சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-42
🌸
ஓவிய நுணுக்கம்
........................................
அந்தக் காலத்தில் பிரெஞ்சு ஓவியக் கலையில் மிகவும்
புகழ் பெற்றிருந்த ஓவியர் ஒருவர், சுவாமிஜியின் வேதாந்தக் கருத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.
அவர் தாம் வரைந்த ஓவியங்கள் இடம் பெற்ற நாடகத்திற்கு சுவாமிஜியைச் சிறப்பு விருந்தினராக
அழைத்திருந்தார். சுவாமிஜிக்கு பிரெஞ்சு மொழி தெரியும்.ஆதலால் அவர் நாடகத்தைக் கூர்ந்து
கவனித்தார். நாடகத்தின் நடுவில் திரையில் தெரிந்த ஓர் ஓவியத்தில் ஒரு தவறு இருப்பதை
சுவாமிஜி கண்டார். அது ஒரு தொழில் நுட்பத் தவறு. அந்தத் தவறு சரி செய்யப் பட்டிருந்தால்,
நாடகம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று சுவாமிஜி கருதினார்.
நாடகம் முடிந்தது. சிறப்பு விருந்தினராகியசுவாமிஜியிடம்
நாடகம் பற்றிய கருத்தை அறிய அந்த ஓவியரும் அரங்கின் நிர்வாகியும் வந்தார்கள்.
அப்போது சுவாமிஜி தாம் நாடகத்தை மிகவும் ரசித்ததை
அவர்களிடம் தெரிவித்தார். அதோடு, அவர் தாம் கண்ட தொழில் நுட்ப த் தவறையும் அவர்களுக்குச்
சுட்டிக் காட்டினார். அதைக்கேட்டதும், பிரெஞ்சு நாட்டின் புகழ் பெற்ற அந்த ஓவியருக்கு
ஒரே ஆச்சரியம்! ஏனென்றால் ஓவியக் கலையில் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே அந்தத் தவறைப் புரிந்து கொள்ள
முடியும்! அந்த ஓவியர் சுவாமிஜி எடுத்துக் காட்டிய தவறையும், அவர் கூறிய பொருத்தமான
திருத்தங்களையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.
பிரான்சிஸ் சுவாமிஜியால் மிகவும் கவரப்பட்டவர்களில் ஒருவர் ரிச்சலியு இளவரசர் . அவர் அப்போது சிறுவனாக
இருந்தார். சுவாமிஜி அங்கிருந்து புறப்படத் தயாரானபோது ஒருநாள் அந்த இளவரசரிடம், நீங்கள்
ஏன் உலகைத் துறக்கக் கூடாது? ஏன் என்னுடன்
உங்கள் வாழ்க்கையைத் தொடரக் கூடாது? என்று கேட்டார். அதற்கு அந்த இளவரசர், சுவாமிஜி,
உலகைத் துறப்பதால் எனக்குக் என்ன கிடைக்கும்?
என்று கேட்டார். நீங்கள் அதனால் மரணத்தைநேசிக்க வல்லவர் ஆகலாம்” என்றார் சுவாமிஜி. இளவரசருக்குப் புரியவில்லை. சுவாமிஜி தொடர்ந்தார்.
இதன் பொருள் என்னவென்றால் நீங்கள் மரணத்தைக்
கண்டு அஞ்சாத நிலையை உங்களுக்கு என்னால் தர
முடியும். மரணம் உங்கள் முன்னால் நிற்கும்போது, அதைப் பார்த்து நீங்கள் சிரிக்க வல்லவர்
ஆவீர்கள். ஆனால் ஏனோ அப்போது அந்த இளவரசர் சுவாமிஜி கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்
உலக வாழ்வையே நாடினார்.
….
தொடரும் பயணங்கள்
.....................................................................
அக்டோபர் 24-ஆம் நாள் நண்பர்களுடன் பாரிஸை விட்டுப்
புறப்பட்டார் சவாமிஜி. அவருடன் மெக்லவுட், கால்வே, ஜுல்போயி, லாயிஸன் தம்பதிகள் ஆகியோர்
சென்றனர். வியன்னா, கான் ஸ்டான்டி நோபிள் வழியாக அவர்கள் சென்றனர். கான்ஸ்டான்டிநோபிளில்
சுவாமிஜி பொதுச் சொற்பொழிவுகள் ஆற்ற அனுமதி
கிடைக்கவில்லை. ஆனால் இரண்டு இடங்களில் வகுப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.
அடுத்ததாக அவர்கள் சென்ற இடம் கிரீஸ். அங்குள்ள பல
கோயில்களுக்கும் அவர்களை அழைத்துச்சென்ற சுவாமிஜி அதன் வரலாற்று முக்கியத்துவத்தை அவர்களுக்கு
எடுத்துக் கூறினார். அந்தக்கோயில்களின் மகத்துவத்தையும் உட்பொருளையும் விளக்கினார்.
அங்கிருந்த பலி பீடங்கள் வழியாகவும் எங்களை
அழைத்துச்சென்று அங்கு நடந்த சடங்குகள் போன்றவற்றையும் விளக்கினார்” என்று எழுதுகிறார் கால்வே.
அடுத்தது எகிப்து, எகிப்தின் தலை நகரான கெய்ரோ வில்
உள்ள கண்காட்சியைக் காண மிகவும் விரும்பினார் சுவாமிஜி. அவற்றைப் பார்த்ததுடன் பிரமிடுகள்,
ஸ்பிங்ஸ் போன்றவற்றையும் கண்டார். கெய்ரோவில்
நடந்த ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவத்தைக் கால்வே கூறினார்.
….
விலை மகளிருக்கு அருள்
............................................................
ஒரு நாள் கெய்ரோவில் சுவாரசியமாகப்பேசிக்கொண்டே சென்றதில்
வழி தவறி விட்டனர். சுற்றி ச்சுற்றி க் கடைசியில் விலை மகளிர் வசிக்கின்ற ஒரு தெருவில்
நுழைந்து விட்டனர். சிதிலமான ஒரு வீட்டின் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் சுவாமிஜியையும்
அழைக்கலாயினர். சுவாமிஜியுடன் சென்றவர்கள் அந்த இடத்தை விரைவாகக் கடந்து விடலாம் என்று
வேகமாக நடக்குமாறு அவரிடம் கூறினர்ஆனால் சுவாமிஜி அவர்களைப்பொருட்படுத்தாமல் அந்தப்
பெண்களிடம் சென்றார். பிறகு கருணையால் நெகிழும் குரலில் அவர்களிடம், பரிதாபத்திற்குரிய
ஜீவன்கள், பாவம்! தங்கள் தெய்வீகத்தை அழகிலட வெளிப்படுத்தினார்கள்........ இப்போது
இவர்களின் நிலைமையைப்பாருங்கள்” என்று கூறினார். அவர்களின் நிலைமையைக்கண்டு
சுவாமிஜியின் இதயம் நெகிழ்ந்தது. கண்கள் குழமாயின. சிறிது நேரத்தில் அவர் அழவே ஆரம்பித்து
விட்டார். கண நேரத்தில் அந்தச்சூழ்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அந்தப் பெண்கள் ஒரு
தெய்வ மனிதரின் முன்பு தாங்கள் நிற்பதை உணர்ந்தனர்.
அவர்களில் ஒருத்தி சுவாமிஜியின் முன்னால் மண்டி யிட்டு அவரது அங்கியின் நுனியை முத்தமிட்டு,
ஸ்பானிஷ் மொழியில் இவர் தெய்வ மனிதர், இவர்
தெய்வ மனிதர் என்று கண்ணீருடன் கூறினாள்..
ஒரு தெய்வ மனிதரின் முன் நிற்பதற்குத் தான் தகுதியில்லாதவள் என்று எண்ணிய மற்றொருத்தி
கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
அவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து விட்டு அங்கிருந்து அகன்றார் சுவாமிஜி.
பாரிஸிலிருந்து புறப்பட்ட போது, எகிப்து முதலான இடங்களைப்
பார்த்துவிட்டு, மீண்டும் பாரிஸிற்கு வந்து சில சொற்பொழிவுகள் செய்ய வேண்டும் என்று
தான் எண்ணியிருந்தார் சுவாமிஜி. ஆனால் இறைவன் திருவுளத்தையும், அது ஒன்றையே சார்ந்து
வாழும் இறைவனின் திருக் குழந்தைகளின் செயல்பாட்டையும் போக்கையும் அறிய வல்லவர் யார்?
உள்ளத்தளவில் நான் ஓர் இறையுணர்வாளன் . எனது விவாதங்கள், சர்ச்சைகள் எல்லாம் வெறும்
தோற்றம் மட்டுமே. நான் உண்மையில் எப்போதும் சில தெய்வீக அறிகுறிகளையும் அது போன்ற சிலவற்றையும்
நாடுகிறேன்” என்று சுவாமிஜியே தம்மைப் பற்றி கூறியதுண்டு. இறையாணை பெற்றே
அவர் எதையும் செய்தார்.
கெய்ரோவிலிருந்த போது திடீரென்று தாம் இந்தியா திரும்பப்போவதாக
அறிவித்தார் சுவாமிஜி. அங்கே அவருக்கு உடல்நிலை சரியில்லமல் போயிற்று. ஒரு முறை மாரடைப்பும்
தாக்கியது. அவர் திடீரென்று புறப்பட முடிவு செய்ததற்கு இவை காரணமாக இருக்கலாம். அது
மட்டுமின்றி, அவரது வாழ்க்கையில் ஒன்றி விட்டவரும், இமய மலையில் மாயாவதியில் அத்வைத
ஆசிரமத்தில் வாழ்ந்தவருமான சேவியர் அக்டோபர் 28-ஆம் நாள் மரணமடைந்தார். இந்தச் செய்தி
சுவாமிஜியைச்சென்று சேர முடிய வில்லை. அவர் உடல் நலமற்றிருப்பது சுவாமிஜிக்குத் தெரியும். ஏதோ உள்ளுந்தலின் காரணமாக அவருக்கு திடீரென்று
சேவியரைக்காண வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதுவும் சுவாமிஜியைத் துரிதப்படுத்தியிருக்கலாம்.
ஆனால் சுவாமிஜியின் இந்தத் திடீர் முடிவு அவருடன்
இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுவாமிஜியும் அவர்களைப் பிரிவதில் வருந்தவே செய்தார். ஆனாலும்
போக முடிவு செய்து விட்டார். கால்வே அவரிடம்
சென்றார்.
கால்வே-
சுவாமிஜி, ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள்?
சுவாமிஜி-
என் சகோதரத் துறவிகளுடன் வாழ வேண்டும் என்று தோன்றுகிறது
எனவே நான் இந்தியாவிற்குத் திரும்ப வேண்டுமு்.
கால்வே-
இவ்வளவு தானா! நீங்கள் போக வேண்டும். அவ்வளவு தானே!
உங்கள் பயண ச் செலவை நானே தருகினே். ஆனால், சுவாமிஜி, நீங்கள் ஏன் எங்களைவிட்டுப் பிரிய
நினைக்கிறீர்கள்?
சுவாமிஜியின் கண்கள் குளமாயின. உலகின் தலைசிறந்த
பாடகியருள் ஒருவராகத் திகழ்ந்த கால்வேயின்
பரந்த மனம் சுவாமிஜியை நெகிழச்செய்தது. தழுதழுத்த குரலில் கூறினார்.
நான் இந்தியாவிற்குப்போக வேண்டும். அங்கே மரணம் எனக்காகக்
காத்திருக்கிறது. நான் என் சகோதர்களுடன் வாழ வேண்டும்.
கால்வே-
ஆனால், சுவாமிஜி நீங்கள் இறக்க முடியாது. எங்களுக்கு
நீங்கள் வேண்டும்.
சுவாமிஜி-
ஜுலை 4-ஆம் நாள் என் இறுதி நாளாக இருக்கும்-
அதன் பிறகு அருகிலுள்ள பல இடங்களைக் காண மெக்லவுட்
முதலானோர் சென்றனர். ஆனால் சுவாமிஜி போகவில்லை. அதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. அவரதுமுடிவை
மாற்ற இயலாது என்பது தெரிந்த போது அவரது பயணத்திற்கான
ஏற்பாடுகளைச் செய்தனர். பாதி வருத்தத்துடனும் பாதி இறைவன் திருவுளத்தைச் சார்ந்தசரணாகதி
நிலையிலும், கப்பலில் நின்று எங்களை நோக்கி
கையசைத்து, ஆசிகளைத் தெரிவித்தபடி எங்களிடமிருந்து பிரியாவிடை பெற்றார் அவர், என்று
எழுதுகிறார் ஒருவர். சுவாமிஜி புறப்பட்ட நாள் 1900 நவம்பர் 26.
….
கப்பலில்
.............................
