Sunday, 14 June 2020

இந்துமதம்-வகுப்பு-23

இந்துமதம்-வகுப்பு-23🕉️
நாள்-14-6-2020
---
சதி (உடன்கட்டை ஏறுதல்)
----
இந்துமதத்தை தற்காலத்தில் கேலி செய்பவர்களில் பலர் உடன்கட்டை ஏறும் பழக்கத்தைப்பற்றி பேசுகிறார்கள்.
தற்காலத்தில் அவைகள் சட்டப்படி நிறுத்ப்பட்டுள்ள.
இந்துக்களிடையே ஒரு காலத்தில் இந்த பழக்கம் பரவலாக காணப்பட்டுள்ளது.
இது ஏன் ஏற்பட்டது பின்பு ஏன் நீக்கப்பட்டது என்பதை நாம் தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது.
-
சதி என்னும் சொல்லின் பொருள் நல்ல மனைவி.
தக்ஷனின் மகளான சதி தேவி(பார்வதி) தனது தந்தையின் யாகத்தில் தன் கணவனுக்கு(சிவன்) ஏற்பட்ட அவமானம் தாளாது அக்னிக்கு தன்னை இறையாக்கிக்கொண்டாள். இதன் தாக்கமாகவே சதி எனும் பெயருடன் உடன்கட்டை ஏறும் வழமை கைக்கொள்ளப்பட்டது.
சதிபதி (பார்வதியின் கணவன் சிவன்)
--
வாரிசு இல்லாமல் அரசன் இறந்துவிட்டாலோ,போரின் போது அரசன் இறந்துவிட்டாலோ மனைவி அரசனுடன் சேர்ந்து இறந்துபோவாள்.
அப்படி இறக்காவிட்டால் அடுத்து வரும் அரசன் இவளை அந்தப்புறத்தில் அமர்த்திவிடுவான்.இவளது கற்பு களங்கமடைந்துவிடும்
அரசருடன் அரசியர் சிதையேறவேண்டுமென்று எந்த நெறிநூலும் வகுத்துரைக்கவில்லை. அது போரில் இறந்த அரசர்களின் மனைவியரின் வழக்கம் மட்டும்தான் என்று மகாபாரதம் கூறுகிறது.
----
முற்காலத்தில் அரச குடும்பங்களியே மட்டும்தான் இந்த சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்துள்ளது.
கணவன் இறந்த செய்தியை கேட்டதும் தன் உயிரை உடனே மாய்த்துக்கொள்பவள் கற்புக்கரசி என்று அழைக்கப்பட்டாள்
கணவன் இறந்ததும் உடனே உயிர்பிரியாமல் உடன்கட்டை ஏறும் பெண் அதற்கு அடுத்தநிலையில் உள்ளவள்.
--
தமிழ் இலக்கிய குறிப்புகளின் பிரகாரம், பாண்டியன் மாதேவியால் பாடப்பட்ட புறநானூறு பாடல் ஒன்றில் அரசனுடன், அரசியும் உடன்கட்டை ஏறிய குறிப்பு உள்ளது. அதன் படி பூதப்பாண்டியன்தேவி நாட்டின் அமைச்சர்கள் அனைவரினதும் ஆலோசனையையும் தவிர்த்து அரசனுடன் உடன்கட்டை ஏறியுள்ளாள்.
-
சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய அரசரான ராஜராஜரின் தாயான வானவன்மாதேவியும், ராஜேந்திர சோழரின் மனைவி வீரமாதேவியும் தங்கள் கணவர்களின் இறப்பினால் முழுமனதுடன் உடன்கட்டை ஏறினார்கள்.
இதன் மூலம் ஆரம்பகாலத்தில் சதி முறைமையானது முழுக்க முழுக்க பெண்களின் தன்னிச்சையான முடிவாகவே அமைந்தது தெளிவுற தெரிகிறது.
பெண்கள் தம் கணவனின் மீது கொண்ட அதீத அன்பின் விளைவால் இத்தகைய பழக்கத்தை கைக்கொண்டனர். எனினும் பின்பு இம்முறைமையானது கௌரவத்தின் சின்னமாக மாற்றப்பட்டு, கணவனை இழக்கும் அத்தனை பெண்கள் மீதும் திணிக்கப்பட்டது.
-
கணவன் இறக்கும்போது பெண் கருவுற்றிருந்தாலோ அல்லது குழந்தை பிறந்திருந்தாலோ உடன்கட்டை ஏறுவது தடைசெய்யப்பட்டிருந்தது.ஆனால் போரில் அரசன் இறந்துவிட்டால் அவனது மனைவிகள் கற்பை காத்துக்கொள்ள உடன்கட்டை ஏறுவது வழக்கமாக இருந்துள்ளது.
-
முற்காலத்தில் பிற ஜாதியில் இந்த பழக்கம் கடைபிடிக்கப்பட்டவில்லை. சத்திரியர்கள்இறந்தபிறகு சொர்க்கம் சென்று வாழ்வார்கள் என்று நம்பினார்கள். பிற ஜாதியிருக்கு சொர்க்கம் செல்ல வாய்ப்பு மிகவும் குறைவு.
--
உடன்கட்டை ஏறும் பழக்கத்துடன் இன்னும் பல விஷயங்களை இணைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.
அவை 1. கற்பு 2. சொர்க்கம் 3.மறுபிறவி
-
இந்துக்கள் மறுபிறவி கோட்பாட்டை நம்புகிறார்கள். தனக்கு வாய்க்கும் மனைவி ஏற்கனவே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டவள் என்று ஒரு காலத்தில் நம்பினான். ஆகவே எத்தனை பிறவிகள் பிறந்து இந்தாலும், நான் உன் கணவன், நீ எனக்கு மனைவி. இதை யாராலும் மாற்ற முடியாது என்பது அவர்கள் எடுத்துக்கொள்ளும் சங்கல்பம்.
-
இவ்வாறு ஒரு பிறப்பில் சேரும் கணவன் மனைவியே ஏழு பிறப்பிலும் கணவன் மனைவியாக இருப்பார்கள் என்பது இந்துமதத்தின் கோட்பாடு இல்லை. அந்தகால மக்கள் இதை நம்பினார்கள். அவர்களின் சங்கல்பம் உறுதியாக இருந்தது
-
இந்த பிறவியில் ஒருவனுக்கு மனைவியாக இருந்துவிட்டு, அடுத்த பிறவியில் இன்னொருவனுக்கு மனைவியாக இருப்பது என்பது நினைத்துப் பார்ப்பதற்கு சங்கடமாக தான் இருக்கிறது. ஆனால் புதிதாக கிடைக்கும் பிறவியில் புதிய மூளை கிடைத்துவிடுவதால் பழையவை மறந்துவிடுகின்றன. ஆனாலும் பழைய நினைவுகள் உள்ளே புதைந்திருக்கும் என்பதை இந்துமதம் கூறுகிறது.
ஆகவே புதிய பிறவியில் வேறு யாருக்கோ மனைவியாக இருந்தாலும் கூட, முற்பிறவில் வாழ்ந்த பழைய நினைவுகள் ஆழ்மனத்தில் புதைந்திருக்கும். தர்க்கரீதியாக பார்த்தால், ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு ஆண்மகனுக்கு மனைவியாக வாழ்வது என்பது கற்பு நிலையின் வீழ்ச்சி தான்.
-
இதை சரி செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வது? ஒரு பிறவியில் சேர்பவர்கள் முக்திநிலை அடையும் வரை மீண்டும்,மீண்டும் பிறந்து மீண்டும் மீண்டும் திருமணம் செய்துகொண்டு வாழவேண்டும். அவர்களின் ஜோடி மாறக்கூடாது. ஒருவேளை இந்த பிறவியில் அனுபவிக்க முடியாதவைகளை அடுத்த பிறவியில் அனுபவித்துக்கொள்ளலாம். அவசரம் இல்லை. வாழ்க்கையில் எதற்கும் அவசரப்படத்தேவையில்லை. யாரும் யார்மீதும் கோபப்படத்தேவையில்லை. ஏனென்றால் உனக்கு நான் எனக்கு நீ. நாம் எத்தனை பிறவிகள் பிறந்தாலும் சேர்ந்தே இருப்போம்.
-
சரி வாழ்வில் மட்டும் தான் சேர்ந்து இருப்போமா? இல்லை. சாவிலும் சேர்ந்தே சாவோம். நரகத்திற்கு செல்வதாக இருந்தால் சேர்ந்தே செல்வோம். சொர்க்கத்திற்கு செல்வதாக இருந்தால் சேர்ந்தே செல்வோம். ஆகவே நாம் எப்போதும் சேர்ந்தே இருப்போம். அவ்வாறு சேர்ந்தே வாழும் ஜோடிகள் கடவுளை நம்பவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. ஏனென்றால் அவர்களிடம் உள்ள காதல் தான் கடவுள். அது தான் எல்லையற்ற இன்பம். அது தான் காலத்தை கடந்தது.
-
இவ்வாறு வாழும் போது எல்லையற்ற அன்பில் வாழும் ஜோடிகளில் ஒருவரது உடல் என்பது ஏதோ காரணத்தினால், இறந்துவிடும் போது, இன்னொருவரால் அதை தாங்கிக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் ஈருடல் ஓர் உயிர். அவர்களின் உடல்தான் வேறே தவிர அவர்களுக்குள் இருந்தது ஓர் உயிர்தான். ஒரு உடல் இதோ மாண்டுவிட்டது. இனி மற்றொரு உடல் எப்படி வாழும். வாழாது. ஆகவே கணவன் இறந்த உடன் மனைவியின் உயிரும் பிரிந்துவிடும். அவ்வாறு பிரிந்துவிடுவது தான் சொர்க்கம். அவ்வாறு பிரிவது தான் அன்பின் உச்சம்.
ஆனால் இந்த நிலை உண்மையாக நேசிக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே சாத்தியமாகும்.
-
இந்த பிரபஞ்சத்தில் ஒரு நியதி இருக்கிறது. மனித அன்பின் உச்சத்தை இந்த உடலால் தாங்கிக்கொள்ள முடியாது. ஒரு ஆணும் பெண்ணும் உண்மையில் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தால்,அந்த அன்பில் காமம் என்பது துளிஅளவு கூட இல்லாமல் இருந்தால், அவர்களால் இந்த உலகில் வாழமுடியாது.
ஏனென்றால் தூய காதலே கடவுள். கடவுளுக்கு உடல் இல்லை. இந்த காதலுக்கும் உடல் இல்லை.
அப்படியானால் இந்த காதலை இந்த உடல் எப்படி தாங்கிக்கொள்ளும்?. ஒருபோதும் அதனால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே இயற்கை அவர்களது உடலை அழித்துவிடுகிறது.
தற்கொலை செய்து கொள்வது பற்றி பேசவில்லை. அது உண்மைக்காதலில் வெற்றியல்ல,
அது தோல்வி.
ஏனென்றால் அவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பிறகு அவர்கள் பேய் உடலில் வாழவேண்டியிருக்கும். அப்போது உண்மை அன்பு மறைந்துவிடும்.
-
கடவுள் இந்த உலகிற்கு அப்பாற்பட்டவர்.அதேபோல உண்மை காதலுக்கும் இந்த உலகத்தில் இடம் இல்லை.
இயற்கையால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது.
ஆகவே உண்மையாக வாழும் ஆணும் பெண்ணும் காதலின் உச்சத்தை அடையும்போது,
இயற்கை ஒருவரை பிரித்துவிடும். இந்த வேதனை தாங்காமல் இன்னொருவரும் இறந்துவிடுவார்.
ஆனால் இந்த இறப்பு என்பது இயற்கையாக நிகழவேண்டும்.
காதலன் இறந்துவிட்டான் என்பதை அறிந்ததும் மனைவியின் உயிரே போய்விட்டது போல உணர்ச்சி எழும். அப்போது அவளது மனம் ஒடுங்கிவிடுகிறது. இதயம் நின்றுவிடுகிறது. ரத்தஓட்டம் நின்றுவிடுகிறது. மூச்சுநின்றுவிடுகிறது.இவ்வாறு அவள் இந்த உடலைவிட்டுவிட்டு சூட்சும உடலை அடைகிறாள்.
அந்த சூட்சும உடலில் கணவனும் மனைவியும் பல காலம் வாழ்கிறார்கள். அது தான் சொர்க்கத்து வாழ்க்கை.
பிறகு அடுத்து எங்கே பிறப்பது எவ்வாறு மீண்டும் ஒன்று சேர்வது என்று முடிவு செய்துகொண்டு, அதே போல பிறக்கிறார்கள். இது தான் திருமணம் சொர்க்கத்தில் முடிவு செய்வது என்பது.
இதன் பிறகு அவர்கள் மனிதர்களாக பிறந்த போது பழைய நினைவுகள் மறந்துவிடும்.
ஆனாலும் அவர்கள் ஏற்கனவே முடியு செய்து வைத்திருந்த படி ,எவ்வளவு இடற்பாடு வந்தாலும்,அவற்றை எதிர்த்து,மீண்டும் ஒன்று சேர்கிறார்கள்.
-
உண்மையான காதல் கொண்டவர்கள் இந்த உலகத்தில் ஒருசிலர் தான். மற்றவர்கள் காமத்தின் வீழ்ந்துவிடுகிறார்கள். உண்மையன்பு என்பது காமம் கலக்காதது. ஒரு சமுதாயத்தில் ஒரு ஜோடி இதே போல் இறந்துவிட்டால்,அதை மக்கள் வரவேற்பார்கள். ஆஹா அற்புதமான ஜோடி என்பார்கள். இந்த இறப்பு என்பது இயற்கையாக நிகழவேண்டும்.
-
-
கணவன் இறந்த உடன் மனைவி இறந்துவிடுகிறான். என்று வைத்துக்கொள்வோம், அது பத்தினிக்கு அழகு என்று சமுதாயம் சொல்லும். ஆனால் அதே போல் மனைவி இறந்ததும் கணவன் இறந்துவிட வேண்டும். அவ்வாறு இறந்தால் அது நல்ல கற்புள்ளகணவன். மனைவி இந்த பிறகும் கணவன் சாகாவிட்டால்,அவர்களுக்குள்ள காதலில் ஏதோ குறைபாடு இருக்கிறது என்று தான் அர்த்தம்.
-
கால ஓட்டத்தில் இந்த பழக்கம் கற்பை சோதிப்பதற்கான ஒரு நிலையாக மாறிவிட்டது.
கணவன் இறந்ததும் மனைவி இறக்காவிட்டால்,அவள் கற்பு நிறைந்தவள் இல்லை. அவர்கள் காதலில் குறை உள்ளது.அவள் கணவனை நேசிக்கவில்லை என்று சமுதாயம் பேச ஆரம்பித்தது. ஆகவே கணவனை இழந்த பெண்கள் தங்களுக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக கணவனின் உடல் எரிக்கப்படும்போது, அவளும் அதில் விழுந்து இறந்து போவாள். அவ்வாறு பெண்கள் தீயில் விழுந்து எரிவது, நாளுக்கு நாள் அதிகமானது. அது சமுதாய பழக்கமாக மாறிவிட்டது.
-
-
முற்காலத்தில் உரிய வயது வந்தபிறகுதான் திருமணம் செய்துவைத்தார்கள்.காலம் மாறமாற சிறுவயதிலேயே திருமணங்கள் நடைபெற்றன.
-
சிறுவயதில் திருமணம் செய்து கொண்டபின், ஒருவேளை கணவன் இறந்துவிட்டால். அந்த பெண் அதன்பிறகு சமுதாயத்தில் வாழ்ந்தால், மற்ற ஆண்களுடன் தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சமுதாயம் மீண்டும் சிக்கலாகிவிடும். ஆகவே பேசாமல் இந்த பெண்ணை கணவனின் உடலோடு சேர்த்து எரித்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். வலுக்கட்டாயமாக இளம் பெண்கள் தீயில் கொழுத்தப்படார்கள்.
-
--
உடன்கட்டை ஏறும் பழக்கத்தில் இருந்த குறைபாடுகள்
-
1.முற்காலத்தில் அரசன் போரில் இறந்துபோனவுடன் பிற அரசரிடமிருந்து கற்பை காத்துக்கொள்ள அரசி உடன்கட்டை ஏறினாள்.
பிற்காலத்தில் இந்த பழக்கம் அனைவர்மீதும் திணிக்கப்பட்டது
-
2.கணவனுக்கு அறுபது எழுவது வயது இருக்கும்.ஏற்கனவே பலமுறை திருமணம் செய்திருப்பான்.வாழ்க்கையில் அனைத்தையும் அனுபவித்து முடித்திருப்பான்.புதியமனைவிக்கு பத்து வயது இருக்கும். கணவன் இறந்துபோனால் ஏதும் அறியாத குழந்தை தீயில் இட்டு கொல்லப்படுகிறாள்.
-
3.மனைவி இறந்துவிட்டால் கணவன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான்.கணவனின் கற்பு பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை.இது பெண்ணுக்கு எதிராக நடக்கும் ஆணாதிக்கம்
-
4.பெண் கணவன்மீதுள்ளஅன்பு காரணமாக தானாக உடன்கட்டை ஏறாமல் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டாள்.இது ஒரு கொலைக்குற்றமாகும். விருப்பமில்லாமல் இறக்கும் பெண்ணின் சாபம் அந்த சமுதாயத்தையே அழித்துவிடும்.
-
5.கணவன் மிகமோசமானவனாக,குடிகாரனாக அனைத்து கெட்ட பழக்கம் உள்ளவனாக இருந்திருப்பான்.அவன் உலகத்தில் வாழவே தகுதியற்றவனாக இருப்பான்.அவன் இறந்துபோனால்கூட ஏதும் குற்றம் செய்யாத மனைவி தீயில் இட்டு கொழுத்தப்பட்டாள்
இது கொடுமை என்பதை படிப்படியாக மக்கள் உணர ஆரம்பித்தார்கள்.
பலரின் எதிர்ப்புக்கு பிறகு இந்த பழக்கம் நிறுத்தப்பட்டது.
-
பிராமண ஜாதியில் உடன்கட்டை ஏறும் பழக்கம் நடைமுறையில் இருந்ததாக தெரியவில்லை.
கணவனை இழந்த பெண்கள் சாகவேண்டாம். ஆனால் அவளை வாழாவெட்டி ஆக்கிவிடுவோம் என்று முடிவு செய்தார்கள். அதாவது வாழ்ந்து கொண்டிருக்கும் பிணம்.
பார்ப்பதற்கு வாழ்வது போல தெரிந்தாலும், அவள் ஒரு பிணமாகவே கருதப்பட்டாள். வெறும் தரையில் தான் படுக்கவேண்டும், உடலை முழுவதும் மூடிக்கொள்ள வேண்டும், வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது.மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும்.பூ,பொட்டு,அணிகலன் எதுவும் இருக்கக்கூடாது. சோற்றில் உப்பு,புளி,காரம் சேர்த்துக்கொள்ளக்கூடாது. ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் உணவு உண்ண வேண்டும். அவ்வப்போது உண்ணாநோன்பு இருக்க வேண்டும். பெண்களுடன் மட்டுமே பேசவேண்டும். அதுவும் அமைதியாக தரையை பார்த்து தான் பேச வேண்டும். இவ்வாறு அந்த பெண்கள் வாழும் நடைபிணங்களாக வாழ்ந்து வந்தார்கள்.
மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது.
அனைத்தையும் துறந்த துறவியின் வாழ்க்கைபோல அது இருக்கும்.
-
காலப்போக்கில் இந்த நடைமுறைகள் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதி என்பதை மக்கள் உணர ஆரம்பித்தார்கள். மனைவியை இழந்த ஆண்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் போது,பெண்கள் ஏன் விதவைகளாக வாழவேண்டும்?
-
திருமணம் செய்து கொண்ட பிறகு கணவனது குணம் சரியில்லை என்பது தெரியவந்தால், அந்த கணவனுடன் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து துன்பப்படுவதைவிட அவனிடமிருந்து பிரிந்து சென்றுவிடுவது நல்லது.
தேவைப்பட்டால் இன்னொரு திருமணமும் செய்துகொள்ளலாம் என்பதை தற்போது சமுதாயம்
ஏற்றுக்கொண்டுள்ளது.
இதில் உள்ள சாதக பாதக அம்சங்கள் விவாதிக்கப்படவேண்டியவை.
ஆனால் காலத்திற்கு காலம் இந்த பழக்கங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.
இந்து சமுதாயம் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டுள்ளது என்பது உண்மை.

No comments:

Post a Comment