Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-24

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-24

🌸

மாறாத இறையுணர்வு

-

சுவாமிஜியின் சாதாரண வாழ்க்கையைப்பொறுத்த வரை, இந்தியாவோ, அமெரிக்காவோ, இங்கிலாந்தோ அதில் பெரிதாக  எந்த மாற்றமும் இல்லை. வெளியில்  சொற்பொழிவுகள், உபதேசங்கள், உள்ளே எப்போதும் இறையுணர்வில் ஆழ்ந்த  மனம், இவற்றுடன் கூடவே திகழும் வேடிக்கை, வினோதம், சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருப்பார். அந்த மௌனத்தைக் கலைத்த படி திடீரென்று ”ஸோஹம், ஸோஹம் என்று  மென்மையான குரலில் கூறுவார். மெல்லிய குரலில் வங்க மொழிப் பாடல்களைப் பாடுவார். அகத்தே எப்போதும் ஆனந்தமும்  இறையுணர்வும் இடையீடின்றி ஒரு வழிபாடாகத் திகழ்ந்து கொண்டிருப்பது அந்தப்  பாடல்களிலும் அவரது முகத்திலும் தெரியும்.

 

 மாலை வேளைகளில் சுவாமிஜி ஃபாக்ஸ் போன்ற யாருடனாவது காலாற நடப்பார். சில வேளைகளில் வென்னீரில் குளித்துவிட்டு தமது அறையில் சென்று தனியாக, அமைதியாக படுத்துக் கொள்வார்.ஆனால் சுவாமிஜி படுப்பது வெறும் தூக்கம் அல்ல, எப்போதும் இறையுணர்விலும் பேரானந்தத்திலுமே அவர் திளைத்தார். அது பற்றி ஒரு முறை அவர் கூறினார். இரவில் என் அறைக்குச்சென்று படுத்துக் கொள்வேன். சிறிது நேரம் கழியும், அப்போது  என்னுள்னே ஆனந்தப் பேரலைகள் பொங்கும். அதன் பிறகு என்னால் படுத்துக் கிடக்க முடியாது. பேரானந்த வடிவான, தேவியை நான் காண்பேன். விலங்குகள்,  வானம், பூமி என்று அனைத்துமே ஆனந்தத்தால் நிரம்பி வழிவதை உணர்வேன். அதன் பிறகு என்னால் படுத்திருக்க இயலாது. எழுந்து  அறையின் நடுவில் சென்று நடனமாடத்தொடங்கிவிடுவேன்.அந்த ஆனந்தத்தை என்னால் இதயத்தில் கட்டுப்படுத்த முடியாதது போல் தோன்றும். உலகம் முழுவதும் ஆனந்தத்தால் நிறைந்தது போல்  உள்ளது. இதை ஒரு நாள்  கூறும்போது சுவாமிஜி அந்த ஆனந்த நிலைக்குச் சென்றுவிட்டார். குழந்தை போல் ஆடினார். அங்கிருந்த அனைவரையும் ஒரு முறை கனிவுடன் பார்த்துவிட்டு, ஆனந்தமாக இருங்கள்? ஒரு போதும்  கவலையுடன் சோர்ந்து போய் இருக்காதீர்கள். எங்குமே தேவி தான் இருக்கிறாள், எங்குமே ஆனந்தம் தான்  நிறைந்திருக்கிறது என்றார்.

 

புத்தராக

 

 லண்டனின் சுவாமிஜியின் ஆன்மீகச்சக்தி அதிகமாக வெளிப்பட்டதாக மகேந்திரர் தமது நூலில் எழுதியுள்ளார்.

 ஆனால் ஞானமும் ஆன்மீக சக்தியும் அவரிடம் நிறைந்திருந்தன. அந்த ஆற்றல்களை அவர் பிறருக்குப் பகிர்ந்தளித்ததையும் லண்டனின் மிக அதிகமாகக் காண முடிந்தது என்று எழுதுகிறார் அவர். ஜாதகக் கதைகளிலிருந்து  பல கதைகளை அவர் கூறினார். இந்த நாட்களில் அவர் எனக்கு ஒரு நவீன புத்தராகவே தோன்றினார் என்று மகேந்திரர் எழுதுகிறார்.

 ஞான யோக வகுப்புகள்  லண்டனில் தான் நடைபெற்றன. இந்தியப் பாரம்பரியத்திலும் கருத்துக்களிலும் ஊறியவர்களுக்கே ஞான யோகக் கருத்துக்கள் சிரமமானவை. அத்தகைய பாரம்பரியம இல்லாத மேலை நாட்டினராகிய உங்களால் அவற்றை எவ்வாறு புரிந்து கொள்ள முடிந்தது என்று ஒரு முறை சிஸ்டர் கிறிஸ்டைனிடம் கேட்டனர். அதற்கு அவர், சுவாமிஜி பேசும் போது வெறுமனே கருத்துக்களைக் கூறுவதுடன் நின்று விட மாட்டார். கேட்பவர்களின் மன நிலையை உயர்த்தி அந்த உணர்வு நிலையில் கொண்டு சென்று அதன் பிறகு தான் பேசுவார். அதனால் அவரது கருத்துக்களைப் புரிந்து கொள்வதில் எங்களுக்குச் சிரமம் இருக்கவில்லை என்று தெரிவித்தார்.

 

சேவியர் தம்பதிகள்

 

 இந்த ஞான யோகச் சொற்பொழிவுகளில் தான் கேப்டன் சேவியரும் அவரது மனைவியும் முதன் முதலாக சுவாமிஜியைச் சந்தித்தனர்.சேவியர் ஆங்கிலேய ராணுவத்தில் பணி புரிந்தார். சுவாமிஜியின் சொற்பொழிவு ஒன்றைக்கேட்டு விட்டு வெளியில் வந்த அவர் அங்கே நின்றிருந்த மெக்லவுடிடம், இந்த இளைஞரை உங்களுக்குத்தெரியுமா?  உண்மையிலேயே இவர் மகான் தானா? என்று கேட்டார். ஆம்,  என்றார் மெக்லவுட். உடனே, சேவியர், அப்படியானால் இவரைப் பின்பற்ற வேண்டும், இவருடன் கடவுளை அடையவேண்டும், என்று கூறினார். பிறகு நேராகத் தன் மனைவியிடம் சென்று, நான் இந்த சுவாமிஜியின் சீடனாக என்னை நீ அனுமதிப்பாயா? என்று கேட்டார். ஆம், என்று  பதிலளித்த மிசஸ் சேவியர், நானும் அவருடைய சிஷ்யையாக என்னை நீங்கள் அனுமதிப்பீர்களா? என்று கேட்டார். சிரித்த படியே. எனக்குத் தெரியாது என்று பதிலளித்தார் சேவியர். இவ்வாறு தொடங்கிய  இவர்களது தொடர்பு ஆயுட்காலம் வரை நீடிக்கின்ற ஒன்றாகியது.

 

 இங்கிலாந்திலும்  சுவாமிஜியின் சொற்பொழிவுகள் வெகுவாகப் பாராட்டப் பட்டன.ஆங்கில மொழியில் அவருக்கு இருந்த அசாதாரண ப் புலமை, பேச்சுத் திறமை, புதிய கருத்துக்கள், போன்றவை பற்றி பத்திரிகைகளும் பாராட்டி எழுதின. ஆங்கில சர்ச்சைச் சேர்ந்த பாதிரிகள் சுவாமிஜியை ஏற்றுக் கொண்டனர். அவரை எதிர்க்கவில்லை. ஆங்க்லிகன் சர்ச்சின் மிக உயர்ந்த பதிவிகளில் உள்ள சிலர்  சுவாமிஜியின் நெருங்கிய நண்பர்களாகவும்  ஆயினர்.

 கேனன் ஹாவீஸ் என்பவர் ஆங்க்லிகன்  சர்ச்சைச்சேர்ந்தவர், சுவாமிஜியுடன் சர்வமத மகாசபையில் கலந்து கொண்டார். அங்கே சுவாமிஜியின்  சொற்பொழிவைக்கேட்ட பிறகு அவரிடம் ஈடுபாடு கொண்டார். அவர் லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் சர்ச்சில் இரண்டு  சொற்பொழிவுகள் செய்தார். அதில் சுவாமிஜியைப் பாராட்டியதுடன்,சுவாமிஜியின் கருத்துக்கள் எவ்வாறு ஏசுநாதரின் போதனைகளுக்கு இசைவாக உள்ளன என்பதை எடுத்துக் காட்டினார். அது மட்டுமல்ல, பக்தி, பக்தன் போன்ற  சுவாமிஜியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டால் கிறிஸ்தவ மதம் நன்மை பெறும் என்பதையும் காட்டிக் காட்டினார்.

 

 அமானுஷ்ய ஆற்றல்கள்-

 

 சித்து வேலைகள் செய்வதையும், அமானுஷ்ய ஆற்றல்களை   வெளிப்படுத்துவதையும் சுவாமிஜி வெறுத்தார். டெட்ராய்ட்டில் அவரிடம் இது ஒரு சவாலாக எழுப்பப்பட்ட போது கூட அவர் அத்தகைய எதையும் செய்ய மறுத்துவிட்டார். ஆனால் சில வேளைகளில் இந்த விஷயங்கள் அவரை மீறி நடைபெற்றன. மகேந்திரரை சுமார்  ஒன்றரை வருடங்களாக வாட்டிக்கொண்டிருந்த காய்ச்சலை குணப்படுத்தினார். அது போல் தான் சாரதானந்தரின் காய்ச்சலையும் குணப்படுத்தினார்.

 மற்றொரு முறை அவர் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். திடீரென்று அங்கிருந்தவர்களிடம், நீங்கள் என்னிடம்  கேட்க விரும்புகின்ற கேள்விகளை ஒரு காகிதத் துண்டில் எழுதி, மடித்து வைத்துக்கொள்ளுங்கள். என்று கூறினார் . அவர்கள் அவ்வாறு செய்ததும். ஒவ்வொருவரின் கேள்விகளையும் கூறி அவற்றிற்கான பதிரையும் தெரிவித்தார். அது மட்டுமல்ல, ஒவ்வொரு கேள்விகளையும் கூறிவிட்டு அதைக் கேட்பவரைப் பற்றிய தகவல்களையும் கூறினார்.

 

மாக்ஸ்முல்லருடன்

-

 இங்கிலாந்தில் சுவாமிஜி பேராசிரியர் மாக்ஸ்முல்லரைச் சந்தித்தார். அவரிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார் சுவாமிஜி. தாம் வேதங்களுக்கு எழுதிய உரையைப் புதுபிக்க சாயணர் தான் இப்போது மாக்ஸ்முல்லராகப் பிறந்திருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன். நீண்ட காலமாகவே எனக்கு இந்தக் கருத்து இருந்தது. மாக்ஸ்முல்லரைப் பார்த்த பிறகு அது உறுதியாகி விட்டது. இந்த நாட்டில்( இந்தியாவில்) கூட, வேத வேதங்களில் அவரைப்போல் அவ்வளவு உறுதியான, அவ்வளவு ஊறிப்போன ஒருவரை நீ காண முடியாது. அனைத்திற்கும் மேலாக, ஸ்ரீராமகிருஷ்ணரிடம் அவருக்கு எவ்வளவு ஆழம் காணமுடியாத பக்தி தெரியுமா? ஸ்ரீராமகிருஷ்ணர் அவதார புருஷர் என்பதை அவர் நம்புகிறார். நான்  அவரது விருந்தினனாக இருந்த போது எவ்வளவு அற்புதமாக என்னை உபசரித்தார். நான் பிரிந்து வரும் போது அவரது கண்களில் கண்ணீர் பெருகியது. என்று ஒரு முறை சுவாமிஜி தமது சீடரான சரத் சந்திரரிடம் கூறினார். அதற்கு சரத் சந்திரர், சாயணரே மாக்ஸ்முல்லராகப் பிறந்தார் என்றால் அவர் புனிதமான இந்தப் பாரத நாட்டில் பிறக்காமல்  மிலேச்ச நாட்டில் ஏன் பிறந்தார்? என்று கேட்டார். உணர்ச்சிவசப் பட்டவராக சுவாமிஜி பதிலளித்தார்.

 

 அறியாமை காரணமாகவே மனிதன், நான் ஆரியன் மற்றவர்கள் மிலேச்சர்கள் என்று வேறுபடுத்துகிறான். வேதங்களுக்கே உரை எழுதியவரான, ஞானத்தின் பேராளிப் பிழம்பான அவரிடம் வருணாசிரமப் பிரிவுகளும் ஜாதிப்பிரிவுகளும்  இருக்க முடியுமா? அவருக்கு இவையெல்லாம் முற்றிலும்  பொருளற்றவை. மனித குலத்தின் நன்மைக்காக , தாம் விரும்பும் இடத்தில் பிறக்க அவரால் இயலும். கல்வி, செல்வம் இரண்டுமே உள்ள நாட்டில் பிறக்கவில்லை என்றால், இவ்வளவு பெரிய நூல்களையெல்லாம் அச்சிட்டு வெளியிடுவதற்கான பொருள் எப்படிக்கிடைக்கும்! ரிக்வேதத்தை வெளியிட அவருக்குக்  கிழக்கிந்தியக் கம்பெனி ஒன்பது லட்சம் ரூபாய்  கொடுத்தது உனக்குத்  தெரியாதா? அது கூடப்போதவில்லை. இந்த நாட்டில் அதற்காக நூற்றுக்கணக்கான அறிஞர்களை மாதச் சம்பளம் கொடுத்து அமர்த்த வேண்டியிருந்தது. இந்தக் காலத்தில் அறிவுக்காக, ஞானத்திற்காக இந்தியாவில் யாராவது இவ்வளவு பணம் செலவழிப்பதைக் காண முடியுமா? கையெழுத்துப் பிரதியைத் தயாரிக்கவே இருபத்தைந்து வருடங்கள்  ஆகியதாகத் தமது முன்னுரையில் மாக்ஸ் முல்லர் எழுதியுள்ளார். அச்சிடுவதற்கு மேலும் இருபது ஆண்டுகள் பிடித்தன. தமது வாழ்வில் நாற்பத்தைந்து ஆண்டு காலத்தை, ஒரு நூலை வெளியிடுவதற்காகச் சாதாரண மனிதன் யாராவது கழிப்பானா? சற்று  சிந்தித்துப் பார்! நான் அவரை சாயணர் என்று சொல்வது வெறும் கற்பனையா என்ன?

 

 இவ்வளவு தூரம் தாம் வைத்திருந்த, மாக்ஸ்முல்லரை சுவாமிஜி 1896 மே28- இல் அவரது வீட்டில் சந்தித்தார். என்ன அற்புதமான மனிதர் அவர்! சில நாட்களுக்கு முன்பு நான்  அவரைச் சந்தித்தேன். சந்தித்தேன் என்பதை விட அவரை வணங்குவதற்காகச்சென்றேன் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் ஸ்ரீராமகிருஷ்ணரை நேசிக்கின்ற யாரையும் சென்று சந்திப்பதை ஒரு தீர்த்த யாத்திரையாகவே நான் கருதுகிறேன் என்றுபிரம்மவாதின்  பத்திரிகைக்கு எழுதினார் சுவாமிஜி.

 

 சுவாமிஜி சந்தித்தபோது மாக்ஸ் முல்லருக்கு 70 வயது ஆகியிருந்தது. அழகிய தோட்டத்தினுள் அமைந்திருந்தது. அவரது சிறிய வீடு, சுற்றிலும் மரங்கள், செடி கொடிகள்  பூக்கள் என்று அந்த இடம் எனக்கு பண்டைய முனிவர்களின், தபோ வனமாகத்தோன்றியது. அவரும் அவரது மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழ்ந்து வருகின்றனர். பிரம்ம ரிஷிகளும், ராஜ ரிஷிகளும் மாபெரும் வானப்ரஸ்தர்களும்  வாழ்ந்த வாழ்க்கையையே எனக்கு அவர்கள் நினைவூட்டினர். இந்தியாவின் மீதும் வேதாந்தத்திலும் அவர் வைத்துள்ள ஈடுபாட்டில் பாதியாவது எனக்கு, இருக்கிறதா என்று தோன்றுகிறது. என்று தமது சந்திப்பைப் பற்றி கூறினார் சுவாமிஜி.

 

 மாக்ஸ்முல்லரிடமிருந்து  விடைபெறும் போது சுவாமிஜி அவரிடம், நீங்கள் எப்போது இந்தியாவிற்கு வரப்போகிறீர்கள்? என்று கேட்டார். முதியவரான அந்த முனிவரின் முகம் மலர்ந்தது.  கண்களில் கண்ணீர் ததும்பியது, மெதுவாகத் தலையை அசைத்தபடி அவர், நான் இந்தியாவிற்கு  வந்தால் என்னால் மீண்டும் இங்கே திரும்ப இயலாது. நீங்கள் என்னை அங்கேயே எரிக்க வேண்டியிருக்கும் என்றார்.

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தார். மாக்ஸ் முல்லர். அவரது வரலாற்றை எழுத வேண்டும். அதற்கு சுவாமிஜி உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சுவாமிஜியும் ராமகிருஷ்ணானந்தருக்குஎழுதி, அவருக்குததெவையான தகவல்களையும் குறிப்புகளையும் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

 மாக்ஸ் முல்லரிடம் இவ்வளவு மதிப்பு வைத்திருந்தாலும் மாக்ஸ்முல்லர் உட்பட நாட்டு அறிஞர்கள் இந்தியா பற்றியும் அதன் ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தை பற்றியும் சரியாக அறிந்திருக்கவில்லை என்பது சுவாமிஜிக்குத் தெரிந்தே இருந்தது. மாக்ஸ்முல்லரும் தமது சில கட்டுரைகளில்  இந்து மதத்தைப் பற்றியும்  இந்தியாவைப் பற்றியும் சில உண்மையற்ற கருத்துக்களை கூறியிருந்தார். அது பற்றி, பேராசிரியர் மாக்ஸ் முல்லர் இந்து மதத்தைப் பற்றி எழுதுகின்ற எல்லா நூல்களிலும்  இறுதியில் அதனைச் சிறுமைப்படுத்துகின்ற  ஒரு கூற்றைச்சேர்த்து விடுகிறார், என்றாலும்  நாளடைவில் முழு உண்மையை யும் அவர் கண்டேயாக வேண்டும் என்று நான் நினைத்தேன். அவர் கடைசியாக எழுதியுள்ள வேதாந்தம் என்ற நூலில் பிரதி ஒன்றை முடிந்த அளவு விரைவில் பெறுங்கள். அந்த நூலில் அவர்  எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதை நீங்கள் காணலாம். மறு பிறவி மற்ற எல்லாவற்றையுமே ஏற்றுக் கொள்கிறார் என்று எழுதுகிறார் அவர்.

 

 மொழியியலின் துணையுடன் மேலை நாட்டு அறிஞர்கள் வேதங்களில் காலத்தைக் கணித்திருப்பதையும்  சரியல்ல என்பதும் சுவாமிஜிக்குப் புரிந்திருந்தது.  வேதங்களைப் பற்றி மேலை  அறிஞர்கள் கூறுகின்ற கருத்து கருத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. அது இன்ன காலத்தைச்சேர்ந்தது என்று இன்று கூறுகிறார்கள். நாளையே அதைத் தவறென்று தள்ளிவிட்டு, ஓராயிரம் ஆண்டுகள் முன்னால் கொண்டு வருகிறார்கள் என்று எழுதுகிறார் அவர். கருத்து என்னவாக இருந்தாலும் சுவாமிஜி இறுதிவரை மாக்ஸ் முல்லரிடம் வைத்திருந்த மதிப்பு மாறவில்லை.

 

ஒரு நாள் பிற்பகல் உணவிற்குப் பிறகு சாய்வு நாற்காலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.- சிந்தனையிலோ தியானத்திலோ ஆழ்ந்திருக்கலாம். திடீரென்று அவரது முகத்தில் கடுமையான வேதனை தெரிந்தது. பிறகு மூச்சை ஆழ்ந்து இழுத்தவாறே  ஃபாக்ஸிடம் ”திடீரென்று இதயத்தில் பயங்கர வேதனையை உணர்ந்தேன். இதயம் நின்றுவிடும் போல் தோன்றியது. என் தந்தை மாரடைப்பால் தான் இறந்தார். மாரடைப்பு எங்கள் பரம்பரை நோய் என்றார்.

 சுவாமிஜியின் உடல்நிலை சீர்குலைந்திருப்பது வெளிப்படையாகத்தெரிந்தது. எனவே சுவிட்சர்லாந்தில்  சில நாள் அவர் ஓய்வெடுப்பதற்காக அவரது சீடர்கள்  ஏற்பாடு செய்தனர். இதற்கிடையில் இங்கிலாந்திலும் பலர் சுவாமிஜியின் பாதையில் செல்லத் தயாராயினர். மிஸ் முல்லர் தமது திரண்ட செல்வத்தை எடுத்துக் கொண்டு இந்தியா சென்று எஞ்சிய நாட்களைக் கழிக்க முடிவு செய்தார்.......... சேவியர் தம்பதிகள்  இமாலயத்தில் ஓர் ஆசிரமம் நிறுவி வாழ முடிவு செய்தனர்.

 சுவாமிஜியின் இந்தியப் பணியில்  அவரது சகோதரச் சீடர்கள் ஏற்கனவே தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் பெண்களுக்காக அவர் எண்ணிய  பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில் இருந்தது. அந்தப்பணியைச் செய்ய மார்க்ரெட் நோபிள் முடிவு செய்தார். நோபிளின் முடிவு சுவாமிஜிக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

 

 உன்னிடம் மூடநம்பிக்கை  இல்லை என்பது நிச்சயம். உலகையே  அசைக்கவல்ல ஆற்றல் உன்னிடம்  உள்ளது என்பது  எனக்கு உறுதியாகத் தெரியும். வேறு ஆற்றல்களும்  உன்னிடம் வந்து சேரும். தைரியமான சொற்கள், அவற்றை விட தைரியமான செயல்கள் இவையே வேண்டியவை. உன்னதமானவர்களே,  விழித்தெழுங்கள், விழித்தெழுங்கள். துன்ப த் தீயில்  உலகம் வெந்து கொண்டிருக்கிறது. நீங்கள் தூங்கலாமா? தூங்குகின்ற தெய்வங்கள் விழித்தெழும் வரையில், உள்ளேயுள்ள தெய்வம் நமது அமைப்பிற்குச் செவிசாய்க்கும் வரை யில்கூவி அழைப்போம். இதை விட வாழ்வில் வேறு என்ன உள்ளது? இதைவிடப்பெரிய செயல் வேறு எது? என்று நோபிளுக்கு எழுதினார் சுவாமிஜி.

 

ஐரோப்பிய ப் பயணம்

 

சுவிட்சர்லாந்தில் சில நாட்களைக் கழிப்பதற்கான திட்டம்  உருவாகியபோது சுவாமிஜி மிகவும் களித்தார். சுவிட்சர்லாந்து என்றதும் சுவாமிஜிக்கு இமய மலையும் அதன் அற்புத சூழ்நிலையும் நினைவிற்குவந்திருக்க வேண்டும்.ஓ! பனி மலைச் சிகரங்களைக் காணவும் நீண்ட மலைப் பாதைகளில் நடந்து செல்லவும் என் மனம் எவ்வளவு ஏங்குகிறது, தெரியுமா? என்று உணர்ச்சிப் பெருக்குடன்  கூறினார் அவர்.

 ஐரோப்பாவின் அழகிய மலைத்தொடர்களில் ஒன்றான ஆல்ப்ஸ் சுவிட்சர்லாந்தில் உள்ளது. நாட்டின் 60 சதவிகிதம் பகுதியை அந்த மலைத்தொடர் ஆக்கிரமித்திருக்கிறது. 10, 000 முதல் 15, 000 அடி வரை உயரமுள்ள 71- சிகரங்கள் அதில் உள்ளன. மிக அதிக உயரம் கொண்ட ” மௌண்ட ப்ளாங்க் தலை நகரான ஜெனிவாவிலிருந்து 40 மைல் தொலைவில் உள்ளது. ஆயிரக்கணக்கான பனிப் பாளங்களும் அந்த அலைத் தொடரில் இருந்தன. ஆயிரக்கணக்கான அருவிகள் பாய்ந்தன. 100 அடி உயரமும் 340 அடி அகலமும் கொண்ட மிகப் பெரிய ரைன் அருவி அங்கு தான் உள்ளது. இந்த எல்லா இயற்கைச் சித்திரங்களும் சுவாமிஜியின் கண்களில் ஓர் இமாலயக் கனவை விரித்தன. ஒரு பரிவிராஜகத் துறவியின் வாழ்க்கை மீண்டும் அவர் முன் நிழலாடியது.

1896 ஜுலை 19-ஆம் நாள் லண்டனிலிருந்து சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட்டார் சுவாமிஜி. சேவியர் தம்பதிகளும் மிஸ்முல்லரும் உடன் சென்றனர். வழியில் ஒரு நாள் இரவைப் பாரிஸில் கழித்துவிட்டு மறுநாள் ஜெனிவாவை அடைந்தனர். அவர்கள் தங்கிய ஹோட்டல் ஓர் அழகிய ஏரியின் கரையில் இருந்தது. ஜெனிவாவை அடைந்த பிறகு சுவாமிஜி ஒரு சிறுவனாக மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்,- அவ்வளவு தூரம் அனைத்தையும் ரசித்து மகிழ்ந்தார்.

 மர வேலைப்பாடுகளும் மரச் சிற்பங்களும் வைக்கப்பட்ட கண்காட்சி ஒன்றை முதல் நாள் கண்டு களித்தனர். அன்று மாலையில், காற்று நிரப்பப்பட்ட பலூனின் உதவியுடன் ஆகாய மார்க்கமாகச் சஞ்சரித்தனர். மேலே- மேலே- மேலே பலூன் இப்படி மேலே மேலே போய்க்  கொண்டிருக்கிறது. ஒரு பறவை ஆகாய மார்க்கமாக எளிதில் பற்ப்பது போல் இந்த பலூன்  மிதந்து செல்கிறது. அங்கிருந்து சூரியன் மறைவதைக்காண்பது ஓர் அற்புதக் காட்சியாக உள்ளது என்று எழுதினார் சுவாமிஜி. மேலிருந்து கீழே பார்த்த போது சுவிட்சர்லாந்து நாடே ஒரு வரைபடம் போல் தெரிந்தது கண்டு அளவற்ற குதூகலம் அடைந்தார்.

 

பனிமலைத் தொடர்களில்

-

மௌண்ட் ப்ளாங்கைக் காணும் ஆவலுடன் அனைவரும் சேமோனி கிராமத்தை அடைந்தனர். போகும் வழி கண்ணுக்கினிய  இயற்கைக் காட்சிகள் நிறைந்ததாக இருந்தது. சுற்றிலும் பனி மலைகளால் சூழப் பட்ட பகுதி அது. ஆனால் இமயத்தின் பனி மலைகளுக்கும், இங்கே கண்ட பனி மலைகளுக்கும் வித்தியாசம் இருந்ததாக சுவாமிஜி குறிப்பிட்டார். மௌண்ட ப்ளாங்க் விரித்த காட்சி இமயத்தில் கூட தாம் காணாத அரிய காட்சியாக இருந்தது என்று தெரிவித்தார் அவர். மௌண்ட் ப்ளாங்கைக் கண்டதும் அதில் ஏற வேண்டும் என்று மிகுந்த ஆவல் கொண்டார் அவர். ஆனால்  மலை ஏறுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அதில் ஏறமுடியும் என்று கூறி அவரைத் தடுத்து விட்டனர்.

 உலகின் அழகிய பனிப் பாளங்களில் ஒன்றான மெர்-டி- க்ளேஸ் அங்கிருந்தது. அதையாவது கடக்க வேண்டும் என்று விரும்பினார் சுவாமிஜி. எனவே அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். எண்ணியது போல் அவ்வளவு எளிதாக இருக்கவில்லைஅது. நடக்கத் தொடங்கிய சிறிது நேத்திலேயே சிரமப்பட்டார் சுவாமிஜி. அதனைக் கடந்த பின் செங்குத்தான ஏற்றம் ஒன்று இருந்தது. அதைக் கடந்தால் மட்டுமே கிராமத்தை அடைய முடியும். அதில் ஏறிய போது, உயரம் காரணமாக காற்றில் ஆக்ஸிஜன் குறைவால், சுவாமிஜிக்குத் தலை சுற்றியது.

 செயின்ட் பெர்னார்ட் பிறந்த ஊரான லிட்டில் செயின்ட் பெர்னார்டிற்கு அவர்கள் சென்றனர். அழகிய  நாய்க்குட்டி களுக்குப் புகழ் பெற்ற ஊர் அது. அந்த நாய்க் குட்டிகளைக் கண்ட சுவாமிஜி ஒன்றையாவது இந்தியாவிற்குக்கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அனைத்தும் ஏற்கனவே விற்கப் பட்டிருந்தன.

 ஒரு நாள் எல்லோருமாக ஒரு பனி மலை மீது ஏறிக் கொண்டிருந்தனர். சுவாமிஜி உபநிஷத மந்திரங்களைக் கூறி அவற்றை விளக்கிய படி வந்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில்  அவற்றின் பொருளில் ஆழ்ந்து மௌனமானார். அவரது வேகம் தடைபட்டது. அவரைத் தெந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தோ என்னவோ உடன்  வந்தோர் சற்று முன்னால் நடந்தனர். சுவாமிஜி மிகவும் பின் தங்கி விட்டார். இரும்புப் பூண்  இட்ட கைத்தடியைப் பனியில்  ஊன்றியபடி சென்று கொண்டிருந்தார் அவர். திடீரென்று அந்தக் கைத்தடி பனியில் அழுந்திவிட்டது. அவரும் கூடவே பனியில் அமிழலானார். ஆனால்  முற்றிலுமாக மூழ்குமுன் தெய்வாதீனமாகக் காப்பாற்றப் பட்டார். அன்று தாம் அந்தப் பனியில் மூழ்கி மறையாதது இறையருளே என்று பின்னர் மற்றவர்களிடம் அவர் தெரிவித்தார். நிகழ்ந்ததைக்கேள்விப் பட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இறையருளுக்கு நன்றி செலுத்தி, இனி ஒரு போதும் அவரைத் தனியாக விடக் கூடாது என்றும் முடிவு செய்தனர்.

 

 திரும்பி வரும் வழியில் ஓர் அழகிய சிறிய சர்ச் இருந்தது. சுவாமிஜி வழியில் நல்ல நறுமண மலர்கள் சிலவற்றைப் பறித்தார். அவற்றை மிசஸ் சேவியரிடம் கொடுத்து மேரியின் திருப் பாதங்களில் சமர்ப்பிக்குமாறு  கூறினார். அவளும் என் தாயே அல்லவா! என்றார் அவர். ஆனாலும் கிறிஸ்தவர்  அல்லாத தாம் மலர்களைச் சமர்ப்பித்தால்  சர்ச்சில் உள்ளவர்கள் எதிர்ப்பார்கள் என்பதற்காக அவற்றை மிசஸ் சேவியரின்  கைகளில் தந்து சமர்ப்பிக்கச் செய்தார்.

 

  ஓய்வு கிடையாது

 

ஆல்ப்ஸ் மலைகளின் அழகிய சூழ்நிலையில் ஆல்பைன்  கிராமத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும் சுவாமிஜியால் எல்லா விவகாரங்களிலிருந்தும் விடுபட முடிந்ததா என்றால் இல்லை. ஓய்வு என்பதே என் தலையில் எழுதப்படவில்லை, என்று பின்னாளில் ஒரு முறை அவர் கூறியது அவரது வாழ்நாள் முழுவதுமே உண்மையாக இருந்தது.

 இமய மலையில் ஓர் ஆசிரமம் நிறுவி அமைதியான வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்று ஏற்கனவே எண்ணம் கொண்டிருந்த சேவியர் தம்பதிகளுக்கு ஆல்பைன்  வாழ்க்கை ஒரு செயல் வடிவம் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இமய மலையில் கட்டாயமாக ஆசிரமம் நிறுவ வேண்டும் என்ற எண்ணம் இப்போது அவர்களின் மனத்தில் உறுதியாயிற்று. அதற்காக சுவாமிஜி அல்மோராவிலுள்ள லாலா பத்ரி ஷாவிற்குக் கடிதம் எழுதினார்.

 இந்த வேளையில் சென்னையிலிருந்து அளசிங்கரின் கடிதம் சுவாமிஜியை அடைந்தது. பிரம்மவாதின் பத்திரி கையை நடத்துவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது  என்றும் பணஉதவி எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர்  எழுதியிருந்தார். பிரம்ம வாதினின் மோசமான பொருளாதார நிலையை உனது கடிதத்திலிருந்து தெரிந்து  கொண்டேன். நான் லண்டனுக்குத் திரும்பிச்சென்றதும் உதவ முயல்கிறேன்........ அத்தகைய பத்திரிகையை எப்போதும் தனியார் உதவியால் தான் நிலைநிறுத்த வேண்டியுள்ளது  என்பது என்னவோ உண்மை தான். நாமும் அவ்வாறே செய்வோம். சில மாதங்களுக்குச் சமாளித்துக்கொள் என்று அவருக்குப் பதில் அளித்தார் சுவாமிஜி.

 அடுத்த அடியாக வந்தன அமெரிக்கக் கடிதங்கள். சுவாமிஜியிடமிருந்து சன்னியாச தீட்சை பெற்றவர்களுள் ஒருவரான லியான் லான்ட்ஸ்பர்க் ( சுவாமி கிருபானந்தர்) சுவாமிஜியிடம் விலகத் தொடங்கினார். 1894 ஆரம்பத்தில் சுவாமிஜியைச் சந்தித்தார் அவர். தியாசபிகல்  சொசைட்டியைச்சேர்ந்த அவர்  ரஷ்ய யூதர். வாழ்க்கையில் பெரிய நோக்கங்கள் எதுவும் இன்றி வாழ்ந்தவர் அவர். நேசிக்க யாருமில்லை, முயற்சிக்க எதுவுமில்லை, இன்பக் கனவுகளைத் தந்து  இதயத்தை ஒளிமயமாக்க எதுவுமில்லை என்று தம்மைப்பற்றி எழுதுகிறார் அவர். சுவாமிஜியைச் சந்தித்தது அவருக்கு அந்த இன்பக் கனவை அளித்தது.ஆனால் அந்தத்திடீர் இன்பத்தை அவரால் தாங்க முடியவில்லை போலும்! அவரிடம் பக்தி, கருணை, பரந்த மனம் ஏழை எளியவர்களிடம் பரிவு என்று இருந்த எத்தனையோ நல்ல குணங்களுடன் சுயநலம், அளவற்ற கோபம், சுய பச்சாதாபம், பொறாமை என்று தீய  குணங்களும் இருந்தன. இவை காரணமாக அவர் தானும் துன்புற்று மற்றவர்களுக்கும் மிகுந்த துன்பம் அளித்தார். சுவாமிஜி 1895 நியூயார்க்கில் வகுப்புகள் நிகழ்த்தியபோது கூடவே இருந்து உதவி செய்தார். பின்னர் ஆயிரம் தீவுப் பூங்காவில் சுவாமிஜியிடமிருந்து  சன்னியாச தீட்சை பெற்று  கிருபானந்தர் ஆனார்.

 

1895 ஜுலையில் சுவாமிஜிக்கு  கிருபானந்தரைப்பற்றி பல விபரீதமான செய்திகள் கிடைக்கத் தொடங்கின. பின்னர் பலருக்கு அவர் எழுதிய கடிதங்களிலிருந்து அவரது மனநிலை சரியில்லாமல் போயிற்று என்பது புரிந்தது. சுவாமிஜியின் பணிகளுக்கே  இடையூறு விளைவிப்பது போல் அவர் நடந்து  கொண்டார். சுவாமிஜி விவரிக்க முடியாத வேதனை அடைந்தார். இது விஷயமாக குட்வினுக்கு சுவாமிஜி எழுதிய கடிதம்  அற்புதமான ஒன்று ஆகும்.

 பல கடிதங்களிலிருந்து கிருபானந்தரைப் பற்றி ஏராளம் அறிகிறேன்.  அவருக்காக நான் வருந்துகிறேன். அவரது மூளையில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். அவரைத் தனியாக விட்டு விடுங்கள். அவரைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப் பட வேண்டாம்.

 எனக்குத தீமை செய்வதைப் பொறுத்தவரையில், அதற்கான வல்லமை தேவர்களிடமும் இல்லை, அசுரர்களிடமும் இல்லை, எனவே அமைதியாக இருங்கள். மாறாத அன்பும் பரிபூரணச் சுயநலமின்மையும் தான் அனைத்தையும் வெற்றிக்கொள்ளும். வேதாந்திகளாகிய நாம் , துன்பம் வரும்போதெல்லாம், நான் ஏன் அதைக் காண்கிறேன்? அன்பால் இதை ஏன் நான் வெற்றி கொள்ள முடியாது? என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

 

 பெரிய விஷயங்களைச் சாதிப்பதற்கு மிக உயர்ந்த, இடையறாத முயற்சி தேவை. ஒரு சிலர் தோற்றாலும் நாம் அதை எண்ணிக் குழப்பமடைய வேண்டியதில்லை. பலர்  வீழ்வதும், தடைகள் வருவதும், பெருந்துன்பங்கள் எழுவதும், ஆன்மீகம் என்னும் பெரும்  நெருப்பால் விரட்டி யோட்டப்பட இருக்கின்ற வேளையில் மனித  இதயத்திலுள்ள சுயநலம் போன்ற எல்லா பேய்களும் கடும் போராட்டம் செய்வதும் இயல்பாக ஏற்படக் கூடியவைதான். நன்மைக்கான பாதை தான் பிரபஞ்சத்திலேயே மிகவும்  கரடுமுரடானது, மிகவும் செங்குத்தானது. அந்தப் பாதையில் இத்தனைபேர் வெற்றி பெறுவது தான் ஆச்சரியத்திற்குரிய விஷயம். பலர் தோற்றுப்போவது வியப்பல்ல, ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலமே நற்பண்பை நிலை நிறுத்த வேண்டும்.

 

நான் மிகவும் புத்துணர்ச்சியுடன் உள்ளேன். ஜன்னல் வழியாக வெளியே மிகப்பெரிய பனி மலைகள் தெரிகின்றன. இமயமலையில் இருப்பது போலவே உணர்கிறேன். அமைதியாக உள்ளேன். என் நரம்புகள் இயல்பான வலிமையை மீண்டும் பெற்றுவிட்டன. உங்கள் கடிதத்தில் எழுதியது போன்ற சிறு தொந்தரவுகள் என்னைச்சிறிதும் பாதிப்பதே இல்லை. இந்தச் சிறுபிள்ளை விளையாட்டுகளால் நான் அமைதி  குலைவேனா என்ன? உலகமே ஒரு குழந்தை விளையாட்டு- பிரச்சாரம் செய்தல், போதனை அனைத்தையும் சேர்த்து தான்  சொல்கிறேன்.

 கிருபானந்தருக்குக் கடிதம் எழுத வேண்டுமென்ற ஆசை சில  நாட்களுக்கு முன்பு என்னிடம் திடீரென்று தடுத்து நிறுத்த முடியாத வகையில் உண்டாயிற்று. ஒரு வேளை அவர் வருத்தத்தோடு என்னை நினைத்துக்கொண்டிருந்தார் போலும்! எனவே, அவருக்கு இதமான கடிதம் ஒன்று அனுப்பினேன். இன்று அமெரிக்காவிலிருந்து  கிடைத்த செய்தியைப் படித்த பிறகு அதன் காரணத்தை உணர்கிறேன். பனி மலைகளின்  அருகில் பூத்த மலர்களை அவருக்கு நான் அனுப்பினேன். அவருக்குச் சிறிது பணமும், நிறைய அன்பும் அனுப்புமாறு மிஸ் வால்டோவிடம் சொல்லுங்கள். அன்பு ஒரு போதும் அழிவதில்லை. குழந்தைகள் என்ன செய்தாலும், எப்படி இருந்தாலும், தந்தையின் அன்பு மாறாது. அவர் என் குழந்தை அவர் துயரத்தில் மூழ்கியிருக்கின்ற இந்த வேளையிலும், எனது அன்பிலும் உதவியிலும்  எப்போதும் போன்ற அதே பங்கை அல்லது அதிகமான பங்கைப் பெறவே செய்வார்.

 தன் அன்பையெல்லாம் குழைத்து கிருபானந்தருக்கு  ஒரு கடிதம் எழுதினார். அருகிலுள்ள பனி  மலைப் பகுதிக்குச்சென்று அவருக்காக ஒரு மலரைப் பறித்து அதையும் உடன் அனுப்பினார்.

தூயவனாக இரு, அதற்கு மேலாக நேர்மையாக இரு. ஒரு கணமும் கடவுளிடம் நம்பிக்கை யை இழக்காதே. நீ ஒளியைக் காண்பாய். உண்மை எப்போதும்  நிலைத்திருக்கும், உண்மையல்லாததை, ஒருவரும் பாதுகாத்து வைக்க முடியாது. ஒவ்வொன்றும் விரைவாக அலசி ஆராயப் படுகின்ற இந்தக் காலத்தில்  பிறந்திருப்பதால் நாம் பிழைத்தோம். பிறர் எ தை வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும்,செய்து கொள்ளட்டும். நீ தூய்மை, ஒழுக்கம், பக்தி இவற்றிலிருந்து விலகாதே. அனைத்திற்கும் மேலாக, ரகசிய இயக்கங்களின். விஷயத்தில் எச்சரிக்கையாக இரு. இறைவனிடம் அன்பு கொண்டுள்ள யாரும் மாயாஜாலங்களைக் கண்டு பயப்பட வேண்டாம். மண்ணிலும் சரி, விண்ணிலும் சரி, மிக உயர்ந்த மிகவும் தெய்வீகமான ஆற்றல் புனிதமே............. இறைவனின் கையைத்தொட்டுக் கொண்டிருக்கிறாய் என்பதை மட்டும் உறுதியாக நம்பு, அது போதும்...............

 நேற்று நான் மான்டிரோசா பனி தலைப் பகுதிக்குச் சென்றிருந்தேன். என்றும் உருகாமல் உள்ள பனிப்பகுதியில் கிட்டத்தட்ட மையமான இடத்தில் வளர்ந்து கொண்டிருந்த சில கெட்டியான பூக்களைச் சேகரித்தேன். இந்தக் கடிதத்துடன் ஒரு பூவையும் உனக்கு அனுப்புகிறேன். கடினமான பனிமலைகளாகிய உலக வாழ்வில் நீ இந்த உறுதியான மலர் போன்ற  ஆன்மீக நிலையை அடைவாய் என்ற நம்பிக்கையுடன் இந்த மலரை அனுப்புகிறேன்.

 

அடுத்ததாக கல்கத்தா கடிதம் ஒன்று பிரச்சனையைக்கொண்டு வந்தது. அந்த வருடம் ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்த நாள் விழா தட்சிணேசுவரத்தில்  கொண்டாடப் பட்டது.

 அதில் சில  விலை மகளிர் கலந்து கொண்டனர். இதைக்கேள்விப்பட்ட சிலர் அந்த விழாவில் கலந்து கொள்ள தயங்கியிருந்தனர். இதில் சுவாமிஜியின் கருத்து என்ன என்று கேட்டு மடத்திலிருந்து கடிதம் வந்திருந்தது. இதற்கு சுவாமிஜி அளித்த பதில் அவரது கருணைப்பெருக்கிற்கும் சமுதாய நோக்கிற்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்வதாகும்.

 

 இது விஷயமாக எனது முடிவு பின்வருமாறு.

1-  விலை மகளிர் தட்சிணேசுவரம் போன்ற ம

கா தீர்த்தத் தலத்திற்கு வரக் கூடாதென்றால் வேறு எங்கே போவார்கள்? இறைவன் அவதரிப்பது முக்கியமாக பாவிகளுக்காகவே, புண்ணியவான்களுக்காக  மட்டும் அல்ல.

2-  ஆண்- பெண் வேறுபாடு, ஜாதி வேறுபாடு, பண வேறுபாடு, கல்வி வேறுபாடு இவைபோன்ற நகரத்தின் வாசல்கள் எல்லாம் உலகியல்  வாழ்வில் இருக்கட்டும். தீரத்த தலங்களில் இத்தகைய வேறுபாடு இருக்கு மானால் அவற்றிற்கும் நகரத்திற்கும் என்ன வித்தியாசம்?

3-  நமது ஜகன்னாத புரியில் பாவி- புண்ணியவான் பண்டிதன்- பாமரன், குழந்தைகள்- வயோதிகர்கள் என்று அனைவருக்கும் சம உரிமை  உண்டு.  ஓர் ஆண்டில் ஏதோ ஒரு நாளாவது ஆயிரக்கணக்கான  ஆண்களும் பெண்களும் பாவம், வேறுபாட்டு உணர்வு ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுபட்டு இறைவனின் திரு நாமத்தைப் பாடவும்  கேட்கவும் செய்வது பரம மங்களகரமான செயல்.

4-  புண்ணியத் தலத்திலும் கூட பாவ எண்ணங்கள் ஒரு நாளாவது அடங்கா விட்டால் குற்றம் உங்களுடையது. அவர்களுடையது அல்ல. அருகில் வருபவர்கள் அனைவரையும் அடித்துச்சொல்லத்தக்க ஆன்மீக அலையை எழுப்புங்கள்.

5-  கோயிலுக்கு வந்தும் ” இவள் விலைமகள் இவன் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன் இவன் ஏழை இவன் பாமரன் என்று எண்ணுபவர்களின் ( உங்கள் பெரிய மனிதர்களைத் தான் குறிப்பிடுகிறேன்) எண்ணிக்கை குறையுமளவிற்கு நன்மையே உண்டாகும். பக்தர்களின்  ஜாதி, பால் வேறுபாடு? தொழில்  இவற்றைப் பார்ப்பவர்கள் நமது குருதேவரைப் புரிந்து கொள்ள முடியுமா? நூற்றுக்கணக்கான விலை மகளிர் வந்து அவரது திருவடிகளில் வணங்கட்டும் என்று நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். நல்ல மனிதர் வரட்டும், வராமல் போகட்டும், ஆனால் விலைமகளிர்  வரட்டும், குடிகாரர்கள் வரட்டும், திருடர்களும் கொள்ளைக்காரர்களும் வரட்டும், எல்லோரும் வரட்டும், அவரது வாசல் எல்லோருக்காகவும் திறந்துள்ளது. செல்வந்தன் இறைவனின் அரசினுள் புகுவதை விட ஒட்டகம் ஊசியின் காது வழியாகப் புகுந்து வெளி வருவது எளிது, அரக்கத் தனமான கருத்துக் களுக்கெல்லாம் மனத்தில் இடம் கொடுக்காதே.

 

6-  ஆனாலும் ஏதோ ஒரு விதமான சமுதாயக் கண்காணிப்பு வேண்டுமே, அதை எவ்வாறு செய்வது? ஒரு சிலர் (வயது முதிர்ந்தவர்களாக இருப்பது நல்லது) அன்றைய காவல் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். விழா நடைபெறுகின்ற இடத்தில் யாராவது தகாத பேச்சு, செயல் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பதைக் கண்டால்  அவர்களை அந்தக் கணமே அங்கிருந்து வெளி யேற்றி விட வேண்டும். ஆனால் நல்லவர்களாக நடந்து கொள்ளும்வரை அவர்களை பக்தர்களாகவே மதிக்க வேண்டும். அது ஆண், பெண், நல்லவர், கெட்டவர் யாராக இருந்தாலும் சரி.

 ஒருகோணத்தில் பார்க்கும்போது இந்தச் சிறு சிறு தடங்களும் பிரச்சனைகளும் சுவாமிஜிக்குத் தேவை என்றே கூறவேண்டும். சிறு தூண்டுதலிலேயே தியானத்திலும் சமாதியிலும் மூழ்கி விடுபவர் அவர். ஆல்பைன் போன்ற அமைதிப் பகுதிகள் அவரை ஒரேயடியாகத் தம்முள் மூழ்கிவிடச்செய்யக் கூடாது என்பதற்காகவே குருதேவரே இவற்றையெல்லாம் அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும்.

 

சுவிட்சர்லாந்திலிருந்து ஜெர்மனி சென்றார் சுவாமிஜி. முதலில் அவர்கள் சென்ற இடம் ஹைடில்பர்க்,. ஜெர்மனியில் சிறந்த பல்கலைக்கழகங்கள் அங்கே  உள்ளன. அவற்றைச்சென்று கண்டனர். அந்த ஊரிலுள்ள புராதனக்கோட்டை ஒன்றையும்  சென்று பார்த்தனர். அங்கே  உள்ள ஒரு நிலவறையில் வைக்கப் பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ஒயின் ஜாடியைக் கண்டனர். ரைன் நதி வழியாகப் படகில் பயணம் செய்து அடுத்து அவர்கள் சென்ற இடம் கொலோன். அங்கு பல நாட்கள் தங்கினர். தங்க வேலைப் பாடுகளும் மர வேலைப்பாடுகளுமாக க் கண்ணைப் பறிக்கின்ற சர்ச்சுகளைச்சென்று பார்த்தனர்.

 ஜெர்மனியின் தலைநகரம் பெர்லின். உலகின் மிகச் சிறந்த படைபலம் கொண்ட நாடாக ஜெர்மனி அன்று கருதப்பட்டது. அங்கே செல்வதற்கு மிகவும் விரும்பினார் சுவாமிஜி. பெர்லின் அழகையும் செல்வச் செழிப்பையும் கண்டு மிகவும் ஆச்சரியப் பட்டார் அவர்.

 சுவாமிஜியும் குழுவினரும் அடுத்து கீல் நகரத்திற்குச் சென்றனர். அங்கே பேராசிரியர் பால் தாசனைச் சந்தித்தனர். ஜெர்மானியத் தத்துவப்பேராசிரியரான அவர் கீழை நாட்டுத் தத்துவங்களில் மிகுந்த ஆர்வம் உடையவர். சம்ஸ்கிருதத்தில் நல்ல புலமை பெற்றிருந்த அவர் இந்தியாவை மிகவும் நேசித்தார். இந்தியா விற்கு வரவும்  செய்துள்ளார். பேராசிரியரும் அவரது  மனைவியும் சுவாமிஜியை வரவேற்றனர். சுவாமிஜியும் பேராசிரியரும் மிகுந்த ஆர்வத்துடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். தாம் இந்தியாவிற்கு வந்திருந்த போது கண்ட காட்சிகளையும் பெற்ற அனுபவங்களையும் பேராசிரியர் கூறினார். இருவருக்கிடையில் நல்ல நட்புறவு மலர்ந்தது.

 பால் தாசனின் வீட்டில்  ஓரிரு நாட்கள் தங்கினார் சுவாமிஜி. அங்கும் ஒரு முறை அவரது அபார நினைவாற்றல்  வெளிப்பட்டது. ஒரு நாள் சுவாமிஜி கவிதை நூல் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த பால் தாசன் சுவாமிஜியை அழைத்தார்.பேச முற்பட்டார். ஆனால்  சுவாமிஜியிடமிருந்து  எந்தப் பதிலும் இல்லை. ஓரிரு முறை அழைத்த அவர் பிறகு சென்றுவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள்  இதனை சுவாமிஜியிடம் தெரிவித்தார் அவர். அதற்கு சுவாமிஜி தாம் படிப்பில் ஆழ்ந்திருந்ததாகவும் அதனால் அவர் அழைத்ததைக்கேட்கவில்லை என்றும் தெரிவித்தார். இந்தப் பதில் பால் தாசனுக்குத் திருப்தி கரமாக இல்லை. அன்று இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, அந்தக் கவிதை நூலிலிருந்து  சுவாமிஜி ஏராளம் மேற்கோள்களைக் காட்டியது கண்டு பால்தாசன்  பிரமித்துப்போனார். அவரது நினைவாற்றல் பால்தாசனைத் திகைக்கச் செய்தது.

 மாக்ஸ்முல்லருக்கும் பால் தாசனுக்கும் இடையில் பெருத்த வேறுபாடு  இருந்தது. மாக்ஸ் முல்லரைப்போல் இவரால் தமது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த இயலவில்லை. ஆங்கிலோ-இந்திய அதிகாரிகளின் தயவும், இங்கிலாந்திலுள்ள மற்ற அறிஞர்களின் ஒத்துழைப்பும்  தேவைப்பட்டதால் இந்தியா மீது  இருந்த ஈடுபாட்டையோ ஆர்வத்தையோ பால்தாசனால் வெளிவர முடியவில்லை.

 

 சுமார் இரண்டு மாதங்களை ஐரோப்பிய பயணங்களில் அமைதியாகக் கழித்துவிட்டு, செப்டம்பர் 17ஆம் நாள் சுவாமிஜி இங்கிலாந்திற்குத் திரும்பினார். அவரது உடல் நிலையில் ஓரளவிற்கு நல்ல முன்னேற்றம் தெரிந்தது. மீண்டும்  இங்கிலாந்தில் தமது பணியை ஆரம்பித்தார் அவர். இதற்கிடையில் அமெரிக்கப் பணியைத்தொடர அபேதானந்தர் விரைவில் இந்தியாவிலிருந்து வரப்போகின்ற செய்தியும் அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஹேரியட் ஹேலின் திருமணச் செய்தியும் அங்கே அவருக்காகக் காத்திருந்தது. அவர் ஹேரியட்டிற்குப் பதில் எழுதினார்.

 ஒவ்வொன்றையும் முடிந்தவரை நன்றாகச்செய்ய வேண்டும். உன்னை நான் அறிந்தவரையில் உன்னிடம்  பேரளவிற்குப்பொறுமையும் சகிப்புத் தன்மையையும் தரக்கூடிய அமைதியின் ஆற்றல் உள்ளது. எனவே உனது திருமண வாழ்வு மகிழ்ச்சியாக அமையும்.

 உனக்கும், உன் கணவராக வரப்போகின்றருக்கும் எல்லா ஆசிகளும்  நிறையட்டும். உன்னைப்போன்ற நல்ல, அறிவுமிக்க, அன்பு கலந்த, அழகான ஒருத்தியை மனைவியாகப் பெறுவது பேரதிர்ஷ்டம் என்பது அவரது நினைவில்  எப்போதும் இருக்க  இறைவன் அருளட்டும். உடனடியாக அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து நான் அங்கு வந்து சேர்வது முடியாது என்றே எனக்குத்தோன்றுகிறது. உன் திருமணத்திற்கு வரவே நான் ஆசைப்படுகிறேன். இப்போது நான் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம் எங்கள் நூல் ஒன்றிலிருந்து மேற்கோள் காட்டுவது தான்.

 உன் கணவனின் பிரியா அன்பை நீ எப்போதும் அனுபவித்து வருவாயாக. இந்த வாழ்வில் விரும்பத்தக்கவற்றை அடைய கணவனுக்கு உதவுவாயாக, உனது  குழந்தைகளின் குழந்தைகளை நீ பார்த்த பிறகு, வாழ்க்கை நாடகம் அதன் முடிவுக் கட்டத்தை  நெருங்கும்போது நீங்கள் இருவரும் அந்த வரப்பிலாக் கடலாகிய சச்சிதானந்தத்தைச்சேர பரஸ்பரம் உதவிக்கொள்ளுங்கள். அந்தக் கடல் நீரைத்தொட்டதும் வேறுபாடுகள் அனைத்தும் கரைந்தோட , நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம்.

 நீ வாழ்வு முழுவதும் தூய்மையாக உமாதேவியைப்போல் வாழ்வாயாக! உமையிடம் தனது உயிரை வைத்திருந்த சிவனைப்போன்று உன் கணவர் இருப்பாராக.

