ன செய்கிறீர்கள் ஜி.சி! நீங்கள் என்னை வணங்கினால் எனக்குத்தான் தோஷம் உண்டாகும். உங்கள் ராமகிருஷ்ணரை வணங்கி( அனுமனைப்போல்) ஜெய்ராம், என்று கூறியே கடல் தாண்டிச்சென்று வந்து விட்டேன் ” என்றார். கிரீஷ் மிகவும் மகிழ்ந்தார்.

 

 அதன்பிறகு சுவாமிஜி ம-விடம் பேச ஆரம்பித்தார். மாஸ்டர், இந்த வெற்றிகளுக்கெல்லாம் நான் கருவி மட்டுமே. அவர் தான் என்னை அனுப்பினார். குருதேவர் எனக்கு அடையாளம் காட்டினார். அதைத் தெரிவித்து  நமது அன்னையிடம் அனுமதியும் ஆணையும் வேண்டினேன். அன்னையின் ஆசிகள் வந்ததும் தடைகளை எல்லாம் சுலபமாகத் தாண்டி செல்ல முடிந்தது. மேலை நாடுகளின் பேரறிஞர்கள், விஞ்ஞானிகள் போன்ற ஆயிரக்கணக்கான மேதைகளில் நான் மிகவும் போற்றப் படுபவனாக  ஆனேன். எல்லாம் குருதேவரின் திருவிளையாடல் என்பதை அனுபவத்தில் காண்கிறேன். சொல்ல வேண்டியவை ஏராளம் உள்ளன, இன்னொரு சமயம் சொல்கிறேன்.

 ஆனால் இப்போது எனது கருத்து என்ன தெரியுமா? நம் நாட்டில் மதப் பிரச்சாரம் ஏராளம் செய்யப்பட்டு விட்டது. உடனடியாக வேண்டியது கல்வி. சாதாரண மனிதனுக்கு உடுத்த நல்ல துணி  வேண்டும். வயிறு நிறைய உண்பதற்குச்சோறு வேண்டும். எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதற்குக் கொஞ்சம் சம்பாதிக்க வேண்டும். அதற்கு வழி செய்ய வேண்டும், அது தான் இந்தியாவிற்கு இன்று முக்கியத்தேவை. மாஸ்டர், மேலை நாட்டின் ஐஸ்வரியங்கள் என் கண்ணில் படும் போதெல்லாம் தாய் நாட்டின் ஏழ்மை நிலை என் கண்ணில்  நீரை வரவழைக்கும். அவர்களின் செல்வச்செழிப்பு எனக்கு மேக தூதப் பாடல்களையே நினைவிற்குக்கொண்டு வந்தது. நாலாபக்கமும் மின்னலைப்போன்ற  அழகிய பெண்கள் கூட்டம், விண்ணை முட்டுகின்ற கட்டிட வரிசைகள், வீடுகளில் குதூகலமும் உற்சாகமும்! ஆடல் பாடல்கள்! பெரிய பெரிய சாலைகள்! எல்லாம் தூய்மை! நம் நாட்டிலோ எங்கும் குப்பைக் கூளம், துர்நாற்றம்,  அரை நிர்வாண மனிதர்கள்,  ஐஸ்வரியம் இல்லாத, பலவீனமான படிப்பறிவற்ற ஆண்களும் பெண்களும்,! இவர்களுக்குச் சேவை செய்வது தான் இந்தியாவிற்குத்தேவையான மதம் என்று எனக்குத்தோன்றுகிறது. பசித்த வயிற்றில்  மதம் ஏறாது என்று குருதேவர் கூறுவதில்லையா? இந்த மதப் பிரச்சாரம் செய்வது தான் எனது லட்சியம்.

 

 மேலை நாட்டின் கவர்ச்சிகள் அனைத்திலிருந்தும் குருதேவர் என்னைக் காத்தார். ஆச்சரியம் என்னவென்றால்  சிலர் ஏற்கனவே குருதேவரின் கருத்துக்களை  அறிந்திருந்தார்கள். சிலர் கனவில் அவரது அருளைப் பெற்றிருந்தார்கள். நான் அங்கு பெண்களைத் தாயாக . சகோதரியாகவே  கண்டேன். அவர்களும் அந்த ரீதியிலேயே என்னைக்  கண்டு சேவை செய்தார்கள். அது போக பூமி, அங்கே ஆன்மீகப் பிரச்சாரம் தேவை. இங்கே நம் நாட்டிலோ அங்கே உள்ள  விஞ்ஞான கல்வி, உயர்ந்த சிந்தனைகள், சமுதாயச் சுதந்திரம் ஆகியவை தேவை. இவை ஆன்மீகத்தின்  அடிப்படையில் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.

 

 அப்போது பிரம்மானந்தர் வந்து, நரேன்,  உனது தேனீருக்கான  ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது என்று சுவாமிஜியிடம் கூறினார். அதற்கு சுவாமிஜி, ராஜா, வரும் வழியில் விஜய  கிருஷ்ணரைக் கண்டேன். அவரை நீ மடத்தில் தங்கச் செய்திருக்கலாமே! என்றார். அதற்கு பிரம்மானந்தர், அவருக்கு இப்போது சீடர்களும்  சிஷ்யைகளும் ஏராளம் பேர் உள்ளனர். மடத்திலோ இருப்பவர்களுக்குக் கூட படுப்பதற்கு இடம் கிடைப்பதே கடினம் அவர் தனியாகத் தங்குவதானால் விஷயம் வேறு என்றார். விரைவில் அவரை ஒரு நாள் சந்திக்க வேண்டும் என்றார் சுவாமிஜி.

 

மாலை 4 மணிக்கு சுவாமிஜியும் ஆங்கிலேயச் சீடர்களும் காசிப்பூரிலுள்ள பாபு கோபால் வால் சீல் என்பவரின்  அழகிய தோட்ட வீட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். சென்னைச் சீடர்கள் ஆலம்பஜார் மடத்தில் தங்க வைக்கப் பட்டனர்.

 பிரம்மானந்தரிடம்  கூறியது போலவே சுவாமிஜி ஒரு நாள் விஜயரின் வீட்டிற்குச்சென்றார். சுவாமிஜி சென்றதும் இருவரும்  ஒருவருக்கொருவர் நீண்ட நேரம் சாஷ்டாங்கமாகநமஸ்காரம் செய்தனர். பிறகு, விஜயர், ஜெய ராமகிருஷ்ணா! உங்கள் உள்ளிருந்து குருதேவரே எல்லாவற்றையும் செய்கிறார். நான் டாக்காவில் பூஜை செய்து கொண்டிருந்தேன். எனக்கெதிரே அவரை உயிருணர்வுடன் கண்டேன். என்னால் அவரைத் தொடக்கூட முடிந்தது. தட்சிணேசுவரத்திற்குச் சென்றபோது பஞ்சவடியிலும் அவரது அறையிலும் தரிசனம் பெற்றேன் என்றார். அதற்கு சுவாமிஜி, ஆம், நானும் மேலை நாட்டில் இது போல் பல தரிசனங்கள் பெற்றேன். என்னுள் இருந்து அவரே வேலை செய்கிறார். நான் கருவி மட்டுமே என்பதை என் உள்ளத்தில் உணர்ந்தேன் என்றார்.

 

 இவ்வாறு பேச்சு தொடர்ந்தது. சுவாமிஜி தமது செயல் திட்டங்களையெல்லாம் அவரிடம் கூறிவிட்டு, நீங்கள் பெரியவர், குருவிற்குச் சமமாகப்போற்றத்தக்கவர். எனது  திட்டங்கள் எல்லாம் விரைவில் கைகூட வேண்டும் என்று ஆசீர்வதியுங்கள் என்றார் அதற்கு விஜயர், நினைப்பதை நிறைவேற்றும் வல்லமை பெற்றவர் நீங்கள். நீங்கள் எது நினைத்தாலும் அது  நடக்கும். இந்த உங்கள் திட்டங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உண்மையில் இவற்றை உங்களிடம் குருதேவரே தோற்றுவிக்கிறார் என்றார்.

 

 இவ்வாறு நீண்ட நேரம் அவர்கள் இருவரும் குருதேவர் மற்றும் பழைய நாட்களின் நினைவுகளில் மிதந்தனர்.

 பிப்ரவரி 28-ஆம் நாள் சுவாமிஜிக்கு ராஜா சர் ராதாகாந்த் தேவ் பகதூரின் பெரிய மாளிகையில்  பொது வரவேற்பு அளிக்கப்பட்டது. உள்ளே செல்வதற்குஅனுமதிச் சீட்டு வைக்கப் பட்டிருந்தது. கட்டணம் இல் எனினும்  முன்பே அனுமதிச் சீட்டு பெற்றிருப்பது தேவையாக இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்தனர். வரவேற்பு உரைகள் வாசித்து, வெள்ளிப்பேழைகளில் வழங்கப் பட்டன. சுவாமிஜி பதிலுரை அளித்தார். அதைத் தொடர்ந்து  கல்கத்தாவில் சில சொற்பொழிவுகள் நிகழ்த்தினார் அவர்.

 

 இந்த வரவேற்புகள்  படாடோபங்கள் எதையும் சுவாமிஜி விரும்பவில்லை. ஆனாலும் மக்களிடையே  ஓர் எழுச்சியை ஏற்படுத்துவதற்கு இவை தேவை என்பதை அவர் புரிந்து கொண்டிருந்தார். அதனால் மட்டுமே அவர் இத்தகைய வரவேற்புகளை எல்லாம் ஏற்றுக்கொண்டார். ஆனால் இந்த விழாக்களைச் சற்று மாறுபட்ட கோணத்தில் சிலர் பார்க்கவே செய்தார்கள். அப்போது வங்காளத்தில் கடும் பஞ்சம் நிலவியது. இந்த நேரத்தில் இத்தகைய விழாவும் வைபவங்களும் தேவைதானா? என்று அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விமர்சனங்கள் எழுந்தன. ஒரு நாள் சுவாமிஜியின் இளமைக்கால நண்பரான பிரியநாத் சிங்கர் என்பவர் இது பற்றி சுவாமிஜியிடமே, சுவாமிஜி, நீங்கள்  ஒரு சாது. உங்கள் வரவேற்பு உபச்சாரத்திற்க்காகப் பணம் வசூலித்தோம். நீங்கள் கல்கத்தா வருமுன் அங்கிருந்து தந்தியடித்து, நம் நாட்டில் இப்போது பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எனவே எனது வரவேற்பிற்கு  ஒரு காசு கூடச் செலவிட வேண்டாம். மொத்தப் பணத்தையும் பஞ்ச நிவாரண நிதிக்காகக் கொடுத்து விடுங்கள் என்று கூறுவீர்கள். என எண்ணி னேன். ஆனால் நீங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை, ஏன்? என்று கேட்டார்.

 

 சுவாமிஜி-வேண்டுமென்றே தான் நான் அப்படிச் செய்யவில்லை. ஓர் எழுச்சி உண்டாக வேண்டுமென்று விரும்பினேன். ஏன் தெரியுமா? எழுச்சி இல்லாவிட்டால் மக்கள் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரை எப்படி அறிவார்கள்? இது  எனக்காகவா ஏற்பட்டது? அவரல்லவா இவற்றால் பெருமை பெறுகிறார்! அவரைப் பற்றி அறிய மக்களின் உள்ளத்தில்  எவ்வளவு ஆவல் உண்டாகியிருக்கிறது! இப்போது படிப்படியாக அவரைப் பற்றி அறிவார்கள். அதனால் நாட்டிற்கு நன்மை உண்டாகாதா? உலகின் நன்மைக்காக வந்த அவரை அறியாமல்  மக்களுக்கு எப்படி நன்மை உண்டாகும்? அவரைச் சரியாக அறிந்து கொண்டால்  மனிதர்கள் உருவாக்கப்படுவார்கள். அத்தகைய மனிதர்கள் இருக்கும் நாட்டில் பஞ்சத்தையும் பட்டினியையும்  விரட்ட எவ்வளவு நேரமாகும்? இதனால் தான் எனக்காகக்  கல்கத்தாவில் எழுச்சி  உண்டாக வேண்டுமென்று விரும்பினேன். அதன் மூலம் மக்கள் முதலில் ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தியை அறிந்து கொள்வார்கள். இல்லாவிடில் இத்தனை ஆடம் பரங்கள் எனக்கு எதற்கு? ஒரு காலத்தில் உன் வீட்டில்  வந்து எல்லோருமாக விளையாடுவோமே, அதைவிட நான் பெரியவனாகி விட்டேனா  என்ன? அன்று இருந்ததைப்போல் தான் இன்றும் இருக்கிறேன். ஏன்? என்னிடம் ஏதாவது வேறுபாடு உள்ளதா? சொல்.

 வேறுபாடு இல்லை, என்று அந்த நண்பர்  வெளியில் கூறினாலும் உள்ளத்தில், நீங்கள் இப்போது தெய்வத்தன்மை பெற்றுவிட்டீர்கள்? என்று தமக்குள் எண்ணினார்.

 

சுவாமிஜி தொடர்ந்தார், பஞ்சம் என்பது நமது நாட்டைப் பொறுத்தவரை ஒரு தீராத வியாதியாகவே ஆகிவிட்டது. வெளி நாடுகளில் எங்காவது இது போல் இருக்கிறதா? இல்லை. ஏன்? ஏனெனில் அங்கெல்லாம்  மனிதர்கள் வாழ்கிறார்கள். இங்கோ நடைப்பிணங்கள் தாம்  வாழ்கின்றன. ஸ்ரீராமகிருஷ்ணரைப் படித்து, அவரை அறிந்து, தன்னலத்தைத் துறக்கே அவர்கள் முதலில் கற்றுக் கொள்ளட்டும். அதன் பிறகே பஞ்ச நிவாரணத்திற்கான சரியான முயற்சிகள் செய்யப் படும். நானும் மெள்ள மெள்ள அந்த முயற்சியில் ஈடுபட எண்ணியுள்ளேன். அதை நீங்களே பார்ப்பீர்கள்.

 

 வரவேற்புகளையும் வைபவங்களையும் சுவாமி இந்தக் கண்ணோட்டத்திலேயே கண்டார். ஆனால் கல்கத்தா வரவேற்பிற்குப் பிறகு  சுவாமிஜியின் மனம் புண்படத்தக்க விதத்தில், வரவேற்புக் குழுவினரில், சிலர்  வரவேற்பு  நிகழ்ச்சிக்கான செலவுக் கணக்கை அவருக்கு அனுப்பி அதனை  ஏற்றுக் கொள்ளுமாறு அவரிடம்

கேட்டிருந்தனர்.சுவாமிஜி இதை நாகேந்திரநாத் என்ற பக்தரிடம் கூறி, இந்த வரவேற்புகள் எனக்கு எதற்கு? நான் அமெரிக்காவிலிருந்து வண்டி வண்டியாக பணம் கொண்டு வந்திருக்கிறேன், எனது பெயரையும் புகழையும் பரப்புவதற்காக இந்த வரவேற்புகளை எல்லாம் எதிர்பார்க்கிறேன். எனவே  இந்தச் செலவையும் நானே ஏற்றுக் கொள்ள வேண்டும்  என்று அவர்கள்  எண்ணுகின்றனர்.நான் என்ன ஒரு கண்காட்சிப்பொருளா அல்லது வித்தை காட்டுபவனா? அவர்கள் என்ன  நினைக்கிறார்கள்! என்று மனம் வருந்தினார். ஆனால் இதையெல்லாம் நினைத்து மனத்தைக் குழப்பிக்கொள்வதற்கு, அவர் விரும்பவில்லை. அதற்கு அவருக்கு நேரமும் இல்லை. அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பித்துவிட்டு அவர் தமது பணிகளைத்தொடர்ந்தார்.


No comments:

Post a Comment