Sunday, 20 November 2016

இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு

இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு…
-
வீரத்துறவி வழங்கிச் சென்ற ஏதோ ஒரு விழுமியத்தைப் பற்றி ஒரு கோடு போட்டுக் காட்டலாம் என்று நினைத்தேன். ஆனால் அக்கோடு கூட முடிவற்று நீண்டு கொண்டே தான் செல்கிறது. அவருடைய ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு பொருள் கூறப் போனால் பிளக்ஸிபிள் டிக்ஷனரி மாதிரி அதிலிருந்து ஒன்று, அதிலிருந்து மற்றொன்று என்று விரிந்து கொண்டே செல்கிறது.
எதை ஏற்பது என்பதை விட, எதையெல்லாம் நீக்கிவிடுவது கல்வி, எது ஞானம்? என்பது குறித்தும், அவ்வாறு விவேகானந்தர் கூறுகிற ஞானத்தைப் பெற்று எப்படி துன்பமற்ற, இன்னல்கள் அற்ற ஒளிமயமான வாழ்வை ஒருவன் அமைத்துக் கொள்ள முடியும் என்பது குறித்துமான விவேகானந்தரின் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல இக்கட்டுரை முயல்கிறது.
”அறிவுக்குக் கிடைக்கிற மிகப் பெரிய பரிசு அறிவு தான்” என்கிறார் விவேகானந்தர். அந்த அறிவானது துன்பங்கள் அனைத்தையும் அகற்றிவிடும்.
இயல்பாகவே என்றும் தூய்மையான, முழுமையான ஒன்றை நேருக்கு நேர் காண்பது போன்ற நிலையை, சொந்த மனதை ஆராய்வதன் மூலம் மனிதன் அடைகிறான். அதன் பிறகு அவன் வாழ்க்கையில் சிக்கல்களோ, துன்பங்களோ தலையெடுப்பதில்லை. துன்பத்திற்கு புத்த பெருமான் கூறுகின்ற காரணத்திலிருந்து விவேகானந்தர் கூறும் காரணம் சற்று விலகி நிற்கிறது.
”பயமும் நிறைவேறாத ஆசைகளுமே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்” என்கிறார் விவேகானந்தர். ”தனக்கு மரணமில்லை என்பதை மனிதன் அறியும் போது அவனுக்கு மரணபயம் நீங்கிவிடுகிறது” என்பதே அவர் அருள்வாக்கு.
தன்னை முழுமையானவன் என்று உணர்ந்து கொள்ளும்போது அவனிடம் வீண் ஆசைகள் எழாது. மேற்சொன்ன இரண்டு காரணங்களும் இல்லாமல் போவதால் அதன்பின் அவனை துன்பம் அணுகுவதில்லை. இந்த உடலில் இருக்கும் போதே அவனுக்கு முழுமையான ஆனந்தம் உண்டாகிறது.
-
இந்த ஆனந்தம் அடைவதற்கான அறிவைப் பெறுவதற்கு ஒரே வழிதான் உள்ளது. அதுதான் மன ஒருமைப்பாடு.
மனதின் ஆற்றல்களையெல்லாம் ஒருமுகப்படுத்தியதால் தான் உலகியல் அறிவை மனிதன் பெற்றான். தேவையற்ற தூண்டல்களை எப்படி அழிப்பது என்பது மட்டும் நமக்குத் தெரியுமானால், உலகம் தனது அறிவின் ரகசியங்களை அளிக்கத் தயாராக இருக்கிறது. அதற்கான வலிமையும் வேகமும் ஒருமைப்பாட்டின் மூலமே கிடைக்கிறது.
”மனித மனதின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. எவ்வளவுக்கு அதை ஒருமைப்படுத்துவீர்களோ அந்த அளவுக்கு ஆற்றலை ஒரு மையத்தில் குவிக்க உங்களால் முடியும். இதுதான் ரகசியம்” என்கிறார் விவேகானந்தர்.
ஆன்மிக அறிவு ஒன்றினால் மட்டுமே நமது துன்பங்களை முழுவதுமாக ஒழிக்கமுடியம். மற்ற எல்லா அறிவுகளும் நமது தேவைகளை ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே நீக்கும். தேவைகளை எழுப்புகின்ற மூல காரணத்தை ஆன்ம அறிவால் மட்டுமே முற்றிலுமாக வேரறுக்க முடியும்.
எனவே ஒருவனுக்கு அளிக்க முடிந்த உதவிகள் அனைத்திலும் ஆன்மிக உதவியே தலை சிறந்தது. ஆன்மிக பலத்தைத் தருபவனே மனித குலத்திற்கு மிகச் சிறந்த நன்மை செய்வான் ஆவான்.
அவ்வாறு மனிதனுக்கு ஆன்மிக உதவி செய்துள்ளவர்களையே மிகுந்த ஆற்றல் வாய்ந்தவர்களென பல காலமாக நாம் பார்த்து வருகிறோம்.
ஏனெனில் நமது வாழ்வின் செயல்பாடுகள் அனைத்திற்கும் உண்மையான அடிப்படை ஆன்மிகமே! ஆன்மிக வலிமையும் ஆன்மிக நிறைவும் உடைய ஒருவன் அவன் விரும்பினால் எல்லாத் துறைகளிலும் பேராற்றல் பெற்றவனாக விளங்க முடியும்.

ஆன்மிக வலிமை இல்லாமல் ஒருவனால் தன் சொந்தத் தேவைகளைக் கூட சிறந்த முறையில் நிறைவேற்றிக் கொள்ள முடியாது.
தியானநிலை தான் வாழ்வின் மிக உயர்ந்த நிலை. ஆசை இருக்கும் வரை உண்மையான இன்பம் வர முடியாது. தியான நிலையில் இருப்பவர்கள் மற்றும் காட்சி நிலையில் இருந்து பொருள்களின் உண்மையை உணர்பவர்களே உண்மையான ஆனந்தத்தையும் இன்பத்தையும் பெறுகின்றனர்.
விலங்குகளுக்கு புலன்களில் இன்பம். மனிதனுக்கு அறிவில் இன்பம். தேவர்களுக்கு ஆன்மிக தியானத்தில் இன்பம். இந்த தியான நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே இந்த உலகம் உண்மையிலேயே அழகாகவும், ஆனந்தமாகவும் இருக்கும். எதையும் விரும்பாமல் எதனுடன் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும் ஒருவனுக்கு இயற்கையின் பல்வேறு மாற்றங்கள், அழகின் அற்புத வெளிப்பாடாகவே தோன்றும். இவையெல்லாம் தியானத்தாலும் ஆன்மிக அறிவாலும் மட்டுமே கைகூடும்.
ஒருவனுக்கு வறட்டு விளக்கங்கள் எல்லாம் அவன் கொண்டுள்ள எண்ணத்தை உறுதிப்படுத்த தேவைப்படுகிறதே தவிர அதற்கு மேல் அவற்றால் எந்தப் பயனுமில்லை. ஏனென்றால் அவன் செல்லும் பக்தி என்னும் பாதை அவனை வெகு சீக்கிரம், தெளிவற்றதும் கொந்தளிப்பு மிக்கதுமான ஆராய்ச்சி நிலைகளைக் கடக்க செய்கிறது. பக்தி மற்றும் ஞானம் என்பது இறைக்காட்சி பெறும் நிலைக்கு உயர்த்த தகுதி வாய்ந்ததாக உள்ளது.
இறைவனுடைய அருளால் அவன் உன்னத நிலையை விரைவில் அடைந்து விடுகிறான். அங்கே கற்பனைக்கோ வலுவிழந்த ஆராய்ச்சிக்கோ இடமில்லை; வெற்று ஏட்டுக்கல்வியின் துணையோடு இருளில் உழன்று கொண்டிருக்கும் அலைச்சல்கள் இல்லை. அங்கே அவன் இறை அநுபூதி என்னும் ஒளியை நேரே தரிசிக்கிறான். அதன் பிறகு அவன் காரணம் தேடி அலைவதில்லை. பெரும்பாலும் அவன் இறைக்காட்சியைக் கண்டுவிட்டவனாகக் காணப்படுகிறான்.
உண்மையை உணர்ந்து கொண்டதால் விவாதிப்பதில்லை. இறைவனைக் கண்டு கொள்வதும் அவனை உணர்வதும் இறையின்பத்தை அனுபவிப்பதுமாகிய இந்த நிலை பெருநிலை அல்லவா? வாழ்க்ககையில் நாம் அடையக் கூடிய மிகப் பெரிய பயன் இதைவிட வேறென்ன இருக்க முடியும்?
கடலில் மலையளவு பெரிய அலைகளும், சிறிய அலைகளும் இன்னும் சிறிய சிறு சிறு குமிழ்களும் உள்ளன. ஆனால் இவை அனைத்திற்கும் ஆதாரமாக எல்லையற்ற கடல் உள்ளது. ஒரு முனையில் சிறு குமிழி, மற்றொரு முனையில் பெரிய அலை என்று அவை கடலுடன் இணைக்கப்பட்டுள்ளன, அதுபோல ஒருவன் மிகப் பெரியவனாக இருக்கலாம். மற்றொருவன் சிறு குமிழியாக இருக்கலாம். ஒவ்வொருவரும் வாழும் உயிர்கள் ஒவ்வொன்றின் பொதுப் பிறப்புரிமையாகிய அந்த எல்லையற்ற ஆற்றல்களுடன் பிணைக்கப்பட்டுள்ளனர்.
ஊனக் கண்ணுக்கு தெரியாத மிக நுண்ணிய அமீபாவாக தனது பயணத்தைத் தொடங்குகிற உயிர் அந்த எல்லையற்ற ஆற்றல் களஞ்சியத்தில் இருந்து தொடர்ந்து சக்தியை எடுத்தவாறு தாவரமாக, விலங்காக, மனிதனாக மெதுவாக படிப்படியாக உருமாறி இறுதியில் கடவுளாகவும் ஆகிறது.
இந்நிலையை அடைவதற்கு இடைவிடாது வேலை செய்ய வேண்டும். ஆனால் எதிலும் எந்த வேலையிலும் பற்று வைக்கக் கூடாது. ”உங்களை எதனோடும் இணைத்துக் கொள்ளாதீர்கள். மனதை சுதந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் காண்கின்ற துன்பங்கள் துயரங்கள் எல்லாமே இந்த உலகம் இயங்குவதற்கு தேவையான சூழ்நிலைகளே” என்கிறார் விவேகானந்தர். இன்னும் சாத்தியமாகவில்லையே.
வறுமையும் சரி, வளமும் சரி அவை கண நேரத்திற்கே நீடித்திருக்கும். அவை நமது உண்மை இயல்பைச் சேர்ந்தவை அல்ல. இன்ப துன்பங்களையும், புலன் உணர்ச்சிப் பொருட்கள் அனைத்தையும் கற்பனையையும் கடந்ததே நமது இயல்பு என்றாலும் நாம் எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். இதை உணர்ந்து கொள்வதே கூட பெரிய ஞானம்தான்.
மீண்டும் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். விவேகானந்தர் கூற்றுப்படி, பற்றினால் தான் துன்பம் வருகிறதே தவிர செயலால் அல்ல. நாம் செய்கின்ற செயலோடு நம்மை பிணைத்துக் கொண்ட அந்த கணமே துன்பத்தை உணரத் தொடங்குகிறோம். இணைத்துக் கொள்ளாமல் வேலை செய்வோமானால் துன்பத்தை உணர மாட்டோம்.
இன்னொருவனுக்கு சொந்தமான அழகிய ஓவியம் ஒன்று எரிந்து போனால் அதற்காக ஒருவன் வருத்தப்பட மாட்டான். ஆனால் அவனுடைய ஓவியம் எரிந்து போனால் எவ்வளவு வேதனைப்படுகிறான். ஏன்? இரண்டுமே அழகிய ஓவியங்கள். ஒரே ஓவியத்தின் பிரதிகளாக கூட அவை இருக்கலாம்.
ஆனால் அவற்றுள் ஒன்று எரியும் போது மட்டும் அவன் மிகவும் துன்பப்படுகிறான். காரணம், ஓர் ஓவியத்தோடு அவன் இணைத்துக்கொண்டான். மற்றொன்றோடு இணைத்துக் கொள்ளவில்லை.
இந்த ‘நான்’, ‘எனது’ என்பவை தாம் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம். எனது என்ற எண்ணம் வந்த உடனே சுயநலமும் வருகிறது. சுயநலம் துன்பத்தைக் கொண்டு வருகிறது. சுயநலத்துடன் செய்யும் ஒவ்வொரு செயலும், சுயநலத்துடன் நினைக்கும் ஒவ்வொரு நினைப்பும் நம்மை ஏதாவது ஒன்றுடன் பற்றுக் கொள்ளச் செய்கிறது. உடனே நாம் அடிமையாகிவிடுகிறோம்; அல்லது அடிமையாக்கப்படுகிறோம்.
சித்தத்தில் எழுகின்ற ‘நான்’, ‘எனது’ என்னும் ஒவ்வொரு அலையும், நம்மைச்சுற்றி உடனடியாக சங்கிலியைப் பிணைக்கிறது. நம்மை அடிமைகளாக்கி விடுகிறது. ‘நான்’, ‘எனது’ என்று அதிகமாகச் சொல்லச் சொல்ல அடிமைத்தளை பலமாகிக் கொண்டே செல்கிறது. துன்பங்களும் அதிகரிக்கின்றன.
எனவே உலகத்தில் உள்ள எல்லா ஓவியங்களின் அழகையும் அநுபவியுங்கள். ஆனால் எந்த ஓவியத்தோடும் உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள். ஒளி பிறக்கட்டும்.
--
திரு. ஆதலையூர் த.சூரியகுமார்,
--
விவேகானந்தர் விஜயம்-சுவாமி வித்யானந்தர் 9789374109

No comments:

Post a Comment