Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-23

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-23

🌸

பல துறை அறிவு-

 

டெட்ராய்ட்டில்  சுவாமிஜியின் பல துறை அறிவு வெளிப்பட்ட நிகழ்ச்சிகளும் உண்டு. ஒருநாள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றின்போது ஒரு பெண் அவரிடம், சுவாமி, வேதியியலைப் புரிந்து கொள்ள எந்த நூல்களைப் படிக்க வேண்டும்? என்று  கேட்டாள். வேதியியல் நூல்களின் ஒரு நீண்ட பட்டியலைக் கூறினார் சுவாமிஜி. மற்றொருவர் வான இயல் பற்றி அதே கேள்வியைக்கேட்டார். அப்போதும் தயக்கமின்றி சுவாமிஜியிடமிருந்து பதில் வந்தது. இது அங்கிருந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்றால் அடுத்த கேள்விக்கு சுவாமிஜி அளித்தவிடை அனைவரையும்  பிரமிப்பில் உறையவே செய்து விட்டது. ஒரு பெண் ஏசுநாதரைப்பற்றி சிறிது நேரம்  பேசிவிட்டு, சுவாமி, ஏசுநாதர், என்ற சொல்லின்  பொருள் என்ன? என்று கேட்டாள். கணமும் தாமதிக்காமல் பதில் கூறினார்சுவாமிஜி. அப்போது அவரது முகத்தில் கேலிப் புன்னகை ஒன்று தவழ்ந்ததாம். இவருடைய அறிவிற்கும், டெட்ராய்ட்டில் தங்களைப்  பண்பாட்டுக் காவலர்கள் என்று கூறிக்கொள்கின்ற சில பெரிய மனிதர்களின் அறிவிற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நினைத்தால்  எனக்கு வெட்கமாக இருக்கிறது. என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் கூறினார். இந்த நிகழ்ச்சி ஈவினிங் நியூஸ் என்ற பத்திரிகையில் வெளி வரவும் செய்தது.

 இப்படி பல துறை அறிவு சுவாமிஜியிடம் எப்படி உண்டாயிற்று? அது பற்றி ஒரு முறை அவரே கூறினார். நான் எதைப் பார்த்தாலும் அது அப்படியே என் மனத்தின் ஆழங்களுக்குச்சென்று தங்கிவிடும். பிறகு வேண்டும் போது அது உணர்வு த் தளத்தில் வரும்.

 மற்றொரு முறை கூறினார், நான் சங்கரரின் மூளை யைத் தியானித்தால் சங்கரர் ஆகிறேன். புத்தரின் மூளையைத் தியானித்தால் புத்தர் ஆகிறேன். குறிப்பிட்ட ஒரு  விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, மனத்தை ஒருமுகப் படுத்தும்போது அந்த விஷயம் பற்றிய அனைத்துக்  கருத்துக்களும் என் மனத் தளத்திற்கு வந்து சேர்கின்றன. அது வரை எனக்குத் தோன்றியிராத கருத்துக்களும் சிந்தனைகளும் எழும். நான் அவற்றைக் கண்கூடாகக் காண்பேன். எனக்கு இப்படி வருவனவற்றை என்னை மறந்த நிலையில் பேசிக்கொண்டே போவேன். நான் பண்டிதன்  அல்ல, ஒரு சாதாரண மனிதன் என்பது உங்களுக்கே தெரியும்.

 

புனித கைகள்

 

 சுவாமிஜியின் இத்தகைய அறிவு மக்களைப் பிரமிக்க செய்தது என்றால் அவரது புனிதம் அருகில் சென்றவர்களை ஈர்த்தது, போற்றச்செய்தது. ஒரு நாள் சொற்பொழிவிற்குப் பிறகு சுவாமிஜியை வாழ்த்தி அவருக்கு நன்றி சொல்வதற்காக வந்தார் மிஸ்மார்கரெட் குக் என்பவர். அவர் ஓர் ஆசிரியை. பொதுவாக அவர் உணர்ச்சிவசப் படாதவர்.ஆனால் சுவாமிஜியின் அன்றைய சொற்பொழிவில் அவர் மிகவும் நெகிழ்ந்து போனார். எனவே சொற்பொழிவு முடிந்ததும் நேராக சுவாமிஜியிடம் சென்றார். அவருடன் கைகுலுக்கினார். ஏதோ உணர்ச்சி வேகம் அவரை ஆட்கொண்டது. அவரால் எதுவும் பேச இயலவில்லை. அப்படியே வீடு சென்றார். சுவாமிஜி தொட்ட ஒரு தெய்வீகப் பரவசம் அவரில் நிறைந்திருந்தது. சுவாமிஜியின் புனிதக்கைகள் பட்ட தமது கையை அவர் மூன்று நாட்கள் கழுவவே இல்லையாம்!

 பல இடங்களில் சொற்பொழிவு செய்து விட்டு ஏப்ரல் ஆரம்பத்தில் சிகாகோவிற்குச்சென்றார் சுவாமிஜி.

 சுவாமிஜியின் அமெரிக்கப் பணிகளின் மற்றொரு பரிமாணம் அவரது நூல்கள் வெளியீடு. அவரது பொதுச்சொற்பொழிவுகள் மற்றும் வகுப்புச்சொற்பொழிவுகளின் விளைவுகளில்  இது ஒன்று. சுவாமிஜி தமது சொற்பொழிவுகளின் மூலம் சிலருக்கு வழி காட்டினார். அவர்களின் வாழ்க்கையில் வியக்கத் தக்க மாற்றங்களைஏற்படுத்தினார். அந்த நற்பணி காலங்காலமாகத் தொடர்வதற்குத் துணை செய்தது அவரது நூல்கள் வெளியீடு. நான் சில பாட நூல்களை எழுதி முடிக்க விரும்புகிறேன். வேலையை முழு ஈடுபாட்டுடன் தொடங்கியும் விட்டேன். நான் விட்டுச்சென்ற பிறகு நடை பெற வேண்டிய வேலைக்கு அந்த  நூல்கள்  வழி காட்டியாக இருக்கும். நான் போகுமுன் நான்கு சிறு நூல்களை வேகமாக எழுதி முடித்தாகவேண்டும் என்று 1895 டிசம்பரில்  சாராவிற்கு எழுதினார் சுவாமிஜி.

 இதைத் தொடர்ந்து அவரது நூல்கள்  ஒவ்வொன்றாக வெளிவரத்தொடங்கின. 1896 பிப்ரவரியில் கர்மயோகம்  அச்சிற்குத் தயாராகியது. ஜுலையில் லண்டனில் ராஜயோகம் வெளியிடப்பட்டது. சென்னையிலிருந்து வெளிவந்த பிரம்ம வாதினில் பக்தியோகம் தொடராக வெளியிடப் பட்டது. நவம்பரில் சென்னையில் அது நூலாக வெளியிடப்பட்டது. சுவாமி சாரதானந்தர்  அமெரிக்காவில் இருந்தபோது சுவாமிஜியின் ஞான யோகச்சொற்பொழிவுகளை  வெளியிட்டார்.

 

எனது பயணம்-

-

 சுவாமிஜி எழுதிய முழுமையான நூல், எனது பயணம். இரண்டாம் முறை மேலை நாடுகளுக்கு அவர் பயணம் சென்றபோது எழுதிய நூல் இது. இது தொடர்ந்து ராமகிருஷ்ண மடத்தின் வங்க மொழிப் பத்திரிகையான ”உத்போதன் இதழில் வெளிவந்தது. அன்றைய ஐரோப்பா, வரலாறு, நகைச்சுவை என்று பல பரிமாணங்களுடன் விளக்குகின்ற நூல் இது.

 இவற்றிலிருந்து ஒன்று தெரிகிறது- சுவாமிஜிக்கு நேரம் கிடைத்திருந்தால்  ஆன்மீகம் மட்டுமின்றி, மற்ற துறைகளில் கூட அற்புத காவியங்களைப் படைத்திருப்பார் என்பது  தான் அது.

 இந்து மதத்தின் எந்தப் பிரிவு ஆனாலும், அதற்கென்று உபநிஷதங்கள், கீதை, பிரம்ம சூத்திரம், ஆகிய பிரஸ்தான த்ரயங்களுக்கு ஒரு விளக்கவுரை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேதாந்தத் தத்துவத்தைத் தங்கள் கண்ணோட்டத்தில் விளக்குகின்ற நூல்களாவது எழுதப் பட்டிருக்கவேண்டும். சங்கரர், ராமானுஜர், மத்வர் போன்ற வேதாந்த ஆச்சாரியர்கள் தங்கள் நெறியை நிறுவ இத்தகைய நூல்களை உருவாக்கியுள்ளனர். இந்தக் காலத்திற்கென வந்த யுக நாயகரான சுவாமிஜி அத்தகைய நூல் ஒன்று எழுத விரும்பியதில்  ஆச்சரியம் எதுவும் இல்லை. தமது ஆர்வத்தை அளசிங்கருக்கு எழுதினார் சுவாமிஜி.

வேதாந்தத் தத்துவத்தைப் பற்றி பெரிய  நூல் ஒன்றை எழுதுவதில் நான் ஈடுபட்டுள்ளேன். வேதாந்தத்தின்  மூன்று அம்சங்களைப் பற்றி கூறுகின்ற பகுதிகளை பல்வேறு வேதங்களிலிருந்து சேகரித்துக் கொண்டிருக்கிறேன், சம்ஹிதைகள், பிராமணங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இவற்றிலிருந்து முதலில்  அத்வைதப் பகுதிகளையும், பிறகு விசிஷ்டாத் வைதப் பகுதிகளையும் , அதன் பிறகு துவைதப்பகுதிகளையும், சேகரித்து க் கொண்டிருக்கிறேன். சம்ஹிதைகள், பிராமணங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இவற்றிலிருந்து  முதலில் அத்வைதப் பகுதிகளையும் பிறகு விசிஷ்டாத்வைதப் பகுதிகளையும் அதன் பிறகு துவைதப் பகுதிகளையும் சேகரித்து த் தருமாறு யாரிடமாவது கூறி எனக்கு நீ உதவலாம். அவை  தனித்தனியாக தெளிவாக எழுதப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் நூலின் பெயரும், அத்தியாயமும் குறிக்கப்பட வேண்டும். வேதாந்தத் தத்துவத்தைச் சிறிதளவாவது ஒரு நூல் வடிவில் அமைத்து வைக்காமல் நான் மேலை நாட்டை விட்டு வருவது உசிதமல்ல.

 நூற்றெட்டு உபநிஷதங்களையும் கொண்ட ஒரு தமிழ் நூல் மைசூரில் வெளியிடப்பட்டுள்ளது. பேராசிரியர் தாசனின் நூல்நிலையத்தில் அதைப் பார்த்தேன். அந்த நூல் சம்ஸ்கிருதத்தில்  அச்சாகியுள்ளதா? அப்படியிருந்தால்  எனக்கு ஒரு பிரதி அனுப்பு. இல்லாவிட்டால் தமிழ்ப் பதிப்பையே  அனுப்பு. அதனுடன் ஒரு தாளில் தமிழ் எழுத்துக்களையும் கூட்டெழுத்துக்களையும் எழுதி, அவற்றிற்கேற்ற சம்ஸ்கிருத எழுத்துக்களை எதிரெதிரே எழுதி அனுப்பு. அதன் மூலம் நான் தமிழ்எழுத்துக்களைக் கற்றுக் கொள்வேன். என்று  அளசிங்கருக்குத் தமது ஆர்வத்தை எழுதினார் சுவாமிஜி. அந்த நூலை எழுதுவதற்காகத் தமிழ்  மொழியைக் கற்பதற்குக் கூட அவர் தயாராக இருந்தார். இந்த நூல்  எழுதப்பட்டிருந்தால்  அது மனித குலத்திற்கு சுவாமிஜியின் மாபெரும்  கொடையாக இருந்திருக்கும்! ஆனால்  அது நடைபெறவில்லை.

 அமெரிக்காவில் இருந்த ஆரம்ப நாட்களில் அந்த நாட்டைப் பற்றிய ஒரு நூலை எழுத விரும்பினார் . அதுவும் நடக்கவில்லை.

 இந்து மதம் பற்றி மிக எளிமையான நூல் ஒன்றும் எழுத வேண்டும் என்றும் சுவாமிஜி விரும்பியிருந்தார்.

 இந்து மதக் கருத்துக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது மிகவும் கடினம். வறண்ட தத்துவம், சிக்கலான புராணங்கள், விசித்திரமான பிரமிக்கச் செய்கின்ற மன இயல்- இவற்றிலிருந்து எளிய, சரளமான, பாமர மக்களின்  உள்ளங்களைக் கவர்வதாக அதே வேளையில் மிக உயர்ந்த மனங்களின் தேவைகளையும்  பூர்த்தி செய்ய வல்லதான  ஒன்றை அமைப்பது என்பது மிக மிகக் கடினமான விஷயம். முயன்றவருக்கே அதன் கஷ்டம் விளங்கும்.மிக நுண்ணியதான அ்த்வைதம், தினசரி வாழ்க்கையில் ஒரு வாழ்கின்ற கவிதையாக வேண்டும். சீராக்க முடியாத சிக்கலான புராணங்களிலிருந்து தெளிவான தார் மீகக்கோட்பாடுகள்  உருவாக வேண்டும். பயத்தைத் தருகின்ற யோக சாஸ்திரத் திலிருந்து  அறிவு பூர்வமான, செயல் முறை மன இயல் வர வேண்டும். ஒரு குழந்தை கூட புரிந்து கொள்ளத் தக்க  வகையில் இவற்றைக்கொடுக்க வேண்டும். அது வே என் வாழ்வின் பணி. நான் எவ்வளவு தூரம் வெற்றி பெறுவேன் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.

 எழுதுவதில் சுவாமிஜிக்கு இருந்த ஆர்வம் இறுதிவரை தணியவில்லை.1901-இல் அவர் மாயாவதிக்குச் சென்றிருந்த  போது, பரபரப்பான தமது சொற்பொழிவு வாழ்க்கையிலிருந்து விலகி எஞ்சிய வாழ்நாளை நூல்கள் எழுதுவதில் செலவிடப்போவதாகத் தமது சீடர்களிடம் தெரிவித்தார். பின்னர் பேலூர் மடத்திற்குத் திரும்பியபோது, உலகிற்கு இந்தியாவின் செய்தி தெய்வீக ஞானச்செய்தி என்ற இரு நூல்களை ஆரம்பித்தார். அதற்கான பாடத்திட்டங்களையும் வகுத்திருந்தார். இந்தியாவின் வரலாறு  மற்றும் அதன் நாகரீக வயர்ச்சி பற்றிய ஒரு நூலை எழுதுவதற்காக ஒரு பாடத் திட்டமும் எழுதியிருந்தார். ஆனால் இவை எதுவும் முழுமை பெறவில்லை.

 

இங்கிலாந்தில்

-

 இரண்டாம் முறையாக 1896 ஏப்ரலில் லண்டனுக்குச்சென்றார் சுவாமிஜி. அவரது அழைப்பை ஏற்று ஏற்கனவே அங்குவந்திருந்த சாரதானந்தர் அங்கே ஸ்டர்டியுடன்  தங்கியிருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு  சுவாமிஜி சாரதானந்தரைச் சந்திக்கிறார். எனவே சகோதரர்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். சாரதானந்தருடன் சுவாமிஜியின் சகோதரரான  மகேந்திரரும் மேல் படிப்பிற்காக லண்டனுக்கு வந்திருந்தார். அவரிடம் சுவாமிஜி சம்ஸ்கிருத கலைக் களஞ்சியமான ”வாசஸ்பத்யபிதானம் என்ற நூலைக்கொண்டு வருமாறு கூறியிருந்தார். அது கிடைத்ததும் அதைப் படிப்பதில் மூழ்கினார்.  அதனுடன் தமது நூல்களைத் திருத்துவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டார். இந்த நாட்களில் அவர் பைக் ஓட்டவும் கற்றுக்கொண்டார்.

 சாரதானந்தரிடமிருந்து ஆலம்பஜார் மடத்து விவரங்களை அறிந்து கொண்டார் சுவாமிஜி. தமது பணிகள் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவருளால் இந்தியாவிலும் வேரூன்றுவது கண்டு மிகுந்த திருப்தியடைந்தவராய் லண்டன் பணிகளில் கவனத்தைச்செலுத்தினார்.

 

சுமார் ஒரு வாரம் ஸ்டர்டியுடன் தங்கினார் சுவாமிஜி. அவருடன் வேறு பலரும் தங்கியிருந்தனர். அது ஓர் இளைஞர் கூட்டம் எனலாம். ஜான் ஃபாக்ஸ்(23), குட்வின்(25),மகேந்திரர்(26), சாரதானந்தர்(30), சுவாமிஜி(33),ஸ்டர்டி(36), மிஸ் முல்லர்(45 வயது),. இரவு  வேளைகளைப் பொதுவாக சுவாமிஜி  தியானத்தில் கழித்தார். இந்த  அனுபவங்களை அவர் சில வேளைகளில் பிறரிடம் பகிர்ந்து கொண்டதும்  உண்டு. காலை சுமார் 9 மணிக்கு அவர் சிற்றுண்டி அருந்துவார். அதன் பிறகு சாய்வு நாற்காலியில்  அமர்ந்து குட்வின் மற்றும் சாரதானந்தரிடம் சிறிது நேரம் பேசுவார்.

 

 சிலவேளைகளில் தினசரி பத்திரிகைகளைப் படித்து விட்டு உலகெங்கும் நிலவும் கொடுமைகளைக் கண்டு இதயம் துடிப்பார் சுவாமிஜி. ரஷ்யாவில் இரண்டாம் ஜார்நிக்கோலஸ் மன்னன் முடிசூடிக்கொண்ட போது நிகழ்ந்த படுகொலைகள் அப்போது பத்திரிகைகளில் பரபரப்பாகப்பேசப் பட்டன. பட்டம்  சூட்டும் விழாவைக் காணவும், அங்கே கிடைக்கப்போகின்ற அழகிய கப் ஒன்றைப்பெறவும்   தொலைதூர கிராமங்களிலிருந்து  வந்த ஏழை விவசாயிகள்  சுமார் 2,000 பேர் நெரிசலிலும் , போலிஸின் அராஜகத்திலும் இறந்தது கேட்டு சுவாமிஜியின் இதயம் வேதனையில் துடித்தது. இங்கிலாந்தின் நாகரீக வளர்ச்சியையும், ரஷ்யாவில் அவ்வளவு வளர்ச்சி இல்லாததையும்  ஸ்டர்டியும் குட்வினும் ஒப்பிட்டுப்பேசினார்கள். சுவாமிஜி மௌனமாக அமர்ந்திருந்தார். பிறகு திடீரென்று கூறினார்!

 என்ன துன்பம்! என்ன துயரம்! ஒரு கப்பிற்காக கிராமங்களையெல்லாம்  விட்டு நகரத்திற்கு வந்தார்கள் இந்த அப்பாவிகள். பாவம், இவ்வளவு பேர் கொல்லப் பட்டார்களே! ஒரு கப்பிற்காக உயிரை விட்டிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு ஏழ்மை அங்கே தாண்டவமாட வேண்டும்! என்ன கொடுமை!

 அப்போது  லண்டனில் மிகவும் பேசப்பட்ட ஊழல் ஒன்றுபற்றி சுவாமிஜி கூறினார், ஓர் இனம் அழியப்போகிறது என்றால் அதன் முதல் அடையாளம்  அது உள்ளுக்குள்ளே அழுகத்தொடங்குவது தான் , பிறகு எதிரி வருகிறான். மொத்தமாக அழிகிறான்.அங்கிலேய இனம் இப்படிப்போகுமானால்  அதன் அழிவு நிச்சயம். சமுதாயத் தீமையிலிருந்து தான் மற்ற எல்லா தீமைகளும் உருவாகின்றன.

சுவாமிஜி ஒரு முறை, குட்வினிடம் இந்த மக்களின் நாடி நரம்புகளில் வேதாந்தத்தைப் பாய்ச்சாமல்  இந்த நாட்டிலிருந்து கிளம்ப மாட்டேன் என்று கூறினார். எனவே கிடைக்கின்ற எந்த வாய்ப்பையும் நழுவ விடாமல்  சென்று சொற்பொழிவு செய்தார். உயர் குடி மக்களும், ஏன் வேறு எங்கும் செல்லாத அரச பரம்பரையினரும் கூட சுவாமிஜியின் சொற்பொழிவைக் கேட்க வந்தனர். ஒரு முறை  மகாராணியின் மருமகள் கூட, யாருக்கும் தெரியாமல் வந்து சுவாமிஜியின் சொற்பொழிவைக்கேட்டதுண்டு.

 சில நாட்கள் ஸ்டர்டியின்  வீட்டில் தங்கிய பிறகு மிஸ்முல்லரின் நகர்புற வீட்டில் தங்கினார் சுவாமிஜி. அங்கும் மற்ற இடங்களிலும் வகுப்புகள் நடத்தினார் அவர்.  லண்டன் இந்து  அசோசியேஷனில் அவர் பேசிய போதுதாதாபாய் நௌரோஜியும் உடனிருந்தார். சுவாமிஜியின் அன்றைய சொற்பொழிவு கேட்டோர் உள்ளத்தில் மின்சாரம் போன்ற அதிர்வலைகளை எழுப்பியது.

 சொற்பொழிவுகளைத் தவிர பல இடங்களில் வகுப்புச்சொற்பொழிவுகள் நிகழ்த்தினார் சுவாமிஜி. பலர் அவரை அழைத்துச் சென்று, தங்கள் வீடுகளில் மிகச்சில நண்பர்களுடன் அவரது பேச்சைக்கேட்டனர். அன்னிபெசன்ட் அம்மையார் சுவாமிஜியை அழைத்துப்பேசச் செய்ததுண்டு. அந்தச் சொற்பொழிவில் கர்னல் ஆல்காட்டும் கலந்து கொண்டார்.

-

 விளையாட்டுச் சிறுவன்- உலகின் குரு-

-

 ஒரு நாள் காலை வேளை. சுவாமிஜி வகுப்பிற்குச் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தார். அவரது அறை மாடியில் இருந்தது. அங்கிருந்து  கீழே சாலைகளைப் பார்த்தார். காலை வேளைகளில்  அவசரமும் விரைவும் அங்கே தென்பட்டன. விரைந்தோடும் குதிரை வண்டிகள் ஒரு புறம், பரபரப்புடன் செல்லும் ஆண்களும் பெண்களும் ஒரு புறம். இதையெல்லாம் கண்ட போது சுவாமிஜிக்கு ஏனோ விளையாட்டு மனநிலை தோன்றியது. அவர் உல்லாசமாகப் பாடினார்.

கையில் குடை, தலையில் தொப்பி

 கூடை கூடையாய் மாவு பூசிய முகம்

 

 விரையும் பெண்கள்-

 

 சுவாமிஜியின் பாடலும் அவரது குரலில் தொனித்த கேலியும் மகேந்திரரை வாய்விட்டுச் சிரிக்கச்செய்தன. பாடிவிட்டு சுவாமிஜி சாரதானந்தரிடம், இந்தப் பெண்கள் இவ்வளவு பவுடரை முகத்தில்  அப்பியிருக்கிறார்களே, இவ்வளவையும் சுரண்டி எடுக்க வேண்டுமானால் புல் செதுக்கியோ மண் வெட்டியோ தான் வேண்டியிருக்கும் என்றார்.

 வகுப்பு வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. சுவாமிஜி அதே  மனநிலையில் ஒரு சிறுவனைப்போல் சிரிப்பும் கேலியும் கும்மாளமுமாக வேடிக்கை செய்து கொண்டிருந்தார். அருகில் இருப்பவர்களின் விலாவை நிமிண்டி கிச்சுக் கிச்சு மூட்டினார். இப்படி அனைவரும் சிரித்தபடியே  படி வழியாகக் கீழே இறங்கினர். இறங்கிக் கொண்டே இருந்த சுவாமிஜியின்  நிலை திடீரென்று மாறியது. அவர் கம்பீரமானார். முகமும் கண்களும்  அவர் அகமுகமாகிக் கொண்டிருப்பதைக் காட்டின. ஓர் ஆழ்ந்த அமைதி அவரிடம் தோன்றியது. கீழே சென்றார் நேராக வகுப்பு நடத்த வேண்டிய அறைக்குள் நுழைந்தார். நுழைந்தவர் வேடிக்கை செய்த விடலைச் சிறுவன் அல்ல அவர் இறைவனைக் கண்ட , இறைவனுடன்  எப்போதும் தொடர்பு கொள்கின்ற இறையுணர்வாளரான உலக குரு என்று எழுதுகிறார் மேரி லூயி பர்க்.

 

 இந்த நாட்களில் பொதுவாக சுவாமிஜி தங்கிய இடத்தில் சாப்பிட்டதே இல்லை. தினமும் யாராவது அழைத்துச்சென்று விடுவார்கள். சிலவேளைகளில் யாராவது அழைத்திருப்பார்கள். ஆனால் சுவாமிஜி அதை மறந்திருப்பார். சாப்பிட உட்கார்ந்த பிறகு தான் அது நினைவுக்கு வரும். உடனே சாப்பாட்டைப் பாதியில்  நிறுத்திவிட்டு எழுந்து அவசர அசவரமாகச் செல்வார்.

சுவாமிஜியின் அறிவுப் பரிமாணங்களுக்கு எல்லையில்லை. அவருடன் இருக்கின்ற ஒவ்வொருவரும் அவரது பன்முக அறிவைக் கண்டு பிரமித்தார்கள். குட்வினுடன் அரசியல்பேசுவார். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பட்டங்கள் பெற்ற ஃபாக்ஸுடன் வரலாறு பேசுவார். வெறும் நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, வரலாற்றின் சிறு சிறு அம்சங்களும் அவருக்குத் தெரிந்திருக்கும். சாப்பாட்டு ராமனான ரோமாப்பேரரசன் விட்டிலியஸ் அசாமிலிருந்து மைனாக் குருவிகளை வரவழைத்து அவற்றைப் பாலிலும் நெய்யிலும் சமைத்துச் சாப்பிடுவது பற்றி கூறுவார். அமெரிக்க வண்டிகளில் சக்கரங்கள் எப்படி செய்யப் படுகின்றனஎன்பதை விளக்குவார். ஜெர்மனியின் சமீப கால விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளை விளக்குவார். யூதத் தத்துவங்கள், பாரசீகப் பழக்கவழக்கங்கள் , ஐரோப்பிய அரசியல் வானவியல், என்று அவரது அறிவின் எல்லைகள் எங்கேயும் ஒரு முடிவுக்கு வருவதாக இருக்காது. இவற்றையெல்லாம் வெறுமனே சொல்லாமல் இன்றைய மனித வாழ்க்கையுடன் பொருத்திப்பேசுவது அவரது இணையற்ற பாணியாக இருந்தது. எங்கு பேசினாலும், எப்போது பேசினாலும். எதைப் பற்றி பேசினாலும் இந்தியாவும் அதன் பெருமையும் அவரது பேச்சில் இடம் பெறாமலே இருக்காது.

 சுவாமிஜி எங்கே வாழ்ந்தாலும் அந்த இடத்துடன் ஒன்றிவிடுவார். அந்தப்பேச்சு, அந்த பழக்கவழக்கங்கள் என்று அனைத்திலும் அவர்களாக அவர் மாறி விடுவது போல் இருக்கும். மகேந்திரர் சில வேளைகளில்  உடையில் கவனம் செலுத்தாமல் இருக்கும் போது கடிந்து கொள்வார். கேலிகள் அவரது பேச்சில் இடம் பெறாமல் இருப்பதே இல்லை. அவருடன் இருப்பவர்கள் விலா வெடிக்கச் சிரிக்காமல் இருக்கவே இயலாது.

 

பள்ளிகளில் குழந்தைகளைப் பிரம்பால் அடிப்பது பற்றி ஒரு நாள் பேச்சு வந்தது.

ஸ்டர்டி- யாராவது குழந்தைகளை அடிப்பதைக் கண்டால் எனக்குப் பற்றிக்கொண்டு வரும்.

குட்வின்- குழந்தைகளை ஏன், கழுதையானாலும் சரி.யாராவது அதை அடிப்பதைக் கண்டால் எனக்குக்கோபம் தலைக்கேறி விடும்.

சவாமிஜி- உண்மை தான், அவரவர் இனத்தின் மீது பற்று தவிர்க்க இயலாதது அல்லவா?

 எந்தச் சிரிப்பும் இல்லாமல் சுவாமிஜி இதை அழுத்தமாகக் கூறியபோது யாராலும் சிரிப்பை அடக்க இயல வில்லை. ஓஹோ என்று சிரித்தவர் குட்வின் தான்!

 இங்கிலாந்திலும் சுவாமிஜியின் பணி அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. அங்கும் பாதிரிகளை எதிர்கொள்ள நேர்ந்தது.  பாதிரிகள் தூண்டுதலால், பத்திரிகைகள் அவரைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதை த் தவிர்த்தனர். அவர் பேசுகின்ற இடங்களிலும் சில கிறிஸ்தவ மிஷனரிகள் சிறு சிறு  சலசலப்புகளை ஏற்படுத்த முயற்சி செய்தனர். இப்படித்தான் ஒரு நாள் ஒருவர், சுவாமிஜி பேசி முடித்ததும். எழுந்து, நீங்கள் ஏற்கனவே சொற்பொழிவைத் தயார் செய்யாமல் இப்படிப் பேசுவதை விட்டு விட்டு, எழுதித் தயார் செய்து பேசினால் நன்றாக இருக்கும் என்று கூறினார். சுவாமிஜி மீண்டும் எழுந்தார். மீண்டும் பேச ஆரம்பித்தார். அவரது பேச்சின் மகிமை கூட்டத்தினரை முற்றிலுமாக வசப்படுத்தி விட்டது குழப்ப நினைத்த மிஷனரி காணாமல் போய் விட்டார்.

மற்றொரு முறை சுவாமிஜி தமது பேச்சை நிறைவு செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே அமர்ந்திருந்த பிரபலமான தத்துவ அறிஞர் ஒருவர் எழுந்து, நீங்கள் மிகவும் நன்றாகப்பேசினீர்கள். அதற்கு எனது இதய பூர்வமான பாராட்டுக்களைத்தெரிவித்துக்கொள்கிறேன்.ஆனால் ஒன்று, நீங்கள் கூறியதில் புதிய கருத்துக்கள் எதுவும்  இல்லை என்றார். சுவாமிஜியின் இனிய கம்பீரக்குரல் தொடர்ந்தது. நான்  உங்களிடம் உண்மையைச்சொன்னேன். காலம் காலமாக நின்று கொண்டிருக்கின்ற மலைகளைப்போல்  அனாதியான உண்மையை, மனித குலத்தைப்போல் அவ்வளவு புராதனமான உண்மையை, கடவுளைப்போல்  என்றென்றும் விளங்குகின்ற உண்மையைச்சொன்னேன். எப்படிச் சொன்னால் நீங்கள் அந்த உண்மையைச் சிந்திப்பீர்களோ, எப்படிச் சொன்னால் நீங்கள் அந்த உண்மையை உங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க முயற்சி செய்வீர்களோ அப்படி நான்  சொல்லியிருந்தால்  அது போதாதா? சுவாமிஜி இதைச்சொல்லி முடித்ததும் தான் தாமதம்,-பிரமாதம்! என்ன அற்புதமான பதில், பாருங்கள், என்றெல்லாம் அறை முழுவதும் குரல்கள்  ஒலிக்கத் தொடங்கின. கூடவே கைத் தட்டல்களும் ஆரவாரமாக எழுந்தன. எந்த எதிர்ப்பு களுக்கும் நிலைகுலையாமல் , கேட்பவர்களை எப்படி தன் கூடவே சுவாமிஜி கட்டி வைத்திருந்தார் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

நான் எப்படி உண்மையை அடைந்தேன் என்பதை உங்களுக்குக் கூறுகிறேன். என்று கூறிவிட்டு சுவாமிஜி தொடர்ந்தார். அன்று அவர் ஸ்ரீராமகிருஷ்ணர் அப்பழுக்கற்ற புனிதமான அவரது வாழ்க்கை, தளர்ச்சியற்ற உறுதியுடன் அவர் உண்மையைத் தேடியது. அவரது கண்டு பிடிப்பு, அனைத்திற்கும் மேலாக, எங்கே நான் இருக்கிறேனோ, அங்கே  உண்மை இருக்கும் என்று அவர் உலகிற்கு அறிவித்தது போன்றவை பற்றி சுவாமிஜி கூறினார், பிறகு கம்பீரமான குரலில் பின் வருமாறு கூறினார்.

 நான் உண்மையை அடைந்துள்ளேன். ஏனெனில் என் இதயத்தில் ஏற்கனவே அது உள்ளது. உண்மை என்பது இந்த மதத்திலோ அந்த மதத்திலோ உள்ளது என்று கற்பனை செய்யாதீர்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.  உங்கள் மதம்   உங்களுக்கு உண்மையைத் தர இயலாது. நீங்கள் தான் அதை உங்கள்  மதத்திற்குத் தர வேண்டும். உண்மை என்பதற்கு மக்களும்  புரோகிதர்களும் பல பெயர்களை அளிக்கிறார்கள். உண்மையை அடைவதற்கு இதை நம்புங்கள், அதை நம்புங்கள் என்றெல்லாம்  கூறுகிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், விலைமதிப்பற்ற முத்தாகிய உண்மை உங்கள் உள்ளேயே உள்ளது. இருப்பது ஒன்றே, கவனமாகக்கேளுங்கள், அந்த உண்மை நீங்களே!

 சலசலப்போ, எதிர்ப்போ எது எழுந்தாலும் சுவாமிஜியின்  சொற்பொழிவுகள் பலரது வாழ்க்கையில் திருப்பங்களை  ஏற்படுத்தியது உண்மை. மேற்கண்ட சொற்பொழிவிற்குச்சென்றிருந்த ஒரு பெண் பின்னாளில் கூறினார். சர்ச்சில் நடைபெறும் சொற்பொழிவுகளுக்குத் தொடர்ந்து  செல்பவள் நான், எல்லோரும் சென்றார்கள், எல்லோரும் போக வேண்டும் என்பதால் நானும் சென்றேன். அந்தச் சொற்பொழிவுகள் உயிரற்றவை, உணர்வற்றவை ,  சலிப்பூட்டக் கூடியவை. ஆனால் சுவாமிஜியின் சொற்பொழிவு களைக்கேட்ட பிறகு என் மத வாழ்க்கையில் ஓர் ஒளிபிறந்தது. அவரது கருத்துக்கள் உண்மையானவை. உயிருடன் வாழ்பவை. அவை என்னுடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்தன.

 

 சுவாமிஜியின் சொற்பொழிவுகளில் கலகம் விளைவிப்பதற்கென்றே வருபவர்களும் உண்டு. இவர்களில் பலரும் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு பெற்ற ஆங்கிலேயர்கள். ஆங்கிலேய அரசு தங்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும் என்று இந்தியர்கள் கோருவதை எதிர்ப்பவர்கள். இவர்களில் சிலர் ஓருமுறை சுவாமிஜியின் சொற்பொழிவிற்கு வந்தனர். சுவாமிஜி ஆரம்பித்து சில நிமிடங்களே ஆகியிருக்கும். அதற்குள் ஒருவன் எழுந்து குரலைக் கரகரப்பாக வைத்துக்கொண்டு, ஓ பிரமாதம், நன்றாகப் பேசினீர்கள், நன்றி, நன்றி! என்று உச்சக்குரலில் கத்தினான். அனைவரும் ஒரு முறை அவனைப் பார்த்தனர். ஆனால் சுவாமிஜி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால் அதில் கவனத்தைச் செலுத்தினர். வெள்ளையன் விட வில்லை. மீண்டும் மீண்டும் அதையேச் சொல்லி தொந்தரவு செய்தான். எல்லோருக்கும் எரிச்சல் வந்தாலும் யாரும் எதுவும் செய்யவில்லை.

 

சுவாமிஜி அப்போது புத்தரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். புத்தரின் தியாகம்,  அமைதியும், சமாதானமும் எங்கும் நிலவுவதற்காக அவரது செய்தி போன்றவற்றை விளக்கிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவன் மீண்டும்  எழுந்து, நீங்கள் சொல்வது சரியல்ல, சர் மானியர்வில்லியம்ஸ் எழுதிய நூலில், புத்தர் ஒரு சுயநலவாதி, கொடியவர், மனைவியையும், மகனையும் கைவிட்ட துரோகி, நாத்திகர்,” என்றெல்லாம் கூறப்பட்டுள்ளதே! சமுதாயத்திற்கான சில சட்ட திட்டங்களைத் தவிர அப்படி பெரிதாக அவர் என்னதான் சொல்லி விட்டார்? கடவுளைப்பற்றி கூறாத அவருடைய கொள்கைகள் ஒரு மதம் என்று சொல்வதே தவறு, என்று உரத்த குரலில் கூறினான்.

 அப்போதும் சுவாமிஜி அவன் கூறியதைப் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து புத்தரின் அன்பு, தானசீலம், போன்ற பண்புகளை ஆழ்ந்த உணர்ச்சியுடன் எடுத்துக் கூறினார், இன்றும் அவரைப்போன்ற மகான்கள் இந்தியாவில்  உள்ளனர் என்று சுட்டிக் காட்டினார். அப்போது மீண்டும் அந்த வெள்ளைக்காரன், நீங்கள் தவறான  கருத்துக்களைக் கூறுகிறீர்கள். மகான்கள் என்று நீங்கள் கூறுகின்ற அத்தனைபேரும் திருடர்கள், வெறும் திருடர்கள். இத்தகையோர் வரும்போது  நான் போலிஸின் உதவியுடன் அவர்களைக் கண்காணிக்கிறேன். சில இடங்களிலிருந்து அவர்களை விரட்டவும்  செய்திருக்கிறேன். திருடர்களும் ஏமாற்றுப்பேர் வழிகளும் தான் காவி உடுக்கிறார்கள். மக்கள் அவர்களைப் போய் சாதுக்கள் என்று கூறுகிறார்கள் என்று கூறினான்.

 அதற்கு மேலும் ஸ்டர்டியால் பொறுக்க இயலவில்லை. எழுந்து அந்த அவள்ளையனின் அருகில் வந்து, நிறுத்து நான் இந்தியாவில் இருந்தபோது பல சாதுக்களைப் பார்த்திருக்கிறேன், பேசி யிருக்கிறேன். அவர்கள்  தூயவர்கள் என்று கோபமாகக் கூறிவிட்டு இருக்கையில் சென்று அமர்ந்தார்.

 அந்த வெள்ளையன் சுவாமிஜி ஒரு தமிழர் என்று நினைத்திருந்தான். கல்கத்தாவில் பௌபஜாரில் தமிழர்களான  பல டாக்டர்கள் வசித்து வந்தார்கள். அவர்களில் பலரது பெயர் “சுவாமி என்று முடிவதாக இருந்தது. அதை வைத்து ” சுவாமி விவேகானந்தரும் ஒரு தமிழரென்று அவன் முடிவு செய்திருந்தான். ஆனால் அவர் ஒரு வங்காளி என்று தெரிந்ததும் சுவாமிஜியிடம், ஓ நீங்கள் ஒரு தழிழர் என்று நினைத்திருந்தேன். இப்போது பார்த்தால் நீங்கள் வங்காளி. சிப்பாய்க்  கலகத்தின் போது  உங்களையெல்லாம்  நாங்கள் தான் காப்பாற்றினோம், இது உங்களுக்குத் தெரிந்திருக்குமே! என்றான்.

 இருக்ககையில் சென்று அமர்ந்த ஸ்டர்டி எழுந்து அவனை நோக்கி ஓடி வந்து, சும்மா  ஒன்றும்  காப்பாற்ற வில்லையே! பணம் வாங்கிக்கொண்டு தானே அதைச் செய்தீர்கள்! என்று ஆத்திரத்துடன் கூறினார். அவரது உடம்பு கோபத்தால் துடித்தது. அவனை அப்படியே குண்டு கட்டாகத் தூக்கி வெளியில் எறிந்து விடலாம் போல் அவருக்குத் தோன்றியது.

 

சுவாமிஜியின் சொற்பொழிவைக்குறிப்பு  எடுத்துக்கொண்டிருந்த குட்வின் அவ்வப்போது நிமிர்ந்த கோபத்துடன் அவனைப் பார்ப்பதும் எழுவதுமாக இருந்தார். இதற்கு மேல் அவரால் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. பொறுமை இழந்த அவர், சட்டைக்கைகளைச் சுருட்டி விட்டுக்கொண்டு , ஓங்கி ஒரு குத்து விடுவதற்கே போல் கைமுஷ்டியை மடக்கியபடி தயாரானார். சுவாமிஜியின் சொற்பொழிவு முடிவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார். அன்னிய நாட்டில் அன்னிய மக்களிடையே இருக்கின்ற நிலையில், இந்தக் கலவரம் எங்கு போய் முடியுமோ  என்று சாரதானந்தரும் மகேந்திரரும் கலக்கத்துடன் அமர்ந்திருந்தனர்.

 இது வரை எதையும் ஒரு சிறிதும் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டிருந்த சுவாமிஜி இந்தக் கட்டம் வந்த போது அந்த ஆங்கிலேயனை நோக்கித் திரும்பினார். அவர்  திரும்பிய போது அவரது தோற்றமே மாறி விட்டிருந்தது. அமைதியாக, கம்பீரமாகத் தோற்றமளித்த அவரை இப்போது  பார்ப்பதற்கே பயமாக இருந்தது. கோபக் கண்களுடன் அந்த வெள்ளையனைப் பார்த்தபடி  சுமார் 35 நிமிடங்கள் ஆங்கிலேயர்களின் வரலாற்றையும் அவர்கள்  செய்துள்ள கொடுமைகளையும் அட்டூழியங்களையும் அடுக்கினார்.

 

ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியில் ஹெங்கிஸ்ட் மற்றும் ஹொர்ஸாவின் காலத்திலிருந்து அன்றுவரை அவர்கள் நாடு நாடாகச்சென்று மக்களை அடிமைப்படுத்தியமையும்,  அங்கெல்லாம் விளைத்த  பயங்கரங்களையும் நாசச் செயல்களையும் தகுந்த மேற்கோள்களுடன் அடுக்கிக்கொண்டே போனார்.

 அனைவரும் திகைப்புடன் சுவாமிஜியையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவரது ஆங்கிலப் புலமையைச் சொல்வதா, வரலாற்றில் அவருக்கு இருந்த அறிவைச்சொல்வதா, வரலாற்றை எடுத்துக் கூறுகின்ற திறமையைச் சொல்வதா? ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்போல் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

 சுவாமிஜியின் நேரடித் தாக்குதல் அந்த ஆங்கிலேயனை நிலைகுலையச்செய்தது. அவன் தன் தவறை உணர்ந்தான். உடனே அழத் தொடங்கினான். கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்தபடி ஏங்கி ஏங்கி அழுதான்.

 

அதன் பிறகு சுவாமிஜி அவனது பக்கத்திலிருந்து பார்வையைத் திருப்பி கூட்டத்தினரைப் பார்த்தார். அவரது தோற்றமும் குரலும் மாறியது. சாந்தமும் கம்பீரமும் மீண்டும் அவரை ஆட்கொண்டன. மெல்லிய ஆழ்ந்த குரலில் இனி நாம் பிரத்யாஹாரம் மற்றும் தாரணை பற்றி பார்ப்போம், என்று தாம் பேசிவந்த விஷயத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.

 

 வழக்கமான கேள்வி- பதில் நிகழ்ச்சி அன்று நடைபெறவில்லை, சொற்பொழிவு நிறைவுற்றதும் பலர் எழுந்து சுவாமிஜியிடம், சுவாமிஜி, பொறுமை என்றால்  என்ன என்பதை இன்று நீங்கள் எங்களுக்கு நிதர்சனமாகக் காட்டிவிட்டீர்கள் என்று கூறினர்.

 அந்த ஆங்கிலேயனிடமும் மாற்றம்  தெரிந்தது. அமைதியாக எழுந்து அவன் ஸ்டர்டியிடம் சென்று மன்னிப்புக்கேட்டு விட்டு வெளியேறினான். அங்கிருந்த  இளைஞர்கள் அவனை விடுவதாக  இல்லை. சொற்பொழிவு முடிந்த பிறகு அவர்கள் வீட்டு முற்றத்தில் கூடி அது பற்றி தீவிரமாகப்பேசிய போது சுவாமிஜி அமைதியாக, அந்த  விஷயத்தை விட்டு விடுங்கள். அவனும் நாராயணனே எனபதை மறந்து விடாதீர்கள் என்றார். இந்த  நிகழ்ச்சியைத் தான் அவர் லெக்கட்டிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பொறுமையிலும், அதற்கு மேலாக, அனுதாப உணர்ச்சியிலும்,நான் பாடம் கற்று வருகிறேன். மேலான, ஆற்றல்மிக்க  ஆங்கிலோ இந்தியர்களிலும் கூட நான் தெய்வீகத்தைக்காணத் தொடங்கி விட்டேன் என்று எனக்குத் தோன்றுகிறது. சாத்தான் என்று ஒருவன்  இருப்பானானால்  சாட்சாத் அந்தச் சாத்தானையும் என்னால் நேசிக்க முடியும் என்ற நிலையை நான்  மெல்லமெல்ல நெருங்கிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்குப் புலப்படுகிறது.

 

 வெளியில் மற்றவர்களிடமிருந்து எழுகின்ற பிரச்சனைகள் ஒரு பக்கம் என்றால் சுவாமிஜியின் ஆங்கிலேய ஆதரவாளர்களிடமிருந்தும் சில  பிரச்சனைகள் உண்டாயின. சுவாமிஜியின் நூல்களை வெளியிடுவதில்  ஸ்டர்டிக்கும் அமெரிக்காவின் லெக்கட், வால்டோ முதலானவர்களுக்கும் இடையில்  கருத்து வேறுபாடு உண்டாகியது. எந்த நூல்களை அமெரிக்காவில் வெளியிடுவது, எந்த நூல்களை இங்கிலாந்தில் வெளியிடுவது போன்ற விஷயங்களில் பிரச்சனை ஏற்பட்டது. பல நேரங்களில் சாரா தலையிட்டு, பிரச்சனைகள்  வளராமல் இருப்பதற்கு அரும்பாடு பட்டார். சுவாமிஜிக்கு எல்லோரும் ஒன்றே. அவரால் யார் பக்கமும் சாய இயலவில்லை. ஆயினும் பக்தர்களுக்கிடையே இந்தப்போக்கு அவருக்குமன வேதனையைத் தந்தது. இதனுடன் ஸ்டர்டி சுவாமிஜியைப் புரிந்து கொள்வதிலும் சற்று சிரமம் ஏற்பட்டது.

 

 ஸ்டர்டி தியாபிகல் கருத்துக்களின் தாக்கம் பெற்றவர். சைவ உணவுப் பழக்கம் உள்ளவர். இது போன்ற விஷயங்களில் அவருக்கென்று தனித்த கருத்துக்கள் இருந்தன. சுவாமிஜியின் அசைவ உணவுப் பழக்கம். புகை பிடித்தல், போன்றவற்றை அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர் மிகவும் சிக்கனமாகவும் நடந்து கொண்டார். புகையிலை போன்ற விஷயங்களில் கடைத்தரமானவற்றையே சுவாமிஜிக்கு அளித்தார். ஓ! இந்த மனிதரிடம் வந்து மாட்டிக்கொண்டேன், இவர் என் உயிரை எடுத்துவிடுவார் போலிருக்கிறதே, என்று சுவாமிஜி வருந்தும் அளவிற்கு ஸ்டர்டி நடந்து கொண்டார்.

 அதைப்போலவே முல்லரின் பிடிவாத குணங்களும் சுவாமிஜிக்கு வருத்தம் அளிப்பதாகவே இருந்தன. குட்வின்  ஃபாக்ஸ், மகேந்திரர் என்று வேறு யாரும் அந்த வீட்டில் தங்குவதை முல்லர் விரும்பவில்லை. இதுவும் பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கும் மன  உளைச்சல்களுக்கும் வழி வகுத்தது.

 


No comments:

Post a Comment