Sunday, 20 November 2016

வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-28

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-28
-
"தேவாமிர்தத்தை விட சுவையான சப்பாத்தி!"
---
கேத்ரியில் நடந்த ஒரு சம்பவம். ஓர் ஊரில் மக்கள் சுவாமிஜியிடம் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். சுவாமிஜி அவர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். சுவாமிஜியின் வார்த்தைகளிலேயே அந்த நிகழ்ச்சியைப்பற்றி கேட்போம். 'நம்புவதற்கே கடினமாகத்தான் இருக்கும். ஆனால் மூன்று நாட்கள் இரவும் பகலும் எனக்கு ஒரு கணம்கூட ஓய்வே கிடைக்கவில்லை. தூக்கம், உணவு எதுவும் கிடையாது. யாரும் அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை. அவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள், நானும் பேசிக் கொண்டே இருந்தேன். மூன்றாம் நாள் இரவு வந்தது. அனேகமாக எல்லோரும் போய்விட்டார்கள்.
அப்போது தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவன் என்னிடம் வந்தான். 'சுவாமிகளே மூன்று நாட்களாக உணவோ உறக்கமோ இல்லாமல் நீங்கள் பேசுவதை நான் பார்க்கிறேன். என் மனம் வேதனையில் துடிக்கிறது. பசியும் களைப்பும் உங்களுக்கும் இருக்கத்தானே செய்யும்!" என்று பரிவுடன் கூறினான். அவனது அன்பு என்னை நெகிழச் செய்தது. "சாப்பிட ஏதாவது நீ தருவாயா?" என்று அவனிடமே கேட்டேன். "தர வேண்டும் என்று தான் என் இதயம் ஏங்குகிறது. ஆனால் என்ன செய்வேன்? நான் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன். நான் சப்பாத்தி செய்து உங்களுக்குத் தர முடியாது. மாவும் மற்ற பொருட்களும் கொண்டு தருகிறேன். நீங்களே செய்து சாப்பிடுங்கள்" என்றான் அவன். அதற்கு நான், 'வரவாயில்லை. நீயே செய்து கொண்டு வா. நான் சாப்பிடுகிறேன்" என்றேன். அவன் நடுங்கிப் போனான். செருப்பு தைப்பவனான அவன் ஒரு துறவிக்கு உணவளித்தது தெரிந்தால் தண்டிக்கப்படுவான் ஏன், நாடுகடத்தவே செய்வார்கள். ஆனால் நான் அவனை ஆசுவாசப்படுத்தினேன். "தண்டனை கிடைக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியளித்தேன். அவன் எனது உறுதியை அவ்வளவாகச் நம்பவில்லை, இருந்தாலும் என்மீதுள்ள அன்பு காரணமாகச் சப்பாத்தி கொண்டு வந்தான். நானும் சாப்பிட்டேன். தேவர் தலைவனான இந்திரன் ஒரு தங்கக் குவளையில் தேவாமிர்தத்தைத் தந்திருந்தால், அதுகூட இவ்வளவு ருசித்திருக்காது என்றே எனக்குத் தோன்றியது. என் நெஞ்சம் அன்பாலும் நன்றியாலும் நிறைந்தது. கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.
'கேத்ரி மன்னருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்ட பிறகு நான் அவரிடம் இதனைத் தெரிவித்தேன். அவர் உடனடியாக அவனை வரவழைத்தார். தனது தவறுக்குத் தண்டனை கிடைக்கப் போகிறது என்று அவன் நடுங்கியபடியே வந்தான். மன்னர் அவனைப் புகழ்ந்ததுடன் அவனுக்குப் பொன்னும் பொருளும் ஏராளமாகக் கொடுத்து அனுப்பினார்.
--
--
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment