இந்துமதம்-வகுப்பு-17
நாள்-7-6-2020
..
நடுகல் வழிபாடுகள்-லிங்க வழிபாடுகள்
..
நடுகல் என்றால் நடும்-கல்.ஆதிகாலத்தில் இறந்தவரின் உடலை புதைப்பது வழக்கம்.அப்படி புதைக்கப்பட்ட இடத்தில் கல் நடுவார்கள்.இதற்கு நடுகல் என்று பெயர்.
அவரவர் வசதிக்கு தக்கபடி நடுகல்லின் உயரம்,அகலம் அதிகமாக இருக்கும்.
அரசர்கள் இறந்தால் அழகான வேலைப்பாடுகளுடன் நடுகல் நடப்படும்.அதைச்சுற்றி மண்டபம் எழுப்பப்படும்.அந்த நடுகல்லிற்கு வழிபாடுகள் செய்யப்படும்.
பிற்காலத்தில் இந்த வழிபாடுகள் சற்று பெரிய அளவில் நடைபெற ஆரம்பித்தன.மண்டபங்கள் கோவில்களாக உயர்ந்தன.
நடுகலிற்கு அபிஷேகங்கள் நடந்தன.மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டன.
சித்தர்கள் சமாதி அடைந்த இடத்திலும் இதேபோல வழிபாடுகள் நடைபெற்றன.
..
இந்த நடு கல்லை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்து செல்வதற்கு வசதியாக கல் † போன்று செதுக்கப்பட்டது. இதுவே தற்காலத்தில் சிலுவை சின்னமாக மாறியுள்ளது.
..
புத்தர் காலத்தில் இந்த கல் ஸ்தூபி என்று உருமாறியது.
பழைய கால வழிபாடுகள் காலம் செல்ல செல்ல பரிணாமம் அடைந்தது.
வழிபாடுகளுக்கு தத்துவ விளக்கம் கொடுக்கப்பட்டன. பல்வேறு வழிபாடுகள் ஒன்றிணைக்கப்பட்டன.
நடுகல் வழிபாடு லிங்க வழிபாடாக பரிணாமம் அடைந்தது.
சித்தர்களின் சமாதியில் நடுகல் நடுவதற்கு பதிலாக லிங்கம் நடப்பட்டது.
..
சாதாரண மக்கள் இறந்த இடத்தில் நடுகல் நடப்பட்டது
சித்தர்கள் மற்றும் அரசர்கள் இறந்த இடத்தில் லிங்கம் வைத்து வழிபடப்பட்டது.
..
லிங்க வழிபாட்டிற்கு தத்துவ விளக்கம் கொடுக்கப்பட்டது
பழைய காலத்தில் நிலவிய பல சின்னங்கள் இன்று வழிபடும் பொருளாக மாறியிருக்கின்றன.
உதாரணமாக உடல் என்பது ஆன்மா உறையும் கோவில் என்று வேதாந்தம் சொல்கிறது.
அதை விளக்கும் விதமாக கோவில்கள் கட்டப்பட்டன.
ஆன்மா என்பது தேரில் வீற்றிருக்கும் அரசன் போன்றது என்பது ஒரு உவமை.
இதை விளக்கும் விதமாக பிற்காலத்தில் தேர் உருவாக்கப்பட்டது.
..
குண்டலி சக்தி என்பது பாம்புவடிவில் இருக்கும் சக்தி என்று சொல்லப்பட்டது.
இதை விளக்குவதற்காக சிவனின் தலையில் பாம்பும், திருமால் பாம்பில் படுத்திருப்பதாகவும், சித்தரிக்கப்பட்டது.
யோகத்தின் மிகஉயர்ந்த கோட்பாடான குண்டலினி சக்தி என்பது பாம்புபோல உள்ளது.ஆகவே அதை வழிபடலாம் என்பது யோகிகளின் கருத்து. இது சாதாரணமக்களிடம் சென்றபோது, அவர்கள் பாம்புகளை பிடித்து வழிபட ஆரம்பித்துவிட்டார்கள்.பாம்பு புற்றுகளை வழிபடுகிறார்கள்.
பாம்புக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம்? ஏன் வழிபடுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.
ஆனால் பாம்பு பற்றிய இந்த கருத்தை முறைப்படுத்தி ஆராய்ந்து பார்த்தால், உயர்ந்த தத்துவத்தை குறிக்க பயன்படுத்திய சின்னம் என்பதை புரிந்துகொள்ளலாம்.இவ்வாறு ஆதி காலங்களில் சின்னங்களாகவும், உதாரணமாகவும் சொல்லப்பட்டவை பிற்காலத்தில் வளர்ச்சியடைந்து வழிபடும் பொருளாக மாறியுள்ளது.
..
அதேபோல நினைவு சின்னமாக இருந்த நடுகல் வழிபடும் லிங்கமாக பரிணமித்துள்ளது..
லிங்கத்தின் தத்துவ விளக்கம் என்ன?
லிங்கம் என்பது சமஸ்கிருத சொல். அதன் அர்த்தம் உடல்.
பும்லிங்க என்றால் புருஷஉடல் அதாவது ஆண்உடல்.
ஸ்திரீலிங்க என்றால் பெண் உடல்.
வெறும் லிங்கம் என்றால் உடல் என்று பொருள். ஆகவே உறுப்பு என்ற பொருள் இல்லை என்பது தெளிவு.
..
லிங்கம் எதை குறிக்கிறது?
-
இந்த படைப்பு தோன்றுவதற்கு முன்பு, ஆணும் இருக்கவில்லை,பெண்ணும் இருக்கவில்லை.
இறைவன் ஒடுக்கநிலையில் இருந்தார்.
அப்போது இயக்கம் இல்லை.
இந்த உலகங்கள் இல்லை.உருவமுள்ள எதுவும் இல்லை.
..
சாங்கிய தத்துவம் கூறும் புருஷனும்(கடவுள்) பிரகிருதியும் சேர்ந்து இயங்கஆரம்பிக்கும்போது உலகங்கள் உருவாகிறது.
புருஷனும் பிரகிருதியும் சேர்ந்து இயக்கத்தை நிறுத்தும்போது உலகங்கள் ஒடுங்கிவிடுகின்றன.
இந்த ஒடுக்கநிலையை அவ்யக்தம் என்று அழைக்கிறார்கள்.
இதற்கான ஒரு குறியீடு லிங்கம்.
..
லிங்கம் என்பது இறைவனது உடலை குறிக்கிறது. ஒடுங்கிய நிலையில் உடல் இயக்கம் நிற்கிறது. மனத்தின் இயக்கம் நிற்கிறது.அப்போது இறைவன் தனது சொந்த நிலையான சத்சித்ஆனந்தம் எனப்படும் உருவமற்ற நிலையை அடைகிறார். சில தத்துவங்களில் இதை அவ்யக்தம் என்கிறது. லிங்க உடல் இயங்காத நிலையை குறிக்கிறது.
-
இறைவனின் லிங்க உடலை யாராலும் காண முடியாது. ஏன் முடியாது? ஏனென்றால் அது படைப்பு ஒடுங்கியிருக்கும் நிலை. அப்போது மனிதர்கள், விலங்குகள்,சூரிய சந்திரன் உட்பட பிரபஞ்சம் முழுவதுமே ஒடுங்கியிருக்கும். எதுவுமே இல்லாத அந்த நிலையை காண்பது யார்?அப்போது யாருமே இல்லை. இந்த பிரபஞ்சமே அந்த லிங்கத்திற்குள் ஒடுங்கிவிட்டது. அடுத்து துவங்கவிருக்கும் படைப்பும் அந்த லிங்கத்திலிருந்தே தான் ஆரம்பமாகும்.அப்போதும் அதை காணமுடியாது ஏனென்றால் அப்போது அது ஆணாகவும் பெண்ணாகவும் பரிணமித்திருக்கும். ஆகவே இறைவனின் லிங்க உடலை யாராலும் காணமுடியாது.அது நமது அறிவை கடந்தது என்று பொருள் அல்ல. அதை காணமுயலும் போது நமே அதற்குள் அடங்கிவிடுவோம்.
..
ஒரு உயர்ந்த தத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்லும் போது, அதன் உள் அர்த்தத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. இறைவன் எப்படி இருப்பார் என்று ஒரு மகானை பார்த்து படிக்காதவன் கேட்டால், அவர் ஒரு லிங்கத்தை அவனுக்கு கொடுத்து, இது இறைவனை குறிக்கிறது என்பார். அந்த பாமரனும் இது இறைவனை நியாபகப்படுத்துவதால்,இதை வழிபடலாம் என முடிவுசெய்து பல்வேறு வழிகளில் வழிபடுகிறான்.
..
லிங்கம் என்பது ஆண்குறியா?
..
லிங்கம் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. ஒன்று உடல்.
இன்னொன்று ஆண்உறுப்பு.
இந்த ஆண் உறுப்பு என்ற அர்த்தம் பிற்காலத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம்.
நாம் இதுவரை பார்த்த லிங்க வழிபாடு என்பது ஆண்உறுப்பு தொடர்பான வழிபாடு அல்ல.
அது நடுகல் வழிபாட்டின் பரிணாமம் என்று பார்த்தோம்.
..
வட இந்தியாவில் இன்னொரு வழிபாடும் உள்ளது.
..
இந்த உலகத்தில் உள்ள அனைத்துமே இறைவனால் சூழப்பட்டுள்ளது.இறைவன் இல்லாத இடமே இல்லை.ஆண், பெண்,மிருகங்கள்,தாவரங்கள் அனைத்தும் இறைவனைத்தவிர வேறு இல்லை என்று உயர்ந்த தத்துவங்கள் போதிக்கின்றன.
எனவே ஆண்பெண் இணையும் காமத்தைக்கூட விலக்க வேண்டியதில்லை.என்பதை சில இந்துமத சமய பிரிவுகள் ஏற்றுக்கொள்கின்றன.
காமத்தையும் கடவுளின் வெளிப்பாடாக காணும்படி போதிக்கின்றன.
ஆண் உறுப்பையும் பெண் உறுப்பையும் வழிபடும் பொருளாக ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் போதிக்கிறார்கள்.
அதன் நோக்கம் என்னவென்றால் காமத்தின் மூலம் காமத்தை கடந்துசெல்வதாகும்.
சிலர் இதை அருவெறுப்பாக பார்க்கிறார்கள்.அப்படி பார்ப்பவர்கள் எந்த அளவு காமத்தில் மூழ்கிக்கிடக்கிறார்கள்,ரகசியமாக காமத்தை எந்த அளவு போற்றுகிறார்கள் என்பது நமக்குத்தெரியும்.
..
வெளியில் நல்லவர்போல பேசுவது.உள்ளுக்குள்ளே அனைத்து கெட்ட சிந்தனைகளையும் வைத்துக்கொள்வது.
இது வேண்டாம். உள்ளே உள்ள தீய சிந்தனைகளை வெளியோ கொண்டு வாருங்கள் என்று அந்த சமய பிரிவினர் கூறுகிறார்கள்.
மனிதனை மயக்குவது எது. காமம்,மது,மாமிசம்
இவைகளை ஞானத்துடன் அனுபவியுங்கள்.பிறகு இதிலிருந்து வெளியேறுங்கள் என்று அவர்கள் போதிக்கிறார்கள்.
காமம் சார்ந்த வழிபாடுகள் ஆதிகாலத்திலிருந்தே தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும் அவைகளை பெரும்பாலான மக்கள் ஆதரிப்பதில்லை.
..
இந்துமதம் என்பது எல்லைகாண முடியாத சமுத்திரம்போன்றது.
அதில் பலவித கருத்துக்கள் இருக்கின்றன.யாருக்கு எது தேவையோ அவர்கள் அதை பின்பற்றும் சுதந்திரமும் உள்ளது.
ஆனால் சமுதாயம் என்று வரும்போது புனிதமான,நல்ல வழிபாடுகளை மட்டுமே பெரும்பாலானமக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment