சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-22
🌸
குழந்தையே
அவர்
-
ஆயிரம் தீவு
முகாமிற்கு அருகில் ஓர் சர்ச் இருந்தது. அங்கே ஒரு ஞாயிறு வழிபாட்டில் கலந்து கொண்டார்
சுவாமிஜி. போதகர் தமது உரையை நிறைவு செய்து
விட்டு, ஏசு கிறிஸ்துவுக்காக உங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொடுங்கள், என்று
கூறினார். அதைத்தொடர்ந்து ஒருவர் காணிக்கைக்காக ஒரு தட்டை அங்கிருந்த அனைவரிடமும் எடுத்துச்
சென்றார். தங்களால் இயன்ற பணத்தைப் பலரும்
இட்டனர்.
தட்டை ஏந்தி வந்தவர் சுவாமிஜியிடமும் தட்டை நீட்டினார்.
அவ்வளவு தான், சுவாமிஜி தமது சட்டைப்பையிலிருந்ததை மொத்தமாக எடுத்துத் தட்டில் வைத்தார். அது பெரிய
தொகை! சுவாமிஜியுடன் சென்றிருந்த மிஸ் டட்சர் ஆச்சரியத்தில் மலைத்து நின்றார். அவர்
மெல்லிய குரலில் சுவாமிஜியிடம், சுவாமிஜி, நீங்கள் ஏன் அவ்வளவு பணத்தையும் கொடுக்காதீர்கள்? என்று
கேட்டார். உங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொடுங்கள், என்று அந்தப் போதகர் சொன்னாரே,
என்னிடம் இவ்வளவு தான் இருந்தது, அதைக் கொடுத்தேன், என்றார் ஒரு குழந்தையாக!
சன்னியாசி
கீதம்
-
சுவாமிஜியின்
இந்த நாட்களை வேறுபடுத்திக் காட்டுவது அவரது உயர்ந்த ஆன்மீக நிலைகள், அவருடன் வாழ்ந்த
சீடர்கள் அனைவருமே இதனைப் பற்றி கூறியுள்ளனர்.
இந்த நிலையில் வாழ்ந்த நாட்களில் தான் அற்புதமான
கவிதைகளில் ஒன்றான, சன்னியாசி கீதம்” என்ற கவிதையை
சுவாமிஜி எழுதினார். மிசஸ் ஃபங்கே எழுதுகிறார், ஒரு நாள் பிற்பகலில் அவர் துறவின் பெருமையைப்பற்றி
கூறிக் கொண்டிருந்தார். திடீரென்று எழுந்து
சென்றார். கொஞ்ச நேரத்தில் திரும்பி வரும்போது அவரது கையில் இந்தக் கவிதை இருந்தது.
பதின் மூன்று பாடல்களால் ஆன இந்தக் கவிதை துறவின் பெருமையையும் அறுதி ஆன்மீக நிலையின்
மகிமையையும் கூறுவதாக அமைந்துள்ளது.
தமது உயர்நிலையை சுவாமிஜி இவ்வாறு எழுதுகிறார்.
இந்த இடத்தை நான் மிகவும் ரசிக்கிறேன். மிகக் குறைவாக
உணர்கிறேன். நன்றாகச் சிந்திக்கிறேன், பேசுகிறேன். படிக்கிறேன், அற்புதமானதோர் அமைதி
என் அந்தராத்மாவில் குடி கொள்கிறது. கடமையென்று எனக்கு எதுவும் இல்லை என்பதை ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். எப்போதும் நிலையான ஓய்வில் திளைத்து
அமைதியில் ஆழ்ந்துள்ளேன். கடவுள் தான் வேலை செய்கிறார். நாம் வெறும் கருவிகள், அவரது
திருநாமம் வாழ்க! காமம், பணத்தாசை, புகழ் நாட்டம்
ஆகிய மூன்று தளைகளும் இப்போதைக்கு என்னிடமிருந்து
கழன்று விழுந்து விட்டது போல் உள்ளன. நான் இந்தியாவில் சில வேளைகளில் உணர்ந்ததை மீண்டும் ஒரு முறை இங்கே உணர்கிறேன்.
என்னிடமிருந்து எல்லா வேறுபாடுகளும் மறைந்து வி்ட்டன.
சரியான எல்லாம் , தவறான எல்லாம், மன மயக்கம் எல்லாம், அறியாமை எல்லாம் மறைந்து விட்டன.
குணங்களைக் கடந்த பாதையில் நான் நடந்து போய்க்
கொண்டிருக்கிறேன். நான் எந்தச் சட்டத்திற்கு
க் கீழ்ப்படிய வேண்டும்? எதற்குப் பணிய வேண்டியதில்லை? அந்த உயர்ந்த நிலையிலிருந்து
பார்க்கும்போது இந்தப் பிரபஞ்சம் ஒரு சேற்றுக் குட்டைபோல் தோன்றுகிறது. ஹரி ஓம் தத்ஸத்!
இறைவன் இருக்கிறார், வேறு எதுவும் இல்லை. இறைவா, நான் உன்னிடமும் நீ என்னிடமுமாக உள்ளோம்.
எம்பெருமானே, நீயே எனது நிலையான புகலிடமாக இருப்பாய்! சாந்தி, சாந்தி, சாந்தி!
இந்த நாட்களில் அவரிடமிருந்து ஆன்மீக ஆற்றல் பெருகியது
என்று தான் கூற வேண்டும். நாளுக்கு நாள் நான் இதயத்தில் ஆற்றலின் வெளிப்பாட்டை அதிகமாக
உணர்கிறேன், என்று சுவாமிஜி எழுதினார்.
நிர்விகல்ப சமாதியில்
-
இந்த ஆயிரம் தீவுப் பூங்காவில் சுவாமிஜி மீண்டும்
ஒரு முறை நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்தார். மிசஸ்ஃபங்கே எழுதுகிறார். அன்று காலையில் வகுப்புகள் எதுவும் இல்லை. சுவாமிஜி எங்கள் இருவரிடம்,
சற்று நடந்துவிட்டு வரலாம், வருகிறீர்களா? என்று கேட்டார். நாங்களும் மகிழ்ச்சியுடன்
புறப்பட்டோம். மலை மீது அரை மைல் தூரம் நடந்திருப்போம்.
அடர்ந்த காடு, எங்கும் நிசப்தம். சுவாமிஜி சிறிது தூரம் சென்று ஒரு பெரிய ஓக் மரத்தின்
அடியில் அமர்ந்தார். நாங்களும் அதன் தாழ்ந்த கிளைகளின் கீழே அமர்ந்தோம். அவர் ஏதோ கூறப்போகிறார் என்று எதிர்பார்த்து
நாங்கள் காத்திருந்தபோது சுவாமிஜி திடீரென்று,
நாம் தியானம் செய்வோம். போதி மரத்தடியில் அமர்ந்த புத்தரைப்போல் நாமும் ஆவோம்” என்றார். அதன் பிறகு எந்தப்பேச்சும் இல்லை. சுவாமிஜியிடம்
எந்த அசைவும் இல்லை. அவர் ஒரு வெண்கலச் சிலையாக ஆகி விட்டாரோ என்று தோன்றியது.ஆச்சரியத்துடன்
நாங்கள் அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தோம். திடீரென்று ஓர் இடி இடித்தது. சோவென்று
மழை கொட்டத் தொடங்கியது. சுவாமிஜி எதையும்
உணரவில்லை. நான் குடையை விரித்து அவர் தலை மீது பிடித்து இயன்ற அளவு மழையிலிருந்து
காத்தேன். அவருக்கு முற்றிலுமாகப் புறவுணர்வு இல்லை. வீட்டில் எங்களைக் காணாததால் பலரும்
குடைகளையும் மழைக்கோட்டுகளையும் எடுத்துக்கொண்டு வந்தனர். எல்லோரும் அமைதியாக சுவாமிஜியைப்
பார்த்தபடி நின்றோம். நீண்ட நேரத்திற்குப் பிறகுஅவர் புறவுணர்வு பெற்றார். அமைதியாக
எல்லோரையும் பார்த்தார். மென்மையாகச் சிரித்து
விட்டு, மீண்டும் ஒரு முறை நான் கல்கத்தா மழையில் நனைந்தது போல் உள்ளது” என்றார். நரேந்திரனாக வேலை தேடி அலைந்து மயங்கி வீழ்ந்து,
மனத்திலிருந்து திரைகள் மறைந்த அற்புத அனுபவத்தைக் குறிப்பிடுகிறாரோ அவர்?
சுவாமிஜியுடன் ஆயிரம் தீவுப் பூங்காவில் தங்கும் பேறு பெற்ற பன்னிருவரைப்
பற்றி பார்ப்போம்.
மிஸ் டட்சர்-
63
-
வயதான இவர்
கிறிஸ்தவ மெதடிஸ்ட் பிரிவைச்சேர்ந்தவர். கிறிஸ்தவ மதத்திலும் அதன் பழக்க வழக்கங்களிலும்
ஊறிப்போன இவர் சுவாமிஜியின் சொற்பொழிவுகளைக்கேட்கக் கேட்க அவருள் ஊறிப்போயிருந்த பழமைக்
கருத்துக்கள் அழியத்தொடங்கின. அதே வேளையில், புதிய கருத்துக்களை அவரால் சட்டென்று ஏற்றுக்
கொள்ள இயலவில்லை. இந்த மனப் போராட்டம் உடல்நோயாக
வெளிப் படத் தொடங்கியது. உடல் நிலை சரியில்லாமல் போவதால், சில வேளைகளில் அவர் இரண்டு
மூன்று நாட்கள் தொடர்ந்து வகுப்புகளுக்குச் செல்லாமல் இருப்பார். சுவாமிஜி அதன் காரணத்தைத்
தெளிவாக அறிந்திருந்தார். இந்த நோய் உடல்நோய் அல்ல, மனத்தினுள் நிகழும் போராட்டம் மற்றும்
குழப்பத்தின் விளைவை உடம்பு நோயாக வெளிப்படுத்துகிறது. டட்சரால் இதைத் தாங்க இயலவில்லை” என்று ஒரு முறை அவர்
கூறினார்.ஆனால் சுவாமிஜியுடன் தொடர்ந்து வாழ்ந்ததில் அவரது வாழ்க்கை பெரும் மாற்றங்களைக் கண்டது.
டாக்டர்
வைட்-
-
இவரது வயது
70-க்கு மேல். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்தவர். கேலியாகப்பேசக்கூடியவர்.
சுவாமிஜி பொதுவாக ஆயிரம் தீவுப் பூங்காவில் அத்வைதக் கருத்துக்களை அதிகமாகப்போதித்தார்.
எனவே சொற்பொழிவுகள் முடியும்போது வைட் நேராக சுவாமிஜியிடம் சென்று, சுவாமிஜி! கடைசியில்
விஷயம் இது தான்- நானே பரம்பொருள், நானே எல்லாம்,
அப்படித்தானே? என்று கேட்பார். பொருள் பொதிந்த சிரிப்பு ஒன்றை உதிர்ப்பார் சுவாமிஜி.
பிறகு அவரிடம், ஆம் நண்பரே! நீங்கள் பரம்பொருள் தான். அதாவது உங்களுள் இருக்கும் உண்மைப் பொருள் இறைவனே” என்பார்.சில வேளைகளில் வைட் வகுப்பிற்குத் தாமதமாக வருவார்.
அப்போது சுவாமிஜி கண்களில் சற்று ஏளனம் மின்ன, இதோ வருகிறார் பரம்பொருள், இதோ வருகிறார்
எல்லா மானவர்! என்பார் எல்லோரும் சிரிப்பார்கள்.
மிசஸ் ஃபங்கே
-
இவர் ஓர் இளம் பெண். தமது அனைத்தையும் ஆசிரியரான
சுவாமிஜியிடம் அர்ப்பணித்த ஒருவராக இவரை மற்றவர்கள் கண்டனர். சுவாமிஜி பேசும் போது
மற்றவர்கள் அதனைக் குறிப்பெடுப்பதில் மும்முரமாக இருப்பார்கள். ஆனால் இவரோ சுவாமிஜியின் தெய்வீக இன்னிசைக்குரலில் மூழ்கியவராக தன்னையே மறந்து
அதனைக் கவனித்துக்கொண்டிருப்பார். மற்றவர்கள் கேட்கப் பயப்படுகின்ற கேள்விகளையும் அவர் சுவாமிஜியிடம் துணிச்சலாகக்கேட்பார். சுவாமிஜிக்கு ஓய்வு தேவை
என்பதை மற்ற பலரை விடவும் அதிகமாக உணர்ந்திருந்தார்
இவர். உடம்பும் மனமும் எப்போதுமே இறுக்கத்தில் இருக்கக் கூடாது என்பதற்காக வேடிக்கை
வினோதங்கள் மூலம் சுவாமிஜியைச் சற்று தளர்வாக,
ஓய்வாக இருக்குமாறு பார்த்துக் கொள்வார்.
பின்னாளில்
கிறிஸ்டைன் இந்தியப் பெண்களுக்கான பணியில் சகோதரி நிவேதிதைக்கு உதவி செய்வதற்காக இந்தியாவிற்கு
வந்தார். அப்போது கிறிஸ்டைனின்தோழியான ஃபங்கேயும் இந்தியாவிற்கு வர விரும்பினார். அதற்கு
சுவாமிஜி, நீ இல்லறத்தில் வாழ்பவள், உன் கணவனிடமும்
குடும்பத்திலும் கடவுளைக் காண முயற்சி செய். இப்போதைக்கு அது தான் உன் பாதை” என்று கூறிவிட்டார்.
இறுதி நாட்களிலும் .பங்கே சுவாமிஜியிலேயே வாழ்ந்தார்
என்று கூறலாம். எப்போதும் சுவாமிஜி தன்னுடன் இருப்பதை உணர்ந்தவராக அவர் வாழ்ந்தார்.
கடைசி நேரத்தில் இருளை விலக்கியபடி ஒளி ஒன்று வரும். அந்த ஒளியில் சுவாமிஜி ஒளி மயமாக
வந்து தம்மை முக்திக்கு அழைத்துச் செல்வார் ” என்ற நம்பிக்கை அவரிடம் திடமாக இருந்தது.
-
-மேரி லூயி –
-
50- வயதான
இந்தப் பெண் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்தவர். தொடர்ந்து 25 வருடங்களாக நியூயார்க்கில்
வாழ்ந்து வருபவர். கடவுளிடம் பெரிய நம்பிக்கை இல்லாதவராக, சமுதாயவாதியாக வாழ்ந்தார்.
சட்டென்று பார்க்கும்போது ஆணா பெண்ணா என்று உறுதி செய்ய முடியாத தோற்றம் இவருடையது.
தமக்குரியது ஞான மார்க்கம் என்பார் இவர்.
சுவாமிஜி ஆயிரம் தீவுப் பூங்காவில் இருவருக்கும்
சன்னியாச தீட்சையும், கிறிஸ்டைன் உட்பட ஐவருக்கு மந்திர தீட்சையும் பிரம்மச்சரிய தீட்சையும் அளித்தார்.
சுவாமிஜி அபயானந்தர் என்று இவருக்குப்பெயர் அளித்தார் சுவாமிஜி.
ஆயிரம் தீவுப் பூங்காவில் வகுப்புகள் நிறைவடையும்
முன்பே லூயி அங்கிருந்து சென்றுவிட்டார். விரைவிலேயே கலிபோர்னியா மற்றும் வாஷிங்டனில்
வேதாந்த மையங்களை ஏற்படுத்தினார்.
லியான் லான்ட்ஸ்பர்க்-
-
சுவாமிஜியின்
நியூயார்க் வகுப்பு நாட்களிலேயே அவருடன் இருந்தவர் இவர். சுவாமிஜியிடம் ஆயிரம் தீவில்
சன்னியாசம் பெற்ற மற்றொருவர் இவர். இவர் சுவாமி கிருபானந்தர் என்ற பெயர் பெற்றார்.
ஸ்டெல்லா
கேம்ப்பெல்-
-
ஆயிரம் தீவுப்
பூங்கா வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தாலும் இவர் பொதுவாக வகுப்புகளில் கலந்து கொள்வதில்லை. எப்போதும் ஆன்மீக சாதனைகள்
செய்த படி தம் அறையிலேயே இருப்பார். ஆனால்
இவர் சாதனைகள் செய்கிறார் என்பதை மற்றவர்கள் அவ்வளவாக நம்பவில்லை. அவர் ஒருநடிகையாக
இருந்தவர். அழகும் இளமையும் குன்றத் தொடங்கிய போது அவற்றை மீண்டும் பெறுவதற்காக ராஜயோகம் பயில ஆரம்பித்தார். சுவாமிஜி அவருக்கு பால கோபாலனை
இஷ்டதெய்வமாகக் குறிப்பிட்டு, சாதனைகள் கற்பித்திருந்தார்.
ஒரு நாள் வகுப்பில் சுவாமிஜி ஸ்டெல்லாவைப் பற்றி குறிப்பிட்டு, ”அந்தக் குழந்தையை
எனக்குப் படிக்கும். அவள் மிகவும் எளிமையானவள்” என்றார். யாரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை
என்பது போல் வகுப்பில் ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. சுவாமிஜி கம்பீரமாகக் கூறினார், நான் அவளை ஏன் குழந்தை என்று அழைக்கிறேன் தெரியுமா? அதைக்
கேட்டாவது அவள் தன் செயற்கைத் தனத்தையும் கபடங்களையும் விட்டு விட்டு குழந்தை போல்
ஆவாள் என்ற நம்பிக்கையால் தான்.
பின்னாளில் ஆர்ச்சர்ட் ஏரியில் ஒரு தீவில் வீடு கட்டி
தனிமையில் வாழ்ந்தார் ஸ்டெல்லா. தலைப் பாகை அணிந்து கொண்டார். யோகம் பயின்றார். பத்திரிகையாளர்கள்
சென்று அவரைக்கண்டனர். இவரைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வரத் தொடங்கின.சுவாமிஜியுடன
அவர் தொடர்பு வைத்திருந்தார். சுவாமிஜியும் மிஸ் மெக்லவுட் கிறிஸ்டைன் போன்றோருக்கு
எழுதிய கடிதங்களில் ஸ்டெல்லாவைப் பற்றி விசாரித்தார்.
அன்புக் குழந்தை” என்றே அவரைப்பற்றி சுவாமிஜி கடிதங்களில்
குறிப்பிடுகிறார். அவரை இந்தியாவிற்கு அழைத்து
வரவும் சுவாமிஜி முயற்சி செய்தார். ஆனால் அது நடைபெறவில்லை. சில காலத்திற்குப்பிறகு
சாதாரண வாழ்க்கையை மேற்கொண்ட ஸ்டெல்லா 1945-இல் மறைந்தார்.
வால்டர்
குட் இயர்
தம்பதிகள்-
-
1895 ஜனவரியில்
நியூயார்க்கில் சுவாமிஜியின் சொற்பொழிவுகளைக் கேட்ட இவர்கள் தங்களை ”சுவாமிஜியின் தீவிரச்
சீடர்கள்” என்று கூறிக்கொண்டனர். வால்டர் சுவாமிஜியின் சொற்பொழிவுக்
கூட்டங்களில் அறிவிப்பாளராகவும் , வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக் கொள்பவர்களாகவும்
சில காலம் இருந்தார். 1895- செப்டம்பரில் பிரம்மவாதின் பத்திரிகையின் அமெரிக்க ஏஜன்டாகவும்
இருந்தார்.
மிஸ் ரூத்
எல்லிஸ்-
-
இந்தப்பெண் நியூயார்க் பத்திரிகை அலுவலகத்தில் வேலைப் பார்த்தார். மிகவும் மென்மையானவர். எதற்கும்
தன்னைப் பின்னாலேயே வைத்துக் கொள்பவர். பக்தியும்
அன்பும் நிறைந்தவராகத் திகழ்ந்தார் இவர்.
வால்டோவும்
கிறிஸ்டைனும் சுவாமிஜியின் வாழ்வில்
முக்கிய பங்கு வகித்தவர்கள். இவர்களைப் பற்றி பல இடங்களில் கண்டோம். இனியும்
காண இருக்கிறோம்.
இவ்வாறு தாமும் உன்னதங்களில் திளைத்து சீடர்களையும்
திளைக்கச் செய்த சுவாமிஜி ஆயிரம் தீவுப் பூங்காவில் சுமார் ஏழு வாரங்களைக் கழித்துவிட்டு
அங்கிருந்து ஆகஸ்ட் 7-ஆம் நாள் நியூயார்க்கிற்குப்
புறப்பட்டார். புறப்படும் போது இந்த ஆயிரம் தீவுகளை நான் வாழ்த்துகிறேன்” என்று கூறி
விடைபெற்றார்.
தெய்வீக
அழைப்பு
அமெரிக்கப் பணிகளுக்கு ஓர் இடைவெளியாக வந்தது சுவாமிஜியின்
இங்கிலாந்து ப் பயணம். இங்கிலாந்து அன்பர்களின் அழைப்பை ஏற்று அங்கே சென்று சுமார் மூன்று
மாத காலம் தங்கினார் சுவாமிஜி. இந்த நாட்கள் அவருக்குச் சற்று ஓய்வைத் தந்ததுடன் இங்கிலாந்து பணிகளுக்கான வாய்ப்பை அவர்
நேரடியாக அறிந்து கொள்ளவும் உதவியது. இந்தியாவிலிருந்து
புறப்படும் போதே இங்கிலாந்து செல்வது பற்றி எண்ணியிருந்தார் சுவாமிஜி. ஆயிரம் தீவுப்
பூங்காவிலிருந்து நியூயார்க் சென்ற பிறகு அந்த எண்ணம் உறுதி யாயிற்று. இந்த வேளையில்
அவருக்கு மிஸ் ஹென்ரிட்டா முல்லர் என்பவரிடமிருந்து அழைப்பு வந்தது. அதனுடன் இ.டி. ஸ்டர்டி என்பவரும்
இங்கிலாந்தில் வாய்ப்பைச் சுட்டிக் காட்டி, சுவாமிஜியை அழைத்துக் கடிதம் எழுதியிருந்தார்.
அதே வேளையில், பாரிஸில் நடைபெறும் தமது திருமணத்திற்கு வருமாறு பிரான்சிஸ் லெக்கட்டும்
சுவாமிஜியை அழைத்தார். இங்கிலாந்து செல்வதற்கான வாய்ப்பு உருவாகி வருவதைக் கண்ட சுவாமிஜி,
லண்டனில் பணியாற்றுவதற்கான இந்தச் சந்தர்ப்பத்தை
இழக்க விரும்பவில்லை. உங்கள் அழைப்பும் அதனுடன் லண்டனிலிருந்து வந்துள்ள
அழைப்பும் ஒரு தெய்வீக அழைப்பாகவே உள்ளது.
என்று லெக்கட்டிற்கு எழுதினார். இந்த அழைப்புகளை இறைவனின் திருவுளமாக ஏற்றுக் கொண்டு
இங்கிலாந்து செல்வதெனத் தீர் மானித்தார்.
வாழ்த்து-
சுவாமிஜி புறப்பட இருந்த வேளையில் வாழ்த்துக் கடிதம்
ஒன்று அவருக்கு வந்தது. டெட்ராய்ட்டில் சுவாமிஜியின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்த மிசஸ் பாக்லேயிடமிருந்து
அந்தக் கடிதம் வந்திருந்தது. சில நாட்களுக்கு முன்பு தான் சுவாமிஜி இந்தியாவிலிருந்து
சில அழகிய காஷ்மீர் ஷால்களை வரவழைத்து சிலருக்கு
அன்பளிப்பாக அளித்திருந்தார். மிசஸ் சாரா, மிஸ்
பிலிப்ஸ், மிசஸ் பாக்லே போன்றோர் அவர்களில் சிலர். அதனைக் குறிப்பிட்டு மிசஸ்
பாக்லே எழுதியிருந்தார்.
அன்பிற்குரிய சுவாமி விவேகானந்தா
தங்க ஜரிகை
பூ வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய காஷ்மீர் ஷால் இன்று காலை வந்து சேர்ந்தது. என்னை
அன்புடன் நினைவு கூர்ந்ததற்கு நன்றி. அதைப்
பயன்படுத்தும் போதெல்லாம் இந்தியாவின் சிந்தனை மட்டுமல்ல, உங்கள் ஆசிகளும் அதில் பொதிந்திருப்பதை உணர்கிறேன். உங்கள்
இங்கிலாந்து ப் பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு
நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். நீங்கள் மீண்டும் அமெரிக்காவிற்கு , அதிலும்
டெட்ராய்ட்டிற்கு, அதிலும் எங்கள் வீட்டிற்குத் திரும்பி வருவீர்கள் என்று
நம்புகிறோம். டெட்ராய்ட்டிற்கு வரும் போது எங்கள் வீட்டிலேயே தங்க வேண்டும்ஃ அதையே
உங்கள் செயல்மையமாகவும் கொள்ள வேண்டும்.
படித்த சிலரை உங்கள் நாட்டிலிருந்து இங்கே வரவழைத்து
எங்களுக்கு எங்கள் மதத்தையும் பிற மதங்களையும் பற்றி போதிக்குமாறு செய்ய உங்களால் இயலாதா? எங்கள் வாழ்க்கைத் தூண்டவும்,
தேவனை எங்கள் உள்ளத்தில் விழித்தெழச் செய்யவும் இது எங்களுக்குத் தேவை.
நெடுந்தொலைவிற்கு அப்பாலுள்ள ஒரு நாட்டில் தன் மகன்
இவ்வளவு நன்மைகள் செய்துள்ளான் என்பதை அறிகின்ற உங்கள் தாயார் கட்டாயம் மகிழ்ச்சியடைவார்.
எனது அன்பான நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் நான் அவருக்கு அனுப்புகிறேன்.
கடைசி இரு
வாக்கியங்களும் சுவாமிஜியின் இதய ஆழங்களில் சில நரம்புகளைத் தொட்டிருக்கும் என்பதில்
சந்தேகமில்லை. உணர்ச்சி நெகிழ்ச்சியுடனும் நல்வாழ்த்துக் களுடனும் இங்கிலாந்திற்குப்
புறப்பட்டார் அவர்.
குளியலறைக்கு ஒரு தேடல்-
1895- ஆகஸ்ட்
17-ஆம் நாள் நியூயார்க்கிலிருந்து புறப்பட்டு,
24-ஆம் நாள் பாரிஸை அடைந்தார் சுவாமிஜி. அவருடன் பிரான்சிஸ் லெக்கட்டும், பயணம் செய்தார்.
பாரிசில் மிஸ் மெக்லவுட், அவரது சகோதரியான பெற்றி
ஸ்டர்ஜஸ் ஆகியோர் சுவாமிஜியை வரவேற்றனர். பாரிஸ் கோடைக் காலத்தில் மிகவும் சூடான
நகரம். அங்கே குளிர்ந்த வீரில் குளிப்பதற்கு ஏன், முடிந்தால் இமயத்தின் கங்கையிலேயே
மூழ்கிக் கிடப்பதற்கு விரும்பினார் சுவாமிஜி.
ஆனால் விந்தை என்ன வென்றால் பாரிஸ் ஹோட்டல்களில்
குளியலறையே இல்லை! மிகப்பெரிய அதி நவீன ஹோட்டல்களில்
கூட அந்த வசதி இல்லை. ஏனெனில் பிரெஞ்சுக்காரர்கள் குளிப்பது அபூர்வம், பின்னாளில் இது பற்றி சுவாமிஜி வேடிக்கையாக எழுதினார்.
பாரிஸ் இன்றைய
நாகரீகத்தின் தலைநகரம், நாகரிகம் மற்றும் சுகபோகங்களுக்கென அமைந்த சொர்க்கபுரி, கலை
மற்றும் விஞ்ஞானங்களுக்கு மையம், அரண்மனை போன்ற ஹோட்டலில் நான் தங்குவதற்கு ஏற்பாடு
செய்திருந்தனர். உணவு எல்லாமே தடபுடல் தான், ஆனால் குளிப்பது, அந்த வார்த்தை எங்குமே தென்படவில்லை. இரண்டு நாட்கள் எப்படியோ சமாளித்துக்கொண்டேன். அதன் பிறகும் என்னால்
சகிக்க முடியவில்லை. என் நண்பரைச் சந்தித்து, நண்பரே, இந்த அரச போகங்கள் உங்களுக்கே இருக்கட்டும். என்னை விட்டு விடுங்கள். தப்பிப்
பிழைத்துக் கொள்கிறேன். என்ன வொரு சூடு! இங்கோ குளிப்பதற்கு எந்த ஏற்பாடும் இல்லை.
இப்படியே இருந்தால் வெறிநாயாக மாறிவிடுவேன்
” என்று கூறினேன். இதைக்கேட்ட என் நண்பர் வருத்தத்துடன் என்னிடம், இனி இங்கு நீங்கள் இருக்க வேண்டாம். வாருங்கள், வேறு நல்ல இடமாகப்
பார்க்கலாம்” என்று கூறி, ஏறக்குறைய பன்னிரண்டு நல்ல ஹோட்டல்களில் தேடினார். குளிப்பதற்கான வசதியுடன் எந்த ஹோட்டலும் இல்லை. குளிப்பதற்கென்று தனியிடங்கள்
இருக்கின்றன.நான்கோ ஐந்தோ ரூபாய் செலுத்திக் குளிக்க வேண்டும். ராம் ராம்! அன்று பிற்பலில் செய்தித்தாளில் படித்தேன். ஒரு கிழவி குளிப்பதற்காகத்
தொட்டியில் இறங்கினாள், அதிலேயே இறந்து விட்டாளாம், வாழ்க்கையிலேயே முதன் முதலாக உடம்பில்
தண்ணீர் பட்ட தெிர்ச்சியில் தான் அவள் இறந்திருக்க வேண்டும்! நான் மிகையாகக் கூறுவதாக
நினைக்காதீர்கள்,
உண்மையான
செயல்முறை வேதாந்தி-
பாரிஸில்
பல இடங்களையும் பார்த்தார் சுவாமிஜி. ஒரு நாள் அவர் டச்சஸ் டீ போமர் என்ற பெண் மணியுடன்
வண்டியில் சென்று கொண்டிருந்தார். அது கிராமப்பகுதி. வழியில் சாலையோரமாக ஒரு சிறுவனும்
சிறுமியும் தங்கள் வேலைக்காரப் பெண்ணுடன் சென்று
கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டதும் வண்டியோட்டி வண்டியை நிறுத்தி விட்டு, இறங்கி
அந்தக் குழந்தைகளிடம் சென்று சிறிது நேரம்
அவர்களுடன் கொஞ்சி விட்டு வந்தான். அவன் வந்ததும் டச்சஸ், நீ ஏன் போய் அந்தக் குழந்தைகளைச்
சீராட்டினாய்? அவர்கள் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் அல்லவா? என்று கேட்டார். அதற்கு அந்த வண்டியோட்டி, ஏன் நானும் பெரிய பணக்காரனாகத்தான் இருந்தேன்.பாரிஸிலுள்ள பெரிய
வங்கி ஒன்றின் மேலாளராக இருந்தவன் நான். சமீபத்தில் அந்த வங்கி திவாலாகி விட்டது. என்
பணம் அனைத்தும் போய்விட்டது. இருந்த பணத்தில்
குதிரை வண்டியும் குதிரைகளும் வாங்கினேன். கிராமப்பகுதியில் ஒரு வாடகை வீட்டிற்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்தேன். இதோ இப்போது அனைவரும்
சந்தோஷமாக எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம்” என்று கூறினான்.
நடந்தவை
அனைத்தையும் சுவாமிஜி கவனித்துக்கொண்டிருந்தார். அந்த வண்டியோட்டியின் வாழ்க்கைக் கண்ணோட்டம் அவரை வெகுவாகக் கவரந்தது. துன்பம் வந்த போது கலங்காமல்,
அதனை ஏற்றுக்கொண்டு திருப்தியாக வாழ்கின்ற அவனை சுவாமிஜி மிகவும் புகழ்ந்தார்.
இந்த நிகழ்ச்சியைப் பின்னாளில் கூறிய அவர், இதைத்தான் நான் செயல்முறை வேதாந்தம் என்கிறேன். அந்த வண்டியோட்டி
ஒரு செயல்முறை வேதாந்தி, அவன் வேதாந்தத்தின்
சாரத்தைப் புரிந்திருக்கிறான். அவ்வளவு உயர்ந்த நிலையிலிருந்து கீழே சறுக்கியும்
அவன் நிலைகுலையவில்லை. ஆ! அவனது மனத்தின் ஆற்றல்தான் எவ்வளவு உயர்ந்தது! கடவுளுக்குத்தான்
நன்றி சொல்ல வேண்டும். அவன் உண்மையிலேயே ஒரு வேதாந்தி” என்று கூறினார்.
இரண்டு வாரங்கள் பாரிஸில் தங்கி பிரான்சிஸ் லெக்கட்-
பெற்றி ஸ்டர்ஜஸின் திருமணத்தில் கலந்து கொண்டு
1895 செப்டம்பரில் லண்டனை அடைந்தார் சுவாமிஜி.
இங்கிலாந்திற்கு சுவாமிஜியை அழைத்தவர்களில் ஒருவரான ஸ்டர்டி ஓர்
ஆங்கிலேய இளைஞர். சித்து வேலைகளில் ஈடுபாடு கொண்ட அவர் அவற்றை நாடி சுமார் இரண்டு வருடங்களுக்கு
முன்பு இந்தியாவிற்கு வந்தார். தியாசபிகல் சொசைட்டியில் அங்கத்தினராக இருந்த அவர் இந்துக்களின் ஆசார அனுஷ்டானங்களைத்
தீவிரமாகக் கடைபிடித்தார். அல்மோராவில் சிவானந்தரைச் சந்தித்தபோது அவரால் மிகவும் கவரப்
பட்டார். அதன் பிறகு தியாசபியை விட்டு விட்டு வேதாந்தத்தைப் பின் பற்றத் தொடங்கினார்.
அவர் பெரிய செல்வந்தர், சம்ஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர், இந்து மத சாஸ்திரங்களைக்
கற்றவர். மிஸ் முல்லரும் தியாசபிகல் சொசைட்டியைச் சேர்ந்தவர். ஆனால் இருவருமே பிறகு அதிலிருந்து விலகிவிட்டனர்.ஆரம்பத்தில்
சுவாமிஜி ஸ்டர்டியின் வீட்டில் தங்கினார்.
அந்த வீடு தேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருந்தது. இரண்டு பக்கங்களிலும் மரங்கள் வளர்ந்திருந்தன.
தீவிரப்
பணியில் ஈடுபட வேண்டும் என்றோ, ஒரு குறிப்பிட்ட
திட்டத்துடனோ சுவாமிஜி இங்கிலாந்திற்குச் செல்ல வில்லை. அமெரிக்கப் பணிகளிலிருந்து சற்று ஓய்வு பெற இங்கிலாந்துப் பயணம் உதவும் என்றே அவரது
அமெரிக்க நண்பர்களும் கருதினர். அமெரிக்காவை விட சுவாமிஜி இங்கிலாந்தில் சற்று அறிமுகமானது
போன்ற உணர்ச்சியைப்பெற்றார்.
ஆங்கிலேயர்களில்
பலர் இந்தியாவை நேசித்தனார். ஆனால் சிலர் குறை கூறி புறக்கணிக்கவும் செய்தனர். அமெரிக்காவில்
சுவாமிஜியை எதிர்த்த பாதிரிகளும் மிஷினரிகளும் தங்கள் கைவரிசையை இங்கிலாந்திலும் காட்டினர்.
அவரைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பினர். அமெரிக்காவைப்போலவே இங்கும் அவர் இந்த எதிர்ப்புகள்
எதைக் கண்டும் அஞ்சவில்லை.ஏனெனில் எனக்கு ப் பின்னால் இருக்கின்ற சக்தி விவேகானந்தன்
அல்ல, இறைவனே! என்பது சுவாமிஜியின் மாறாத அனுபவமாக
இருந்தது.
ஒரு நாள் சுவாமிஜி மிஸ் முல்லருடனும் மற்றோர் ஆங்கிலேயருடனும்
வயல் வெளிப் பாதை ஒன்றில் சென்று கொண்டிருந்தார்.
திடீரென்று எதிர்த் திசையில் காளை ஒன்று சீறிக்கொண்டு பாய்ந்தோடி வந்தது. ஆங்கிலேயன்
ஒரே ஓட்டமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் நின்று
கொண்டான். முல்லர் இயன்ற அளவு ஓடினார். இயலாமல் போன போது ஆயாசத் துடன் அமர்ந்து விட்டார்.
இந்தப் பெண்மணிக்கு உதவ இயலவில்லையே” என்று ஒரு கணம் யோசித்த சுவாமிஜி நேராக ஓடி முல்லருக்கு முன்னால்
சென்று நின்று கொண்டார்.கைகளைக் கூப்பி, கண்களை மூடிக்கொண்டார். அவ்வளவு தான், இன்னும்
சிறிது நேரத்தில் எல்லாம் முடிந்து விடும்” என்று அவருக்குத்தோன்றியது. காளைப்
பாய்ந்து தன் கூரிய கொம்புகளால் கிழிக்கப் போகின்ற அந்தக் கணத்திலும் சுவாமிஜிக்கு வேடிக்கையுணர்வு தான் மனத்தில் எழுந்தது. காளை வந்து என்னை முட்டி கொம்புகளால் தூக்கி எறியும் போது
எத்தனை அடி தூரத்தில் போய் விழுவேன்? என்று கணக்குப்போட்டது அவரது மனம். ஆனால்
பாய்ந்து வந்த காளை என்ன தோன்றிற்றோ என்னவோ! சுவாமிஜிக்கு சில அடிகள் முன்பாக வந்ததும்
அது திடீரென்று நின்றது. கைகளைக் கூப்பியபடி நின்ற சுவாமிஜியை ஒரு முறை பார்த்தது.
தலையை த் திருப்பிக்கொண்டு பின் வாங்கியது.
ஸ்டர்டியுடனும்
சில வேளைகளில் முல்லருடனும் படிப்பிலும் விவாதங்களிலுமாக
நாட்களைச் செலவிட்டார் சுவாமிஜி. ஆரம்பத்தில் ஒரு மாதம் ஸ்டர்டியின் சாஸ்திரப் படிப்பிலும்
சில நூல்களை மொழிப்பெயர்ப்பதிலும் உதவினார்.
அவற்றுள் ஒன்று ”நாரத பக்தி சூத்திரங்கள்”. அவ்வப்போது சில சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினார்.
அன்பு பற்றி கீழை நாட்டு க் கருத்து, ஆன்ம ஞானம்” போன்றவை
அவர் பேசிய தலைப்புகள். இந்தச் சொற்பொழிவு களின் மூலம் இங்கிலாந்தில் பல பணிகளுக்கு அஸ்திவாரம் இடப்பட்டது. பெரிய அளவில்
எந்த ப் பணியும் நிகழ வில்லை. ஆனால் இந்த முறை சுவாமிஜியும், அவர் மூலம் இந்தியாவும்
ஒரு பெரிய பரிசைப்பெற்றன. அந்தப் பரிசே பின்னாளில் சகோதரி நிவேதிதையாக மலர்ந்த மார்கரெட் எலிசபெத் நோபிள்.
லேடி மார்க்கசனின்
வீட்டு வரவேற்பறையில் முதன் முறையாக சுவாமிஜியைச்
சந்தித்தார் நோபிள். அது நவம்பர் ஆரம்பம்.நோபிள் எழுதுகிறார்.அன்று பதினைந்து அல்லது பதினாறு நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப் பட்டிருந்தனர். அவர்களுக்கு
நடுவில் சுவாமிஜி அமர்ந்திருந்தார். சிவப்பு
வண்ண ஆடை அணிந்திருந்தார். தொலை தூர தேசத்திலிருந்து ஏதோ செய்தி கொண்டு வந்திருக்கின்ற
ஒரு தேவதூதராக அவர் தென்பட்டார். அவ்வப்போது
”சிவ சிவ” என்று அவர் ஓதியது மனத்திற்கு இதமாக இருந்தது. காலங்காலமாக
தியான வாழ்க்கையில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களின் முகத்தில் ஓர் அமைதி நிலவுமே, அது அவரது
முகத்தில் பொலிந்திருந்தது. அவரது பார்வை யில்
ஒரு கனிவும் கம்பீரமும் கலந்து தென்பட்டன. ராஃபேல் வரைந்த தெய்வக் குழந்தையின் பார்வையில்
கனிந்து தோன்றுமே, அத்தகைய கனிவு அது........ அவர் அன்று ஓதிய சில சம்ஸ்கிருத சுலோகங்கள்
இன்றும் என் காதுகளில் ஒலிக்கின்றன. எவ்வளவு
இனிமையான, அதே வேளையில், சர்ச்சில் ஒலிக்கின்ற
பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இசை அது!
முதல் சந்திப்பின் போதே சுவாமிஜியால் மிகவும் கவரப்பட்டார்
நோபிள். பின்னர் சுவாமிஜியின் ஓரிரு சொற்பொழிவுகளைக்கேட்டார். சுவாமிஜியின் எல்லா கருத்துக்களையும்
நோபிளால் உடனடியாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. எனவே சொற்பொழிவு நடக்கும்போதே பல முறை,
ஆனால் .... சுவாமி............ என்று அவர் சுவாமிஜியை இடைமறித்து கேள்விகள் கேட்டார்,
மறுத்து ப்பேசினார். நோபிளின் போக்காலே கேள்விகளாலோ சுவாமிஜி கலங்க வில்லை. இப்படித்தான் கேள்விகள்
கேட்டும் மறுத்துப்பேசியும் நான் என் குருதேவருடன் ஆறு நீண்ட வருடங்கள் போராடினேன். அதன் விளைவாகத்தான் பாதையின் ஒவ்வொரு
பகுதியும் இன்று எனக்குத் தெரிந்திருக்கிறது. என்று நோபிளின் ஆராயும்
மனத்தைத் தூண்டினார் அவர். படிப்படியாக சுவாமிஜியின் கருத்துக்களால் கவரப் பட்டு, அவரால் ஆட்கொள்ளப் பட்டார் நோபிள்.
இங்கிலாந்திலிருந்து
புறப்படுதல்-
இந்த முதல் பயணம் இங்கிலாந்தில் சுவாமிஜியின் எதிர்காலப்
பணிகளுக்கு ஓர் ஆரம்பமாக அமைந்தது. இங்கிலாந்துப் பணியை பொறுத்தவரை சுவாமிஜி மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். அங்கே
பணியைத் தொடர்வதற்குத் தமது சகோரதச் சீடர்கள் யாரையாவது அழைக்கவும் எண்ணினார் அவர்.ஸ்டா்டியும்
அதையே விரும்பினார். வருபவர் ஆங்கிலத்திலும் சாஸ்திரங்களிலும் நல்ல தேர்ச்சி உடையவராக
இருப்பது அவசியம். சுவாமிஜியின் மனத்தில் ராமகிருஷ்ணானந்தர்,
அபேதானந்தர், திரிகுணாதீதர், சாரதானந்தர், ஆகியோர் தோன்றினாலும், உடல் ஆரோக்கியத்திலும்
சாரதானந்தர் பொருத்தமானவராக இருந்தார். எனவே அவரை வருமாறு கூறி எழுதினார்.
சமார்
14 வாரங்கள் இங்கிலாந்தில் கழித்த சுவாமிஜி நவம்பர் 27-ஆம் நாள் நியூயார்க்கிற்குக்
கிளம்பினார். இந்தப் பயணம் மிகவும் கடுமையாக இருந்தது. அட்லாண்டிக் கடல் வழியாக வந்தபோது
கப்பல் கடுமையான ஆட்டத்திற்கு உள்ளாகியது. கடல் நோய்களாலும் தாக்கப் பட்டார் சுவாமிஜி.
டிசம்பர் 6-ஆம் நாள் நியூயார்க் சென்றுசேர்ந்தார். நியூயார்க் துறைமுகத்தில் கிருபானந்தர்
சுவாமிஜியை வரவேற்று அழைத்துச்சென்றார். கிருபானந்தருடன் தங்கினார் அவர். அங்கேயே வகுப்புச்
சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார். ஆனால் அந்த இடம் சுவாமிஜிக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
குறைந்த வாடகையும் , நகரத்தின் எந்த இடத்திலிருந்தும்
அந்த வீட்டை எளிதாக அடையலாம் என்ற நிலைமையும் தான் அனுகூலமானவை. வீடு அதன் சுற்றுப்புறம் எதுவுமே சுவாமிஜியின் வாழ்க்கைக்கு
ஏற்றவையாக இல்லை.
சுவாமிஜி இங்கிலாந்திற்குச் சென்றிருந்த அந்த நாட்களில்
கிருபானந்தரும் அபயானந்தரும் பல இடங்களில்
வகுப்புகள் நடத்தினர். சுவாமிஜி தமது சீடர்களில் அவர்கள் இருவருக்கும் மட்டுமே வகுப்புகள் நடத்துவதற்கான அனுமதி அளித்திருந்தார். திரும்பி வந்த பிறகு அவர்
வகுப்புகளைத் தொடர்ந்தார்.
ஒரு நாள் சுவாமிஜி வால்டோவிடம், இந்த இடத்திலுள்ள உணவு அவ்வளவு தூய்மையானதாகத் தெரியவில்லை.
நீ எனக்காகச் சமைக்க முடியுமா? என்று கேட்டார். வால்டோ மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்தப்
பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அன்று அங்கேயே சமைத்தார். மறுநாள் தமது வீட்டிலிருந்து
சமைப்பதற்கான பாத்திரங்கள் முதலியவற்றைக் கொண்டு வந்து சமைக்கத்தொடங்கினார். பின்னாளில்
சுவாமிஜி வால்டோவிற்கு ”சகோதரி ஹரிதாஸி” என்ற பெயர் அளித்தார். ஹரிதாஸி
என்பது ,. இறைவனின் சேவகி” என்று பொருள் பெறுகிறது. சுவாமிஜியின்
ஒரு சேவகியாகவே திகழ்ந்தார் வால்டோ.
வால்டோவின் வீடு புரூக்லினில் இருந்தது. தினமும்
அவர் குதிரை வண்டியில் இரண்டு மணிநேரம் பயணம் செய்து வர வேண்டும். காலையில் ஏழு அல்லது எட்டு மணிக்கு வந்து சமையல் செய்து மற்ற வேலைகளையும்
முடித்துவிட்டு இரவு ஒன்பது பத்து மணிக்கு வீடுபோய்ச்சேர்வார். இப்படி தொடர்ந்து பல
நாட்கள் நடைபெற்றன. வால்டோவிற்கு சுவாமிஜியிடம் இருந்த பக்தி அலாதியானது.
சொற்பொழிவுகள்
எதுவும் இல்லை என்றால் சுவாமிஜி வால்டோவின் வீட்டிற்குச் செல்வார். சிலவேளைகளில்,
நான் உதவுகிறேன்” என்று கூறி அவர் சமைப்பதும் உண்டு.
அன்று வால்டோவிற்கு உதவி பெரிதாக அமைவதில்லை என்பது மட்டுமல்ல, வழக்கத்திற்கு அதிகமாக
பாத்திரங்கள் கழுவ வேண்டியிருக்கும் என்பது தெரிந்தது தானே!
தமக்குச்
சொந்தமானவர் என்று சுவாமிஜியாலேயே அழைக்கப்
படும் பேறு பெற்றவர் வால்டோ. அந்த நிகழ்ச்சியைக் காண்போம். ஒரு நாள் ஓர் ஒரமாக அமர்ந்து
வால்டோ அழுது கொண்டிருந்தார். அதைக் கண்ட சுவாமிஜி அவரிடம் சென்று காரணம் கேட்டார். அதற்கு ”வால்டோ என்னை உங்களுக்குப்
பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது. வேறு யாராவது
தவறு செய்தாலும் நீங்கள் என்னையே திட்டுகிறீர்கள” என்றார். சுவாமிஜி உடனே, அவர்களை
எல்லாம் நான் எப்படித் திட்ட முடியும்? அந்த அளவிற்கு அவர்களை எனக்கு நெருக்கமாகத்
தெரியாது. அதனால் தான் உன்னிடம் வருகிறேன். எனக்குச் சொந்தமானவர்களை அல்லாமல் வேறு
யாரைத் திட்ட முடியும்? என்று கேட்டார் . அதன் பிறகு சுவாமிஜியின் கோபமும் ஏச்சுக்களும்
வால்டோவை வருத்தமுறச் செய்யவில்லை. சுவாமிஜிக்குச் சொந்தமானவராக இருப்பதிலேயே திருப்தி
கண்டார் அவர்.
குட்வின்
உலகின் நன்றிக்கு உரியவர்
வால்மீகி
இல்லாமல் ராமாயணம் இல்லை. வியாசர் இல்லாமல் மகாபாரதம் இல்லை, ம- இல்லாமல் ஸ்ரீராமகிருஷ்ணரின்
அழுத மொழிகள் இல்லை. குட்வின் இல்லாமல் சுவாமிஜியின் சொற்பொழிவுகள் இல்லை. இன்றைய உலகம் சுவாமிஜியின்
சொற்பொழிவுகள் என்னும் மாபெரும் இலக்கியத்தைப் பெற்றுள்ளது என்றால் அதற்குக் காரணம்
ஜோசையா ஜான் குட்வின். அதனால் என்றென்றும் உலகின்
நன்றிக்கு உரியவர் அவர். அவர் இந்த நாட்களில் சுவாமிஜியின் வாழ்க்கையில் இணைந்தார்.
சுவாமிஜியின் சொற்பொழிவுகளைக் குறிப்பெடுப்பதற்காகப் பலரை நியமித்தார்கள். ஆனால் யாரும்
தொடர்ந்து நிலைக்கவில்லை. கடைசியாக டிசம்பர் 12-ஆம் நாள் ”ஜெரால்ட் , வோர்ல்ட் என்ற இரண்டு பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுக்கப்
பட்டது.
தேவை- வாரத்திற்குப் பல மணி நேரத்திற்கு நடைபெறும்
சொற்பொழிவுகளை விரைவாகச் சுருக்கெழுத்தில் எழுத ஒருவர் தேவை. எண்-228, 39-ஆம் மேற்குத்
தெரு என்ற முகவரியில் விண்ணப்பிக்கவும்.
இந்த விளம்பரத்தின் மூலம் சுவாமிஜியிடம் வந்தார்
குட்வின்.
குட்வின் ஓர் ஆங்கிலேயர். 25 வயது இளைஞர். பத்திரிகைத்
துறையில் பல வருட அனுபவம் உடையவர். மூன்று செய்தித்தாள்களுக்கு ஆசிரியராகவும் பின்னர்
நிரூபராகவும் பணியாற்றியவர். குட்வினைக் கண்ட போது சுவாமிஜிக்கு அவரிடம் ஓர் அலாதியான
நெருக்கம் ஏற்பட்டது. ஒரு பணியாளராக அல்லாமல் தம்முடையவராகவே அவரைக் கண்டார் சுவாமிஜி.
அப்படியே ஏற்றுக்கொள்ளவும் செய்தார். பின்னாளில் குட்வின் கூறினார், எனது முற்பிறவிகள்
பலவற்றைப் பற்றி சுவாமிஜி என்னிடம் சொன்னார். இது என்னில் , எனது வாழ்க்கையில் ஒரு
புரட்சியை ஏற்படுத்தியது. எனது வாழ்க்கை மாறியடைந்தது. நான் ஏழையாகப் பிறந்தவன். வாழ்க்கை
வழி தேடி பல இடங்களிலும் அலைந்தேன். பெரும் புள்ளிகள் பலரிடம் வேலை பார்த்தேன். அவர்கள்
எனக்கு வேலை தந்தார்கள். சம்பளம் தந்தார்கள். ஆனால் யாரும் இதயத்தின் அன்பைத் தரவில்லை.
கடைசியாக அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தரைச்
சந்தித்தேன். அன்பு என்றால் என்ன என்பதை அதன்
பிறகே புரிந்து கொண்டேன். சம்பளமோ, சம்பளம் இல்லையோ, நான் அவரிடம் பிடிபட்டு விட்டேன்.
சுவாமி விவேகானந்தரைப்போன்ற ஒரு மாமனிதரை நான் கண்டதில்லை. நமக்கு மிக நெருங்கிய ஒருவரைப்போல்
அவரிடம் நாம் ஈர்க்கப் பட்டு விடுவோம்.
“
இன்றைய சுருக்கெழுத்து
முறைகள் அன்று பிரபலமாகவில்லை. காலை மாலை இருவேளைகளிலும் சுவாமிஜியின் வகுப்புகள் நடைபெற்றன.
அவரது விரைவிற்கு ஈடுகொடுத்து , தமக்கென்று
ஒரு பாணியில் குறிப்பெடுத்துக் கொண்டு பிறகு
அதனை டைப் செய்து கொள்வார் குட்வின். அவர் ஏழை. சம்பளம் பெற்றுக் கொண்டேயாக வேண்டும்.
எனவே தமது செலவுகளுக்குரிய பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு இரவு பகல் பாராமல் பணியில் ஈடுபட்டார். இப்படி நமக்குக் கிடைத்தவையே
சுவாமிஜியின் பெரும்பாலான சொற்பொழிவுகள்.
பிப்ரவரி
ஆரம்பத்தில் நியூயார்க்கில் சுவாமிஜி இரண்டு மேதைகளுடன் நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்புக்
கிடைத்தது. மேதைகள் மூவரும் ஒரு நாள் சந்தித்தனர்.
மேரி லூயி பர்க் எழுதுகிறார், ”ஆன்மீக மேதையான சுவாமிஜி, கலையுலக மேதையான மேடம் சாரா
பெர்ன்ஹர்ட், விஞ்ஞான மேதையான நிக்கோலா டெஸ்லா,- இந்த மூவரின் சந்திப்பு நாம் கற்பனையில்
கண்டு மகிழ வேண்டிய ஓரு காட்சியாகும். ஒவ்வொருவரும்
தங்கள் துறையில் மேதைகள். இவர் மனித ஆற்றலை மீறிய ஆற்றல் கொண்டவர்” என்று ஒவ்வொருவரும்
மற்ற இருவரைப் பற்றி கருதினார்கள். மூவரிடமிருந்தும் அசாதாரணமான ஆற்றல் வெளிப்பட்டு
பல நிலைகளில் உலகை வலம் வந்தது. சாரா பெர்ன்ஹர்ட் உணர்ச்சிகள் மற்றும் புலன்களின் உலகில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டினார். அறிவின் உலகில்
தமது ஆதிக்கத்தைக் காட்டினார் நிக்கோலா. அறிவு, உணர்ச்சிகள் இரண்டையும் தழுவி, அதே
நேரம் இரண்டையும் கடந்த ஆன்ம உலகில் தமது ஆதிக்கத்தைச்செலுத்தினார் சுவாமிஜி.
இந்த மூன்று
மேதைகளும் 1896 பிப்ரவரி 5-ஆம் நாள் சந்தித்தார்கள். அவர்களைப் பற்றியும் அவர்கள் மூலம்
தாம் செய்யவிருந்த பணி பற்றியும் சுவாமிஜி
இவ்வாறு எழுதுகிறார்.
பிரெஞ்சு நடிகையான சாரா பெர்ன்ட்ஹர்ட் இங்கு” இஸீல்” என்னும் நாடகத்தை நடித்து வருகிறார்.
பிரெஞ்சு பாணியில் ஆக்கப் பட்டுள்ள புத்தரின் வாழ்க்கை அது. இஸீல் என்ற நாட்டியப்பெண்
புத்தரை ஆலமரத்தடியில் மயக்க விரும்புகிறாள். புத்தர் அவளுக்கு உலகத்தின் சாரமற்ற தன்மையை
எடுத்துக் கூறுகிறார். அவள் அந்த நேரமெல்லாம் புத்தரின் மடி மீதே உட்கார்ந்திருக்கிறாள்.
நன்மையில் முடிவதெல்லாம் நல்லதே என்பார்கள்
அல்லவா? அவள் தனது முயற்சியில் தோற்றுவிடுகிறாள். பெர்ன்ஹர்ட் அந்த நாட்டியப் பெண்ணாக
நடிக்கிறார்.
அந்த நாடகத்தைப்
பார்க்கச்சென்றேன். அதை எப்படியோ அறிந்துகொண்ட பெர்ன்ஹர்ட் என்னிடம் பேச விரும்பினார்.
பிரபல பாடகியான எம். மாரெல்லும் , பெரிய மன்னியல் நிபுணரான நிக்கோலாவும் உடன் இருந்தனர்.பெர்ன்ஹர்ட்
நிறைய கற்றவர். மத விஷயங்களை நன்றாகப் படித்திருக்கிறார். மாரெல்லும் ஆர்வமாக இருந்தார்.
டெஸ்லாவோ, வேதாந்தம் கூறுகின்ற பிராணன், ஆகாசம், கல்பங்கள் போன்றவற்றைக் கேட்டு மிகவும்
மகிழ்ந்தார். நவீன விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கைகள் இவை மட்டுமே என்பது அவரது
முடிவு. ஆகாசம், பிராணன், இரண்டும் மஹத், பிரபஞ்ச மனம், பிரம்மா அல்லது ஈசுவரனிடமிருந்தே வெளிப்படுகின்றன. சக்தி, ஜடம் ஆகிய இரண்டையும் இயங்கா
ஆற்றலாக மாற்றிவிட முடியும் என்பதை க் கணித முறையில் காட்ட இயலும் என்று எண்ணுகிறார்
டெஸ்லா. இந்தப் புதியக் கணித முறையை அறிவதற்காக நான் அடுத்த வாரம் வரைச்சென்று பார்க்க
வேண்டும்.
அவ்வாறு நிரூபிக்கப் பட்டு விட்டால் , வேதாந்தம்
கூறுகின்ற படைப்புக் கொள்கை உறுதியான அஸ்திவாரத்தில்
நிலைபெற்றதாகிவிடும். இப்போது நான் வேதாந்தத்தின் படைப்புக்கொள்கை மற்றும் மரணக் கொள்கை
பற்றி ஆராய்ந்து வருகிறேன். அவை நவீன விஞ்ஞானத்துடன் பூரணமாக ஒத்திருக்கின்றன. ஒன்றை
விளக்கினால் மற்றது விளங்கி விடும் என்பதைக் காண்கிறேன். கேள்வி-பதில் வடிவத்தில் நூல்
ஒன்றும் எழுத எண்ணியுள்ளேன். அந்த நூலின் முதல் அத்தியாயம் படைப்புக் கொள்கைப் பற்றியதாக இருக்கும். வேதாந்தக்கொள்கைகளுக்கும்
நவீன விஞ்ஞானத்திற்கும் உள்ள இயைபைக் காட்டுவதாக அது இருக்கும்.....
இப்போது
எனக்குத் தெளிவான ஒளி கிடைத்துள்ளது. மாய வேலையெல்லாம் இல்லாத ஒளி அது. நான் கொடுக்க
விரும்புவது இது. வறண்ட கடினமான ஆராய்ச்சி என்பதை அன்பு என்ற இனிப்புப் பாகுவில் மிருதுவாக்கி,
தீவிரமான செயலின் மூலம் மணமூட்டி, யோகம் என்னும்
சமையலறையில் சமைத்து, குழந்தையும் எளிதில் ஜீரணித்துக்கொள்கின்ற வகையில் கொடுக்க விரும்புகிறேன்.
சுவாமிஜியின் விஞ்ஞான மனம் இந்தக் கருத்துக்களை வாழ்நாள்
முழுவதும் ஆராய்ந்து வந்தது. பின்னாளில் லாகூரில் அவர் பேசிய மிகப் பிரபலமான வேதாந்தம்
என்ற சொற்பொழிவிலும் அவர் தமது ஆராய்ச்சியைத் தொடர்வதைக் காண்கிறோம்.
ஆற்றல்களின் ஒருமை உள்ளது- அது பிராணன், தூல ஜடத்தின்
ஒருமை உள்ளது- அது ஆகாசம். இவை இரண்டிற்கும் அடிப்படையாக ஏதாவது ஒருமை இருக்கிறதா?
இவற்றைச்சேர்த்து ஒன்றாக்க முடியுமா? தற்கால விஞ்ஞானத்தில் இந்தக் கேள்விக்குப் பதிலில்லை.
இதற்குப் பதில் காணும் ஆற்றலை அவை பெறவில்லை.
நிக்கோலாவின் விஞ்ஞான அறிவையும் கடந்து அன்றே சிந்தித்தார்
சுவாமிஜி.ஜடப்பொருளும் ஆற்றலும் வெவ்வேறானவை
என்று தான் நிக்கோலாவும் எண்ணியிருந்தார்.
அணு என்பது திடமான, கடினமான , உடைக்க முடியாத
, பிரிக்க முடியாத ஒன்று, என்று நியூட்டன் கூறியதையே பத்தொன்பதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகள்
நம்பியிருந்தார்கள். நிக்கோலாவும் அதையே கூறினார். ஜடப் பொருளும் ஆற்றலும் அடிப்படையில்
ஒன்று தான், ஒன்றை மற்றொன்றாக மாற்ற முடியும் என்று அவர் நம்பவில்லை. நம்ப விரும்பவில்லை. இந்த
விஷயத்தில் சுவாமிஜி அவரைவிட எத்தனையோ படிகள்
முன்னால் சிந்தித்தார்.
இந்த மூவரும் மீண்டும் ஒன்றாகச் சந்திக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு ஒரு முறை வான்வெளியில் அபூர்வமாகச் சில கிரமங்களின்
சேர்க்கை நடைபெறுமே, அது போன்றது, இந்த மூன்று
மேதைகளின் சந்திப்பு, இந்தச் சந்திப்பினால்,
சாராவின் வாழ்க்கையிலும், நிக்கோலாவின் வாழ்க்கையிலும் , பொதுவாக மனித வாழ்க்கையிலும்
என்ன தாக்கம் நிகழ்ந்தது என்பதை நாம் ஊகிக்க மட்டும் தான் முடியும். என்று பரவசத்துடன்
எழுதுகிறார் மேரி லூயி பர்க்.
இந்த நாட்களில்
சுவாமிஜியின் பணி எல்லா வகையிலும் வளர்ச்சி கண்டது. சொற்பொழிவுகள் தொடர்ந்து நடைபெற்றன. நான்கு யோகங்கள், பிரபஞ்சம்
சாங்கியம் போன்ற சொற்பொழிவுகளும் வகுப்புச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார் அவர்.
அபயானந்தரும் கிருபானந்தரும் பல இடங்களில் வகுப்புகள் நடத்தினர்.
இந்த நாட்களில்
சுவாமிஜி
”சமயசமரசக்கோயில்” ஒன்று கட்டுவதற்கான முயற்சிகளிலும்
ஈடுபட்டார். எல்லா மதங்களும் ஒரே இறைவனிடம் கூட்டிச்செல்லும் பாதைகளே என்ற நோக்கத்துடன் இந்தக்கோயில்
அனைவருடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கான ஓர்
அமைப்பாக அது இருக்கும் என்று பத்திரிகைகள் எழுதின. ஆனால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக
மார்ச்சில் அளசிங்கருக்கு எழுதினார் சுவாமிஜி.
மற்றொரு முக்கியப் பணியையும் இந்த நாட்களில் செய்தார்
சுவாமிஜி. அது மந்திர தீட்சை. சுவாமிஜி பலருக்கு மந்திர தீட்சை அளித்தார். டாக்டர்
ஸ்ட்ரீட் என்பவருக்கு சன்னியாச தீட்சை அளித்து,
அவருக்கு சுவாமி யோகானந்தர் என்ற பெயரும் அளித்தார். வால்டோ, குட்வின், வான்ஹாகன் ஆகிய
மூவருக்கு பிரம்மச்சரிய தீட்சை அளித்தார். வால்டோவிற்கு ”ஹரிதாஸி” என்ற பெயரை அளித்திருந்தது போலவே ”யதி மாதா” என்ற பெயரையும் அளித்தார். பின்னாளில் வால்டோ பொதுவாக ”சகோதரி
யதி மாதா” என்ற பெயரிலேயே அறியப்பட்டார்.
நியூயார்க்கில் சுவாமிஜியின் இறுதிச்சொற்பொழிவு பிப்ரவரி 23-ஆம் நாள் நடைபெற்றது அன்று சுவாமிஜி
ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி பேசினார்.
மார்ச் 3-ஆம் நாள் சுவாமிஜி நியூயார்க்கிலிருந்து
டெட்ராய்ட் சென்றார். சுவாமிஜியும் குட்வினும் தங்குவதற்கான ஏற்பாடுகளைக் கிறிஸ்டைனும்
ஃபங்கேயும் செய்திருந்தார்கள். முதன் முறை
சுவாமிஜி சென்றபோது எதிர்ப்புகளும் பதில்களுமாக
பூகம்பமே வெடித்தது போல் சம்பவங்கள் நடந்தது பற்றி ஏற்கனவே கண்டோம். மீண்டும் ஒரு முறை
அத்தகைய பொது வாழ்க்கையை அவர் விரும்பவில்லை. இந்த முறை அமைதியாகச் சென்று சில வகுப்புச்
சொற்பொழிவுகளை நடத்துவதும், தகுதியான சிலரை
ஆன்மீக வாழ்வில் வழி நடத்துவதும் சுவாமிஜியின் நோக்கமாக இருந்தது.ஆனால் அவர் அனுமதியின்றி, அவர் வருவதைப் பத்திரிகைகளில் விளம்பரம்
செய்து விட்டிருந்தார் கிருபானந்தர். மீண்டும் ஒரு பத்திரிகைப்போர் தொடங்கியது. தோபர்ன்
என்ற பாதிரி வழக்கம்போல் சுவாமிஜியைப் பற்றி
அவதூறுகளை எழுதி, விவேகானந்தரை டெட்ராய்ட்டிலிருந்து வெளியே துரத்துவோம்” என்று கூறியிருந்தார்.
மறுநாள் சுவாமிஜி தங்கியிருந்த இடத்தில் பெரும் கூட்டம்
திரண்டது. இதில் பெரும்பாலானோர் புதியவர்கள்.
சில நண்பர்கள் மற்றும் சீடர்களுடன் அமைதியாக நாட்களைக் கழிக்க எண்ணிய சுவாமிஜிக்குஇது
மிகுந்த எமாற்றமாக இருந்தது. பத்திரிகையில் தோபர்ன் எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டி
பலரும் சுவாமிஜியிடம், நீங்கள் ஏன் இதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை? என்று கேட்டனர்..
அதற்கு சுவாமிஜி ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவதைப் பதிலாகக் கூறினார். ”யானையைப் பார்த்து
நாய் குரைப்பதால் யானைக்கு ஏதாவது தீங்கு நேருமா? யானை அதைப் பொருட்படுத்துமா? என்று கேட்டார்.
ஈவினிங் நியூஸ் என்ற பத்திரிகையில் ஸ்ரீராமகிருஷ்ணரின்
படத்தையும் அச்சிட்டு, அவரையும் குறை கூறியிருந்ததைக்
கண்ட போது சுவாமிஜியால் தாங்க இயலவில்லை. இதற்கெல்லாம் காரணமாக இருந்த கிருபானந்தரை
சுவாமிஜி கடிந்து கொண்டார்.
இந்தக் குழப்பங்களுக்கு இடையே தமது வகுப்புகளை ஆரம்பித்தார்
சுவாமிஜி. எதிர்ப்பாளர்களின் வாயை அடைப்பதற்காகச் சில நேரங்களில் அவர் பொதுச்சொற்பொழிவுகளும்
நிகழ்த்த வேண்டியிருந்தது.
சுமார் இரண்டு வாரங்களே டெட்ராய்ட்டில் தங்கிவிட்டு
போஸ்டனுக்குப் புறப்பட்டார் சுவாமிஜி. அங்கு சில சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.
1896 மார்ச் 25-ஆம் நாள் போஸ்டனில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பேசினார்.
ஹார்வர்ட்
பல்கலைக்
கழகத்தில்
இந்தச் சொற்பொழிவு மிகவும் பாராட்டப் பட்டதுடன், இந்த நிகழ்ச்சி அவரது அமெரிக்க வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவும் அமைந்தது. இதற்கு
முன்பு ஓரிரு முறை அவர் அங்கே பேசியுள்ளார். எனவே அங்குள்ள மாணவர்களின் இடையில் சுவாமிஜி
பிரபலமானவராகவே இருந்தார். அன்று அவர் ”வேதாந்த தத்துவம்” என்ற தலைப்பில்
பேசினார். இது சுவாமிஜியின் சொற்பொழிவுகளில் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப் படுகிறது. சொற்பொழிவு
முடிந்து கேள்வி- பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்தத் தத்துவத்தின் உயர்வைக் கண்ட ஹார்வர்ட் பேராசிரியர்கள்
மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். இந்திய தத்துவம்
அறிவு பூர்வமாக ஆராய்வதற்கு உரியது அல்ல. அதில் ஆராய்ச்சிக்கு இடமில்லை என்றே அவர்கள்
கருதியிருந்தனர். ஆனால் சுவாமிஜியின் சொற்பொழிவு அவர்களின் கண்களைத் திறந்தது. சுவாமிஜியின்
சொற்பொழிவு அச்சிடப் பட்ட போது அதன் முன்னுரையில்
அந்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான ரெவரன்ட்.சி.சி எவரட் என்பவர், ”கீழை
நாட்டுச் சிந்தனைகளை மேலை நாட்டிற்குக் கொண்டு வருவதான தமது பணியில் சுவாமி விவேகானந்தர்
வெற்றி பெற்று விட்டார். நாங்கள் மேலை நாட்டில் பன்மையைப் பற்றி விரிவாக ஆராய்கிறோம்.
ஆனால் இந்தப் பன்மை எங்கே நிலை பெற்றுள்ளதோ அந்த ஒருமையைப் பற்றி அறியாமல் பன்மையை எப்படி புரிந்து கொள்வது? இந்த
விஷயத்தைப் பற்றி கீழை நாடுகள் நமக்குக் கற்றுத்தரும். இந்தப் பாடத்தை வெற்றிகரமாகக்
கற்றுத் தந்ததாக விவேகானந்தருக்கு நன்றி கூற
நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று எழுதினார்.
ஹார்வர்ட்
பல்கலைக் கழகம் சுவாமிஜிக்கு கீழைத்தத்துவத் துறை தலைமைப் பதவி” அளிக்க முன்வந்தது.
இது மிகவும் அபூர்வமான விஷயம்.ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நூறாண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் உடையது. அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து இத்தகைய
பதவி பெறுவது சமான்ய விஷயம் அல்ல. ஆனால் தாம்
துறவி என்றும், ஒரு துறவிக்கு இத்தகைய பட்டங்களும்
பதவிகளும் அழகல்ல என்று சுவாமிஜி அதனை மறுத்துவிட்டார்.
சுவாமிஜியின்
சொற்பொழிவு ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒருங்கே கவர்ந்தது. அங்கே ஒரு நாள் சொற்பொழிவுக்குப் பிறகு
இரண்டு மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
முதல் மாணவன்-
விவேகானந்தரின் பேச்சைக்கேட்டேன். எனக்குப் பெருத்த ஏமாற்றம் ஆகிவிட்டது.
இரண்டாம்
மாணவன்- ஏன்?
முதல் மாணவன்-
ஏதோ, இவர் பெரிய பண்டிதர், மிகவும் ஆழமாக கருத்துக்களைப்பேசுகிறார்” என்றெல்லாம் சொன்னார்கள். அப்படி ஒன்றும் தெரிய வில்லையே!
இரண்டாம்
மாணவன்- அவரது கருத்துக்கள் ஆழமானவை அல்ல என்று உனக்கு ஏன் தோன்றுகிறது?
முதல் மாணவன்-
ஏனெனில் அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும்
எனக்குப் புரிந்தனவே!
பண்டிதர் என்றால் புரியாமல் பேச வேண்டும் என்று தான்
அந்த மாணவன் எண்ணியிருந்தான்.
No comments:
Post a Comment