சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-11
🌸
வினோத மகான்கள்
அழகிய மலைகள், பச்சைப் பசேலென்ற செடிகளும் உயர்ந்த மரங்களும் செறிந்த அடர்ந்த காடுகள், வற்றாத ஜீவநதியாய் பொங்கிப்பெருகி
ப் பாய்ந்தோடி வருகின்ற கங்கை நதி, துறவியர் கூட்டம் கணக்கற்ற கோயில்கள் என்று இன்றும்
ஒரு தவ பூமியாகத் திகழ்கின்ற இடம் ரிஷிகேசம். சுவாமிஜியும் சாரதானந்தரும் சண்டீசுவர
மகாதேவர் கோயிலுக்கு அருகில் ஒரு குடிசை கட்டி வாழலாயினர்.
இமய மலைப்
பகுதிகளில் சுவாமிஜி தரிசித்த மகான்கள் பலர். உடம்பு என்ற ஒன்று தங்களுக்கு இருப்பதையே
நினைக்காமல், உடம்பின் சுக துக்கங்களைப் பற்றி கவலைப்படாமல் வாழ்ந்த எத்தனையோ பேரை
சுவாமிஜி அங்கே கண்டார். ஒருவர் பார்க்க பைத்தியம் போலவே இருந்தார். ஆடை எதுவுமின்றிசுற்றித்
திரிகின்ற அவர் சிறுவர்களுக்கு ஒரு வேடிக்கைப்பொருள். அவரைக் கண்டாலே அவர் மீது கல்லெறிவது
அவர்களுக்கு ஒரு விளையாட்டு. ஆச்சரியம் என்னவென்றால் அவருக்கும் இது விளையாட்டாகவே
இருந்தது. அவர்கள் கல்லெறிந்து அவரது முகம் , கழுத்து, உடம்பு முழுவதிலுமிருந்து ரத்தம்
வடியும். ஆனால் அது அவருக்கு ஒரு பொருட்டாகவே
இருக்கவில்லை. கல்லெறிந்துவிட்டு சிறுவர்கள் எப்படி கைகொட்டிச் சிரித்துக் களித்தார்களோ
அது போலவே அவரும் களித்தார். சுவாமிஜி ஒரு நாள் அவரை அழைத்துச்சென்று அவரது புண்ணை எல்லாம் கழுவி மருந்திட்டார். ரத்தம்
வடிந்தபோது அவர் எப்படிச் சிரித்தாரோ அப்படியே சுவாமிஜி அவருக்குச்சேவைகள் செய்தபோதும்
மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது எல்லாம் என் அப்பனின் விளையாட்டு” என்று கூறிவிட்டு மீண்டும் சிரிப்பார்.
சில மகான்கள்
தங்கள் அருகில் யாரையும் வர விடுவதில்லை. அதற்கு அவர்கள் பின்பற்றும் வழிகள் வினோதமாக இருக்கும். சிலர் ஆட்களைக் கண்டதுமே
கல்லால் அடிப்பார்கள். ஒருவர் தாம் வாழ்ந்த குகையைச்சுற்றி மனித எலும்புகளைப் பரப்பி
வைத்திடுவார். பார்ப்பவர்களுக்கு அவர் பிணங்களைத் தின்பவர்போல் தோன்றும். எனவே பயந்து
யாரும் அருகில் செல்லமாட்டார்கள். அவரும் எந்தத்
தொந்தரவுமின்றி சாதனைகளில் ஆழ்ந்திருப்பார். இத்தகைய துறவியர் பலரை சுவாமிஜி சந்தித்தார்.
மீண்டும்
ஒரு முறை மரணத்தின் மடியில்
இதற்குள் கிருபானந்தர் மீண்டும் வந்து சேர்ந்து கொண்டார்.
தங்கியிருந்த குடிசையைச் சற்றே பெரிதாகக் கட்டலாம் என்று அவர்கள் எண்ணினர். சுவாமிஜியைத்
தவிர மற்றவர்கள் மூங்கில் வெட்டுவதற்காக காட்டினுள் சென்றனர். திரும்பி வந்தபோது சுவாமிஜி
கடுமையான ஜீரத்தினால் பாதிக்கப்பட்டு கிடப்பதைக்கண்டனர். ஜீரத்துடன் தொண்டை அடைப்பான்
நோயும் சேர்ந்திருந்தது. அங்கே எந்த மருத்துவ வசதிக்கும் வழியில்லை.ஆதரவற்ற நிலையில்
ஆண்டவனை வேண்டுவதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை. சுவாமிஜியின்
நாடித்துடிப்பு படிப்படியாகக் குறைந்து, நின்று போகும் அளவிற்கு வந்து விட்டது. உடம்பு
குளிரத் தொடங்கியது. எல்லா நம்பிக்கையையும் இழந்து அவர்கள் அழத்தொடங்கினர். அப்போது
திடீரென்று எங்கிருந்தோ சாது ஒருவர் அங்கே வந்து சேர்ந்தார். தமது பையை எடுத்து அதிலிருந்து
சிறிது தேன் மற்றும் வேறு சில மருந்துப் பொடிகளை எடுத்து குழைத்து சுவாமிஜியின் வாயில்
திணித்தார். ஏதோ அற்புதம் போல் வேலை செய்தது அந்த மருந்து. சிறிது நேரத்தில் சுவாமிஜியின்
உடம்பு சூடு பெறத் தொடங்கியது, நினைவும் திரும்பியது.
கொஞ்ச நேரத்தில்
சுவாமிஜி கண்களைத் திறந்து மெள்ள மெள்ளப்பேசவும் ஆரம்பித்தார். இருப்பினும் பேச்சு
எதுவும் தெளிவாக வெளிவரவில்லை. எனவே சகோதரத்
துறவியருள் ஒருவர் குனிந்து அவரது வாய்க்கு அருகில் காதை வைத்து அவர் என்ன பேசுகிறார்
என்பதைக் கூர்ந்து கேட்டார். கவலை வேண்டாம்” சகோதரர்களே, நான் சாக மாட்டேன்” என்றார் சுவாமிஜி.
புறத்தளவில்
சுவாமிஜியின் ஜீரம் அவரை மரணத்திற்கே அழைத்துச்சென்றது போன்ற ஒரு நோயாக அமைந்தாலும்
அகத்தளவில் அது அவருக்கு ஓர் அற்புதச்செய்தியை அளித்துச் சென்றிருந்தது. அந்த அரையுணர்வு
நிலையில் அவருக்கு ஒரு பேருண்மை உணர்த்தப் பட்டது.தாம் இந்த உலகில் ஆற்ற வேண்டிய பெரும்
பணி ஒன்று உள்ளது. அந்தப் பணியை ஆற்றும் வரையில் தமக்கு ஓய்வென்பதே கிடையாது என்பது
அந்த வேளையில் தெரிவிக்கப்பட்டதாக சுவாமிஜி பின்னர் கூறினார். அவரிடம் அபரிமிதமான ஆன்மீக ஆற்றல் பொலிவதைச்சகோதரத் துறவியரும் உணரவே
செய்தனர். அந்த ஆற்றல் செயல்படுவதற்கான ஒரு காலத்திற்காகவும் இடத்திற்காகவும் காத்திருப்பது
போல் தோன்றியது.
தீவிர சாதனைகளில்
ஈடுபடுவதற்காக சுவாமிஜி ரிஷிகேசத்திலிருந்து தனியாக ஹரித்வார் சென்றார். ஹரித்வாரின்
அருகிலுள்ள கங்கல் என்ற இடத்தில் பிரம்மானந்தர் ஏற்கனவே சாதனை வாழ்வில் ஈடுபட்டிருந்தார்.
சுவாமிஜி வந்திருப்பது பற்றி கேள்விப்பட்டதும்
அவர் ஹரித்வார் சென்று சுவாமிஜியைச் சந்தித்தார். பின்னர் மற்ற துறவியரும் சேர்ந்து
கொண்டனர். எல்லோருமாக சஹரன்பூர் சென்றனர். அங்கே தங்கியிருந்த அகண்டானந்தர் ஏற்கனவே
மீரட் சென்றுவிட்டிருந்தார். அங்கே போக புறப்பட்டனர். மீரட்டில் யஜ்ஞேசுவர் பாபு என்பவரின் வீட்டில் அனைவரும் தங்கினர். சுவாமிஜி
ரிஷிகேசத்தில் நோயுற்றதிலிருந்து இன்னும் பழைய
நிலைமைக்கு மீளவில்லை. அவருக்குத் தொடர்ந்த மருத்துவமும் நல்ல உணவும் தேவைப்பட்டன.
எனவே பதினைந்து நாட்கள் அங்கே தங்கிவிட்டு, யஜ்ஞேசுவர் பாபுவின் நண்பரான சேட்ஜி என்பவரின்
வீட்டில் தங்கினர்.
ஏற்கனவே
அங்கே தீர்த்த யாத்திரையாக வந்திருந்த அத்வைதானந்தர் அங்கே அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.ஸ்ரீராமகிருஷ்ணரின்
பல துறவிச் சீடர்கள் சேட்ஜியின் வீட்டில் தங்கி ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டபோது அந்த
இடம் மற்றொரு வராக நகர மடமாயிற்று. தியானம், ஜபம், பிரார்த்தனை, பஜனை, படிப்பு என்று
அவர்களின் நாட்கள் கழிந்தன. அவர்கள் தங்கள் உணவைத் தாங்களே சமைத்துக்கொண்டனர். மாலை
வேளையில் சிறிது தூரம்நடக்கவோ அல்லது பக்கத்திலுள்ள மைதானத்தில் போர் வீரர்களின் பயிற்சியையும்
விளையாட்டையும் காணவோ செய்தனர்.
தாயாகிச்
சமைத்தார்.
....-.............-...................-
ஒரு தாய்போல்
அங்கே அனைவருக்கும் சமையல் செய்து சுவாமிஜி பரிமாறியது பற்றி துரியானந்தர் கூறுவதைக்கேட்போம்.மீரட்டில்
நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன். என்றென்றும் நிரந்தரமாக என் மனத்தில் தங்கிவிட்ட
நிகழ்ச்சிஅது. அன்று அனைவருக்குமாகப் புலவு சமைத்தார் சுவாமிஜி. எங்களுக்கெல்லாம் பரிமாறினார்.
நன்றாக இருக்கிறது” என்று நாங்கள் கூறியதும் அனைத்தையும்
எங்களுக்கே பரிமாறிவிட்டார். அவர் ஒரு பிடி கூட வாயில் வைக்கவில்லை. நீங்களும் சாப்பிடுங்கள்” என்று அவரிடம் கூறியபோது அவர், இதெல்லாம் நான் வேண்டிய அளவு
சாப்பிட்டு விட்டேன். உங்களுக்குப் பரிமாறுவதில் என் மனம் ஆனந்தத்தால் பூரிக்கிறது.
ஒன்று விடாமல் அனைத்தையும் சாப்பிட்டு விடுங்கள்” என்றார். நிகழ்ச்சி சிறியது தான். ஆனால் ஒரு நாளும் அழியாமல்
என் நெஞ்சில் பதிந்து விட்டது. எத்தனை முயற்சிகள், எத்தனை அன்பு, எத்தனை கதைகள், எவ்வளவு
பயணம் எல்லாம் என் மனத் திரையில் ஆர்ப்பரிக்கின்றன
படிப்பதில்
அலாதியான ஆற்றல்
சேட்ஜியின்
வீட்டிற்கு அருகில் ஒரு நூல் நிலையம் இருந்தது. அங்கிருந்து சுவாமிஜிக்காக அகண்டானந்தர்
நூல்களை வாங்கி வருவது வழக்கம். ஒரு நாள் சுவாமிஜி சர் ஜான் லுப்பக்கின்(Sir John
Lubbock) இலக்கியத்தொகுதியை வாங்கி வரச்சொன்னார்.
அகண்டானந்தர் தினசரி ஒரு பகுதி கொண்டு வருவார்.
அதைப் படித்துவிட்டு
மறுநாளே அதைத் திருப்பிக்கொடுத்துவிடுவார் சவாமிஜி. நூலகருக்குச் சந்தேகம் எழுந்தது.
