Sunday, 27 November 2016

பொன்மொழிகள் .பகுதி-52

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-52
---
அமரத்துவம் வாய்ந்த எனது அருமைக் குழந்தைகளே நமது நாடு என்னும் இந்தக் கப்பல் பல்லாயிரக் கணக்கான நீண்ட நெடுங்காலமாகத் தனது நாகரிகத்தை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறது. தனது எண்ணற்ற அரும்பெரும் செல்வங்களால் இந்த உலகம் முழுவதையும் மேலும் மேலும் வளமாக்கிக் கொண்டிருக்கிறது. பல ஆயிரக் கணக்கான நூற்றாண்டுகளாக நமது இந்தக் கப்பல் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க நமக்கு உதவி புரிந்து வந்திருக்கிறது. பல்லாயிரக் கணக்கான மக்களை வாழ்க்கைக் கடலின் துன்பமற்ற மறுகரைக்கு அழைத்துச்சென்ற படியே இருக்கிறது. ஆனால் இன்று அந்தக் கப்பலில் ஓர் ஓட்டை விழுந்து பழுதடைந்து போயிருக்கிறது. இந்த நிலைக்கு உங்களுடைய தவறுகளே காரணம் . அல்லது வேறு காரணங்களும் இருக்கலாம். அதைக் குறித்து நாம் அவ்வளவாகப் பொருட்படுத்த வேண்டிய தில்லை. நீங்கள் அதில் அமர்ந்துகொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் செய்யப்போகும் காரியம் என்ன? அந்தக் கப்பலைத் திட்டிக்கொண்டு நீங்கள் ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு இருக்கப்போகிறீர்களா? அல்லது நீங்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக இணைந்து, அந்தக் கப்பலைப் பழுது பார்க்க உங்கள் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தப் போகிறீர்களா? நமது இதயத்தை மனமுவந்து அந்தப் பணிக்கு நாம் தருவோமாக. அல்லது அந்தப் பணியிலே தோல்வி அடைந்தால் மனதில் திட்டிக் கொண்டிருக்காமல் வாழ்த்திக்கொண்டே அனைவரும் ஒன்றாக மூழ்கி இறந்துவிடுவோமாக.
--
. ஓர் அரக்கி தன்னுடைய உயிரை ஒரு சிறிய பறவையில் வைத்திருந்தாள். அந்தப் பறவை கொல்லப்பட்டாலன்றித் தன்னை ஒருவராலுமே கொல்ல முடியாது என்று சொல்லிக்கொண்டிருந்தாள். இந்த அரக்கியின் கதையை நாம் குழந்தைகளாக இருந்தபோது கேட்டிருக்கிறோம். ஒரு நாட்டின் வாழ்க்கையும் அதைப் போன்றதே ஆகும் .... இப்போது நமது நாடாகிய இந்த அரக்கியின் உயிர்நாடி எங்கே இருக்கிறது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். அது மதத்தில் தான் இருக்கிறது. இதை ஒருவராலுமே அழித்து விட முடியவில்லை. எனவே தான் இந்தியா நாடு எத்தனையோ துன்பங்களையும் சோதனைகளையும் கடந்து இன்னமும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு நாட்டினுடைய உயிர்நாடியைச் சமய வாழ்க்கையில் வைத்துக்கொண்டிருப்பதனால் என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது? அதை மற்ற நாடுகளில் உள்ளதைப் போன்று , சமுதாயச் சுதந்திரத்திலோ அல்லது அரசியல் சுதந்திரத்திலோ வைத்தால் என்ன? என்று படித்த இந்தியர் ஒருவர் கேட்கிறார். இவ்வாறு பேசிக்கொண்டிருப்பது மிகவும் சுலபம்...... உண்மை இதுதான்; ஓர் ஆறு தன்னுடைய உற்பத்தி ஸ்தானமாகிய மலையிலிருந்து ஓராயிரம் மைல் தூரம் கீழே இறங்கி ஓடி வந்திருக்கிறது. அந்த ஆறு மீண்டும் தனது உற்பத்தி ஸ்தானத்துக்குத் திரும்பிப் போகுமா? அல்லது போகத்தான் முடியுமா? ஒருவேளை எப்போதாவது அந்த ஆறு அப்படித் திரும்பிப் போக முயற்சி செய்யுமானால் நாலா புறங்களிலும் சிதறி, ஒன்றுமே இல்லாமல் வற்றிப் போய்விடும். எப்படி இருந்தாலம் அந்த ஆறு , பரந்த அழகிய, சமவெளிகளில் பாய்ந்தோடியோ அல்லது கரடுமுரடான நிலத்தில் பாய்ந்து சென்றோ விறைவிலோ அல்லது காலம் தாழ்ந்தோ உறுதியாகக் கடலில் சென்று கலக்கத் தான் போகிறது.பதினாயிரம் ஆண்டு களாக நமது நாட்டில் இருந்து வரும் நமது சமுதாயத்தின் வாழ்க்கை அமைப்பு முறையைத் தவறு என்று சொன்னால் அதைத் திருத்துவதற்கு வேறு வழியே கிடையாது. இப்போது அதற்கு ஒரு புதிய இயல்பை உருவாக்குவதற்கு முயற்சி செய்தால், அது அழிவில்தான் முடியும். இந்த முடிவு தவிர்க்க முடியாத தாகிவிடும்.