கப்பலில் சுவாமிஜியின் தோற்றத்தால் கவரப்பட்ட பலரும்
அவரை அணுகி அவருடன் பல விஷயங்களைப்பேசினர். அவர்களில் ஒருவரான கால்கின்ஸ் சுவாமிஜியின்
சிகாகோ சொற்பொழிவுகளைக்கேட்டார். ஆங்கிலேயரான டிரேக் பிராக்மேன் என்பவர் சுவாமிஜியிடம்
பல முறை வாதங்களில் ஈடுபட்டார். அவரது அறிவுக் கூர்மையை வெகுவாக ரசித்தார்.ஆனாலும்,
இந்தியாவிற்கு யாரும் ஆன்மீகத்தைக் கற்பிக்க வேண்டியதில்லை என்று சுவாமிஜி கூறிவதை டிரேக்கினால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
இந்தப் பயணம் சாதாரண பயணம் அல்ல. உலக அரங்கிற்கு
அவர் விடை கொடுத்த பயணம் ஆகும். உலக அரங்கில் அவரது பணிகளை இப்போது பார்ப்போம்.
..................
மேலை நாட்டுப்
பணி
.......................................................
மேலை நாட்டில்
எனது பணி அதிகமாக இருக்கும். அதன் எதிரொலி இந்தியாவில் கேட்கும்” என்று ஒரு முறை துரியானந்தரிடம்
கூறினார் சுவாமிஜி.சுவாமிஜி இரண்டு முறை மேலை நாடுகளுக்குச் சென்றார். முதலில்
1893 ஜுலை இறுதி முதல் 1896டிசம்பர் வரை சுமார் மூன்றரை வருடங்கள். இரண்டாவதாக
1899 ஜுன் முதல் 1900 நவம்பர் வரை சுமார் ஒன்றரை வருடங்கள். மொத்தமாக சுமார் 5 வருடங்கள்
அவர் மேலை நாடுகளில் செலவிட்டார். ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்கு என்று ஆயிரக்கணக்கான
மைல்கள் அவர் அங்கே ஓடி ஓடி உழைத்தார். அந்தக் காலத்தில் ஒலிபெருக்கி போன்ற வசதிகள்
கிடையாது என்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும். எத்தனை பெரிய கூட்டமானாலும் அத்தனை பேருக்கும்
கேட்குமளவிற்கு உரக்கக் கத்திப்பேச வேண்டும். இப்படி ஒரு நாள் அல்ல, இரண்டு நாட்கள்
அல்ல. ஐந்து வருடங்கள் பணி செய்தார்.
இரண்டு முறை மேலை நாடுகளில் அவர் பயணம் செய்த மொத்த
தூரம் சுமார் 1,07, 396 கி.மீ. ஆற்றிய சொற்பொழிவுகள் சுமார் 317. வகுப்பு ச்சொற்பொழிவுகள்
சுமார் 431, கலந்து கொண்ட கருத்தரங்கம் போன்றவை சுமார் 26, பிரமிப்பாக இருக்கிறது!
இந்த விவரம் கூட இது வரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் படி உள்ள தகவல்கள் மட்டுமே.
மேலை நாடுகளில் சுவாமிஜியின் பணி பற்றிய ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த அயராத உழைப்பின் விளைவு என்ன?
...
அமெரிக்கப் பணியின் தாக்கம்.
......................................................
ஹெலன் ஹன்டிங்டன் என்பவர் பிரம்ம வாதின் பத்திரி
கைக்கு ஒரு கடிதம் எழுதினார். சுவாமி விவேகானந்தரின் தாக்கம் அமெரிக்காவில் ஆழமான,
ஆற்றல் மிக்க ஆன்மீக விழிப்புணர்ச்சிக்கு வித்திட்டு
விட்டது. இந்த விழிப்புணர்ச்சி வெளியிலும் மக்களிடையே நன்றாகத்தெரிய ஆரம்பித்து விட்டது.
வேதாந்த இலக்கியங்கள் மிகவும் விற்பனையாகின்றன. ஆன்மா போன்ற வார்த்தைகள் பத்திரிகைகளிலும்
பரவ லாகப் பயன்படுத்தப் படுகின்றன. ஹக்ஸ்லி, ஸ்பென்சர் போன்ற பெயர்களைப்போலவே சங்கரர், ராமானுஜர் போன்ற பெயர்களும்
பிரபலமாகி விட்டன. இந்தியாவைப் பற்றிய நூல்கள் என்றல்ல. இந்தியாவைப் பற்றிய குறிப்புகள்
அடங்கிய நூல்களைக்கூட நூல் நிலையங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றன. ஷோபனேரின்
இலக்கியங்கள் எவ்வளவு வறட்டுத்தனமாக, சலிப்பைத் தருவனவாக இருக்கும் என்பது எல்லோருக்கும்
தெரிந்த ஒன்று. ஆனால் வேதாந்தப் பின்னணி இருக்கின்ற ஒரே காரணத்தால் அவரது நூல்களைக் கூட இப்போதுமக்கள் விரும்பிப் படிக்கத் தொடங்கி விட்டனர்.
இப்படி ஆரம்பிக்கின்ற கடிதத்தை அவர் சற்றே நகைச்சுவை
ததும்ப இவ்வாறு நிறைவு செய்கிறார். சுவாமிஜி எங்களுக்குச் சொந்தம்” என்று இந்தியா இப்போதே அறிவித்து விடுவது நல்லது. ஹோமர் ஒரு
காலத்தில் தெரு வழியாகப் பிச்சை எடுத்துத் திரிந்தார். ஆனால் அதேஹோமர் தங்கள் நாட்டில்
பிறந்ததாக பின்னாளில் ஏழு நாடுகள் சொந்தம் கொண்டாடின. அது போல் எங்கள் குரு நாதரையும்
(சவாமிஜி) எல்லோரும் சொந்தம் கொண்டாடும் நாள் ஒன்று வரும். இந்தியா தனது இணையற்ற புதல்வன்
ஒருவன் மீது தனது உரிமையை இழக்க நேரும்.
....
இங்கிலாந்து
பணியின் தாக்கம்.
.........................
இனி இங்கிலாந்தில் சுவாமிஜியின் தாக்கம் பற்றி பார்ப்போம்.
பிரபல தேசியத் தலைவரும், பிரம்ம சமாஜத் தலைவர்களில் முக்கியமான ஒருவருமான பி.சி. பால்
1898- இல் கூறியது இது. சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்தில் ஆற்றிய சொற்பொழிவுகளால்
பெரிய விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. அவரது அன்பர்களும் நண்பர்களும் சாதாரண விஷயத்தைப்
பெரிது படுத்து கிறார்கள்” என்று சிலர் இந்தியாவில் கூறுகிறார்கள்.
ஆனால் நான் இங்கே இங்கிலாந்திற்கு வந்த பிறகு
அவரது பணியின் தாக்கத்தை எங்கும் காண்கிறேன். விவேகானந்தரை மிகவும் மதிக்கவும் போற்றவும்
செய்கின்ற பலரை நான் இங்கிலாந்தின் பல பகுதிகளிலும்
சந்தித்தேன். நான் விவேகானந்தரின் மதப் பிரிவைச் சார்ந்தவன் அல்ல. எனக்கும் அவருக்கும்
கருத்து வேறுபாடுகள் பல உண்டு. இருந்தாலம் விவேகானந்தர் இங்கே பலரது கண்களை த் திறந்துள்ளார்.
இதயத்தை விரிவு படுத்தியுள்ளார் என்பதை நான்
சொல்லியே ஆகவேண்டும். அவரது போதனைகளால் இங்குள்ள பலரும் பண்டைய இந்து சாஸ்திரங்களிலுள்ள
அற்புதமான ஆன்மீக உண்மைகளை நம்புகிறார்கள். அது மட்டுமல்ல அவர் இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே ஓர் உன்னதமான
தொடர்பை உருவாக்குவதிலும் வெற்றி பெற்றுள்ளார்.
ஒரு முறை தெற்கு லண்டனுக்குப் போயிருந்தேன். அங்கே
ஒரு தெருவில் சாதாரண பெண் ஒருத்தி தனது மகனிடம் என்னைக் காட்டி. அதோ பார் சுவாமி விவேகானந்தர்” என்றாள். நான் அணிந்திருந்த
காவித் தலைப்பாகையின் காரணமாகத் தான் அவள் அவ்வாறு கூறுகிறாள் என்பதை புரிந்து கொண்டேன்.
இவ்வாறு சாதாரண மனிதர்களும் விவேகானந்தரை அறிந்திருப்பதைக் கண்டேன்.