ஒரு பகுதியை ஒரே நாளில் படிப்பது என்பது சாத்தியமல்ல- சுவாமிஜி படிக்கிறாரா அல்லது
படிப்பது போல் நடிக்கிறாரா? ஒரு நாள் அவர் அகண்டானந்தரிடமே அதனைக்கேட்டார் நூலகர்.
இதைப்பற்றிக் கேள்விப்பட்ட சுவாமிஜி நேராகச்சென்று நூலகரைச் சந்தித்தார். தாம் படித்தது
மட்டுமல்ல, அந்த நூலிலிருந்து எந்தக்கேள்வியையும் எப்படி வேண்டுமானாலும் தம்மிடம் கேட்கலாம்
என்றும் அவரிடம் தெரிவித்தார்.
நூலகரும்
கேள்விமேல் கேள்வி கேட்டு சுவாமிஜியைச் சோதித்தார். தயக்கமில்லாமல் அனைத்து குள்விகளுக்கும்
பதில் அளித்தார் சுவாமிஜி. இது எவ்வாறு சாத்தியமாயிற்று என்று அகண்டானந்தர் பின்னர்
சுவாமிஜியைக்கேட்டார். அதற்கு சுவாமிஜி ” எதையும் நான் ஒவ்வொரு வார்த்தையாகப் படிப்பதில்லை,
ஒவ்வொரு வாக்கியமாக, சிலவேளைகளில் பத்திபத்தியாகப் படிப்பேன். அதனால் விரைவாகப் படிக்க
முடிகிறது. என்று கூறினார்.
இறைவனைத்தேடும்
வாழ்க்கை ஒரு கூரிய வாளின் முனைமீது நடப்பது போன்றது என்று கட உபநிஷதம் கூறுகிறது.
ஒவ்வொரு கணமும் கவனமாக இல்லாவிட்டால் பாதை தவறுவதற்கான எல்லா சாத்தியங்களும் இந்த வாழ்க்கையில்
உண்டு. சொந்தங்கள், பந்தங்கள், எல்லாம் இறை நெறியில் தடைகளாக இருப்பவை என்று அவற்றை
உதறிவிட்டு துறவை மேற் கொள்கிறான் மனிதன். ஆனால் அவனை அறியாமலேயே நண்பர்கள், சீடர்கள், சகோதரத்துறவியர், மடம் என்றெல்லாம்
புதிய பந்தங்களை உருவாக்கிக்கொள்கிறான். மிகவும் கவனமாக இல்லாவிட்டால் இந்தப் பந்தங்களும்
இறை வாழ்க்கையில் தடையாகவே அமையும். அத்தகைய ஒரு பந்தத்தில் சுவாமிஜி தம்மை இப்போது
கண்டார். சகோதரத் துறவியருடன் ஜபம், தியானம், என்று ஆன்மீக சாதனைகளில் தான் நாட்கள்
கழிந்தன. ஆனாலும் அவர்களுடன் வாழ்வது அவருக்கு ஒரு தளையாகவே பட்டது. ரிஷி கேசத்திலும்
இமயமலைகளிலும் கண்ட துறவியர் அவரது நெஞ்சத்தில் நிழலாடினர். எந்த விதத் தளைகளும் இல்லாமல்
முற்றிலும் சுதந்திரமாக அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை சுவாமிஜியைச் சிந்தனையில் ஆழ்த்தியது.
தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார் அவர்.
ஒரு நாள்
அகண்டானந்தரை அழைத்து, தாம் தனிமையில் செல்லவிருப்பதைத் தெரிவித்தார் சுவாமிஜி. அதற்கு
அகண்டானந்தர், மத்திய ஆசியப் பகுதிகளுக்குப்போக வேண்டும் என்ற எனது விருப்பத்தை ஒதுக்கி
வைத்துவிட்டு நான் இந்த யாத்திரையில் கலந்து கொண்டது உங்களுக்காகத்தான். இப்போது என்னை
விட்டுவிட்டுப்போவதாகச் சொல்கிறீர்களே! என்று கூறினார். அதற்கு சுவாமிஜி, சகோதரத் துறவியாக
இருந்தாலும் பந்தம் பந்தம் தான். ஆன்மீக வாழ்விற்கு அவர்களும் தடைகள் தான். நீயே பாரேன்.
டெஹ்ரியில் உனக்கு உடம்பு சரியில்லாமல் போனது.அப்போது என்னாலும் சாதனைகள் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது
அல்லவா! சகோதரத் துறவி என்ற மாயையையும் கடந்து போகாமல் தவ வாழ்வில் முழுமையாக ஈடுபட முடியாது. எப்போதெல்லாம்
நான் தவ வாழ்வில் ஈடுபடவேண்டும் என்று நினைக்கிறேனோ
அப்போதெல்லாம் குருதேவர் ஏதாவது தடைகளை என் வழியில் இடுவது போல் உள்ளது.
இப்போது நான் தனிமையில் போகிறேன். எங்கே போகிறேன், எங்கே தங்குவேன் என்பதையெல்லாம் யாருக்கும் சொல்லமாட்டேன்.
என்றார் சுவாமிஜி. அதற்கு அகண்டானந்தர்,, நீங்கள்
பாதாளத்திற்குப்போனாலும் நான் தேடிக்கண்டு பிடித்துவிடுவேன்” என்றார். மௌனமாகச் சிரித்தார் சுவாமிஜி.
கூறியது
போலவே ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் மீரட்டிலிருந்து தனிமையில் புறப்பட்டார் சுவாமிஜி.
அது ஜனவரி 1891.
...............................................................................
14-ராஜபுதனத்தில்
..
மீரட்டிலிருந்து டில்லி சென்றார் சுவாமிஜி. அங்கு
சேட்சியாமள் தாஸ் என்பவரின் வீட்டில் தங்கினார். பல காலமாக மன்னர் பரம்பரைகளுக்குத்
தலைநகராக விளங்கியது டில்லி. டில்லியின் ஒவ்வொரு பகுதியும் வரலாற்றுடன் இணைந்தது. கலாச்சார
சிறப்பு மிக்கது. சுவாமிஜி வரலாற்றில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். இந்திய மற்றும் உலக
வரலாற்றை ஆழ்ந்து கற்றவர். எனவே டில்லியை அவரால் ரசித்து மகிழ முடிந்தது. அரண்மனைகள்,
மசூதிகள், கல்லறை மாளிகைகள் என்று பல இடங்களையும்
பார்த்தார். வரலாற்றுக்கும் முற்பட்ட மகா பாரத காலத்திலிருந்து டில்லியை அரசாண்ட பல
பரம்பரைகளின் வரலாற்றுச் சின்னங்களைக்கண்டார். சுமார் பத்து நாட்கள் இவ்வாறு சுவாமிஜி
டில்லியைச் சுற்றிப்பார்த்தார். திடீரென்று ஒரு நாள் அவர் தமது சகோதரத் துறவியரைச்
சந்திக்க நேர்ந்தது. அது ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி.
மீரட்டில்
சகோதரத் துறவியரைப் பிரியுமுன், யாரும் தம்மைப் பின் தொடரக் கூடாது என்று மிகவும் கண்டிப்பாக சுவாமிஜி கூறியிருந்தார். அவர்களை மீண்டும் டில்லியில்
பார்த்த போது அவர்கள் தம்மைத் தொடர்ந்து வருகிறார்கள் என்றே அவர் நினைத்தார். சுவாமிஜியைச்
சந்தித்தது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தாலும் சுவாமிஜிக்கு அது பிடிக்கவில்லை.
என்னைத் தொடரக் கூடாது என்று உங்களிடம் சொல்லியிருந்தேன். எனக்கென்று வேலை உள்ளது.
எனவே என்னைத் தொடராதீர்கள். இது வேண்டுகோளல்ல. கட்டளை, எனது பழைய தொடர்புகளை எல்லாம்
நான் துண்டித்துவிடப்போகிறேன், என் ஆன்மா என்னை எங்கே வழிநடத்துகிறதோ அங்கே நான் போவேன்.
அது வனமாக இருக்கலாம், பாலைவனமாக இருக்கலாம்,
மலையாக இருக்கலாம், மக்கள் வாழும் நாடாக இருக்கலாம். எதைப் பற்றியும் கவலையின்றி நான்
போகிறேன்” என்று அவர் களிடம் கண்டிப்புடன் கூறினார்.
சுவாமிஜியின்
கண்டிப்பும் சங்கல்பமும் சகோதரத்துறவிகளுக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தன. ஏனெனில்
அவர்கள் வேண்டுமென்றே அவரைப் பின் தொடரவில்லை.அது ஓர் எதேச்சையான சந்திப்பு, அவ்வளவு
தான். நடந்தது இது. தம்மை யாரும் அடையாளம் கண்டு கொள்ளா திருப்பதற்காக அங்கங்கே பெயரை மாற்றியபடி சஞ்சரித்தார் சுவாமிஜி.
டில்லியில் அவரது பெயர் விவிதிஷானந்தர் என்பதாக இருந்தது. சகோதரத் துறவியர் தங்கள்
போக்கில் டில்லிக்கு வந்தபோது விவிதிஷானந்தர் என்ற ஆங்கிலம் பேசும் துறவியைப் பற்றி
கேள்விப்பட்டனர். அவரைச் சந்திக்க வந்தனர். அது சுவாமிஜியாக இருக்கும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு நிகழ்ந்தது
அந்தச் சந்திப்பு.
சுவாமிஜியின்
விருப்பப்படியே அவரைத் தனியாக விட்டுவிட்டனர். சகோதரத் துறவியர். அதன் பிறகும் சில
நாட்கள் சுவாமிஜி டில்லியிலேயே தங்கினார்.
தனித்தனியாகத் தங்கினாலும் உணவு வேளையில் அனைவரும் சேட்டின் வீட்டில் சந்தித்தனர்.
சில நாட்களுக்குப் பின்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
சுவாமிஜி ராஜபுதனத்தை நோக்கிச்சென்றார்.
தனிமையில்
மூழ்கியவராக தன்னந்தனியே சஞ்சரித்தார் சுவாமிஜி. தனிமைத் துறவியின் வாழ்க்கை முறையை
விவரிக்கின்ற தம்ம பதத்தின் வரிகள் அவரது மனத்தில் எழுந்தன.(தம்ம பதம்-பௌத்த சமய நூல்)
ஆல்வாரில்
ராஜபுதனம்
என்றாலே நினைவிற்கு வருவது வீரமும் சாகசமும் தியாகமும் செறிந்த வரலாறுகள். ராஜபுதனம்
என்ற பெயரே இந்திய மனங்களை வீறு கொண்டு எழுச் செய்யும். இந்திய வரலாற்றின் ஒரு சுருக்கத்தை
அங்கே காண முடியும். அந்த வரலாற்றுப் பின்னணியுடன் ராஜபுதனத்தைச் சூழ்ந்து நின்ற மலைத்தொடர்களும்
தொலைதூரத்தில் தெரிந்த மலைச் சிகரங்களும், பளிங்குக்கல் அரண்மனைகளும் சேர்ந்து ஓர்
அற்புதக் காட்சியை சுவாமிஜியின் கண்களில் விரித்தன.
1891 பிப்ரவரியில்
ஆல்வார் ரயில் நிலையத்தில் இறங்கினார் சுவாமிஜி. அங்கிருந்து கால்போன திசையில் மெதுவாக
நடக்கலானார். இரு பக்கங்களிலும் பூத்துக் குலுங்கிய மலர்ச்சோலைகள், பரந்து விரிந்த
வயல்வெளிகள், வரிசை வரிசையாய் வீடுகள் என்று
மாறிமாறி வந்த அழகிய காட்சிகளில் உள்ளத்தைப் பறிகொடுத்தவாறு நடந்து அரசு மருத்துவமனையை
அடைந்தார். அங்குள்ள டாக்டரான குரு சரண்லஸ்கர் வெளியே நின்றிருந்தார். சுவாமிஜியின்
தோற்றம் அவரை மிகவும் கவர்ந்தது. சுவாமிஜி நேராக அவரிடம் சென்று, துறவிகள் தங்குவதற்கு
இங்கு ஏதாவது இடம் இருக்கிறதா? என்று கேட்டார். குரு சரண் அவரை அங்குள்ள கடைத்தெரு
ஒன்றிற்கு அழைத்துச்சென்றார். ஒரு கடையின் மாடியில் துறவிகள் தங்குவதற்கென்று ஓர் அறை இருந்தது. அதனை
சுவாமிஜிக்குக்காட்டி , அங்கே அவரைத் தங்க ச்செய்து வேண்டிய வசதிகளைச்செய்து கொடுத்தார்.
