சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-4
🌸
தீவிர தியானப்
பயிற்சி
🌸
பிரம்ம சமாஜ
முறைப்படி நரேந்திரர் வழிபாடுகளில் ஈடுபட்டாலும் மற்ற உறுப்பினர்களிலிருந்து வேறுபட்டார்.கடவுள்
என்ற ஒருவர் இருந்தால் அவர் நிச்சயமாக உண்மையான பிரார்த்தனைக்குச் செவிமடுத்து பக்தன்
முன் தோன்றுவார். அவரை உணர்வதற்கு ஏதாவது ஒரு வழி இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால்
வாழ்க்கையே பாழாகிவிடும் என்று உறுதியாக நம்பினார் அவர். ஆனால் அத்தகைய இறைநெறியைப்
போதிப்பதில் பிரம்ம சமாஜம் சாதகமாக இல்லை என்பதைச் சிறிது நாட்களில் உணரத் தொடங்கினார்
அவர்.
🌸
உண்மையை
அறியவேண்டும், இறைவனை உணர வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இந்த நாட்களில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இப்போதிலிருந்து நரேந்திரர் ஒரு புதிய முறையில் தியானப் பயிற்சியைச் செய்ய ஆரம்பித்தார்.
இறைவனை உருவமுடையவராக நினைத்தாலும், உருவமற்றவராக நினைத்தாலும் மனித வடிவையோ குணங்களையோ
ஏமாற்றாமல் நம்மால் அவரைத் தியானிக்க முடியாது. இதை உணரும் முன்பு நரேந்திரர், பிரம்ம
சமாஜத்தினரின் கொள்கைப்படி இறைவனை உருவமற்ற,
ஆனால் குணங்களுடன் கூடியவராக தியானித்து வந்தார்.,இதுவும் ஒரு விதத்தில் கற்பனை என்று
முடிவு செய்து அந்த தியானத்தைக்கைவிட்டு, இறைவா! உன் உண்மையான வடிவத்தைக்காண என்னைத்
தகுதியுடையவனாக்கு” என்று பிரார்த்தித்தார். அதன்
பின் மனத்திலிருந்து எல்லா எண்ணங்களையும் நீக்கிவிட்டு. காற்றில்லாத இடத்தில் எரியும்
தீபச்சுடர் போன்று மனத்தை ஆடாது அசையாது வைத்திருக்கப் பயிற்சி செய்தார். இவ்வாறு சில
காலம் பயின்றதும் அவரது மனம் பரிபூரணமாக அடங்கிவிட்டது.
சில வேளைகளில் அவருக்கு உடலுணர்வும், கால உணர்வும்
கூட இல்லாமல் போயின. வீட்டில் உள்ள அனைவரும்
படுக்கச்சென்றபின் அவர் தம் அறையில் இவ்வாறு
தியானிப்பார். பல நாட்களில் இரவு முழுவதும் தியானத்திலேயே கழியும்.
🌸
அதன் காரணமாக
ஒரு நாள் நரேந்திரருக்கு அசாதாரணமான அனுபவம் ஒன்று கிடைத்தது. அவர் கூறினார், ஆதாரம்
எதுவும் இல்லாமல் மனத்தை ஒரு முகப்படுத்தி நிலைநிறுத்தினால் , மனத்தில் ஒரு வித அமைதிப்பேரானந்தம்
ஊற்றெடுத்துப்பெருகும். தியானம் நிறைவுற்ற பின்னரும் அந்த ஆனந்த போதை நீண்ட நேரம் இருக்கும்.
எனவே இருக்கையை விட்டு உடனடியாக எழுந்திருக்க மனம் வருவதில்லை. அத்தகைய தியான ஆனந்தத்தைச்சுவைக்க
த் தொடங்கியிருந்தார் நரேந்திரர்.
🌸
லட்சிய சாதகர்
🌸
வேடிக்கை.
வினோதம், பாட்டு, உடற்பயிற்சி என்று புறத்தளவில் நரேந்திரரின் நாட்கள் கழிந்தாலும்,
அவரது மனம் இவ்வாறு தியானத்தின் மூலம் உண்மையை அகத்தில் ஆழ்ந்து தேடத்தொடங்கியிருந்தது.
இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து காத்து, செயல்படுகின்ற ஒரு சக்தி இருக்குமானால்,அந்தச்
சக்தியை எத்தனையோ மகான்கள் கண்டு போற்றிப் புகழ்ந்திருப்பது உண்மையானால், அந்த உண்மையை
அந்தச் சக்தியை நானும் காணவேண்டும் என்ற எண்ணம்
அவரிடம் தீவிரமாகியது. நேருக்கு நேராக காண்பதைத் தவிர வேறு எந்த நிரூபணமும்
அவருக்குப்போதுமானதாக இல்லை. அப்படியானால் அந்த உண்மையைக் காணவேண்டும்.
அதற்கு முதலில்
வேண்டுவது என்ன?
அதற்கான
தகுதி.
🌸
அந்தத் தகுதிகள்
என்னென்ன?
தவம், ஸ்வாத்யாயம்,
.இறைநாட்டம், இவை மூன்றும் கிரியா யோகம்” என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்(தப- ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி
க்ரியாயோக-யோக சூத்திரங்கள்)
மூன்றும்
இயல்பாக கைவரப்பெற்றிருந்ததைக்காண்கிறோம்.
🌸
பிரம்மச்சரியம்
🌸
காமத்தின்
வழியில் செல்கின்ற ஆற்றலைக்கட்டுப்படுத்தி, உயர் நோக்கங்களுக்காக ச் செலவிடும்போது
அந்த நோக்கம் விரைவில் கைகூடுகிறது. ஆனால் காம ஆற்றலைக் கட்டுப்படுத்துவதும், அதற்கு
ஓர் உயர் திருப்பத்தை அளிப்பதும் அத்தனை எளிதானது
அல்ல. அப்படி ஒருவன் செய்து விட்டால் அது அவனிடம்
பிரம்மச்சரிய ஆற்றல் அல்லது மேதை ஆற்றல் என்ற புதிய ஆற்றலை உருவாக்குகிறது. இந்த ஆற்றல்
செய்வதற்கு அரியவற்றைச் செய்யவல்லது.இந்த ஆற்றலை அடைந்தே தீருவது என்று முடிவு செய்தார்
நரேந்திரர். அதற்கேற்பத் தம் வாழ்க்கை முறையை
அமைத்துக்கொண்டார். இருப்பினும் ஒரு நாள் கட்டுக்கடங்காமல் அந்தவேகம் அவரருள் எழுந்தது. அதனை இனித் தலையெடுக்காமல் அடக்கியே
தீர்வது என்ற சங்கல்பம் அவருள் எழுந்தது. ஒன்றை நினைத்தால் அதைச்செய்து முடிப்பவர்
ஆயிற்றே அவர்! சுற்று முற்றும் பார்த்தார். குளிர்காய்வதற்கான அடுப்பு கனன்று கொண்டிருந்தது.
அதன் மீது சென்று அமர்ந்து விட்டார். அந்தப் புண் ஆறுவதற்கு மாதக்கணக்கில் ஆகியது.
ஆனால் உடம்பில் புண் ஏற்பட்டதே தவிர மனம் காமம் என்ற பிடியிலிருந்து விடுபட்டது. அதன்பிறகு
அவரது வாழ்வில் காமம் என்ற ஒன்றிற்கு இடமில்லாமல் போய்விட்டது. அந்த இளமையிலேயே தம்மை நாடி வந்தப் பெண்களைத் தாயாக க்
கண்டு, அவர்களை விலக்குகின்ற ஆற்றல் அவரிடம் வந்தது. சில நிகழ்ச்சிகளைக் காண்போம்.
🌸
தேர்வு நெருங்கும்போது
அருகிலுள்ள பாட்டியின் வீட்டிற்குச்சென்று படிப்பது நரேந்திரரின் வழக்கம்.அந்த வீடு
ஒதுக்குப்புறமாக இருந்ததால் அங்கு சத்தங்களும் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களும் கிடையாது.
இரவு பகலாகப் படிப்பில் மூழ்கி நாட்கணக்கில் அங்கே தங்கி விடுவார். படிக்க வேண்டிய
பாடங்களை முடிக்காமல் அறையை விட்டு வெளியே வருவதில்லை என்று உறுதியும் எடுத்துக்கொள்வார்.
🌸
படிப்பின்
இடைவேளைகளில் நரேந்திரர் மெல்லிய குரலில் பாடுவது வழக்கம். அந்த வீட்டிற்கு எதிர் வீட்டில்
ஓர் இளம் விதவை வாழ்ந்து வந்தாள். அவள் தனது வீட்டின் ஜன்னல் அருகில் நின்று கொண்டு
நரேந்திரர் பாடுவதைக்கேட்டு வந்தாள். அவரது குரலின் இனிமை மற்றவர்களைப்போலவே அவளையும்
கவர்ந்தது. அவள் மெள்ள மெள்ள அவரது பாடல்களில்
ஈடுபடத்தொடங்கினாள். அவர் பாடத்தொடங்கினால் தன் வீட்டு ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு
கேட்பாள். கடைசியில் அவள் அவரையே நேசிக்கத் தொடங்கினாள். இது எதுவும் நரேந்திரருக்குத்தெரியாது.
ஒரு நாள் இரவு வேளையில் அவள் துணிந்து அவரது அறைக்கே வந்துவிட்டாள். அவளது நோக்கமோ
தோற்றமோ எதுவும் நரேந்திரரைச் சலனப்படுத்தவில்லை. அவர் அவளது பாதங்களில் விழுந்து வணங்கி,
தாயே! இந்த நேரத்தில் இங்கு வருவது தவறல்லவா? உடனடியாக இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என்று கூறினார். அவரது திட மனம் அவளை நாணச் செய்தது. உடனடியாக
அவள் அங்கிருந்து சென்றுவிட்டாள். நரேந்திரர் அதன்பிறகு தாம் படிக்கும் அறையை மாற்றிக்கொண்டார்.
புனிதம்
🌸
நரேந்திரரின் புனிதம் அந்த நாட்களிலேயே பிறர் கண்டு போற்றதக்கதாக இருந்தது. ஒரு முறை பிரபல
நாடக ஆசிரியரான கிரீஷின் ”வில்வ மங்களா்” என்ற நாடகம் நடைபெற்றது. கிரீஷ்
நரேந்திரருக்கு அறிமுகமானவர்.நரேந்திரருக்கு இசையில் இருந்த தேர்ச்சியை அறிந்திருந்த
அவர் அவரை மேடைக்கு அழைத்துச்சென்று ஓரிரு பாடல்களைப்பாடுமாறு கேட்டுக்கொண்டார். நரேந்திரர்
தம்புராவை மீட்டி பாடத் தொடங்கினார். ஒப்பனை அறையிலிருந்த நடிகைகளுக்கு அந்தப் பாடல்
கேட்டது. ஏனோ ஒருவிதமான பயம் கலந்த மரியாதை உணர்வை அந்தப் பாடல் அவர்களிடம் எழுப்பியது. ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அவர்கள் எழுந்து
வந்து, கைகூப்பியபடியே சற்று தள்ளி நின்றனர். அந்த நடிகைகளின் பயத்தை உணர்ந்த கிரீஷ்
ஓரிருபாடல்கள் நிறைவுற்றதும் நரேந்திரரை அழைத்துச்சென்று விட்டார்.
🌸
மறு நாள்
ஒரு நடிகை கிரீஷிடம் சென்று, அவரைப்பார்த்தால் பெரிய ஆன்மீக சாதகராகத்தோன்றுகிறது.
எங்களைப்போன்ற பெண்கள் இருக்கின்ற இடத்திற்கு அவரை அழைத்துவரலாமா? அவரைக்கண்டு எங்கள்
மனத்தில் ஏதாவது தீய எண்ணம் தோன்றுமானால் எங்களுக்குக்கதி உண்டா? இந்த உலகம் தான் எங்களுக்கு
இல்லை என்றாகிவிட்டது. மறு உலகமும் இல்லாமல் போக வேண்டுமா? என்று கடிந்து கொண்டார்.
யார் மனத்திலும் அவ்வாறு புனிதத்தை எழுப்புகின்ற புனிதராக அந்த இளமையிலேயே திகழ்ந்தார்
நரேந்திரர். என்னிடம் நீ மரியாதையும் விசுவாசமும்
எப்படி காட்ட முடியும் தெரியுமா? உன் தூய வாழ்க்கை மூலம் தான்” என்று ஒருமுறை புவனேசுவரி தேவி கூறியிருந்ததை அவர் முற்றிலுமாக
வாழ்ந்து காட்டினார்.
🌸
அடுத்த தகுதி
ஸ்வாத்யாயம் . இது பொதுவாக படிப்பு, மந்திரஜபம் என்றெல்லாம் விளக்கப்படுகிறது. ஆனால்
இதன் சிறப்பான பொருள் ”தன்னை ப் படித்தல், அதாவது சுயஆராய்ச்சி என்பதாகும். இதனை ஆன்மீக
வாழ்விற்கு மிக முக்கியமான ஒரு நிபந்தனையாக வைக்கிறார் அன்னை ஸ்ரீசாரதாதேவி, கப்பலுக்குச்சுக்கானபோல
சுய ஆராய்ச்சி ஒரு சாதகனை வழிநடத்துகிறது என்கிறார்
அவர். நான் யார்? எனது மனப்பாங்கு என்ன? நான் எதைத்தேடுகிறேன்? அதை அடைவதற்கு உரிய
வழியில் செல்கிறேனா? இத்தகைய கேள்விகளை ஆழ்ந்து சிந்திப்பது மிகவும் இன்றியமையாதது.
இவற்றிற்கு விடை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தினமும் சிறிது நேரம் இவற்றைச்செய்வது
மிகவும் அவசியம்.
🌸
நரேந்திரரின்
வாழ்வில் இந்த சுய ஆராய்ச்சி என்பதும் இயல்பிலேயே ஊறியிருந்தது. உண்மையை அடைவது தான்
நோக்கம் என்பது அவருக்கு மிகவும் தெளிவாக இருந்தது. உண்மையை அடைய இரண்டு பாதைகளைக்
காட்டுகிறது இந்து மதம்.................
🌸
ஏற்றுக்கொள்ளுதல்-(ப்ரவ்ருத்தி)
🌸
மாணவ நிலை(பிரம்மச்சரியம்),
இல்லறநிலை(கார்ஹஸ்த்யம்), அகத்துறவு நிலை(வானப்ரஸ்தம்), புறத்துறவு நிலை( சன்னியாசம்)
என்று அனைத்தின் வழியாகவும் சென்று அவை தரும் அனுபவங்களை ஏற்று பக்குவப்பட்டு அறுதி
உண்மையாகிய இறைவனை அடைதல்..
🌸
2) துறந்து
செல்லுதல்(நிவ்ருத்தி)-
🌸
உலகையும்
அது தரும் அனுபவங்களையும் ஒதுக்கி, புலன்களைக் கட்டுப்படுத்தி,இளமையிலேயே துறவு வாழ்க்கையை
ஏற்று இறைவனை நாடுதல்.
இரண்டாவது
பாதை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மிகவும் கடினமானது. ஆனால் நரேந்திரரை இந்த இரண்டாவது பாதை தான் மிகவும் கவர்ந்தது. இந்த இரண்டு
பாதைகளையும் பற்றி அவர் ஆழ்ந்து சிந்திப்பார். ஆராய்ந்து பார்ப்பார். அவரது ஆராய்ச்சி
வெறும் கற்பனை அளவில் மட்டும் நடைபெறுவது அல்ல. அவர் தூங்கச்செல்லும்போது இந்த இரண்டு
காட்சிகளும் ஒரு நாடகம் போல் அவரது கண்முன் தோன்றும்.
🌸
முதலாவது
உலகியல் இன்ப வாழ்க்கையின் ஒரு தோற்றம், செல்வச்செழிப்பு மிக்க வாழ்க்கை, பெரிய வீடு.
வேலைக்காரர்கள் , நல்ல மனைவி, குழந்தைகள், பெயர், புகழ் என்று அனைத்தும் நிறைந்தது.
இரண்டாவதாக உலகைத்துறந்த ஒரு துறவியின் தோற்றம், கையில் எதுவும் இன்றி, இறைவனை முழுமையாகச்
சார்ந்து, ஊர்ஊராகத் திரிந்து, பிச்சை உணவு ஏற்றுஉண்டு, ஏதோ மரத்தடியில் இரவைக் கழித்து
வாழ்கின்ற வாழ்க்கை.
இந்த இரண்டு
சித்திரங்களும் அவரது மனக் கண்முன் சிறிது நேரம் போட்டியிடுவது போல் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு
வர முயற்சிக்கும். அவர் அகத்தில் ஆழ்ந்து செல்லச்செல்ல முதல் சித்திரம் மங்கத்தொடங்கும்.
துறவியின் தோற்றம் அவரது மனத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும். நாட்பட நாட்பட துறவு வாழ்க்கை
அவரது மனத்தில் உறுதியாகத் தொடங்கியது.
🌸
துறவு வாழ்க்கை
என்பது வழி மட்டுமே, அடையவேண்டிய லட்சியம் ஆகாது. இல்லற வாழ்க்கை என்பது நீரோட்டத்தின்
போக்கிலேயே செல்வது என்றால் துறவு வாழ்க்கை என்பது அதனை எதிர்த்து நீச்சலடிப்பது.தகுந்த ஒருவரின் துணையின்றி இதில் வெற்றி கிடைப்பது அரிது.
அந்த ஒருவரையே நமது சாஸ்திரங்கள் குரு என்று அழைக்கின்றன. அவர் உண்மையை அறிந்தவராக
இருக்க வேண்டும்ஃ உண்மை என்ற ஒன்று இருக்குமானால் அதனை நேருக்குநேர் கண்டவராக இருக்கவேண்டும்.
🌸
இப்போது
நரேந்திரருக்குத் தேவையாக இருந்தது அப்படி
உண்மையை நேருக்குநேர் கண்டிருக்கிறேன்.என்று சொல்லத்தக்க ஒருவர். எனவே அறிஞர்கள்,
தத்துவ வாதிகள், மகான்கள் என்று யாரைப் பற்றி கேள்விப் பட்டாலும் அவர்களைச்சென்று காண்பது
அவரிடம் இத்தகைய கேள்வியை கேட்பதும் நரேந்திரரின் வழக்கம் ஆயிற்று.
🌸
இந்த கேள்வியுடன்
நரேந்திரர் அலைந்து கொண்டிருந்த போது தான் அவர் ஒரு நாள் மகரிஷி தேவேந்திர நாத் தாகூரைச்
சந்திக்க நேர்ந்தது. பிரம்ம சமாஜத்தை வளர்த்த முன்னோடிகளுள் மிக முக்கியமானவர் இவர்.
எனவே அன்றைய அறிஞர்களின் மத்தியில் பெரும் மதிப்பு பெற்றிருந்தார். பலரால் ஆன்மீக குருவாகவும்
ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார். அவரைக் காண நரேந்திரர் தமது நண்பர்களுடன் சென்றார்.நரேந்திரரின்
ஆர்வத்தையும் துடிப்பையும் கண்ட அவர் ஆழ்ந்து தியானம் செய்யுமாறு கூறினார். ஆனால் நரேந்திரருக்கு
அது அவ்வளவு தூரம் மனத்தில் பதியவில்லை. எப்படியாவது ஒரு நாள் அவரைத் தனிமையில் சந்திக்கவேண்டும் என்று முடிவு செய்தார் அவர்.
🌸
கங்கை நதியில்
ஒரு படகு வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த
மகரிஷியை ஒருநாள் சென்று சந்தித்தார் நரேந்திரர். முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று
அவர் சென்று நின்றதும் மகரிஷி ஒரு கணம் திகைத்துவிட்டார். அவரது திகைப்பு மறையும் முன்னரே
நரேந்திரரிடமிருந்து கேள்வி பிறந்தது, ஐயா , நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?
மகரிஷியால் நேரடியாக எந்தப் பதிலையும் சொல்ல முடியவில்லை. எனவே மகனே, உனக்கு ஒரு யோகியின் கண்கள் உள்ளன” என்றார். இந்தப் பதில் நரேந்திரருக்குத்
திருப்தி அளிக்கவில்லை, பெருத்த ஏமாற்றத்தையே தந்தது.
இருப்பினும்
நரேந்திரர் மனம் தளரவில்லை. அறிஞர்கள், மதத்தலைவர்கள் என்று பலரையும் சந்தித்து அவர்
இந்தக்கேள்வியைக்கேட்ட வண்ணம் இருந்தார். ஆனால் பதில் என்னவோ கிடைத்தபாடில்லை.
🌸
ஆனால் மகரிஷியைச்
சந்தித்தது நரேந்திரரின் தியான வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல் ஆகியது.
அன்று மகரிஷி நரேந்திரரையும் நண்பர்களையும் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு பல உபதேசங்களை
அளித்தார். நாள்தோறும் தியானம் பழகும் படி கேட்டுக்கொண்டார். நரேந்திரரிடம் யோகியின்
அறிகுறிகள் தென்படுவதாகவும், அவர் தியானம்
பழகினால் யோக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள பலன்களை விரைவில் அடையலாம் என்றும்
கூறுவார்... அதன் படி நரேந்திரர் முன்னைவிட ஆர்வத்துடன் தியானத்தில்் ஈடுபட்டார். சில
நாட்களில் அவர் தியானத்தில் ஆழ்ந்து இரவு முழுவதும் அப்படியே கழிவதும் உண்டு.
திருப்புமுனை
இவ்வாறு
தியானத்தில் முதிர்ச்சி பெற்று, உயர்நிலைகளுக்குச்சென்று கொண்டிருந்தது. ஆனாலும் தமக்குவழி
காட்டுகின்ற ஒருவருக்கான தேடலை அவர் நிறுத்தவில்லை. உண்மையான முயற்சி வீண்போவதில்லைஅல்லவா?
நரேந்திரரின் முயற்சி கனியும் தருணமும் வந்தது. அது 1881 நவம்பர் மாதம். நரேந்திரர்
எஃப்.ஏ படித்துக்கொண்டிருந்தார். ஆங்கிலப்பேராசிரியர் விடுமுறையில் இருந்ததால், நரேந்திரரின்
ஆங்கில இலக்கிய வகுப்பைக் கல்லூரி முதல்வரான வில்லியம் ஹேஸ்டி நடத்திக்கொண்டிருந்தார்.வோட்ஸ்வொர்த்
எழுதிய சுற்றுலா என்ற கவிதை அன்றைய பாடமாக இருந்தது. அதில் வழிப்போக்கன் ஒருவன் இயற்கையை
ரசித்து அதில் ஒன்றிக்ரைத்து, பரவச நிலையை அடைந்த பகுதியை அவர் விளக்கிக் கொண்டிருந்தார்.
பரவச நிலையை எப்படி மாணவர்களுக்குப்புரிய வைப்பது? சாதாரணமான அனுபவங்களைக்கூட, , அதனை
அனுபவித்திராத ஒருவருக்கு எடுத்துக்கூறுவது இயலாத ஒன்று. உதாரணமாக, இனிப்பையே சுவைத்திராத
ஒருவரிடம் இனிப்பு எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்கூறி விளக்க முடியுமா? இந்த நிலையில்
அதிமன அனுபவங்களை விளக்குவது என்பது இயலாத ஒன்றே அல்லவா!
ஹேஸ்டிக்குச்
சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. பரவச நிலை அனுபவத்தை அவர் பெற்றதில்லை என்பது உண்மைதான்,
ஆனால் பரவச நிலையை மீண்டும், மீண்டும் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற ஒருவரை அவர் அறிந்திருந்தார்.
அந்த நபர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். உடனேஅவர் மாணவர்களிடம், இந்த அனுபவம் அபூர்வமானது,
குறிப்பாக இந்த நாட்களில் மிகவும் அரிதான ஒன்று மனத்தூய்மை, மன ஒருமைப்பாடு இவற்றின்
விளைவாக, நீண்ட பயிற்சியின் காரணமாக கிடைக்கின்ற ஆனந்த அனுபவம் அது. அந்த அற்புத அனுபவத்தைப்பெற்ற
ஒருவரை நான் கண்டிருக்கிறேன். அவர் தட்சிணேசுவரத்தில் வாழ்ந்து வருகின்ற ஸ்ரீராமகிருஷ்ண
பரமஹம்சர். நீங்களும் அவரைப் பார்த்தால் அதனைப்புரிந்து கொள்ள முடியும்“ என்று கூறினார்.
நரேந்திரரின்
இருதய நாளங்களில் ஒன்றை யாரோ மீட்டியது போல் இருந்தது. காரிருள் மண்டிக்கிடந்த அறையில்
தவித்துக்கொண்டிருந்த ஒருவனுக்கு நுண் துளை வழியாக சன்னமானதோர் ஒளிக்கீற்று வந்து வழிகாட்டுவது
போல் தோன்றியது அவருக்கு!
மனித வாழ்வில்
சிலநேரங்களில் சில நிகழ்ச்சிகள் , சில தூண்டுதல்கள் , சில வார்த்தைகள் திருப்புமுனைகளாக
அமைகின்றன.” காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே“ என்ற ஒரு வாக்கியம் பெரும் செல்வந்தராக
இருந்த ஒருவரை அனைத்தையும் துறக்கச் செய்து பட்டினத்தார் ஆக்கியது. நிச்சயதார்த்த நாளன்று
உணவிற்கு ஏற்பட்ட கால தாமதம் சதாசிவ பிரம்மேந்திரர் உருவாகக் காரணமாக அமைந்தது. நரேந்திரரின்
வாழ்வில் அத்தகைய இரண்டு சம்பவங்களாகத் திகழ்ந்தவை ஸ்ரீராமகிருஷ்ணருடன் சந்திப்பு மற்றும் தந்தையின் மரணம் ஆகியவை. ஸ்ரீராமகிருஷ்ணருடன்
நரேந்திரரின் சந்திப்பு என்பதுஒரு தெய்வ சங்கல்பம்!
அந்தச் சந்திப்பை ப் பார்க்குமுன் ஸ்ரீாமகிருஷ்ணரைப்
பற்றி சற்று தெரிந்து கொள்வோம்.
குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்க்கை சுருக்கமாக...
பாரதத் திருநாட்டின்
மூவாயிரம் ஆண்டு ஆன்மீகத்தையும் கலாச்சார பாரம்பரியத்தையும் ஒரு வாழ்வில் வாழ்ந்தவர்.
என்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரை வர்ணிக்கிறார் ரோமா ரோலா என்ற பிரெஞ்சு அறிஞர். ஸ்ரீராமகிருஷ்ணர்
ஆன்மீக வாழ்விற்கு ஓர் அகராதி, அவரது வாழ்க்கையைப் படிப்பதன் மூலம் நமது ஆன்மீகப் பாரம்பரியத்தை நாம் சிறப்பாகப் புரிந்து
கொள்ள முடியும்.
அவரைப்பற்றியும்
அவரது பெருவாழ்வைப்பற்றியும் பல நூல்கள் வந்து விட்டன. எனவே இங்கு நாம் நரேந்திரரின்
வாழ்வு எவ்வாறு அவரது வாழ்க்கையுடன் சேர்ந்து ஒரு புதிய செய்தியை உலகிற்குத் தந்தது.
புதிய யுகத்தின் அஸ்தி வாரமாக அமைந்தது என்பதை மட்டும் காண்போம். சுவாமி விவேகானந்தரின்
வார்த்தைகளிலேயே ஆரம்பிப்போம்.
கால வெள்ளத்தில்
ஆரியரின் பரம்பரையினர் உண்மை லட்சியத்திலிருந்து வீழ்ந்தார்கள், துறவு மனத்தை இழந்தார்கள்.
கண்மூடித்தனமான பழக்கங்களில் தோய்ந்து அறிவிழந்தார்கள்., வீழ்ச்சியுற்றார்கள்.வேதாந்த
உண்மைகளை உய்த்துணரும் ஆற்றலற்றுப்போனார்கள். இதனால் என்ன நடந்தது? சமய நாடாகிய இந்தியா குழப்பக் குட்டை
ஆயிற்று. நிலையான வேதமாகிய சனாதன தர்மத்தில் மக்கள் நம்பிக்கை இழந்தனர்.ஆன்மீக லட்சியத்தின்
பல்வேறு அம்சங்களையும் ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த சனாதன மதம் பிளவுபட்டு பல்வேறு மதங்களாகக்
காட்சியளித்தது. இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டு நின்று, பகை, பொறாமை, சகிப்பின்மை, குறுகிய
இனவெறி ஆகிய நெருப்பிற்கு இரையாகி அழிவதற்கு ஒன்றையொன்று முந்தின. உந்தின. பாரதத் திருநாட்டை
அவை நரகமாக்கிவிட்டது போல் தோன்றியது.
இந்த நிலையில்
இந்தியா இருந்தபோது தான் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் அவதரித்தார். ஆரியர்களின் உண்மைச்சமயம் எது என்பதை
எடுத்துக்காட்டினார். இந்து மதம் பல்வேறு கிளைகளுடனும் விழுதுகளுடனும் படர்ந்து நாடு
முழுவதும் விரிந்திருந்தாலும் அதன் உண்மையான ஒருமை எங்குள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
எண்ணற்ற சமயப் பிரிவுகளாலும், வெளிப்பார்வைக்கு முரண்பட்டவைபோல் தோன்றிய பல்வேறு பழக்க வழக்கங்களாலும் பிரிந்து நின்று, பூசலிட்டு,
மக்களுக்குத் தவறான பாதையைக்காட்டி, பிற நாட்டினரின் விமர்சனத்திற்கும் நகைப்புக்கும் மதம் இடமளித்து
வந்தபோது, உண்மை மதம் எங்குள்ளது என்பதை எடுத்துக்காட்ட, அவர் சனாதன தர்மத்தின் உருவமாக
அவதரித்தார்.
சமய வரலாற்றில்
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை ஒரு மைல் கல், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன்பு சிந்து, கங்கை, சரஸ்வதி நதி தீரங்களில் தவம் இயற்றிய முனிவர்களின் வாயிலாக வெளிப்பட்ட அழிவற்ற
உண்மைகள் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வில் நிரூபிக்கப்பட்டன.
ஆன்மீக சாதனைகள் மூலம் தங்களைத் தகுதி உடையவர்களாக ஆக்கிக்கொள்பவர்களின் வாயிலாக அந்த
உண்மைகள் வெளிப்படுகின்றன. காலமோ இடமோ எவையும்
அந்த உண்மைகளைக் கட்டுப்படுத்துவதில்லை. அந்த முனிவர்கள் வெளிப்படுத்திய உண்மைகளைக்கொண்ட
சாஸ்திரங்கள் எதையும் கற்றவர் அல்ல ஸ்ரீராமகிருஷ்ணர்.ஆனால்
அவர் வேத கால முனிவர்கள் காட்டிய வழியில்,, தமது வாழ்வையே சோதனைக்களமாக்கி, ஆன்மீக
சாதனைகள் செய்து அந்த உண்மைகளைத்தமது வாழ்வில்
வெளிப்படுத்தினார். இதனால் வேதங்களின் உண்மை நிரூபிக்கப் பட்டது. இவ்வாறு வேதங்கள்
வெளிப்படுவதற்கு ஒரு கருவியாகத் தம்மை ஆக்கிக்கொள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் பன்னிரண்டு ஆண்டுகள்
கடுமையான தவ வாழ்வில் ஈடுபட்டார்.
படிப்பறிவற்ற
ஒரு சாதாரண மனிதராக , ஒரு குக்கிராமத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை தொடங்கியது.அனால் இறைவனை அடைய வேண்டும் என்ற தீவிர தாகம் மிகச் சிறு
வயதிலேயே அவரிடம் குடிகொண்டிருந்தது.இளமையில் அவர் தட்சிணேசுவரக் காளி கோயிலில் பூஜாரி
ஆனார். தாம் செய்கின்ற பூஜையை உண்மையிலேயே காளி தேவி ஏற்கிறாளா அல்லது வெறும் கல்லுக்குத்தான்
பூஜை செய்கிறோமா என்ற கேள்வி அவருள் தீவிரமாக எழுந்தது. உண்மையிலேயே காளி தம் பூஜையை
ஏற்கிறாள் என்றால் அது தமக்கு த் தெரிய வேண்டும், அவளைக்காண வேண்டும் என்ற மனஏக்கமும்,
தணியாத தாகமும் அவருள் ஒரு வெறியாக வளர்ந்தது. ஆறு ஆண்டுகள் அவரது முடிவற்ற ஏக்கத்திற்குப்
பிறகு காளிதேவி தன்னை அவருக்குக்காட்டி யருளினாள்.
காளியின்
காட்சி மனத்திருப்தியைத் தருவதற்குப் பதிலாக அவரிடம் தீவிரத்தேடலை த்தோற்றுவித்தது.
எத்தனை பாதைகள் இருக்குமோ, அத்தனை பாதைகள் வழியாகவும் இறையின்பத்தை அனுபவிக்க வேண்டும்
என்ற ஆர்வம் அவரிடம் கட்டுக்கடங்காமல் எழுந்தது. எனவே இந்து மதத்தின் பல்வேறு நெறிகளையும்
கிறிஸ்தவ, இஸ்லாம் நெறிகளையும் பின்பற்றி, அவை ஒவ்வொன்றின் மூலமும் அறுதிநிலையை அடைந்தார்
. சமய வரலாற்றில் இத்தகைய நிகழ்ச்சி இதற்கு முன்பு நடந்ததில்லை.
இவ்வாறு
தமது சோதனைகளுக்குப்பிறகு அவர் எத்தனை மதங்களோ அத்தனை வழிகள் என்ற அனுபவ உண்மையை வெளியிட்டார்.
எந்த மதங்களையும் குறைசொல்லவேண்டாம், எல்லா மதங்களும் அறுதி உண்மையை நோக்கி நம்மை அழைத்துச்செல்பவை
தான். எனவே மதங்களுக்குள் சண்டை வேண்டாம். ஒருவன் தனது நெறியில் மனப்பூர்வமாக ஈடுபட்டால்
போதும், அதுவே அவனை உண்மையில் சேர்கின்ற பாதையாக அமையும். இந்த ச் சமய சமரசக்கருத்து
காலத்தின் தேவைக்கு மிகவும் ஏற்புடையதாக இருந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர்
கண்ட உண்மைகள்
இந்தச் சமயசமரசக் கருத்தை அடிப்படையாகக்கொண்ட ஒரு
புதிய சமுதாயத்தை உருவாக்குவது தமது அவதார நோக்கம் என்பதை தெய்வீக அனுபவத்தின் வாயிலாகத்
தெரிந்து கொண்டார்ஸ்ரீராமகிருஷ்ணர். காளி தேவியின் கரங்களில் தாம் ஒரு கருவியே என்றும், சொந்த வாழ்வில் உணர்ந்த சமய ஒருமைப்பாடு என்ற கோட்பாட்டிற்குப்பொருந்திய
வகையில் புதிய நெறி ஒன்றைத்தாம் நிறுவவேண்டும் என்றும் உணர்ந்தார் குருதேவர் ” என்று
எழுதுகிறார் அவரது வரலாற்று ஆசிரியரான சாரதானந்தர்..
ஸ்ரீராமகிருஷ்ணர்
பிறந்ததிலிருந்தே கீழை அடி வானம் ஒளிரத் தொடங்கிவிட்டது. உதய கால சூரியனின் கிரணங்கள்
பரவத்தொடங்கி விட்டன. காலப்போக்கில் அந்தப்பேரொளி, நண்பகல் சூரியன் போல் உலகையே ஒளி
வெள்ளத்தில் ஆழ்த்தப் போகிறது. அவர் பிறந்த நாள் முதலே சத்திய யுகம் தோன்றிவிட்டது.
என்றார் சுவாமி விவேகானந்தர். அந்த சத்திய யுகத்திற்கான புதிய சமுதாயமே ஸ்ரீராமகிருஷ்ணர்
கண்ட சமுதாயம். சத்திய யுகத்தை நிறுவுகின்ற அந்தப்புதிய சமுதாயத்தைின் சில அம்சங்களை
அவரது உபதேசங்களின் வழியாகக் காண்போம்.
சத்திய யுகம்
ஒருபார்வை
புதிய சமுதாயம்
என்பது ஒரு நாளில் அமைவதில்லை. மனிதர்களின் சேர்க்கையே சமுதாயம். புதிய சமுதாயம் உருவாக
வேண்டுமானால் புதிய மனிதர்கள் உருவாகவேண்டும். புதிய எண்ணங்கள், புதிய பார்வை, புதிய
கண்ணோட்டம் கொண்ட மனிதர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அவர்களைப்பற்றி
ஸ்ரீராமகிருஷ்ணரின்
சிந்தனைகளைக் காண்போம்.
வாழ்க்கை
லட்சியம்
1) வாழ்க்கையின் லட்சியம் இறையனுபூதி, எண்ணெய் இல்லாமல்
விளக்கு எரிய முடியாது. அது போல் இறைவன் இல்லாமல் மனிதனால் வாழ இயலாது.
2) இறையனுபூதி பெறுவதற்கு ஜாதி, மதம் , இனம் மொழி,
பால், தேசம், அந்தஸ்து, படிப்பு, பணம் என்று எதுவும் தடையில்லை.
கடவுள்
1.கடவுள்
ஒருவரே, வெவ்வேறு மதங்கள் அவரை வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றன. தண்ணீர் ஒன்றுதான்.
ஆங்கிலேயர்கள் ”வாட்டர்” என்றும் வட இந்தியர்கள் ”பானி” என்றும் வெவ்வெறு மொழியினர் வெவ்வெறு விதத்தில் அழைத்தாலும்
தண்ணீர் ஒன்றுதான்.
2. கடவுளின்
நிலைகளான உருவம், அருவம் இரண்டுமே உண்மை. ஒரே பாம்பு படமெடுத்து ஆடுவதும் சுருண்டு
கிடப்பதும் போன்ற நிலைகள் இவை. ஒரே கடவுள் உலகைப்படைத்து, காத்து, ஒடுக்கும்போது சக்தி
அல்லது தேவி என்று பெயர் பெறுகிறார். அதே கடவுள் இந்தச்செயல்களைக்கடந்த நிலையில் பிரம்மம்
எனப்படுகிறார்.
3.பக்தர்களுக்காகக்
கடவுள் பல்வேறு உருவங்கள் தாங்குகிறார்.குளிர் காரணமாக நீர் சில இடங்களில் பனிப்பாறை
ஆகிறது. சூரியன் உதிக்கும்போது அந்தப் பாறைகள்
கரைந்து மீண்டும் கடல் நீராகின்றன.அது போல் பக்தி காரணமாகக் கடவுள் பல்வேறு
உருவங்களைத் தாங்கி வருகிறார். ஞான சூரியனாகிய அத்வைத ஞானம் உதிக்கும் போது உருவங்கள் மறைகின்றன. அவர் உருவமற்ற
நிலையில் உணரப்படுகிறார். ஆனால் பனி, உருகாத
பகுதிகள் இருப்பது போல் கடவுளின் உருவங்கள் மறையாத உயர்நிலைகளும் உண்டு.
4. காலங்கள்
தோறும் கடவுள் மனிதனாக அவதரிக்கிறார். மற்றவர்கள் இறைநிலையை அடைவதற்கான ஒரு வாசலாக
அந்த அவதார
புருஷர்
திகழ்கிறார்.
5.தேவியின்
திருவுளத்தாலேயே இந்த உலகம் இயங்குகிறது. வாழ்க்கை அவளது லீலை., அவளது திருவிளையாடல்,
பந்தம், முக்தி இரண்டுமே அவள் கையில் உள்ளன. மனித அறிவு எல்லைக்கு உட்பட்டது. அதன்
காரணமாகத் தான் இந்தத் திருவிளையாடலின் உண்மையை அவனால் உணர முடியவில்லை.
ஆன்மீக அனுபூதி
1.ஆன்மா,
கடவுள் போன்ற உண்மைகளை நிரூபிப்பதற்கான ஒரே வழி நேரடி நேரடி அனுபவம். சாஸ்திரங்கள்
கைகாட்டிப் பலகைகளைப்போல் இந்த உண்மைகளைச்சுட்டிக்காட்ட மட்டுமே இயலும். அவற்றை நிரூபிக்க
இயலாது. மழை வரும் விவரங்களைப் பஞ்சாங்கம் தரலாம். அதற்காகப் பஞ்சாங்கத்தைப் பிழிந்தால்
தண்ணீர் வராது.
2.ஆன்மீக
அனுபவங்களுக்கு எல்லை இல்லை. எனவே கிடைத்த அனுபவங்களுடன் திருப்தி அடைந்து நின்றுவிடாமல்
தொடர்ந்து முன்னேற வேண்டும்.
3. குண்டலினி
சக்தி விழித்தெழுவதால் தான் ஆன்மீக அனுபவங்கள்
வாய்க்கின்றன.
4. இரண்டற்ற
நிலையாகிய அத்வைத அனுபவம் மிக உயர்ந்த ஆன்மீக அனுபவம்.
5. ஆனால்
அத்வைதம் கடைசி அனுபவம் அல்ல. அத்வைத அனுபவம் பெற்றசிலர் மீண்டும் சாதாரண நிலைக்கு
வருகிறார்கள். அவர்கள் எங்கும் கடவுளைக்காண்கிறார்கள். அந்த இறையின்பத்திலேயே வாழ்கிறார்கள்
. இந்த நிலை ”விஞ்ஞானம்” எனப்படுகிறது. இந்த நிலையை அடைந்தவர்
”விஞ்ஞானி” எனப்படுகிறார். அவர் இறைவன்
(நித்யம்), உலகம்(லீலை) இரண்டையுமே உண்மை என்று காண்கிறார்.
6. ஒரு போதும்
பந்தத்திற்கு உட்படாத, எப்போதும் முக்தி நிலையிலேயே இருக்கின்ற சிலர் உள்ளனர். நித்திய
முக்தர்களாகிய இவர்கள் இறைவன் அவதரிக்கும் போது அவருடன் பிறந்து, அவரது பணிக்கு உதவுகின்றனர்.
இவர்கள் ஈசுவரகோடிகள் எனப்படுகின்றனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்
இவற்றைப்போதித்தது மட்டுமல்ல, இந்த உண்மைகளை நிரூபிப்பதற்காகச் சில வாழ்க்கைகளையும்
உருவாக்கிச்சென்றார். இந்த லட்சியத்தை ஏற்று வாழ்ந்து காட்டியவர்களில் ஆண்கள், பெண்கள்
இல்லறத்தார், துறவியர், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று சமுதாயத்தின் அனைத்துப்
பிரிவினரும் இருந்தார்கள்.ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியது மட்டுமல்ல,
அது சாத்தியமே என்று நிரூபித்தும் சென்றார் அவர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்
கண்ட இந்த உண்மைகள் இன்று உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆன்மீக வாழ்க்கையில்
வழிகாட்டியாக உள்ளன. சமயச் சண்டைகளுக்கும் பூசல்களுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வாக
விளங்குகின்ற அவரது இந்தக்கோட்பாடுகள் மனித வாழ்வில் கடைப்பிடிக்கும் போது வாழ்க்கை
உயர்கிறது. சமுதாயம் வளர்கிறது. புதிய சமுதாயம் உருவாகிறது, சத்திய யுகம் மலர்கிறது.
இன்று ஒரு
வார்த்தை . இன்று எந்த ஆன்மீக நூல்களை எடுத்தாலும்
இந்தக் கருத்துக்களைப்பொதுவாகக்காணலாம். பல ஆச்சாரியர்களும் குருமார்களும் இத்தகைய
கருத்துக்களைக்கூறுகின்றனர். ஆனால் இன்று நாம் பல இடங்களிலும் காண்கின்ற இந்தக் கருத்துக்கள்
ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்தே பெறப்பட்டவை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். வெண்ணெய் க்
கடைகள் பல இருக்கும். அங்கே எல்லாம் வெண்ணெய் கிடைக்கவும் செய்யும்.ஆனால் பாலைத் தயிர்
ஆக்கலாம். அதைக்கடைந்து வெண்ணெய் எடுக்கலாம் என்று முதலில் கண்டுபிடித்தவனின் அறிவை
நாம் பொதுவாக எண்ணிப் பார்ப்பதில்லை. அது போலவே ஸ்ரீராமகிருஷ்ணருக்கு முன்பு இந்தக்கருத்துக்கள் இவ்வளவு தெளிவான மொழியில் கூறப்படவில்லை. அவரே முதன்முறையாகச்
சூத்திரங்கள் போல் இவற்றை வகுத்துக்கொடுத்தவர் இன்று நாம் காண்பவை அவற்றின் விரிவுகளே.
சீடர்களின்
பணி
அவதார புருஷர்கள்
தங்கள் செய்தியை உலகிற்கு அளிக்கு முன்னர் தங்கள் வாழ்க்கையை ஒரு மாபெரும் சோதனைக்களமாக்கிக்
கொள்ள வேண்டியுள்ளது. இந்த மாபெரும் தவத்தைச்செய்து காலத்திற்கு ஏற்ற உண்மைகளைக் கண்டு
பிடிப்பதில் அவர் களுடைய ஆற்றலும் நேரமும் பெருமளவிற்குச் செலவழிகிறது. எனவே தகுதியான
ஒருசிலரைத்தேர்ந்தெடுத்து அவர்களிடம் அந்தச்செய்தியை அளித்துவிட்டு மறைந்து விடுகின்றனர்.
மழைத்துளியையோ, மணல்துகளையோ தன்னுள் பெற்ற சிப்பி அதனை ஏற்றுக்கொண்டு ஆழ்கடலில் சென்று
அதனை முத்தாக்குகிறது.முத்தாக்குவதுடன் அதன்
வேலை நிறைவுற்றுவிடுகிறது. அதனை எடுத்து உலகிற்கு அளிக்கின்ற பணியைப் பிறர் செய்வது
போல், அவதார புபுஷர்கள் தங்கள் தவ வாழ்வின மூலம் கண்ட உண்மைகளை அவரது சீடர்கள் தங்கள்
வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுகின்றனர். உலகிற்கு அளிக்கின்றனர்.
ஆன்மீக உண்மைகளும்
பாரம்பரியமும் பொதுவாக துறவியர் பரம்பரை மூலமாக வே பாதுகாக்கப் பட்டு வந்திருக்கிறது.
ஸ்ரீராமகிருஷ்ணரின் இந்தப்புதிய செய்தியையும்
பரப்ப அத்தகையதொரு துறவியர் சமுதாயம் தேவைப்பட்டது. இந்து மதத்தில் அத்தகையதொரு துறவியர்
சமுதாயம் அது வரை கேள்விப்படாத ஒன்று. அதனை உருவாக்குவதற்குத் தகுந்த கருவி ஒன்று அவருக்குத்தேவைப்பட்டது.
அத்தகைய கருவியாக வருபவர் நமது ஆன்மீக கலாச்சாரப் பாரம்பரியத்தைப்பற்றி தெரிந்தவராக
இருக்கவேண்டும். அதே வேளையில் இந்து மதத்திற்கு அன்றைய சவாலாக இருந்த மேலை நாட்டுக்
கலாச்சாரம், மேலை விஞ்ஞானம் ஆகியவற்றை அறிந்தவராகவும்
இருப்பது அவசியம். அத்தகைய ஒருவருக்காக ஸ்ரீராமகிருஷ்ணர் காத்திருந்தார்.
வேத முனிவர்கள்
கூறிய உண்மைகளை நேருக்கு நேர் கண்ட ஒருவர் உண்டா என்று தேடிக்கொண்டிருந்தார். நரேந்திரர்.
அத்தகைய ஒருவராக இருந்தது மட்டுமின்றி, தாம் கண்ட உண்மைகளை உலகிற்கு வழங்குவதற்கான
ஒரு புதிய துறவியர் சமுதாயத்தையே உருவாக்க வல்ல ஒருவருக்காகக் காத்திருந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
அவர்கள் இருவரும் சந்திப்பது காலத்தின் தேவை ஆயிற்று.
கடவுளைக்
கண்டிருக்கிறீர்களா?
யாரோ சொன்னார்கள்
என்பதற்காகவோ , ஏதோ நூலில் எழுதியிருந்தார்கள் என்பதற்காகவோ எதையும் ஏற்றுக்கொள்பவர்
அல்ல நரேந்திரர். உண்மையை நேருக்கு நேர் கண்ட ஒருவரை நாட வேண்டும் என்ற அவருள் எழுந்த தணியாத தாகம், அடங்காத ஆர்வம் அவரைப் பலரிடம் இட்டுச்
சென்றது. அவர் பலரைச்சென்று கண்டார். விசாரித்தார். ஆனால் எங்கிருந்தும், ஆம்” என்ற தெளிவான, உறுதியான பதில் அவருக்குக் கிடைக்கவில்லை.
இந்த வேளையில் ஒரு நாள் அவரது உறவினரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லற பக்தர்களில் ஒருவருமான
ராம்சந்திர தத்தர் அவரிடம், இதோ பார் நரேந்திரா!
உண்மையான
மகானைத்தேடி நீ இங்குமங்குமாக அலைந்து கொண்டிருக்கிறாய், தட்சிணேசுவரத்தில் ஒரு பரமஹம்சர்
வாழ்கிறார். ஒரு நாள் நீ என்னுடன் வா. வந்து அவரைப்பார், என்றார். அதற்கு நரேந்திரர்,
எனக்குத்தெரியும். அவரைப் பற்றியும் நான் விசாரித்துவிட்டேன். ஆனால் அவர் படிப்பறிவற்றவர்
ஆயிற்றே! ஸ்பென்சர், ஹேமில்டன், லாக்கே என்று பலரைப் படித்துள்ள எனக்கு, படிப்பறிவற்ற
அவர் என்ன வழிகாட்ட முடியும்? என்று கேட்டுவிட்டார்.ராம்சந்திரர் பதில் எதுவும் கூறவில்லை,
ஆனாலும் தமது முயற்சியை விடாமல். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணரைப்பற்றி
அவரிடம் கூறிக்கொண்டே இருந்தார்.
எதற்கும்
வேளை வர வேண்டும் அல்லவா? அந்த வேளையும் விரைந்து வந்தது.
அறிமுகம்
ஸ்ரீராமகிருஷ்ணரின்
இல்லற பக்தர்களில் ஒருவர் சுரேந்திரநாத் மித்ரர். அவர் நரேந்திரரின் வீட்டிற்கு அருகில்
வசித்து வந்தார். ஒரு நாள் அவர் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்து விழாக்கொண்டாட
எண்ணினார். வழக்கமாக இது போன்ற விழாக்களில் கீர்த்தனைகள் பாடுவது, பாகவத புராணம் படிப்பது போன்ற நிகழ்ச்சிகள்
நடைபெறும். சுரேந்திரரின் வீட்டில் பாடுவதற்கு யாரும் கிடைக்கவில்லை. எனவே அவர் நரேந்திரரை
அழைத்தார். அப்போது கல்லூரி தேர்விற்குப் படித்துக்கொண்டிருந்தார் நரேந்திரர். இருப்பினும்
சுரேந்திரரின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
அது
1881 நவம்பர். ஸ்ரீராமகிருஷ்ணர் வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்குப் பிறகு நரேந்திரர்
பாடினார்.ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரிடம் வெகுவாகக்
கவரப்பட்டார். எனவே பாடல்கள் நிறைவுற்றதும் சுரேந்திரரையும் ராம்சந்திரரையும் அழைத்து,
இனிமையாகப் பாடிய அந்த இளைஞரைப் பற்றிய விவரங்களை விசாரித்து த் தெரிந்து கொண்டார்.. ஒரு நாள் அவரைத் தட்சிணேசுவரக்காளி
கோயிலுக்கு அழைத்து வருமாறும் கேட்டுக்கொண்டார்.பிறகு நரேந்திரரிடம் சென்று ஓரிரு வார்த்தைகள்
பேசினார். அவரது உடல் அமைப்பைக்கூர்ந்து கவனித்தார். தாமதம் இன்றி ஒரு நாள் தட்சிணேசுவரத்திற்கு
வருமாறு அவரை அழைக்கவும் செய்தார்.
நரேந்திரரைப்பொறுத்தவரை
அன்றைய சந்திப்பு அவரிடம் பெரிய தாக்கம் எதையும்
ஏற்படுத்தவில்லை. பாடுவதற்காக சுரேந்திரர் வற்புறுத்தி அழைத்ததால் சென்றார்.பாடினார்.
ஸ்ரீராமகிருஷ்ணரைக்கண்டார்.ஆனால் அவரைப்பற்றிப்
பெரிதாக எதுவும் நினைக்க வில்லை.
இந்த நிகழ்ச்சி
நடந்த சில வாரங்களுக்குப்பிறகு நரேந்திரரின் தேர்வு நிறைவுற்றது. உடனடியாக அவரது திருமணப்பேச்சு
முடுக்கிவிடப்பட்டது. ஒரு பெரிய குடும்பத்திலிருந்து மணம் பேசினர். நரேந்திரர் மறுத்துவிட்டார்.புனிதமும்
உண்மையை அடைவதற்கான ஏக்கமும் அவரது தனிப்பெரும் அடையாளங்களாகத் திகழ்ந்தன. பிரம்மசரியமும்
சத்திய நிதிஷ்டையும் அவரது இயல்பில் ஊறியவையாக இருந்தன.அவற்றை விடுவது என்பது அவரால்
எண்ணிப்பார்க்க இயலாத ஒன்றாக இருந்தது.
அவற்றிற்கு
இடையூறாக வருகின்ற எதையும் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை. அத்தகைய ஒரு தடையாகத் திருமணத்தைக் கண்டார்
அவர். எனவே திருமணத்திற்கு மறுத்தார். ஆனால்
பெண் வீட்டிலோ, பெண் சற்று கறுப்பாக இருந்ததால் அவளது தந்தை பத்தாயிரம் ரூபாய் வரதட்சணை
கொடுக்கத் தயாராக இருந்தார். விசுவநாத தத்தரின் தூண்டுதலால் ராம்சந்திர தத்தரும் மற்ற
உறவினர்களும் நரேந்திரரை வற்புறுத்திப் பார்த்தனர். ஆனால் நரேந்திரர் இணங்கவில்லை.
ஆன்மீக லட்சியங்களின்
காரணமாக நரேந்திரர் திருமணம் செய்து கொள்ள மறுப்பதை அறிந்த ராம்சந்திரர் நரேந்திரரிடம்,
உனக்கு இறையனுபூதி பெற வேண்டும் என்று உண்மையான ஆர்வம் இருக்குமானால் , பிரம்ம சமாஜம்
போன்ற இடங்களில் அலைவதை விட்டுவிட்டு தட்சிணேசுவரத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் செல்,
என்று கூறினார். அந்தச் சமயத்தில் ஒரு நாள் அண்டை வீட்டு வாசியான சுரேந்திரரும் நரேந்திரரைத்
தம்முடன் தட்சிணேசுவரத்திற்கு வருமாறு அழைத்தார்.
எப்படியாவது
இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற தணியாத தாகத்துடன் இருந்த நரேந்திரர், இந்த
நாள்வரை அனைவரிடமும் கேட்டுக்கொண்டிருந்த அந்தக் கேள்வியை ஸ்ரீராமகிருஷ்ணரிடமும் கேட்கலாம்
என்று எண்ணினார். எனவே அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு ராம்சந்திர தத்தருடனும் ஓரிரு நண்பர்களுடனும்
சுரேந்திரரின் குதிரை வண்டியில் தட்சிணேசுவரம் சென்றார்.
அது ஜனவரி
1882.
கல்கத்தாவிலிருந்து
சுமார் 10 கி.மீ. தொலைவில் கங்கைக் கரையில் அமைந்துள்ளது தட்சிணேசுவரம்.ராணி ராசமணி
என்ற ஜமீன்தாரினி கட்டிய கோயில்கள் அங்கே அமைந்திருந்தன.முக்கியக்கோயிலாகத் திகழ்ந்தது
பவதாரணி காளிகோயில். அதைத் தவிர ராதா காந்தர் கோயிலும் பன்னிரு சிவன் கோயில்களும் உள்ளன.
அங்கே ஓர் அறையில் ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்து வந்தார். சிறிய அறை அது.பெரியதும், சிறியதுமாக
அங்கே இரண்டு கட்டில்கள் உள்ளன.
பொதுவாக
ஸ்ரீராமகிருஷ்ணர் சிறிய கட்டிலில் அமர்ந்து ஓய்வெடுப்பார். பக்தர்கள் தரையில் விரித்துள்ள
விரிப்பின் மீது அமர்வார்கள்.
நரேந்திரரும்
பிறரும் சென்ற வண்டி காளி கோயிலுக்கு அருகில் சென்று நின்றது. அனைவரும் வண்டியிலிருந்து
இறங்கி ஸ்ரீராமகிருஷ்ணரின் அறையை நோக்கிச்சென்றனர்.குளிர் காற்றைத் தடுப்பதற்காக அறையின்
வடக்கு வாசல் மூங்கில் தட்டிகளால் தடுக்கப்பட்டிருந்தது.
ஆகையால்
நரேந்திரர் அறையின் மேற்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்தார். அறையில் பக்தர்கள் பலர்
இருந்தனர்.ஸ்ரீராமகிருஷ்ணர் இசையிலும் இறைவனைப் பற்றி பேசுவதிலும் மூழ்கியிருந்தார்.
நரேந்திரர் சென்றதும் ஸ்ரீராமகிருஷ்ணரின் பார்வை
அவர் மீது விழுந்தது. அன்றைய சந்திப்புபற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் பின்னாளில் கூறினார்.
அன்று நரேந்திரன்
மேற்குக் கதவு வழியாக இந்த அறைக்குள் வந்தான். அவன் தன் உடம்பைப்பற்றி கவலைப் பட்டதாகத்
தெரியவில்லை.தலைமுடியும் ஆடையும் கலைந்து கிடந்தன.
எந்தப்பொருளும் அவனுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. மனத்தின் பெரும்பகுதி அகமுகமாகத்
திருப்பப் பட்டிருந்ததை அவனது கண்கள் காட்டின. உலகியல் மக்கள் மலிந்த இந்தக் கல்கத்தாவில்
சத்வ குணம் படைத்த இப்படி ஒருவன் வாழ்வது சாத்தியமா
என்று வியந்தேன்.
தரையில்
பாய் விரிக்கப் பட்டிருந்தது. அதில் உட்காரும் படி அவனிடம் கூறினேன். அதோ அங்கே கங்கை
நீர் ஜாடியிருக்கிறதே, அதன் அருகில் அமர்ந்தான். நண்பர்கள் சிலரும் அவனுடன் வந்திருந்தனர்.
அவர்களின் இயல்பு அவனது இயல்பிற்கு நேர்மாறானதாக இருந்தது. அவர்கள் சாதாரண இளைஞர்களைப்போல் சுக போக நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
நரேந்திரர்
சென்று பக்தர்களுடன் அமர்ந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் அவரைப்பாடும் படி கேட்டுக்கொண்டார்.
பிரம்ம சமாஜத்தில் பாடப்படும் சில பாடல்களை அவர் பாடினார். அந்தப் பாடல்கள்-
மனமே மீண்டும்
உன் வாழ்விடம் செல்வாய்!
வாழ்க்கை
அதிலே மாற்றான் பால்நீ
ஆழ்ந்து மயங்கி அல்லல் ஏன் பட்டனை?
உன்னைச்சுற்றி
உள்ளவை அனைத்தும்
மன்னம் ஐந்து
மாபெரும் மூலமும்
அன்னியம்
தானே! அவைகளில் ஏதும்
உன்னுறவாக உரைக்க முடியுமா?
பிறரையே
நாளும் பெரிதும் விரும்பி
மறந்தனை
உனையே! மனமே ஏன் இது?
உண்மை வழியில்
உளமே நீ நில்!
அன்பு விளக்கால்
அடைகநல் உயர்வு!
தொடரும்
வழியிலே துன்பம் வந்துற்றால்
அவன் தான்
அவ்வழி ஆளும் தலைவன்!
அவனுக்கு எமனும் அடங்கி வணங்குவான்.!
பாடலின்
ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் வண்ணம் உணர்ச்சிமிக்கக்குரலில் , ஒருமுகப்பட்ட
மனத்துடன் பாடினார் நரேந்திரர். பாடலில் லயித்த ஸ்ரீராமகிருஷ்ணர் பரவச நிலையை அடைந்தார்..
அடுத்த பாடல்
இறைவனே!
என்றன் வாழ்நாள் எந்த வோர் பயனும் இன்றி
மறைவதோ வீணே?
உன்றன் வரவினை எதிர்பார்த்திங்கே
இருவிழி
வழிமேல் நாட்டி இரவொடு பகலும் ஏங்கி
இருக்கிறேன்
காத்துக்கொண்டே என்னரும் பிராண
நெஞ்சக்
கதவை எந்த நேரமும் திறந்து வைத்தேன்.
கொஞ்சம்
நீ கருணை கூர்ந்து குலவிட ஒரு கால் வந்து
சஞ்சலம்
நீக்கி இன்பம் தங்கிடச் செய்தல் வேண்டும்
தஞ்சம் நீ தானே யன்றித் தாங்கிட யாரும் இல்லை.
பாடல் நிறைவுற்றது.ஸ்ரீராமகிருஷ்ணர்
நரேனை மிகவும் புகழ்ந்தார். நரேந்திரனுக்கு வித்யையின் தெய்வமான சரஸ்வதியின் அருள்
உள்ளது.என்றார். அனைவரும் நரேந்திரரை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
No comments:
Post a Comment