Sunday, 27 November 2016

பொன்மொழிகள் .பகுதி-30

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-30
-----
ஒரு நல்ல இலட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்கு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல்.
----
எனது அருமைக் குழந்தைகளே! முன்னேறிச் செல்லுங்கள். பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது. இந்தியா மட்டும் அத்தகைய ஒளியைப் பெற்றிருக்கிறது. ஜால வித்தையிலே இந்தியா அந்த விளக்கைப் பெற்றிருக்கவில்லை. போலித் தன்மை யினாலும் அந்த விளக்கைப் பெற்றிருக்க வில்லை. ஆனால் உண்மையான மதத்தின் தலைசிறந்த சமய போதனையாகவும் மிகவும் உயர்ந்த ஆன்மிக உண்மையாகவும் அந்த விளக்கை இந்தியா பெற்றிருக்கிறது. ஆகையால் தான் பலவிதமான இன்ப துன்பங்களில் இருந்தும் இன்று வரையிலும் கடவுள் இந்தியாவைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்,
-----
இப்போது அதற்கு உரிய சரியான நேரம் வந்து விட்டது.
எனது வீரக் குழந்தைகளே, நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்துநின்று வேலை செய்யுங்கள்.
----
உலகியலின் பக்கத்திலோ எல்லாம் வெறுமை, எதுவும் இல்லை. எல்லாம் மறைந்துகொண்டே இருக்கின்றன. அழகு, இளமை, நம்பிக்கை இவை நிறைந்த இன்றைய மனிதன், நாளைய அனுபவசாலியாக ஆகிறான். இன்று பூத்த மலர்களாகிய நம்பிக்கையும் இன்பங்களும் சுகங்களும் எல்லாம் நாளைய உறைபனியில் வாடிக் கருகிவிடும். ஒரு பக்கம் இப்படி இருக்கிறது. மற்றொரு பக்கத்தில், வெற்றியின் மேல் மனிதனுக்கு உள்ள ஆசை, வாழ்க்கையின் தீமைகளை வெல்ல ஆசை, வாழ்க்கையை வெற்றிகொள்ள ஆசை, பிரபஞ்தசதையே கீழடக்க ஆசை, இவை உள்ளன. இந்தப் பக்கத்தில்தான் மனிதர்கள் உறுதியாக நிற்க முடியும். எனவே வெற்றிக்காக, உண்மைக்காக மத உணர்வுக்காகத் துணிச்சலாகப் போராடுபவர்கள் சரியான வழியிலேயே போகிறார்கள். அதையே வேதங்களும் போதிக்கின்றன. மனம் சோர்ந்து விடாதீர்கள். பாதை மிகவும் கடினமானது. கத்திமுனையில் நடப்பது போன்றது. ஆனாலும் சோர்வடையாதீர்கள். எழுந்திருங்கள். விழித்திருங்கள், குறிக்கோளை, லட்சியத்தை அடைந்தே தீருங்கள்.
-----

No comments:

Post a Comment