பாட்டியின்
பரிவு
சுவாமிஜியிடம் அறிமுகக் கடிதங்கள் எதுவும் இல்லை. எனவே உணவிற்கோ
தங்கவோ வேறு ஏற்பாடுகள் இல்லை. அப்போது அந்தக் கடைக்கு அருகில் வாழ்ந்த முதிய பெண்மணி
ஒருத்தி சுவாமிஜியிடம் ஈடுபாடு கொண்டாள். அவள் அவரை ”லாலா” (குழந்தாய்) என்று அன்புடன் அழைப்பாள். தன் கையாலேயே சப்பாத்தி
செய்து தினமும் கொண்டுவந்து சுவாமிஜிக்கு ஊட்டுவாள். சிலவேளைகளில் ராமஸ்னேஹி என்ற வைணவத்
துறவியும் சுவாமிஜியுமாகப் பிச்சைக்குச் செல்வார்கள். கோதுஐம மாவு பெற்று வருவார்கள்.
ராமஸ்னேஹி சப்பாத்தி செய்வார். இருவருமாகச் சாப்பிடுவார்கள். இவ்வாறு சுவாமிஜியின்
நாட்கள் கழிந்தன.
பரவச நிலைகளில்
சுவாமிஜியை
ஆரம்பத்தில் அங்கே பெரிதாக மக்கள் அறியவில்லை. பின்னர் படிப்படியாகக் கூட்டம் வரத்தொடங்கியது.
காலை மாலை வேளைகளில் சுவாமிஜி பாடுவார். அதைக்கேட்கவே கூட்டம் திரளும். ஒரு நாள் அவர்களில்
ஒருவர், சுவாமிஜி, நீங்கள் எந்த ஜாதியைச்சேர்ந்தவர்? என்று கேட்டார். ”காயஸ்தர்” என்றார் சுவாமிஜி.
மற்றொருவர் நீங்கள் ஏன் காவி அணிந்துள்ளீர்கள்? என்று கேட்டார். ஏனெனில் அது
பிச்சைக்காரர்களின் உடை” என்றார்.
இந்த நாட்களில்
சுவாமிஜி தேவியின் நினைவுகளில் ஆழ்ந்தவராக இருந்தார். பல நேரங்களில் அவர் தேவியுடன்
மிக நெருங்கிய தொடர்பு கொள்வதைக்காண முடிந்தது. அம்மா, அம்மா என்ற வார்த்தைகளைத் தவிர
வேறு எதுவும் அவரது வாயிலிருந்து வருவதில்லை.
மூடிய கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது. பொதுவாக அவர் இத்தகைய பரவசநிலைகளிலேயே
இருந்தார். அவர் பேசினார், வேத உபநிஷதங்களிலிருந்து மந்திரங்களை ஓதினார். கண்களில்
நீர் வழிய கிருஷ்ணனைப் பற்றியும் தேவியைப்பற்றியும் உணர்ச்சிப்பெருக்குடன் பாடினார்.
அங்கே கூடியிருந்தோர் பக்திப் பேருணர்வில் திளைத்து தங்களை மறந்தனர்.
குரு கரண்
மூலமாக சுவாமிஜியைப்பற்றி கேள்விப்பட்ட மௌல்வி ( இஸ்லாமிய அறிஞர்) ஒருவர் சுவாமிஜியிடம்
மிகவும் கவரப்பட்டார். அவர் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் உருதும் பாரசீகமும் கற்பிக்கின்ற
ஆசிரியர். அடிக்கடி இருவரும் சுவாமிஜியைச் சென்று கண்டு அவருடன் பேசினர். குரானில்
சுவாமிஜிக்கு இருந்த ஆழ்ந்த புலமை அப்போது வெளிப்பட்டது.
சுவாமிஜியைப்
பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டனர். ஜாதி மத வேற்றுமையின்றி இந்துக்களில் பல
பிரிவினரும் முஸ்லிம்களில் பல பிரிவினரும் வந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே
ஆல்வார் அரசின் ஓய்வுபெற்ற எஞ்ஜினியரான பண்டிட் சம்புநாத் என்பவரின் வீட்டில் சுவாமிஜி
தங்குவதற்கு ஏற்பாடு ஆகியது.
ஒரு நாளாவது சுவாமிஜியை அழைத்துச்சென்று தமது வீட்டில்
விருந்தளிக்க வேண்டும் என்ற ஆசை மௌல்வியின் மனத்தில் எழுந்தது. சம்புநாத் ஆசாரமிக்க
பிராமணர். அவரது வீட்டில் சுவாமிஜி தங்கியிருப்பதால் அவரது அனுமதி தேவை என்று எண்ணிய
மௌல்வி சம்புநாத்தை அணுகி, நீங்கள் இதற்கு அனுமதிக்க வேண்டும். ஆசாரமிக்க பிராமணர்களைக்கொண்டு
சமையல் செய்கிறேன், நாற்காலி போன்றவற்றை பிராமணர்களைக்கொண்டே சுத்தம் செய்கிறேன். பிராமணர்களின்
வீடுகளிலிருந்து பாத்திரங்களைக்கொண்டு வரச்செய்து பரிமாறுகிறேன். எந்த ஆசாரத்திற்கும்
இடையூறு நேராதபடி பார்த்துக்கொள்கிறேன். என்றெல்லாம் உணர்ச்சியுடன் கூறினார். மௌல்வியின்
பக்தியைக் கண்டு நெகிழ்ந்து போன சம்புநாத், நீங்கள் அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் செய்யவேண்டாம்.
உங்கள் பக்தி ஒன்றே போதும். உங்கள் வீட்டில் உணவருந்த நானே தயாராக இருக்கிறேன், சுவாமிஜி
ஒரு முக்த புருஷர். அவரைப்பற்றி என்ன சொல்ல இருக்கிறது. அவர் எங்கு வேண்டுமானாலும்
சாப்பிடலாம், என்று கூறினார்.
ஆல்வாரில்
பிச்சையெடுப்பது
ஏன்?
ஆல்வார்
நாட்டு திவானான மேஜர் ராம்சந்திரர் சுவாமிஜியைப்பற்றி கேள்விப்பட்டு, தமது வீட்டிற்கு
அழைத்தார். அந்நாட்டு மன்னரான மங்கள் சிங் ஆங்கில மோகம் கொண்டவராக இருந்தார். சிந்தனை,
செயல், அனைத்திலும் ஆங்கிலேயே பாணியைப் பின்பற்றுவதில் நாட்டம் கொண்டிருந்தார். திவானுக்கு அது பிடிக்கவில்லை.
மன்னர் சுவாமிஜியைச்சந்தித்தால் நல்லது என்று எண்ணினார் திவான். எனவே அவருக்கு , ஆங்கிலத்தில் அபார அறிவு கொண்ட ஒரு பெரிய சாது இங்கே உள்ளார்.
என்று எழுதினார்.
மன்னர் மறுநாளே
திவானின் வீட்டிற்கு வந்து சுவாமிஜியைச் சந்தித்தார்.
மன்னர் வந்து
சுவாமிஜியை வணங்கி அமர்ந்து பேச்சைத்தொடங்கினார்.
மன்னர்-சுவாமிஜி
, நீங்கள் மிகவும் படித்தவர் என்று கேள்விப்பட்டேன். உங்கள் படிப்பிற்கு நீங்கள் கை
நிறைய சம்பாதிக்கலாமே! ஏன் இப்படி பிச்சையெடுத்துத் திரிகிறீர்கள்.?
சுவாமிஜி- மகாராஜா, நாட்டிற்கு ச் செய்ய வேண்டிய கடமைகள் உங்களுக்கு
எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை விட்டுவிட்டு நீங்கள் ஏன் வேட்டை அது இதென்று ஆங்கிலேயர்களுடன்
நேரத்தைச்செலவிடுகிறீர்கள்?
சிறிதும்
தயக்கமின்றி வந்த சுவாமிஜியின் கேள்வி அங்கிருந்தோர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மன்னர் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.
மன்னர்-ஏன்
என்பதற்கு குறிப்பாக எந்தக் காரணத்தையும் சொல்லமுடியாது .எனக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது.
சுவாமிஜி-
அது போல் தான், எனக்கு இது பிடித்திருக்கிறது. நான் பிச்சையெடுத்துச் சாப்பிடுகிறேன்.
சிறிது நேரத்திற்குப்
பிறகு மன்னர். சுவாமிஜி எனக்கு உருவ வழிபாட்டில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என் கதி
என்னவாகும்.? என்று கேட்டார். இதைக்கேட்கும் போது அவர் சற்று சிரித்த முகத்துடன் கேலி
செய்வது போன்ற தொனியில் கேட்டார். அவர் கேட்டவிதம்
சுவாமிஜிக்கு எரிச்சலை மூட்டியது.
சுவாமிஜி-
நீங்கள் கேலி செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
மன்னர்-இல்லை,
சுவாமிஜி எல்லோரையும் போல் ஏனோ என்னால் இந்த மண்ணையும் மரத்தையும் கல்லையும் கட்டையையும்
வழிபட முடியவில்லை. மறு உலகத்தில் துன்பப்படுவது தான் என் தலை விதியா?
சுவாமிஜி-
நல்லது, ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப வாழவேண்டும்.அது தான் நல்லது.
இந்தப் பதிலை
அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. சுவாமிஜி உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்பவர்
. அவர் மன்னருக்கு த் தகுந்த விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து
போனார்கள். ஆனால் சுவாமிஜி தமது பதிலைக்கூறிவிட்டு அந்த அறையைச்சுற்றிப்பார்த்தார்.
அங்கே தொங்கிக்கொண்டிருந்த ஒரு படம் அவரது கருத்தைக் கவர்ந்தது. உடனே அதனைக்கொண்டு
வருமாறு கூறினார்.
சுவாமிஜி-
இந்தப் படத்தில் இருப்பது யார்?
திவான்-
அது மன்னரின்படம்.
சுவாமிஜி
திவானிடம் அடுத்ததாகக் கூறியது அனைவரையும் அதிர்ச்சியால் உறைய வைத்தது.
சுவாமிஜி-
திவான்ஜி, இந்தப் படத்தின் மீது துப்புங்கள்.
அனைவரும்
அதிர்ச்சியில் அசைவற்று நின்றனர். சுவாமிஜி அதைக் கண்டு கொள்ளாமல் ”துப்புங்கள் திவான்” என்று மீண்டும் திவானிடம் கூறினார். திவான் அசையவில்லை. உடனே
சுவாமிஜி அங்கிருந்த மற்றவர்களைப் பார்த்து, திவான் இல்லாவிட்டால் இங்கே இருக்கின்ற
வேறு யாராவது முன் வாருங்கள். இந்தப் படத்தில் அப்படி என்னதான் உள்ளது? வெறும் காகிதம்
தானே! இதன் மீது துப்புவதற்கு ஏன் தயங்குகிறீர்கள்? என்று கேட்டார்.
அங்கிருந்த மற்றவர்களும் சுவாமிஜி கூறியதைச்செய்யமுன்வரவில்லை.
அனைவரும் சுவாமிஜியையும் மன்னரையும் மாறிமாறி பார்த்தபடி திகைத்து நின்றனர். அப்போது
சுவாமிஜி மீண்டும் திவானிடம், என்ன, அப்படியே
நிற்கிறீர்களே! இந்தப் படத்தின் மீது துப்புங்கள், என்று அழுத்த மாகக்கூறினார். அதன்
பிறகும் திவானால் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. பதைபதைத்தவாறே நடுங்கிய குரலில்,
சுவாமிஜி, என்ன சொல்கிறீர்கள்? சொல்வதைப் புரிந்து கொண்டு தானா சொல்கிறீர்கள்? இது மன்னரின் படம். இதன் மீது
என்னால் எப்படி துப்ப முடியும்? என்று கேட்டார்.
சுவாமிஜி-
இருக்கட்டுமே, மன்னரின் படம்தானே, மன்னர் அல்லவே! இந்தப் படத்தில் மன்னர் உயிருணர்வுடன்
இல்லையே! இது வெறும் ஒரு காகித த் துண்டு. மன்னரின் எலும்போசதையோ ரத்தமோ இதில் இல்லை.இது
பேசுவதில்லை, நடப்பதில்லை, மன்னர் செய்வது போல் எதையும் செய்வதில்லை. இருந்தாலும் இதன் மீது துப்ப யாரும் முன்வர மறுக்கிறீர்கள்?
ஏன்? ஏனெனில் இந்தப் படத்தில் மன்னரின் பிரதிபிம்பத்தை நீங்கள் காண்கிறீர்கள். இதன்மீது
துப்பினால் மன்னரையே அவமதிப்பதாக உணர்கிறீர்கள்.
இதனைக் கூறிவிட்டு
சுவாமிஜி மன்னரைப் பார்த்து தமது பேச்சைத் தொடர்ந்தார். பாருங்கள், மகாராஜா, இந்தப்
படம் நீங்கள் அல்ல, ஆனால் ஒரு விதத்தில் இது
நீங்களே. அதனால் தான் இதன்மீது துப்புமாறு சொன்னபோது உங்களிடம் பக்தி கொண்ட உங்கள்
சேவகர்கள் மறுத்துவிட்டார்கள். இது உங்கள் பிரதிபிம்பம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது நீங்களே அவர்களின் நினைவிற்கு வருகிறீர்கள். அதனால்
தான் உங்களுக்கு கொடுக்கின்ற மரியாதையை அவர்கள் இந்தப் படத்திற்குக் கொடுக்கிறார்கள். கல்லிலும் மண்ணிலும்
மரத்திலும் செய்யப்பட்ட தெய்வ வடிவங்களை வழிபடுகின்ற
பக்தர்களின் விஷயமும் இது தான். அவர்கள் வழிபடுகின்ற
உருவம் அவர்களுக்கு அந்தப் பரம்பொருளை நினைவுபடுத்துகிறது. எத்தனையோ இடங்களில் நான்
யாத்திரை செய்துள்ளேன், எந்த இந்துவும், ஓ கல்லே உன்னை வணங்குகிறேன், ஓ மண்ணே எனக்கு
அருள் செய், என்றுவழிபடுவதை நான் காணவில்லை. மகாராஜா! எங்கும் நிறைந்த , பேரானந்த வடிவான
முழுமுதற் கடவுளையே ஒவ்வொருவரும் வழிபடுகின்றனர். கடவுளும் அவர்களின் பக்குவத்திற்கு
ஏற்ப ஒவ்வொரு வருக்கும் அருள் புரிகிறார்.
உருவ வழிபாடு பற்றிய இந்த அற்புதமான செயல் முறை விளக்கம்
மன்னரின் அகக் கண்களைத் திறந்தது. கூப்பிய கைகளுடன் அவர் சுவாமிஜியிடம், நீங்கள் என்
கண்களைத் திறந்து விட்டீர்கள்.- சுவாமிஜி, இதற்கு முன்பு இத்தகைய விளக்கத்தை நான் கேட்டதில்லை.அறியாமையில்
மூழ்கியவனாக இருந்துவிட்டேன், என் கதி என்னவாகும்? என் மீது கருணை காட்டுங்கள், என்று
பணிவுடன் கேட்டார். அதற்கு சுவாமிஜி, மகாராஜா! கடவுளைத் தவிர யாரும் யாரிடமும் கருணைக்
காட்ட வல்லவர்கள் அல்ல, அவர் கருணையே வடிவானவர், அவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
அவர் உங்கள் மீது கருணை காட்டுவார், என்றார்.
ஏழைகளை அனுமதிக்கவேண்டும்.
சிறிது நேரத்தில்
சுவாமிஜி விடைபெற்றார். சுவாமிஜி சென்ற பிறகும் மன்னர் ஆழ்ந்த சிந்தனை வசப்பட்டவராக
சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார். பிறகு, திவானிடம், திவான்ஜி இத்தகைய ஒரு
மகானை இது வரை நான் சந்தித்ததில்லை. எப்படியாவது முயற்சி செய்து சிறிது காலம் அவரை
இங்கே தங்குமாறு செய்யுங்கள்” என்று கூறினார். அதற்கு, திவான்,
என்னால் இயன்றவரை முயற்சி செய்கிறேன். வெற்றி பெறுவேனா என்பது நிச்சயமில்லை.ஏனெனில்
அவர் உத்வேகம் நிறைந்தவர். கூடவே சுதந்திரப்போக்கு க் கொண்டவராக உள்ளார், என்றார்.
பிறகு திவான் சுவாமிஜியைச் சந்தித்து மன்னரின் வேண்டுகோளைக்கூறி னார். முதலில் மறுத்தார் சுவாமிஜி. கடைசியில், எந்த
நேரம் வேண்டுமானாலும் ஏழைகளும் சாதாரணமக்களும் தம்மைச் சந்திப்பதற்கு அனுமதித்தால் தாம் அந்த மாளிகையில் தங்குவதாகக்
கூறினார்.
சுய முயற்சி
உடையவனையே கடவுளும் விரும்புவார்.
இங்கே சுவாமிஜியின்
தொடர்பால் தங்கள் வாழ்க்கை மாறி அமையப்பெற்றவர்கள் பலர், எத்தனையோ பேர் அவரை வழிகாட்டியாகக்கொண்டனர். பலர் அவரிடம்
செல்வதைக் கண்ட ஒரு முதியவரும் சென்று தமக்கு வழிகாட்டுமாறு கேட்டுக்கொண்டார். சுவாமிஜி
சில அறிவுரைகளைக்கூறி அதன்படி நடக்குமாறு சொன்னார். ஆனால் அந்த முதியவர் அவர் சொன்ன
எதையும் செய்யாமல் மீண்டும் மீண்டும் வந்து தமக்கு வழிகாட்டுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
பல நாள்
பொறுத்துப்பார்த்தார். சுவாமிஜி. அந்த முதியவர் உருப்படியாக எதையும் செய்வதாக இல்லை.
எனவே அவர் ஒரு நாள் அவர் வந்தபோது அவரைக் கண்டு கொள்ளாமல் உட்கார்ந்திருந்தார். அவர்
கேட்ட எந்தக்கேள்விக்கும் பதில் சொல்லவோ அவரிடம் பேசவோ இல்லை. சுமார் ஒன்றரை மணிநேரம்
இவ்வாறு கடந்தது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. சுவாமிஜி ஒரு சிலைபோல் அமர்ந்திருந்தார்.
முற்றிலுமாக ஆத்திரமடைந்த அந்த முதியவர், இனி சத்தியமாக இந்த சுவாமிஜியிடம் வரமாட்டேன்” என்று ஓங்கிய குரலில் கூறிவிட்டு வெளியேறினார். அவர் வெளியே சென்றதும் சுவாமிஜி விழுந்து விழுந்து சிரித்தார்.
ஓர் இளைஞர் அதற்கான காரணத்தைக்கேட்ட போது சுவாமிஜி மென்மையாகக்கூறினார்.
சகோதரர்களே,
நான் உங்களுக்காக என் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். ஏனெனில் நான் சொல்வதன்படி
நடக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். அதற்கான ஆற்றலும் உங்களிடம் உள்ளது. இந்த முதியவரோ
புலனின்பங்களின் பின்னாலேயே ஓடி தனது வாழ்க்கையில் தொண்ணூறு சதவீதத்தைத் தொலைத்துவிட்டவர்.
இவர் ஆன்மீக வாழ்க்கைக்கு ம் தகுதியற்றவர், உலகியல் வாழ்க்கைக்கும் தகுதியற்றவர். வழிகாட்டுங்கள்,
கருணை காட்டுங்கள், என்றெல்லாம் கேட்பதால்
மட்டும் எல்லாவற்றையும் அடைந்து விடலாம் என்று நினைக்கிறார் இவர். அது முடியுமா? கடவுளை
அடைய வேண்டுமானால் சுய முயற்சி வேண்டும். எதையும் செய்யாமல் சோம்பி இருப்பவனிடம் கடவுள்
கருணை காட்டுவாரா என்ன? ஆண்மையற்றவனே சோம்பி இருப்பான். வீரர்களில் சிறந்தவரான அர்ஜீனன்
இவ்வாறு ஆண்மையை இழந்த நிலைக்கு வந்தபோது தான் ஸ்ரீகிருஷ்ணர் அவனுக்கு கீதையைப்போதித்தார்.
பலனில் பற்று வைக்காமல் கடமைமூலமாகவே அவன் மேல் நிலைகளை அடைய, மனத்தூய்மை பெற, இறைவனைச் சரணடைந்து வாழ வழிகாட்டினார்.
எனவே ஆண்மையுடன் இருங்கள், வீரர்களாக இருங்கள். ஆண்மையும் துணிவும் கொண்டவன் தீயவனாக
இருந்தாலும் அவனை நான் மதிப்பேன். ஏனெனில் அவனது துணிவே, அவன் ஒரு நாள் தீமையை விட்டுவிட்டு
நல்ல வழியில் செல்லுமாறு தூண்டிவிடும், சுயநலத்தை விடச்செய்யும், கடைசியில் அவனை இறைவனிடம்
சேர்க்கும்..
இந்திய வரலாற்றை
இந்தியர்களே எழுத வேண்டும்.
ஆல்வாரில்
சுவாமிஜி சிலருக்கு மந்திர தீட்சை அளித்தார். ஜபம், மற்றும் பிராணாயாமம் செய்ய கற்றுத்தந்தார்.
சிவ பூஜை செய்யக் கற்றுக்கொடுத்தார். பலசாலியாக, ஆண்மை மிக்கவர்களாக அவர்கள் திகழவேண்டும்
என்று போதித்தார். மேலும் அவரது அறிவுரையால் பலர் மேலைக் கல்விகளை விடாமல் சம்ஸ்கிருதக்
கல்வியையும் ஏற்றுக் கொண்டனர். சம்ஸ்கிருதக் கல்வியை சுவாமிஜி மிகவும் வற்புறுத்தினார்.
அவரது அறிவுரையின் படி ஆல்வார் இளைஞர்கள் பலர் சம்ஸ்கிருதம் கற்கத் தொடங்கினர்.
சம்ஸ்கிருதத்தை
ஏன் கற்க வேண்டும்? சுவாமிஜி கூறினார்.
சம்ஸ்கிருதம்
படியுங்கள். ஆனால் கூடவே மேலை நாட்டு விஞ்ஞானத்தையும் படியுங்கள். எதையும் துல்லியமாக
அறிவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். எதற்குத்தெரியுமா? காலம் வரும்போது நமது வரலாற்றை
ஒரு விஞ்ஞான அடிப்படையில் உங்களால் எழுத முடியும். இப்போது ள்ள இந்திய வரலாறு சரியானதாக
இல்லை. காலக்கிரமப்படி எதுவும் தரப்படவில்லை. நமது வரலாற்றை எழுதியவர்கள் ஆங்கிலேயர்கள்,
அவர்கள் எழுதியதைப் படிப்பதால் வருவது பலவீனம் மட்டுமே. ஏனெனில் அவர்கள் நமது வீழ்ச்சியைப்
பற்றி மட்டுமே எழுதியுள்ளார்கள். நமது பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம்,
மதம், தத்துவம் என்று நம்மைப்பற்றி எதுவுமே
அறியாத அவர்கள் எப்படி நமது வரலாற்றைச்சரியாக எழுத முடியும்? ஆனால் ஒன்று, கடந்த
கால வரலாற்றை எப்படி ஆராய்வது என்பதை அவர்கள் காட்டியுள்ளார்கள். அந்த வழியைப்பின்பற்றிநாம்
சுதந்திரமாக நமது வரலாற்றை ஆராய வேண்டும். வேதங்களையும் புராணங்களையும் பழையசாஸ்திரங்களையும்
படிக்க வேண்டும். அவற்றை ஆதாரமாகக்கொண்டு துல்லியமான, உத்வேகம் தருகின்ற வரலாற்றை எழுத
வேண்டும். இந்தியர்களே இந்திய வரலாற்றை எழுதவேண்டும்.
மறைந்து போன மறைக்கப் பட்ட நமது பண்டைய பொக்கிஷங்களை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சியில்
ஈடுபடுங்கள். குழந்தையைத்தொலைத்தவன்் அதைக் கண்டடையும்வரை எவ்வாறு ஓய்ந்திருக்கமாட்டானோ,
அது போல், பெருமை மிக்க நமத கடந்த காலத்தை இந்தியர்கள் ஒவ்வொருவரின் மனத்திலும் பதிக்கும்வரை
ஓயாதீர்கள். உண்மையான தேசியக்கல்வி இதுவே. இந்த தேசியக்கல்வி பரவும் அளவுக்கு உண்மையான
தேசிய உணர்வு விழித்தெழும்.
ஜாதிச் சடங்குகள்
சுவாமிஜியை
வந்து சந்தித்தவர்களில் ஒரு பிராமணச் சிறுவனும் இருந்தான். சுவாமிஜியிடம ஆழ்ந்தபக்தி
கொண்டிருந்தான் அவன். உபநயனத்திற்கான வயது வந்தும் வசதியின்மை காரணமாக அவனுக்கு உபநயனச்சடங்குகள்
நடைபெறவில்லை. இதை அறிந்த சுவாமிஜி அங்கு வருகின்ற அன்பர்களுள் சற்று வசதி படைத்த ஒருவரிடம்
இது பற்றி பேசினார். இந்தச் சிறுவனுக்கு உரிய வயது வந்தும் உபநயனச் சடங்குகள் நடைபெறவில்லை. அதற்குரிய வசதி இல்லை. அவனுக்கு
உதவ வேண்டியது இல்லத்தார்களாகிய உங்கள் கடமை. அவன் பிராமணச் சிறுவன். ஜாதிக்குரிய சடங்குகளைச்செய்யாமலிருப்பது
சரியல்ல. அவனது உபநயனச் சடங்கைச்செய்வதுடன் அவனது கல்விக்கு வேண்டிய ஏற்பாடுகளையும்
நீங்கள் செய்தால் நான் மிகவும் மகிழ்வேன். ஆல்வாரிலிருந்து சென்ற பின்னரும் இதனை மறக்காமல் கடிதம் எழுதி, அந்தச் சிறுவனுக்கு
உதவி செய்யப்பட்டதை உறுதி செய்து கொண்டார்.
இங்கே மகான்கள்
யாராவது இருக்கிறார்களா? என்று ஒரு நாள் சுவாமிஜி பக்தர்களிடம் கேட்டார். முதியவரான
வைணவ பிரம்மசாரி ஒருவர் வாழ்ந்து வருவதாக அவர்கள் கூறினர். ஓரிரு பக்தர்களுடன் ஒரு
நாள் அவரைக்காணச்சென்றார் சுவாமிஜி. அந்த வைணவ வேதாந்தத் துறவிகளை வெறுப்பவர். எனவே
சுவாமிஜி அங்கே சென்றதும் அவர் துறவிகளை நிந்தித்து கடுமையாக ஏசத்தொடங்கினார்.சுவாமிஜி
அவர் கூறிய அனைத்தையும் பணிவுடன் பொறுத்துக்கொண்டார். அது மட்டுமின்றி, சுவாமி, உங்களிடமிருந்து
கடவுள் பற்றியும் ஆன்மீக வாழ்க்கைபற்றியும் அறிய வந்திருக்கிறேன். ஏதாவது உபதேசம் செய்யுங்கள்.
என்று கேட்டுக்கொள்ளவும் செய்தார். சுவாமிஜியின் பணிவையும் பக்தியையும் கண்ட அந்தப்
பிரம்மச்சாரி, போகட்டும், எனக்கு உங்கள் மீது வெறுப்போ கோபமோ இல்லை, நீங்கள் சாப்பிட
ஏதாவது கொண்டு வருகிறேன், இருங்கள் என்றார் .அதற்கு சுவாமிஜி, நீங்கள் சிரமப்பட வேண்டாம்.
நான் இப்போது தான் சாப்பிட்டு விட்டு வருகிறேன், என்றார். தமது வேண்டுகோளை சுவாமிஜி
நிராகரித்ததும் முதியவர் மீண்டும் பழைய நிலைமைக்குப்
போய்விட்டார். சொல்ல முடியாத ஆத்திரத்துடன், இங்கிருந்து போய்விடு, தொலைந்து போங்கள்
என்று கத்தினார். சுவாமிஜி பணிவுடன் அவரை வணங்கிவிட்டு வெளியே வந்தார். வெளியே வந்தது தான் தாமதம், அவ்வளவு நேரம் அடக்கி வைத்ததையெல்லாம் திறந்து விட்டது போல் குபீரென்று
சிரிக்கலானார். ஓ! என்னவோர் அற்புதமான மகானிடம் என்னைக் கூட்டி வந்தீர்கள்! என்று கூறிவிட்டு
மீண்டும் சிரித்தார். பக்தர்களும் சுவாமிஜியின் சிரிப்பில் கலந்து கொண்டனர்.
எண்ணெய்
ஏன்?
ஒரு நாள் சீடர் ஒருவர் சுவாமிஜியைத் தமது வீட்டில்
விருந்திற்காக அழைத்தார். சுவாமிஜி சென்றபோது அவர் குளிப்பதற்காக உடம்பில் எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார். சுவாமிஜி சென்றதும் அவரை
வரவேற்று , சுவாமிஜி குளிப்பதற்கு முன் எண்ணெய் தேய்த்துக் கொள்வதால் ஏதாவது நன்மை
உண்டா? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, ஆம், 50 கிராம் எண்ணெய் உடம்பில் தேய்த்தால்
250 கிராம் நெய்யை உண்பதற்குச்சமம். என்று
பதிலளித்தார்.
நேர்மையாக வாழ முடியுமா?
ஒரு முறை சுவாமிஜி தமது சீடர் ஒருவர் அழைத்ததன் பேரில்
அவரது வீட்டிற்குச் சென்றார். உணவிற்குப் பிறகு ஓய்வாக அமர்ந்திருந்தபோது அந்தச் சீடர்
சுவாமிஜியிடம், சுவாமிஜி உண்மை, தூய்மை, தன்னலமற்ற தொண்டு, நேர்மை, நாணயம் என்றெல்லாம் நீங்கள் போதிக்கிறீகள்.
வேலை செய்து பிழைக்கின்ற ஒருவன் இவற்றைப் பின்பற்ற முடியும் என்று எனக்குத்தோன்றவில்லை.
அதிலும் சுய தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பது என்பது
இந்த நாட்களில் சாத்தியமே இல்லை. உண்மையாக , நேர்மையாக தொழில் செய்து இந்த உலகில் வாழ
முடியுமா?
சுவாமிஜி
கூறினார், இதைப்பற்றி நான் மிகவும் ஆழ்ந்து சிந்தித்துள்ளேன். எனக்குக் கிடைத்த பதில்
என்ன வென்றால் நேர்மையாகச் சம்பாதிக்க ஒருவனும் விரும்பவில்லை என்பது தான். அது தான்
உண்மை. இதையெல்லாம் யார் சிந்திக்கிறார்கள்? இதைப்பற்றி சிந்திக்கக்கூட யாரும் விரும்பவில்லை.
இப்படி ஒரு பிரச்சனை இருப்பதாகவே யாரும் உணரவில்லை. இப்போதைய கல்வி முறையே இந்தச் சீர்கேட்டிற்குக்காரணம்.
விவசாயம்
ஒரு விஞ்ஞானமாக வேண்டும்.
விவசாயத்தைத்
தொழிலாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. என்று நான் கருதுகிறேன்.ஆனால் யாரிடமாவது இதைச்சொன்னால், நான் படித்தவன், நான் விவசாயம் செய்வதா? நாட்டிலுள்ள
ஒவ்வொருவனும் விவசாயி ஆவதா?ஏற்கனவே நாடு முழுவதும் விவசாயிகள் நிறைந்துள்ளனர். அதனால்
தான் நாடே இவ்வளவு தூரம் சீர்கெட்டுள்ளது. என்கிறான். ஆனால் இது ஒருபோதும் உண்மையல்ல. மகாபாரதத்தைப் படியுங்கள்.
ஜனகர் ஒரு கையால் ஏர் உழுதுகொண்டு மறு கையால் வேதங்களைப் படிப்பது பற்றி அதில் வருகிறது.
பண்டைய நமது முனிவர்கள் விவசாயிகளாக இருந்தார்கள்.
விவசாயம்
என்னும்போது இன்றைய நமது விவசாயிகள் செய்வது போன்ற பாமரத்தனமான விவசாயத் தொழிலை நான்
சொல்லவில்லை. அமெரிக்காவைப் பாருங்கள். விவசாயம் ஒன்றைப் பெருக்கியதன் மூலமே அவர்கள்
எவ்வளவு முன்னேறி விட்டார்கள்!அது போல் நாமும் விவசாயத்தை ஒரு விஞ்ஞானமாகக் கற்கவேண்டும்.
விஞ்ஞான அடிப்படையில் அதனை வளர்க்க வேண்டும்.
இன்றோஈ கிராமத்திலுள்ள
ஒருவன் இரண்டு ஆங்கில நூல்களைப் படித்துவிட்டால் போதும், பட்டணத்திற்கு ஓடுகிறான். கிராமத்தில் அவனுக்கு எவ்வளவோ நிலம்
இருக்கும், ஆனால் அவனுக்கு அது போதாது.. பட்டணத்தில் வேலைசெய்ய அவன் விரும்புகிறான்.
பட்டண வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கிறான். இதனால் தான் மற்ற இனங்களைப்போல் இந்துக்கள்
முன்னேறவில்லை.
மேலும் நம்
நாட்டில் இறப்பு விகிதம், அதிகம். நிலைமை இப்படியே தொடருமானால் மிகக்குறுகிய காலத்தில்
நமது நாடு அதோகதியில் ஆழ்ந்து விடும். இதற்கெல்லாம் முக்கியகாரணம் இங்கே தானிய விளைச்சல் போதுமானதாக
இல்லை. தானிய விளைச்சலுக்கு ஆதாரமான கிராமங்களில் வசிப்பவர்களும் ப் பட்டண மோகம்! விவசாயியின்
மகன் கொஞ்சம் படித்துவிட்டால் பரம்பரைத் தொழிலை விட்டு விடுகிறான். பட்டணத்திற்குப்
போய் வேலை பார்க்க ஆரம்பிக்கிறான்.
கிராமங்களில்
வாழ்வதால் ஆயுள் அதிகரிக்கிறது. நோய்நொடிகள் அங்கு மிகவும் குறைவு. படித்தவர்கள் சென்று
கிராமங்களில் வசிக்கத்தொடங்கினால் கிராமங்கள் முன்னேற வாய்ப்பு உண்டு. அங்கே விஞ்ஞான
முறைப்படி விவசாயம் செய்யப்படுமானால் விளைச்சல் பெருகும். இவ்வாறு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ஊட்ட முடியும். அவர்களின் அறிவுத்திறன் பெருகும்.
அவர்கள் நல்லவற்றை , உயர்ந்தவற்றைக் கற்றுக்கொள்வார்கள்.
நமது நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்றையும் அதனால் அடையலாம்.
சீடர்-நம்
நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்று என்று கூறினீர்களே, அது என்ன, சுவாமிஜி.
சுவாமிஜி-
வேறு என்ன? உயர்ந்த தாழ்ந்த ஜாதியினருக்கிடையே
ஒரு வித சகோதரத்துவம் உருவாகும் என்கிறேன்! உன்னைப் போல் படித்தவர்கள் கிராமங்களுக்குப்போய் விவசாயத்தை மேற்கொண்டு, கிராமத்தினருடன் வாழ்ந்து,
அவர்களை உங்கள் உறவினர்போல் கருதி, நட்புணர்ச்சியுடன் கலந்து பழகிப்பாருங்கள். அவர்கள்
உங்களுக்காகத் தங்கள் உயிரையும் தரத்தயாராக
இருப்பதைக் காண்பீர்கள். இன்று நாம் முக்கியமாகச்செய்ய வேண்டியது என்ன? பாமரர்களுக்கும்
கல்வி அளிப்பது, தாழ்ந்த ஜாதியினருக்கும் மிக உயர்ந்த உண்மைகளைப்போதிப்பது, அவர்களிடம்
அன்பும் இரக்கமும் காட்டுவது. இவை எல்லாம் நடக்கும்.
சீடர்-எப்படி
நடக்கும், சுவாமிஜி?
சுவாமிஜி-
ஏன்! கிராமத்தினருடன் சென்று பழகிப்பார். படித்தவர்களுடன் தொடர்பு வைக்க அவர்கள் எவ்வளவு
ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது அப்போது உனக்குத்தெரியும். அறிவுத்தாகம் அனைவரிடமும்
உள்ளது. படித்தவன் ஒருவன் கிராமத்திற்குப்போனால் கிராம மக்கள் அவனைச்சுற்றி அமர்ந்து
கொண்டு, அவன் சொல்வதை எவ்வளவு ஆர்வத்துடன் கேட்கிறார்கள்! கிராமத்தினரின் இந்த ஆர்வத்தை,
படித்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களை மாலைவேளைகளில் தங்கள் வீடுகளுக்கு அழைத்து, கதைகள் உவமைகள் போன்றவை மூலம்
அவர்களுக்குக் கல்வியளிக்க வேண்டும். இதனைத்தேசிய அளவில், ஒரு தேசிய இயக்கமாகச் செய்தோமானால்
மற்ற வழிகளில் ஆயிரம் வருடங்களில் பெறுவதை விட நூறு மடங்கு பலனைப் பத்து ஆண்டுகளிலேயே
நாம் சாதிக்க இயலும்.
பிரிய மாட்டோம்.
சுமார் ஏழு
வாரங்கள் ஆல்வாரில் கழித்துவிட்டு சுவாமிஜி அங்கிருந்து புறப்படத் தயாரானார். ஆனால்
சுவாமிஜியைப் பிரிய அங்குள்ள யாரும் தயாராக இல்லை. நான் போக வேண்டும். துறவி என்பவன்
தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கவேண்டும், என்று கூறிவிட்டு, மார்ச்-28 ஆம்நாள் அங்கிருந்து
புறப்பட்டார் சுவாமிஜி. கண்ணீருடன் ஒவ்வொருவராக அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கிய
போது சுவாமிஜியாலும், தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை. நெகிழ்ந்த மனத்துடன்
அவர்களை ஆசீர்வதித்தார். ஆனால் அவர்போய்த்தானே தீரவேண்டும். கற்பித்தவாறு, போதித்தவாறு
மனித குலத்திற்கு உதவியவாறு, இறைவனை இதயத்தில் தாங்கியவாறு போய்க்கொண்டே இருப்பது தானே
அவரது வேலை.
அன்பர்களில்
சிலர் பிடிவாதமாக சுவாமிஜியுடன் கொஞ்ச தூரமாவது செல்லும் நோக்கத்துடன் புறப்பட்டனர்.
சுவாமிஜி நடந்து செல்வதாகத்தான் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர்களின் வேண்டுகோளுக்குக்
கட்டுப்பட்டு, சுமார் பதினெட்டு மைல் தொலைவிலுள்ள பாண்டுபோல் என்ற ஊர்வரை மாட்டு வண்டியில்
செல்வதற்கு ஒத்துக்கொண்டார். அனைவருமாகப் புறப்பட்டனர்.
பிரசித்தி
பெற்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்று பாண்டு போலில் இருந்தது. அங்கே இரவைக் கழித்தார் சுவாமிஜி.
மறுநாள் அனைவருமாகச் சுமார் பதினாறு மைல் காட்டுப்பாதை வழியாக நடந்து சென்றனர். கொடிய
மிருகங்கள் வாழும் பகுதி அது. ஆனால் சுவாமிஜியுடன் சென்றவர்களுக்கு அதைப் பற்றிய கவலையே
இல்லை.ஏனெனில் சுவாமிஜியின் பேச்சு, கதைகள், நகைச்சுவைகள் ஒவ்வொன்றும் அவர்களை சூழ்நிலையையோ
காலத்தையோ நினைக்காதவாறு செய்திருந்தன. அனைவருமாக தஹ்லா கிராமத்தை அடைந்தனர். அங்கே
நீலகண்ட மகாதேவர் கோயிலில் இரவைக் கழித்தனர்.
நீலகண்டர்
விளக்கம்
சிவபெருமான்
எப்படி நீலகண்டர் ஆனார்? ஒரு கதை கூறப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்கடைந்தனர். அதிலிருந்து அழகிய யானை, குதிரை,
பெண்கள், நவரத்தினங்கள் என்று விலை மதிப்பற்ற பல பொருட்கள் தோன்றின. தேவர்களும் அசுரர்களும் தங்களால் இயன்றவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டார்கள்.
கடைசியாக
வந்தது ஆலகால விஷம். அதன் வெம்மை தாங்காமல் அனைவரும் தலைதெறிக்க ஓடினர். அந்த விஷம் உலகையே அழித்து விடும்போல் இருந்தது.
எனவே எல்லோருமாக மகாதேவனாகிய சிவபெருமானிடம் முறையிட்டார். பாற்கடலைக் கடைந்தபோது வந்த
எந்தச் செல்வத்தையும் பொருட்படுத்தாமல் தமக்குள் தாமாக தியானத்தில் ஆழ்ந்திருந்தார்
அவர். இப்போது அனைவரின் அழுகுரல் கேட்டு அவர்களின் உதவிக்கு விரைந்தார். தம் கைகளை
நீட்டி அந்த ஆலகால விஷத்தை உண்டு விட்டார். அது அவரது கழுத்தில் தங்கியதால் கழுத்து
நீலமாகியது.
சுவாமிஜி
இதற்கு அற்புதமானதொரு புதிய விளக்கம் அளித்தார். மனிதன் உலகில் வாழ்கிறான். அவன் உலக
வாழ்க்கை என்ற கடலைக் கடைகிறான். புலன்களுக்கு
இன்பம் தரக்கூடிய பல்வேறு பொருட்கள் அதிலிருந்து தோன்றுகின்றன. அவற்றை அனுபவிக்கிறான்.
ஆனால் இந்த அனுபவங்கள் எதிலும் நாட்டம் கொள்ளாமல் விலகி நிற்கிறான் துறவி. தனக்குள்
மூழ்கி , தன்னிலேயே இன்பம் காண்கின்ற அவன் மாயை தருகின்ற மனங்கவர் பொருட்கள் எதையும்
ஏற்றுக்கொள்வதில்லை. கடைசியாக வருகிறது மரணம் என்னும் விஷம். அதைக்கண்டு அஞ்சி நடுங்கி
ஓடி தன்னிடம் வந்து புகலடைபவர்களை, மகா தேவனைப்போல அவர்களின் அறியாமையை அழித்து மரண
பயத்திலிருந்து காக்கிறான். தன்னைஅறிந்த ஒருவனுக்கு மரண பயம் கிடையாது என்பதை அவன்
உணர்த்துகிறான்.
ஜெய் பூரில்
இவ்வாறு கதைகளும் விளக்கங்களுமாக சுவாமிஜியுடன் பதினெட்டு மைல் தொலைவிலுள்ள நாராயணி
என்ற கிராமம் வரை அன்பர்களும் சென்றனர். கொஞ்ச தூரம் என்று ஆரம்பித்த அவர்கள் ஐம்பது
மைல் களுக்கும் மேல் தொடர்ந்து வந்துவிட்டனர்.
அதற்கு மேலும் அவர்களை அழைத்துச்செல்ல சுவாமிஜி விரும்பவில்லை. எனவே அங்கேஅவர்களுக்கு
விடைகொடுத்து அனுப்பிவிட்டார். அங்கிருந்து மேலும் பதினாறு மைல்கள் சென்று ரயிலில்
ஜெய்பூர் சென்றார். ஆல்வாரில் சந்தித்திருந்த பக்தர் ஒருவர் அங்கே சுவாமிஜியை வரவேற்றார்.
மூன்று மணிநேரத்தில்
பாணினி சூத்திரம்
ஜெய்பூரில்
சுவாமிஜி இரண்டு வாரங்கள் தங்கினார். மிகவும் பிரபலமான சம்ஸ்கிருத பண்டிதர் ஒருவர்
அங்கிருந்தார். அவரிடம் சம்ஸ்கிருத இலக்கண நூலான
பாணினி அஷ்டாத்யாயியைக் கற்க விரும்பினார்
சுவாமிஜி. அந்தப் பண்டிதர் மிகவும் படித்தவராக இருந்தார்.ஆனால் அவரிடம் கற்பிக்கும்
திறன் இல்லை. எனவே மூன்று நாட்கள் ஆகியும் சுவாமிஜியால் முதல் சூத்திரத்தையே புரிந்து
கொள்ள முடியவில்லை. நான்காம் நாள் அந்தப் பண்டிதர் சுவாமிஜியிடம், சுவாமிஜி, மூன்று
நாள் கற்றும் எந்தப் பயனும் இல்லை, என்னிடம் படிப்பது உங்களுக்கு அவ்வளவு பயன் தராது
என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார். பண்டிதர் கூறியதை ஏற்றுக்கொண்டார் சுவாமிஜி.
ஆனால் ஆர்வத்தை விடவில்லை. அந்தச் சூத்திரங்களைக் கற்றேயாகவேண்டும் என்பதை ஒரு சங்கல்பமாக்கிக்கொண்டார்.
தாமாகக் கற்கத் தொடங்கினார். மூன்று நாட்களில் முடியாததை மூன்றே மணிநேரத்தில் தாமாகக்
கற்றுக்கொண்டார் சுவாமிஜி. பின்னர் அந்தப் பண்டிதரிடம் சென்று சூத்திரத்தின் பொருளையும்
விளக்கத்தையும் கூறினார். அந்தப் பண்டிதர் பேராச்சரியம் அடைந்தார். இவ்வாறு ஒவ்வொரு
சூத்திரமாக தாமே கற்றார் சுவாமிஜி.
உயிருள்ள
கண்ணனைப்பாருங்கள்
ஜெய்பூரின்
படைத்தளபதியான சர்தார் ஹரிசிங் சுவாமிஜிக்கு அறிமுகமானார். சுவாமிஜி சில நாட்கள் அவரது
வீட்டில் தங்கினார். ஹரிசிங் ஒரு தீவிர வேதாந்தி. உருவ வழிபாடு போன்றவற்றை அவர் நம்புவதில்லை.
இது விஷயமாக சுவாமிஜி பல மணிநேரங்கள் அவருக்கு விளக்கியும் அவர் அதனை ஏற்றுக்கொள்வதாக
இல்லை. ஒரு நாள் மாலையில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே கண்ணனின்
திருவுருவைத் தாங்கியபடி பஜனை ஊர்வலம் ஒன்று
வந்து கொண்டிருந்தது. இருவரும் சிறிது நேரம் நின்று ஊர்வலத்தைப் பார்த்தனர்.
திடீரென்று சுவாமிஜி, ஹரிசிங்கைத்தொட்டு, ஹரிசிங்ஜி, அதோ பாருங்கள், உயிருணர்வுடன்
நிற்கின்ற கண்ணனைப் பாருங்கள் என்றார். ஹரிசிங் பார்த்தபோது அங்கே சிலைக்குப் பதிலாக
உண்மையாகவே கண்ணன் நின்று கொண்டிருந்தான். ஹரிசிங்கால் நம்பவே முடியவில்லை. ஆழ்ந்த
பரவசத்திற்கு உள்ளான அவரது கண்கள் நிலைகுத்தி நின்றன. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
அந்த நிலை மீண்ட பின் அவர் சுவாமிஜியிடம், சுவாமிஜி மணிக்கணக்கான நேர விளக்கங்கள் சாதிக்க முடியாததை உங்கள் ஒரு ஸ்பரிசம்
சாதித்துவிட்டது. நான் கண்ணனை தரிசித்தேன்” என்று நாக்குழறக் கூறினார்.
நீங்கள்
எந்த அவதாரம்?
மற்றொரு
நாள் பல நண்பர்களுடன் சுவாமிஜி அமர்ந்திருந்தார். பண்டிட் சூரஜ் நாராயண் என்பவர் அங்கே
வந்தார். ஜெய்பூரில் மிகவும் பிரபலமான பண்டிதர் அவர். சுவாமிஜி அன்பர்களுடன் பேசிக்கொண்டிருந்ததையெல்லாம்
சற்று நேரம் கேட்ட அவரிடம், சுவாமிஜி, நான் ஒரு வேதாந்தி. அவதாரக் கருத்தை நான் நம்பவில்லை.
அவையெல்லாம் புராணங்கள் கூறும் கட்டுக்கதைகள். நாம் எல்லோரும் பிரம்மம். இதில் எனக்கும்
ஓர் அவதாரத்திற்கும் என்ன வேற்றுமை? என்று
கேட்டார். வேதாந்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத அந்தப் பண்டிதரின் கேள்வி சுவாமிஜிக்கு எரிச்சலை
ஊட்டியது. அவருக்குச் சற்று உறைப்பது போல்
பதிலளிக்க விரும்பிய அவர், உண்மை தான். நீங்கள் சொல்வது மிகவும் சரி. நீங்களும்
அவதாரமும் ஒன்றுதான். ஆனால் மீன், ஆமை, பன்றி இவற்றையெல்லாம் கூட இந்துக்கள் அவதாரமாகக்கொள்கிறார்கள்.
இதில் நீங்கள் எந்த அவதாரம்?என்று கேட்டார். கூடியிருந்த அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.
தொடரும்
அகண்டானந்தர்
சுவாமிஜி
இந்த நாட்களிலும் அவ்வப்போது வராக நகர் மடத்திற்குக் கடிதங்கள் எழுதவே செய்தார். அவற்றின்
வாயிலாக அவரது இருப்பிடம் ஓரளவிற்கு அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இப்படி சுவாமிஜி
ஜெய்பூரில் இருப்பதைத்தெரிந்துகொண்ட அகண்டானந்தர் அவரைக் காண்பதற்காகச்சென்றார்.சகோதரத்
துறவியருள் அகண்டானந்தர் சுவாமிஜியிடம் ஒரு தனி ஈடுபாடும் மதிப்பும் வைத்திருந்தார்.
அவரைக் குருவாகவே கண்டார். ஒரு நாள் சுவாமிஜி அன்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது எந்த
முன்னறிவிப்பும் இன்றி திடீரெனச் சென்று அவர் முன் நின்றார். சுவாமிஜி முதலில் மகிழ்ந்தாலும்
தமது உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டார். அகண்டானந்தரைக் கடிந்து கொண்டு, இனி என்னைத்தொடர்ந்தால்
நடப்பதே வேறு, என்றெல்லாம் பயமுறுத்தி அவரை அனுப்பிவிட்டார். அகண்டானந்தர் அதே நேரத்தில்
அகன்றாலும் மீண்டும் பல இடங்களில் அவரைத்தொடரவே செய்தார்.
ஆஜ்மீரில்
ஜெய்பூரில்
இரண்டு வார்ங்கள் தங்கிவிட்டு ஆஜ்மீர் சென்றார் சுவாமிஜி. பல இந்து மற்றும் முகலாய
மன்னர்களின் நினைவுகளுடன் கலந்தது ஆஜ்மீர். அங்கே அக்பரின் அரண்மனை, பிரதான பள்ளிவாசல்
போன்ற பல இடங்களைச்சென்று பார்த்தார். ஆஜ்மீர் பள்ளிவாசலுக்கு ஒரு தனிப்பெருமை உண்டு.
அது மைனுத்தீன் சிஷ்டி என்ற முஸ்லிம் மகானின்
சமாதி. அங்கே இந்துக்களும் முஸ்லிம்களும் வழிபட்டனர்.
அந்த மகான் வாழ்ந்த காலத்தில் இந்துக்களாலும் முஸ்லிம்களாலும் ஒருங்கே மதிக்கப்பட்டார்.
சமய சமரசத்திற்கு ஓர் உதாரணமாகத் திகழ்ந்த அந்த மகானின் இரு மதத்தினருக்கும் இன்றும்
பொதுத் தலமாக இருந்து வருகிறது. படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கு மிக அபூர்வமாகவே கோயில்கள்
உண்டு. அவற்றுள் ஒன்று ஆஜ்மீரில் உள்ளது. அங்கும் சென்று தரிசித்தார் சுவாமிஜி.
மௌண்ட அபுவில்
ஏப்ரல்
14-ஆம் நாள் ஆஜ்மீரிலிருந்து கிளம்பி, சுவாமிஜி மௌண்ட அபுவை அடைந்தார். மேற்கு இந்தியாவின்
ஒரு முக்கியமான மலைவாசத்தலம் அது. அங்கேயுள்ள சமணர் கோயில்களுள் ஒன்று தில்வாரா கோயில்,
அழகு, கம்பீரம், சிற்பக்கலை அனைத்திற்கும் நிலைக்களனாய் ஒப்பற்ற எழிலுடன் விளங்குகிறது.
அந்தக்கோயில். அது பதின்மூன்றாம் நூற்றாண்டில் இரண்டு அரச குமாரர்களின் முயற்சியால்
கட்டப்பட்டது. அதனைக்கட்டி முடிக்க 14 வருடங்கள் ஆயிற்று. நாட்கணக்காக இந்தக்கோயிலைப்
பார்வையிட்டார் சுவாமிஜி. மௌண்ட் அபுவின் மற்றோர் அதிசயம் அங்குள்ள ஏரியும் அதன் கரையில்
நின்றிருந்த பாறைகளும், வினோதத் தோற்றம் கொண்டவை அந்தப் பாறைகள், ஒன்று ஒரு சன்னியாசி பிரார்த்தனை செய்வதுபோல் இருக்கும். மற்றொன்று
தண்ணீருள் தாவத்தயாராக உள்ள தவளைபோல் காட்சியளிக்கும். இவ்வாறு விதவிதமான பாறைகள்.
அவற்றையும் கண்டுகளித்தார் சுவாமிஜி.
பாறையில்
பாடல்
அங்கும்
சுவாமிஜியை அணுகிய அன்பர்களுக்குக் குறையவில்லை. அவர்களுடன் மாலைவேளையில் கீழே தெரிகின்ற
அழகிய ஏரியைப்பார்த்து ரசித்தபடி மலையில் சுவாமிஜி நடப்பது வழக்கம். ஒரு நாள் எல்லோருமாக நடந்து கொண்டிருந்தபோது சுவாமிஜி பக்தர்களுடன் பாதையிலிருந்து
விலகி அங்கிருந்த பாறைகளின் மீது அமர்ந்தார். மாலை வேளையும் இயற்கை அழகும் சுவாமிஜின்
மனத்தை வெகுவாக ஆட்கொண்டன. தம்மை மறந்த நிலையில் அவர் பாடத்தொடங்கினார். மணிக்கணக்காகப் பாடினார். அங்கே
நடந்து கொண்டிருந்த அனைவரும் அவரது பாடலில் மயங்கி அங்கங்கே நின்றபடி கேட்கத்தொடங்கினர்.
சில ஆங்கிலேயர்களும் பாடலைக்கேட்டபடி பாடகரைக் காண்பதற்கான ஆவலில் நின்றிருந்தனர்.
கடைசியில் சுவாமிஜி பாட்டை நிறுத்திவிட்டு வந்தார்.
அனைவரும் அவரை வணங்கினர்.
குகைவாசம்
மௌண்ட் அபுவில்
ஒரு பாழடைந்த குகையில் தங்கித் தவம் செய்தார் சுவாமிஜி. ஒரு நாள் அரசாங்க வக்கீலான
முஸ்லீம் ஒருவர் அந்த வழியாகப்போக நேர்ந்தது. சுவாமிஜியின் தோற்றத்தால் மிகவும் கவரப்பட்டார்
அவர். எனவே அவரிடம் சென்று பேசினார். சுவாமிஜி ஒரு சாதாரணத் துறவியல்ல, அறிவிலும் ஆன்மீகத்திலும்
மிக உயர்ந்தவர் என்பதைச்சிறிது நேரத்தில் அவர்
கண்டுகொண்டார். அதன்பின் தொடர்ந்து பலமுறை அவரைச்சந்திக்கலானார். ஒரு நாள் அவர் சுவாமிஜியிடம்,
சுவாமிஜி, நான் உங்களுக்கு எந்த விதத்திலாவது உதவ முடியுமா? என்று கேட்டார். அதற்கு
சுவாமிஜி , மழைக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
இந்தக் குகைக்குக் கதவுகள் இல்லை. நீங்கள் கதவுகள் செய்து தந்தால் நன்றாக இருக்கும்” என்றார். அதற்கு அந்த வக்கீல், சுவாமிஜி, அத்தகைய ஒரு வாய்ப்பு
அளித்ததற்கு மிக்க நன்றி. ஆனால் எனது தாழ்மையான வேண்டுகோள் ஒன்று உண்டு. எனக்கு பங்களா
ஒன்று உள்ளது. அங்கே நான் தனியாகத்தான் வசித்துவருகிறேன். நீங்கள் சம்மதித்தால் அங்கே
வந்து தங்கலாம். ஆனால் நான் ஒரு முஸ்லீம், உங்கள் உணவிற்குத் தனி ஏற்பாடு செய்கிறேன்,
என்றார் . சுவாமிஜி உணவு பற்றிய விஷயத்தைப் பொருட்படுத்தாமல் வக்கீலுடன் அவரது மாளிகைக்குச்சென்றார்.
இங்கே சுவாமிஜிக்கு பலர் அறிமுகமாயினர். அவர்களில் ஒருவர் முன்ஷி ஜக்மோகன் லால். இவர்
கேத்ரி மன்னரின் தனிச் செயலர். ஜக்மோகன் வந்தபோது சுவாமிஜிகௌபீனம் மட்டும் கட்டியவராகத்
தூங்கிக்கொண்டிருந்தார். அவரைக் கண்ட ஜக்மோகன் , ஓ! இது பத்தோடு ஒன்று பதினொன்றான துறவி!
திருட்டுக்கூட்டம். ஏமாற்று க்கும்பல் போன்றவற்றை சேர்ந்த இன்னொருவர்! என்று தமக்குள்
எண்ணிக்கொண்டார். சுவாமிஜிகண் விழித்தார். உடனே ஜக்மோகன் அவரிடம், சுவாமிகளே! நீங்கள்
ஓர் இந்துத்துறவி, ஒரு முஸ்லிமுடன் தங்கியிருக்கிறீர்களே, அது எப்படி? உங்கள் உணவை
எல்லாம் அவர் தொட நேருமே? என்றார். இந்தக்கேள்வி சுவாமிஜியிடம் ஒருவிதமான ஆவேசத்தை
எழுப்பியது போல் இருந்தது. பெரு நெருப்பிலிருந்து சுடர்கள் தெறித்துக் கிளம்புவது போல்
பேசினார் அவர். என்ன சொல்கிறீர்கள்? நான் ஒரு துறவி. உங்கள் சமுதாயக்கட்டுப் பாடுகள்
அனைத்தையும் கடந்தவன் நான். நான் ஒரு தோட்டியுடன் கூட உணவு கொள்ளலாம். எனக்குக் கடவுளிடம்
பயமில்லை, ஏனெனில் அவர் அதை அனுமதிக்கிறார். எனக்கு சாஸ்திரங்களிடம் பயமில்லை. அவையும் அதை அனுமதிக்கின்றன. ஆனால் நான் உங்களுக்கு , இந்த
மக்களுக்கு, இந்தச் சமுதாயத்திற்கு பயப்படுகிறேன்.
உங்களுக்குக் கடவுளைப்பற்றியோ சாஸ்திரங்களைப் பற்றியோ எதுவும் தெரியாது, நான் எங்கும்
கடவுளைக்காண்கிறேன். மிகச் சாதாரணமான பிராணியிடம் கூட அவரே நிறைந்திருப்பதைக் காண்கிறேன்.
உயர்ந்ததென்றும் தாழ்ந்ததென்றும் எனக்கு எதுவும் கிடையாது. சிவ!சிவ! ஜக்மோகன் அதிர்ந்து
போனார். அவருக்கு சுவாமிஜியிடம் பெரிய மதிப்பு ஏற்பட்டது. கேத்ரி மன்னர் இத்தகைய துறவியைச் சந்தித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய அவர்,
சுவாமிஜியை அரண்மனைக்கு அழைத்தார். இரண்டு நாட்கள் கழித்து வருவதாக வாக்களித்தார் சுவாமிஜி.
அப்போது
கேத்ரி மன்னராக இருந்தவர் ராஜா அஜித் சிங். அவரிடம் சுவாமிஜியைப்பற்றி தெரிவித்தார்
ஜக்மோகன். சுவாமிஜியைத் தாமே சென்று காண்பதாகக் கூறினார் மன்னர். இதனைக்கேள்விப்பட்ட
சுவாமிஜி தாமதிக்காமல் நேராக அரண்மனை சென்றார். அவரை மன்னர் அன்புடன் வரவேற்று உபசரித்தார்.
பிறகு அவர் சுவாமிஜியிடம், சுவாமிஜி , வாழ்க்கை என்பது என்ன? என்று கேட்டார். அந்தக்கேள்விக்கு அற்புதமானதொரு
விளக்கம். அளித்தார் சுவாமிஜி. தன்னை அழுத்தத் துடிக்கின்ற சூழ்நிலைகளில் ஓர் உயிர்
தன்னை வெளிப்படுத்தவும் பூரணமாக்கவும் முயல்வதே வாழ்க்கை. இந்த விளக்கம் மன்னரை மிகவும்
கவர்ந்தது. தொடர்ந்து சுவாமிஜி, கல்வி என்பது என்ன? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி,
சில கருத்துக்கள் நமது நாடி நரம்புகளில் ஊறிப்போவது தான் கல்வி” என்றார்.
இந்தச் சந்திப்பு
நிகழ்ந்தது 1891 ஜீன் 4-இல் சுவாமிஜிக்கும் கேத்ரி மன்னருக்கும் இடையில் இவ்வாறு தொடங்கிய
நட்பு சுவாமிஜியின் வாழ்க்கையில் கேத்ரி மன்னர் ஒரு விலக்க முடியாத அங்கமாக ஆகுமளவிற்கு
வளர்ந்தது.
சுவாமிஜியால்
கவரப்பட்ட மன்னர் ஒரு நாள், சுவாமிஜி நீங்கள்
என்னுடன் என் தலைநகருக்கு வந்து வசிக்க வேண்டும். நான் இதயபூர்வமாக உங்களுக்குச்சேவை
செய்வேன், என்று கேட்டுக்கொண்டார். ஒரு கணம் யோசித்தார் சுவாமிஜி. பிறகு சம்மதித்தார்.
ஜீலை 24-ஆம் நாள் மன்னருடன் புறப்பட்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் கேத்ரியை அடைந்தார். வழியில் சுவாமிஜியிடம் பல்வேறு
விஷயங்களைப்பேசவும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் மன்னருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
கேத்ரியில்
வேதாந்தப்பேச்சு , பாடல்கள், பஜனை என்று சுவாமிஜியின் நாட்கள் கழிந்தன. அவர் எதைப்பேசினாலும்
அதிலெல்லாம் தொனித்தது இரண்டு விஷயங்கள். தாய்நாடு மீதும் இந்துக் கலாச்சாரத்தின் மீதும்
அவர் கொண்ட அன்பு அவரது பேச்சிலும் மூச்சிலும் தொனித்தது. கேத்ரியில் வாழ்ந்தபோது அரண்மனையில்
மட்டும் தமது நேரத்தைச்செலவிடவில்லை. சாதாரண மக்களைத் தினமும் சென்று சந்தித்தார்.
அவர்களுடன் உணவு உண்டார். அவர் களின் வாழ்க்கை முறையை ஆழ்ந்து கவனித்தார்.
உண்மை என்றால்
என்ன?
ஒரு நாள் கேத்ரி மன்னர், சுவாமிஜியிடம் , சுவாமிஜி
உண்மை என்றால் என்னஃ என்று கேட்டார். அதற்கு
சுவாமிஜி, இரண்டற்ற ஒன்றே உண்மை. இடையீடின்றி மனிதன் அதை நோக்கியே சென்று கொண்டிருக்கிறான்.
அவன் உண்மையிலிருந்து உண்மைக்குப் பயணிக்கிறான். தவறிலிருந்து உண்மைக்கு
அல்ல, என்றார். தொடர்ந்து இதன் பொருளை விளக்க ஆரம்பித்தார். அறிவு, அனுபவம், வழிபாட்டு
முறைகள் எல்லாமே அந்த ஒரே உண்மையை நோக்கித்தான் செல்கின்றன என்பதை விளக்கினார். துறவியும்
சரி, இல்லறத்தானும் சரி, அவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் எந்தப் பாதை வழியாகவும்
அந்த உண்மையை அடைய முடியும் என்பதையும் எடுத்துக்காட்டினார்.
அனைத்தையும்
கற்றுவிட்டீர்கள்.
கேத்ரி அரண்மனையில்
சுவாமிஜி வாழ்ந்தபோது ராஜபுதனத்தின் மிகப்பெரிய சம்ஸ்கிருதப் பண்டிதரான நாராயண் தாசைச்
சந்தித்தார். இதனை ஒரு வாய்ப்பாகக்கொண்டு சம்ஸ்கிருத இலக்கணப் படிப்பைத்தொடர்ந்தார்
சுவாமிஜி. பாணினியின் இலக்கண சூத்திரங்களுக்கு பதஞ்சலி எழுதிய மகாபாஷ்யத்தைக் கற்கத்தொடங்கினார்
சுவாமிஜி.சில நாட்கள் கற்பித்த உடனேயே பண்டிதருக்கு சுவாமிஜியின் அறிவாற்றல் புரிந்தது.
எனவே அவர் சுவாமிஜியிடம், சுவாமிஜி, உங்களைப்
போன்ற ஒரு மாணவன் கிடைப்பது அரிது. நான் சொல்லித் தந்து நீங்கள் கற்பதற்கு இனி எதுவும்
இல்லை. எனக்குத் தெரிந்தவை அனைத்தையும் உங்களுக்குக் கற்றுத் தந்து விட்டேன். நீங்களும்
அவற்றைப் புரிந்து கொண்டீர்கள் என்றார் . சுவாமிஜி அவருக்குப் பல முறை வணக்கமும் நன்றியும்
தெரிவித்து விடைபெற்றார்.
என்னால் எந்த உயிரும் பயம் கொள்ளக் கூடாது.
மன்னரும்
சுவாமிஜியும் பல நேரங்களில் குதிரை சவாரிசெய்துஅருகிலுள்ள காடுகளுக்குச்செல்வதுண்டு.
ஒரு நாள் காட்டில் ஒரு குறுகலான பாதை வழியாக இருவரும் சென்று கொண்டிருந்தனர். இரு பக்கங்களிலும் வளர்ந்து நின்ற முட்செடிகள் சுவாமிஜியின் மீது குத்திவிடக் கூடாது என்பதற்காக மன்னர் தமது கைகளால்
அவற்றை ஒதுக்கிப்பிடித்தார். அப்போது முட்கள் குத்தி மன்னரின் கைகளிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. நெகிழ்ந்து போனார் சுவாமிஜி.
சுவாமிஜியின் உணர்ச்சியைப் புரிந்து கொண்ட மன்னர் சிரித்தபடியே, விடுங்கள் சுவாமிஜி,
நாங்கள் ஷத்திரியர்கள் அல்லவா? தர்மத்தைக்காப்பது எங்கள் கடமை அல்லவா? என்று கேட்டார்.
மற்றொரு
நாள் மன்னரும் சுவாமிஜியும் பரிவாரங்களுமாக வேட்டைக்குச்சென்றனர். எல்லோருடைய கையிலும் துப்பாக்கி இருந்தது. சுவாமிஜியிடம் கைத்தடி மட்டுமே
இருந்தது. வழியில் ஓரிடத்தில் அனைவரும் அமர்ந்தனர்.
சுவாமிஜி சற்று தொலைவில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.
திடீரென்று ஒரு புலி அந்த மரத்தின் பக்கமாகப் பாய்ந்து சென்றது. சுதாரித்துக்கொண்ட
மன்னரும் மற்றவர்களும் சுவாமிஜியின் அருகில் விரைந்தனர். அதற்குள் புலி மறைந்து விட்டிருந்தது.
ஒரு துப்பாக்கியை வைத்துக்கொள்ளுமாறு அப்போது
மன்னர் சுவாமிஜியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு சுவாமிஜி, பாதுகாப்பிற்காக ஒரு துறவிக்குத்
துப்பாக்கி தேவையில்லை. எந்தப் புலியும் அவர்களை எதுவும் செய்யாது. என்னால் எந்த உயிரும் பயம் கொள்ளக் கூடாது என்றார்.
கேத்ரி மன்னரின்
குருவாக
மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க சுவாமிஜி அவருக்கு
மந்திர தீட்சை அளித்தார். சுவாமிஜிக்கு எந்த வழியிலாவது சேவை செய்வதை ஒரு பேறாகக் கருதினார்
மன்னர். அவரது முன்னால் மண்டியிட்டுச்சேவை செய்யக் காத்திருந்தார். தாம் மன்னர் என்பதையே
மறந்து ஒரு சாதாரண மனிதனாக சுவாமிஜிக்குத் தொண்டுகள் செய்தார். அவர் தூங்கும்போது கால்
பிடித்துவிட்டார். அவருக்கு வீசினார். இரவில் சுவாமிஜி தூங்கும் போது விழித்திருந்து
கால்களை வருடினார். மற்ற சிறுசிறு சேவைகளையும் செய்தார். பிறர் முன்னால் இவற்றைச்செய்யவும்
அவர் தயங்கவில்லை. ஆனால் சுவாமிஜி அதனைத் தடுத்துவிட்டார். தனிமையில் நீங்கள் சேவை
செய்யுங்கள், நான் தடுக்கவில்லை. ஆனால் உங்கள் குடிமக்கள் முன்னால் எனக்கு இப்படி நீங்கள்
தொண்டுகள் செய்தால் அவர்கள் உங்கள் மீது வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் குறைந்து
போகும்” என்று கூறினார் அவர்.
மன்னரின்
அற்புதமான ஈடுபாட்டைக் கண்டு சுவாமிஜி அவரை மிகவும் நேசித்ததுடன் அவரால் இந்தியத் திருநாட்டிற்கு
மிகுந்த நன்மைகள் ஏற்படும் என்றும் எதிர்பார்த்தார்.
விஞ்ஞானத்தில் மிகவும் ஆர்வம் காட்டினார் சுவாமிஜி. அவரது வேண்டுகோளுக்கு ஏற்பஅரண்மனையின்
மாடியில் தொலைநோக்கி , நுண்ணோக்கி ஆகியவற்றை அமைத்து ஒரு சிறிய சோதனைக்கூடம் அமைத்தார்
மன்னர். இருவரும் பல மணிநேரங்கள் அங்கே செலவிட்டனர்.
சுவாமிஜியிடமிருந்து இயற்பியல், வேதியியல், வானவியல் ஆகியவற்றின் அடிப்படைக்கேட்பாடுகளைக்கற்றுக்கொண்டார்
மன்னர்.
மன்னருக்குப்
பிள்ளை இல்லை. அவரது மனத்தில் அது பெரும் குறையாக இருந்தது. ஒரு நாள் அவர் சுவாமிஜியிடம்
அதைத்தெரிவித்தார்.சுவாமிஜி எனக்கொரு மகன் பிறக்க வேண்டும் என்று நீங்கள் ஆசீர்வதியுங்கள்
நீங்கள் ஆசீர்வதித்தால் என் பிரார்த்தனை கட்டாயம் நிறைவேறும்.என்றார். சுவாமிஜியும்
மனம் உவந்து மன்னரை ஆசீர்வதித்தார்.
இரண்டரை
மாதங்களுக்குமேல் கேத்ரி யில் தங்கிய சுவாமிஜி, 1891 அக்டோபர் 27-ஆம் நாள் அங்கிருந்து
புறப்பட்டு, ஆஜ்மீரில் மூன்று வாரங்கள் தங்கினார். பின்னர் அன்றைய பம்பாய் மாகாணப்
பகுதியான குஜராத்தை நோக்கிப் புறப்பட்டார்.
No comments:
Post a Comment