Sunday, 14 June 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-64

வகுப்பு-64  நாள்-23-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

 

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

18.12 தியாகம் பண்ணாதவனுக்கு மரணத்திற்குப்பிறகு,

விரும்பாதது,இஷ்டமானது,இவ்விரண்டும் கலந்தது

என மூன்றுவிதமான வினைப்பயன் உண்டாகிறது.

ஆனால் கர்மத்தை துறந்த தியாகிகளுக்கு ஒருபொழுதும்

மூன்றுவித வினைப்பயன் உண்டாவதில்லை.

-

மரணத்திற்கு பிறகு மனிதனுடன் கூட வருவது அவன் செய்துள்ள பாவ,புண்ணிய பலன்கள் மட்டுமே.

தியாகிகள் பாவ புண்ணிய பலன்களை துறந்துவிடுவதால் அவர்கள் முக்திபெற்றுவிடுகிறார்கள்.

எனவே மரணம் என்பது அவர்களுக்கு இல்லை.

-

1.விருப்பம் இல்லாத பிறவி.

-

அதிக அளவு பாவம் செய்தவர்கள் மரணத்திற்குப்பிறகு,சில காலம் பேய்,பிசாசுகளாக இருந்துவிட்டு பிறகு மிருகங்களாகவும்,வேறு உயிர்களாகவும் பிறக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பிறவியை யாரும் விரும்புவதில்லை.

 

மிருகங்கள் படிப்படியாக பரிணமித்து மனிதனாகின்றன.

மனிதன் தவறு செய்தால் மிருகமாக பிறக்கிறான்.

முதலில் தோன்றியது மனிதனா? மிருகமா?

இது ஒரு வட்டம்போல உள்ளது.

வட்டத்தில் முதலும் இல்லை.முடிவும் இல்லை.

-

மிருக வாழ்க்கை என்பது பாதுகாப்பு இல்லாத வாழ்க்கை.

பயம் நிறைந்த வாழ்க்கை. எல்லா விலங்குகளுமே பலவீனமாகும்போது இன்னொரு விலங்கிற்கு உணவாகிவிடுகிறது.

காடுகளில் வளரும் விலங்குகளில் நன்றாக வயதாகி முதிர்ந்து இறக்கும் விலங்கை காண்பது அரிது.

வயதாகும்போது இன்னொரு விலங்கின் உணவாகிவிடுகிறது.

மிருக வாழ்க்கை என்பது மிகவும் போராட்டமும்,பயமும்,வேதனையும் நிறைந்தது.

-

யாருக்கெல்லாம் மிருக வாழ்க்கை கிடைக்க வாய்ப்பு உள்ளது?

 

வாழும்போதே மிருகங்களைப்போல வாழ்பவர்கள்

போதைக்கு அடிமையாகி கடமையை செய்ய மறந்தவர்கள்.

பிறரது பொருளை அபகரித்து வாழும் திருடர்கள்.

மிருகங்களைப்போல கட்டுப்பாடு இல்லாமல் பலருடன் உடலுறவு வைத்துக்கொள்பவர்கள்.

எந்த வேலையும் செய்யாமல் சோம்பலாக வாழ்க்கையை கழிப்பவர்கள்.

பேய்,பிசாசுகளை வைத்து பில்லி,சூன்யம் செய்பவர்கள்.

இவர்களைப்போன்றவர்கள் இறந்த பிறகு மிருக வாழ்க்கையை அடைய வாய்ப்புள்ளது.

-

நரகம் என்பது என்ன?

சில மதங்களில் தீயவர்கள் இறந்தபிறகு நரகத்தை அடைவார்கள்.அங்கே நீண்ட காலம் வேதனையை அனுபவிப்பார்கள்.பிறகு மறுபடி மனிதனாக பிறப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இது எல்லோருக்கும் பொருந்துமா?

பொருந்தாது.

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான மதத்தை பின்பற்றுகிறார்கள். அவைகள் கூறும் நம்பிக்கையை மனதில் வைத்திருக்கிறார்கள்.

புத்தமதத்தை பின்பற்றுபவர்கள், சொர்க்கம் நரகம் இவைகளை நம்புவதில்லை.ஆனால் தவறு செய்பவன் மிருகமாக பிறக்க வேண்டும் என்பதை நம்புகிறார்கள்.

வைணவர்கள் சொர்க்கம்,நரகம் போன்றவற்றை நம்புகிறார்கள்.

-

வாழ்க்கை முழுவதும் சொர்க்கம்,நரகம் போன்ற கருத்துக்களை நம்பும் ஒருவன்,

இறந்தபிறகு அவன் நம்பியதுபோல சொர்க்கம் அல்லது நரகத்தை அடைகிறான்.

வாழ்க்கை முழுவதும் தீயதையே செய்திருப்பவன் நரகத்தை அடைகிறான்.

வாழ்க்கை முழுவதும் நன்மையை செய்திருப்பவன் சொர்க்கத்தை அடைகிறான்.

-

சொர்க்கம் நரகம் இரண்டையும் பற்றி வாழ்க்கை முழுவதும் நினைக்காதவர்கள்.

இறந்த பிறகு அவர்கள் செய்த பாவ.புண்ணியத்திற்கு ஏற்ப அடுத்த பிறவியை பெறுகிறார்கள்.

-

2.இஷ்டமான பிறவி

-

சிலர் மரணத்திற்கு பிறகு மேல் உலகங்களில் நீண்ட நாட்கள் வாழலாம்.அங்குள்ள இன்பங்களை அனுபவிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

பித்ருலோகம்,சொர்க்கலோகம்,கைலாயம்,வைகுண்டம்,தபோலோகம் போன்ற பல மேல் உலகங்கள் இருக்கின்றன.

சிலர் வாழ்க்கை முழுவதும் சொர்க்கம் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பார்கள்.

இங்குள்ள வாழ்க்கை என்பது சொர்க்கம் செல்வதற்கான ஏற்பாடு மட்டுமே என்று கருதுகிறார்கள்.

எந்த அளவுக்கு அதிக புண்ணிய பலன் இருக்கிறதோ அந்த அளவுக்கு உயர்ந்த சொர்க்கங்களுக்கு செல்ல முடியும்.

ஆனால் சொர்க்கத்து வாழ்க்கையும் தற்காலிகமானதுதான் என்பதை இந்துமதம் வலியுறுத்திக்கூறுகிறது.

-

சொர்க்கத்தைவிட உயர்நத உலகங்கள் இருக்கின்றன.

அங்கே வசிப்பவர்கள் இறைவனை எப்போதும் கண்டுகொண்டிருக்க விரும்புகிறார்கள்.

முக்தி அடையும் தகுதி இருந்தும்,அவர்கள் முக்தியை விரும்புவதில்லை.பக்தியை விரும்புகிறார்கள்.

கைலாயம்,வைகுண்டம் போன்ற உலகங்களில் அப்படிப்பட்ட பக்தர்கள் மிக நீண்ட காலம் வாழ்ந்கிறார்கள்.

சிலர் அங்கிருந்தபடியே முக்தியை அடைகிறார்கள். சிலர் பக்தியை வளர்ப்பதற்காக பக்தர்களாக பூமியில் பிறக்கிறார்கள்.மறுபடியும் மேல் உலகத்தை அடைகிறார்கள்

-

3.இரண்டும் கலந்த பிறவி

-

மரணத்திற்கு பிறகு சிலர் மீண்டும் மனிதனாகப் பிறக்கிறார்கள்.

மனித வாழ்க்கை என்பது சிலருக்கு இனியது. சிலருக்கு துன்பமானது.

மிருக வாழ்க்கையிலிருந்து மீண்டு மனிதனாக பிறப்பவர்களுக்கு மனித வாழ்க்கை இனியது.

சொர்க்கத்திலிருந்து விலகி மனிதனாகப்பிறப்பவர்களுக்கு மனிதவாழ்க்கை கொடியது.

மனித வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டும் கலந்துள்ளது.


No comments:

Post a Comment