 

இந்தியா அழைக்கிறது

 

 என்னவோ, லண்டன் பணிகளைப்பற்றி சுவாமிஜிக்கு ஒரு சந்தேகம் இருக்கவே செய்தது. லண்டன் பணி விரைவாக வளர்ந்து வருகிறது. வகுப்புகள் பெருகிக்கொண்டே போகின்றன. இவ்வாறு வளர்ந்து கொண்டே போகும் என்பதில் சந்தேகமில்லை. ஆங்கிலேயர்கள் உறுதியானவர்கள். விசுவாசமானவர்கள். ஆனால் நான் விலகியதும் இந்தப் பணி பேரளவிற்கு பாதிக்கப்படுவது நிச்சயம். பின்னர் ஏதாவது நிகழும், அதை மீண்டும் சரிப்படுத்த வலிமையான ஒரு மனிதன் தோன்றுவான். எது நல்லது என்பது இறைவனுக்கே தெரியும். என்று அளசிங்கருக்கு எழுதினார் அவர்.

 இங்கிலாந்துப் பணிகளின் வளர்ச்சிக்குத்தாம் அங்கே இருப்பது மிகவும் அவசியம் என்று அறிந்திருந்தார் சுவாமிஜி. 1897 ஏப்ரலில் அவர் ரஷ்யா போக வேண்டும்  என்றும் முடிவு செய்திருந்தார். ஆனால் திடீரென்று ஒரு நாள் தாயகம் திரும்பப்போவதாகத்தெரிவித்தார்.

அவர் இதனைக் கூறியபோது  அவரது நண்பர்களும் சீடர்களும் மாணவர்களும் உண்மையாகவே அதிர்ச்சி அடையத்தான் செய்தனர். அடுத்த வாரம்  5ன்று சொற்பொழிவுகள், அவற்றுடன் லண்டனில் இந்தக்கட்டப்பணி நிறைவு பெறும். ஆனால் நிலைமை மிகவும் சாதகமாக இருக்கின்ற இந்த நேரத்தில்  பணியை விடுவது முட்டாள் தனம் என்று இங்குள்ள ஒவ்வொருவரும்  நினைக்கின்றனர், ஆனால் அன்பிற்குரிய தெய்வமோ, புராதன பாரதம் நோக்கிப்புறப்படு என்கிறது. நானும் சரி என்று கீழ்ப்படிகிறேன். என்று ஜோவிற்கு எழுதினார் அவர்.

வாழ்க்கையின் எந்த முடிவுகளையும் இறைவனின் திருவுளத்தை அனுசரித்து நிறைவேற்றி வருபவர் அல்லவா, சுவாமிஜி! அந்த இறைவன் அவர் இந்தியா செல்லவேண்டும் என்று நினைத்தால் அதனை மீறுவாரா என்ன?

 நவம்பர் நடுவில் ஒரு நாள் அவர் மிசஸ் சேவியரை அழைத்து, நேப்பிள்ஸிலிருந்து  இத்தாலி வழியாக இந்தியா செல்லும் கப்பலில் முடிந்த அளவு விரைவில் நான்கு  டிக்கட்டுகள்  வாங்குமாறு கூறினார். சுவாமிஜியின் திடீர் முடிவுகளும் திருப்பங்களும் அவருக்குப் புதியவை அல்ல, எனினும் அவர் சற்று  துணுக்குறவே செய்தார். ஆனால் உடனடியாக டிசம்பர் 16-ஆம்  நாள் புறப்படும் கப்பலில் நான்கு டிக்கட்டுகள் வாங்கினார். அவை சுவாமிஜி சேவியர் தம்பதிகள், குட்வின் ஆகியோருக்கு உரியவை

 

தூசியை யும் நேசிக்கிறேன்

 

 சுவாமிஜி பிரியப்போகிறார் என்ற செய்தி அனைவரின் மனத்தையும் வாட்டியது. பிரிவுபசார விருந்துகள் தொடங்கின. பல  இடங்களில் விருந்துகள் அளிக்கப் பட்டன. அவர் இந்தியாவிற்குத் திரும்பும் முன்னர் நண்பர் ஒருவர் அவரிடம், சுவாமிஜி ஆடம்பரமும், செல்வாக்கும் மிக்க மேலை நாடுகளில் நான்கு வருடங்கள் வாழ்ந்து விட்டீர்கள், இதோ இப்போது  உங்கள் தாய் நாட்டைப்பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்.சுவாமிஜியின் கண்களில் மகிழ்ச்சியின் கீற்றுகள் மின்னின. முகத்தில் ஆனந்த பரவசம் மிளிர்ந்தது. உணர்ச்சி பொங்கும் குரலில், அங்கிருந்து வருமுன்பு நான் இந்தியாவை நேசித்தேன். இப்போதோ அதன் தூசி கூட எனக்கு புனிதமாகத்  தெரிகிறது. அங்கு வீசும் காற்று புனிதம். அது ஒரு புண்ணிய பூமி. அது ஒரு தீர்த்தத் தலம் என்று கூறினார்.

 தாயகம் நோக்கி சுவாமிஜியின் கப்பல் விரைந்தது. சேவியர் தம்பதிகளிடம் அவர் கூறினார், ”இப்போது என் மனத்தில் ஒரு சிந்தனை தான் உள்ளது. அது இந்தியா, இந்தியாவை அடைவதை நான் ஆவலுடன்  எதிர் பார்க்கிறேன்.

 

இந்தியா எழுகிறது!

 

மேலை நாடுகளுக்குச் சென்று, நமது ஆன்மீகப் பாரம்பரியத்தையும்  கலாச்சாரப் பெருமையையும் அங்கே  அறியச்செய்த போதே இந்தியர்களின் ஆழ் மனத்தை சுவாமிஜி தட்டி எழுப்பிவிட்டார்.அந்த விதத்தில் அவரது மேலை நாட்டு வெற்றி இந்தியர் களுக்கு ஒரு திருப்பள்ளியெழுச்சியாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். நீங்கள் அடிமைகள், நீங்கள்  ஒன்றுக்கும்  உதவாதவர்கள், உங்களுக்கென்று எந்தப் பாரம் பரியமும் இல்லை. எல்லாம் நாங்கள் வந்தே உங்களுக்குத்தந்தோம். எனவே நீங்கள் எங்களுக்குக் கைதட்டிச் சேவகம் செய்யுங்கள், என்று வெள்ளையர்கள் கூறியதைக்கேட்டும், அவர்களது அடக்கு முறையாலும்  தாங்கள் மனிதர்கள்  என்பதையே மறந்து ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்தார்கள் இந்தியர்கள். இந்தியாவின் பெருமையை,  அதன் ஆன்மீகப் பாரம்பரியத்தை சுவாமிஜி மேலை நாடுகளுக்கு எடுத்துக் கூறியபோது வியப்பில் ஆழ்ந்தது மேலை நாடு மட்டும் அல்ல, இந்தியாவும் தான். நாம் உண்மையிலேயே இவ்வளவு பெருமை வாய்ந்தவர்களா? உலகிற்கே ஆன்மீக குருவாகின்ற தகுதி நம்மிடம் உள்ளதா? என்று இந்தியர்கள்  சிந்திக்கத் தொடங்கினார்கள். விழிப்புற்ற அந்தச் சிந்தனைக்குப் பாதையமைத்துக்கொடுப்பதாக  அமைந்தன காலத்தால் அழியாத சுவாமிஜி கடிதங்கள்!

 

தேவியே எழுதுகிறாள்!

 

 

புனிதரான சுவாமிஜியின் சிந்தனைகள் கடிதங்கள் வழியாகத்தான் ஆரம்பத்தில்  நம்மை வந்தடைந்தன.கடிதங்களின் வாயிலாகத்தான் சுவாமிஜிதமது இந்தியப்பணியை ஆரம்பித்தார் என்று கூறலாம். தவத்தாலும் ஆன்மீக சாதனைகளாலும் இறையருளாலும் புனிதம்  பெற்ற மனத்திலிருந்து  எழுகின்ற சிந்தனைகள் உலகையே அசைக்க வல்லவை. ஏனென்றால்  அத்தகைய மனத்தில் சாட்சாத் தேவியே சிந்தனைகளை எழுப்புகிறாள். உத்திஷ்டத ஜாக்ரத- எழுந்திருங்கள். விழித்திருங்கள். கடவுள் நம் பின்னால்  உள்ளார். இதற்கு மேல் என்னால் எழுத முடியவில்லை.முன்னேறிச்செல்லுங்கள். இதை மட்டும் சொல்லி விட விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை யார் யார் படிக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் எனது  சக்தி வரும். நம்பிக்கை வையுங்கள்.முன்னேறிச்செல்லுங்கள் . ஹரே, ஹரே யாரோ என் கையைப் பிடித்து இவ்வாறெல்லாம் எழுதச்செய்கிறார்கள். முன்னேறிச்செல்லுங்கள், ஹரே, ஹரே என்று தமது கடிதங்களைப்பற்றி எழுதுகிறார் சுவாமிஜி. இப்படி தேவியின் கைக்கருவியாக இருந்து சுவாமிஜி அளித்தவை கடிதங்கள்!

 

சுவாமிஜியின் கடிதங்களுக்கு மற்றொரு பெருமையும் உண்டு. அவரது சகோதரச் சீடர்கள் , சீடர்கள் போன்ற பலரும் எழுதியுள்ள கடிதங்கள் பலவும் பிறரது கையெழுத்தில் உள்ளன. அவர்கள் கையொப்பம் மட்டும் இட்டிருக்கிறார்கள். ஆனால் சுவாமிஜியின் கடிதங்கள் அனைத்தையும் அவரே கைப்பட எழுதியுள்ளார். அவரது கடிதங்களில் கிடைத்தவை சுமார் 778. அவை அவரது இலக்கியத்தொகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. இத்தகைய வேலைகளுக்கு இடையிலும், பரபரப்பான வாழ்க்கையிலும் இவ்வளவு கடிதங்களை எழுதியிருப்பது மலைப்பாகவே உள்ளது.

சுவாமிஜியின் கடிதங்களிலிருந்து அவரது இந்தியப் பணித்திட்டத்தில் முக்கியமாக மூன்று  அம்சங்களைக் காண்கிறோம்.

 

1-  எழுச்சி.

2-  காலங்காலமாக அடிமைப்பட்டதன் காரணமாக வலுவிழந்து  தூங்கிக் கிடந்த இந்தினது முதல் தேவை எழுச்சி. சுவாமிஜி இந்தியாவிற்கு எழுதிய எல்லா கடிதங்களிலும் அவரது உத்வேக மொழிகளை நாம் காண்கிறோம்.

 எழுந்திருங்கள், எழுந்திருங்கள். நீண்ட இரவு கழிந்து கொண்டிருக்கிறது. பகற்பொழுது நெருங்கிக் கொண்டிருக்கிறது, அலை எழுந்து விட்டது. அதன் பெருவேகத்தை எதிர்த்து நிற்க எதனாலும் முடியாது. என் இளைஞர்களே, வேண்டுவதெல்லாம்  உற்சாகம், உற்சாகமே! என் குழந்தைகளே அன்பு, அன்பு, நம்பிக்கை, எல்லையற்ற நம்பிக்கை இவையே வேண்டும். பயம் வேண்டாம். பாவங்களுள் மிகப்பெரிய பாவம் பயம் என்பதே. அனைவருக்கும் என் ஆசிகள்.

இந்தியா விழிப்புணர்வு-

-

  எழுச்சி பெற்ற அவர்கள் மீண்டும் தூங்கிவிடக் கூடாது. அவர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். அதனைக் கல்வியின் மூலம் அளிக்க வேண்டும்.

 உண்மையான குடிகளான குடிசை வாழ் மக்கள் தங்கள் ஆண்மையை, தங்கள் தனித்துவத்தை மறந்து விட்டார்கள். இந்து, முஸ்லிம், அல்லது கிறிஸ்தவனின் காலடியில் மிதிபட்டு, பையில் பணம் இருப்பவனின் காலடியில் மிதிபடத்தான் நாங்கள்,  பிறந்துள்ளோம். என்றே அவர்கள் எண்ணத் தலைப் பட்டு விட்டார்கள். அவர்கள் இழந்த தனித்துவத்தை அவர்களுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும், கல்வி கொடுக்க வேண்டும். பொது மக்களுக்குக்  கல்வியூட்டி அவர்களை உயர்த்துங்கள். இந்த ஒரு வழியில் தான் சமுதாய உணர்வு கொண்ட நாடு உருவாக முடியும்.

 

ஆனால் அதில் ஒரு சிக்கல் இருப்பதைக் கண்டார் சுவாமிஜி.

 

 ஒவ்வொரு கிராமத்திலும் இலவசப் பள்ளிகளை ஏற்படுத்துவதற்கான வசதி நமக்கு இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். ஆனாலும் ஏழைச் சிறுவர்கள் தங்கள் வாழ்க்கை வழி தேடி உழவு செய்யப்போவார்களே தவிர, பள்ளிக்கு வர மாட்டார்கள். நம்மிடம் அதற்கெல்லாம் வேண்டிய பணமும் இல்லை, அவர்களைக் கல்வி  கற்க வந்தே தீருமாறு செய்வதும் நம்மால் முடியாது. இந்தப் பிரச்சனைரயத் தீர்க்க வழியே  இல்லை என்று தான் தோன்றுகிறது. ஆனால் அதற்கான வழியொன்றை நான் கண்டு பிடித்துள்ளேன். அது இது தான். மலை முகமதுவிடம் வராவிட்டால், முகமது மலையிடம்  செல்ல வேண்டும்.  ஏழைகள் கல்வியிடம் வர முடியாமல் போனால் , கல்வி அவர்களைச் சென்று சேர வேண்டும். –வயலில், தொழிற்சாலையில் என்று எங்கானாலும் அது அங்கு போய்  அவர்களைச்சேர வேண்டும். எப்படி? என் சகோதரத் துறவிகளை நிங்கள் பார்த்திருக்கிறீர்கள். அவர்களைப்போல் சுயநலமற்ற வர்களை, நல்லவர்களை, படித்த நூற்றுக்கணக்கானோரை இந்தியா முழுவதிலும் நான் பெற முடியும். இத்தகையோர் கிராமம் கிராமமாகப்போகட்டும். மதத்துடன் கல்வியையும் வீடு தோறும் சேர்க்கட்டும். இது போலவே நம் பெண்களுக்குக் கலவியளிக்க விதவைகளை ஒருங்கிணைக்கவும் முயற்சி செய்துள்ளேன்.

 

 எத்தகைய கல்வியை அளிப்பது?

 

 புகைப்படக் கருவியின்  துணையுடன் வாளஇயல்  படங்களையும், பல்வேறு நாட்டு மக்கள், வரலாறுகள் சம்பந்தமான வேறு படங்களையும் திரையிட்டுக் காட்ட வேண்டும். இவ்வாறு பூகோளங்கள் மற்றும்  படங்கள் மூலம் வாய்க்கல்வியாக எவ்வளவோ செய்து முடிக்கலாமே! கண் ஒன்றே அறிவைப் பெறுவதற்கான வாசல் என்பது அல்ல. காதும் ஒரு வாசலாக அமைய முடியும். இவ்வாறு மக்கள் உயர்ந்த கருத்துக்களையும், அறநெறியையும், எதிர்காலம் நன்றாக அமையும் என்பதில் நம்பிக்கையையும் பெறுவார்கள். இதனுடன் நமது வேலை தீர்ந்து விடுகிறது. மீதியை அவர்களே செய்து கொள்ளட்டும்.

 

ஆனால் இந்தக் கல்வியைப் பொறுத்த வரையில் ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு சுவாமிஜி  எச்சரிக்கிறார். அது, மத உணர்விலிருந்து மக்களை விலக்காதிருத்தல்.

 பாமர மக்களின் மத உணர்வுக்கு ஊறு  செய்யாமல் அவர்களை உணர்த்துதல்- இந்தக் குறிக்கோளை உங்கள் முன் வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் அவர்களை உயர்த்த முடியுமா? தங்களிடம் இயல்பாக உள்ள ஆன்மீகப் பண்பை இழக்காமல், தாங்கள் இழந்த தனித்துவத்தை அவர்களுக்கு நீங்கள் மீண்டும் பெற்றுத் தர முடியுமா? சமத்துவம், சுதந்திரம், செயல்திறன், ஆற்றல் இவற்றில் மேலை நாட்டினருள் தலை சிறந்த மேனாட்டினராக இருந்து, அதே வேளையில் மதப் பண்பாட்டிலும் இயல்புணர்ச்சிகளிலும் முழுமையான இந்துவாகவும் இருக்க உங்களால்  முடியுமா? இதைச் செய்தேயாக வேண்டும், செய்தே தீர்வோம். இதைச் செய்வதற்கென்றே நீங்கள் அனைவரும் பிறந்திருக்கிறீர்கள்.

 

 இவற்றை அமைப்பு ரீதியாகச் செயல்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் சுவாமிஜி.

 வாழ்வில் எனது முழு ஆசையும் இது தான். மிக மேலான கருத்துக்களை ஒவ்வொருவருடைய இருப்பிடத்திற்கும் கொண்டு சேர்ப்பதற்கான  ஓர் அமைப்பை இயக்கி விட வேண்டும். பின்னர் ஆண்களும் பெண்களும்  அவரவர் விதியை அவரவரே நிர்ணயிக்கட்டும். வாழ்வின் மிக மிக முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி நம் முன்னோர்களும், அதைப்போலவே மற்ற நாட்டினரும் என்னென்ன சிந்தித்துள்ளனர் என்பதை அவர்கள் அறியட்டும். முக்கியமாக இப்போது பிறர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்கள் காணட்டும் பிறகு ஒரு முடிவுக்கு வரட்டும். நாம் செய்ய வேண்டுவதெல்லாம் ரசாயணப்பொருட்களை ஒன்று சேர்த்து வைப்பது தான். இயற்கை, தனது நியதிகளுக்கு  ஏற்ப அவற்றைப்படிகமாக்கிவிடும். கடினமாக உழையுங்கள், உறுதியாக இருங்கள், இறைவனில் நம்பிக்கை வையுங்கள். பணியை ஆரம்பியுங்கள், விரைவாகவோ தாமதித்தாலோ நானும்  வந்து சேர்ந்து கொள்கிறேன்.

 

 ஒரு சங்கத்தை அமைத்துக்கொள்ளுங்கள். செயலாளர், பொருளாளர் என்ற முறையில் இங்குள்ள  என் நண்பர்கள், உதவி புரிபவர்கள், ஆகியோருடன் நேராகத் தொடர்பு வைத்துக்கொள். இதை எவ்வளவு சீக்கிரமாகச் செய்கிறீர்களோ அந்த அளவிற்கு  உங்களுக்கு நல்லது. எனக்கும் நல்லது. எல்லா வேலைகளையும் நீ செய்தாலும் சில பெரிய புள்ளிகளின் பெயர்  தலைவர்களின் பெயராக இருக்கவேண்டும். நீ விரும்பினால் அப்படியே செய். அவர்களின் பெயருக்கு நல்ல மதிப்பிருக்கும்.

 

 


No comments:

Post a Comment