--
.நமது நாட்டின் உயிர் வாழக்கையை மேலோட்டமாகப் பார்த்தால் சாம்பல் பூத்து இறந்து விட்டதைப் போலக் காணப்படுகிறது. ஆனால் அதன் அடியில் நெருப்பைப் போன்று அது இன்றும் கனன்று எரிந்து கொண்டிருக்கிறது. நமது நாட்டின் வாழ்க்கை மதத்தில்தான் அமைந்திருக்கிறது. அதன் மொழியும் மதம்தான் ; மதமே அதனுடைய கருத்துக்கள்; அதனுடைய அரசியல் சமுதாயம் நகராட்சி மன்ற அமைப்புக்கள் , பிளேக் தடுப்பு வேலைகள், பஞ்ச நிவாரணப்பணிகள் ஆகிய இவை எல்லாமே மதத்தின் மூலமாகத்தான் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. இனி மேலும் அப்படியே நடத்தப்பட வேண்டும். அவ்விதம் இந்தப் பணிகள் நடத்தப்படாவிட்டால் எனது நண்பரே உம்முடைய எல்லாக் கூச்சல்களும் புலம் பல்களும் ஒன்றுமே இல்லதாமல் பயனற்ற வையாக முடிந்து போகும்.
--
. ஒவ்வொரு நாட்டிலும் மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. வலிமைபடைத்த ஒரு சிலர் கட்டளை இடுகிறார்கள். அவற்றை எல்லாம் எஞ்சியுள்ள மக்கள் அனைவரும் செம்மறி ஆடுகளைப் போல முடிந்த முடிவுகளாக ஏற்றுப் பின்பற்றி நடப்பார்கள். அவ்வளவுதான் விஷயம்.உங்களுடைய பாராளுமன்றம் சட்டசபை, வாக்களிப்பு முறை உங்கள் பெரும்பான்மை மக்களுடைய இரகசிய வாக்களிப்பு முறை ஆகிய இவை அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன் . எனது நண்பரே இவை எல்லாம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் நடைபெறுகின்றன... இப்போது இங்கு இருக்கிற கேள்வி இதுதான் இத்தகைய வலிமையைப் பெற்றவர்கள் இந்தியாவிலே யார் இருக்கிறார்கள்? ஆன்மிகத் துறையில் மிகப் பெரும் வலிமை படைத்த சமயச் சான்றோர்களிடையே அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தாம் நமது சமுதாயத்தை முன்னின்று வழி நடத்து கின்றனர். தேவைப்படும் போது மீண்டும் அவர்களே சமூகத்தின் விதிமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் மாற்றியமைந்கிறார்கள். அவர்கள் சொல்வதை நாம் அமைதியுடன் கேட்கிறோம் அவர்களின் கட்டளைகளைப் பின்பற்றி நடக்கவும் செய்கிறோம்.
---
.ஒரு நல்ல இலட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்கு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல்.
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment