Sunday, 20 November 2016

வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-25

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-25
-
சன்னியாசத்துக்கு இலக்கணம்!
--
ஒரு நாள் சுவாமிஜியை அந்த ஊர் செல்வந்தர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவதாக மன்மதநாத் தெரிவித்தார். 'எனது வண்டியிலேயே போய்விடலாம் உங்களுக்குச் சிரமம் இருக்காது' என்றும் தெரிவித்தார். ஆனால் சுவாமிஜி அதனை மறுத்து, 'அது சன்னியாச தர்மம் அல்ல. செல்வந்தவர்களை நாடுவது துறவு நெறிக்குப் புறம்பானது' என்று கூறிவிட்டார். சுவாமிஜியின் துறவு மன்மதநாத்தின்மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
சுவாமிஜி பாகல்பூரிலிருந்து புறப்பட பல முறை முயற்சித்த போதும் மன்மாநாத் அவரை விடவில்லை. எனவே ஒருநாள் சுவாமிஜியும் அகண்டானந்தரும் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து விடைபெற்றுக்கொண்டு இமயத்தை நோக்கிப் புறப்பட்டுவிட்டனர். மன்மத நாத் வீட்டிற்குத் திரும்பி வந்து விவரம் அறிந்து மிகுந்த வேதனையில் ஆழ்ந்தார். பத்ரிநாத்திற்குப் போக வேண்டும் என்று சுவாமிஜி ஒருமுறை சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்த அவர் அல்மோராவரை சென்று சுவாமிஜியைத் தேடினார். ஆனால் அதற்குள் சுவாமிஜி அங்கிருந்து சென்று விட்டிருந்தார்.
அடுத்து இருவரும் வைத்தியநாதத்தில் தங்கினர். அங்கே பாபு ராஜ் நாராயண் போஸ் என்பவரைச் சந்தித்தனர். அவர் பிரம்ம சமாஜத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். இளமை நாட்களில் ஆங்கிலேய மோகத்தால் இந்தியாவையும் இந்தியா சம்பந்தப்பட்ட அனைத்தையும் வெறுத்த வேர் பெற்றோரின் மறைவிற்குப் பின்னர், மேலைநாட்டு மோகத்தை விட்டு இந்தியாவையும் அதன் பெருமையையும் போற்றத் தொடங்கினார். மேலைநாட்டு மோகத்தில் இருந்த அதே தீவிரத்தை இப்போது மேலை நாடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் எதிர்ப்பதில் காட்டினார். ஆங்கிலேய நடை, உடை, கலாச்சாரம் ஆங்கில வார்த்தையைப் பயன்படத்தினால் கூட ஒரு வார்த்தைக்கு ஒரு காசு அபராதம் விதிப்பாராம்.
வயது முதிர்ந்தவரான ராஜ் நாராயன் போஸின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பதற்காக சுவாமிஜியும் தமக்கு ஆங்கில வாசனையே இல்லாததுபோல் காட்டிக்கொண்டார். அகண்டானந்தரிடமும் அவ்வாறே பழகுமாறு கூறினார். தூய வங்க மொழியிலேயே உரையாடல் நடைபெறும். சுவாமிஜிக்கு ஆங்கிலம் சிறிதும் தெரியாது என்றே ராஜ் நாராயண் நம்பியிருந்தார். ஒருநாள் பேசிக் கொண்டிருந்த போது அவசரத்தில் ராஜ் நாராயண் 'ப்ளஸ்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விட்டார். அது சுவாமிஜிக்குப் புரிந்திருக்குமோ இல்லையோ என்ற சந்தேகத்தில் விரல்களைக் கூட்டல் குறிபோல் வைத்துக் காட்டினாராம். பின்னாளில் சுவாமிஜியின் பெயர் நாடெல்லாம் பரவியபோது அவர் அடைந்த பிரமிப்புக்கு எல்லையே இல்லை. 'சுவாமிஜி ஒரு விசித்திரமான மனிதர் என்றாராம்!
--
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment