Sunday, 20 November 2016

வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-33

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-33
-
உண்மையான தேசபக்தி எது?
--
ராமசுவாமி ஐயரின் மகனான ராமசுவாமி சாஸ்திரியிடம் சுவாமிஜி கூறிய கருத்துக்கள் அவர் பின்னாளில் எத்தகைய பணியைச் செய்ய விரும்பினார் என்பதை எடுத்துக்காட்டின. தேச பக்கி, தேச பக்தி என்கிறார்கள். உண்மையில் அது என்ன? கண்மூடித்தனமாக ஒரு நம்பிக்கையா? இல்லை. உணர்ச்சியின் எழுச்சியா? இல்லை. நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள பேரார்வம் தான் உண்மையில் தேச பக்தி. இந்தியா முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும் துன்பமும் ஒழுக்கச் சீர்குலைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது.
இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன். "அவர்களின் தீவினை அது, அதனால் கஷ்டப்படுகிறார்கள்' என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள், கஷ்டப்படுவது அவர்களின் கர்மம் என்றால், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது கர்மம். கடவுளைக் காண வேண்டுமானால் மனிதனுக்குத் தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியில் வாடுகின்ற லட்சோபலட்சம் ஏழை நாராயணர்களுக்குச் சேவை செய்யுங்கள். அது தான் உண்மையான தேச பக்தி'.
இத்தகைய கருத்துக்களை சுவாமிஜி அங்கே பலரிடம் பேசினார். இந்தியா முழுவதையும் மாற்றியமைக்கும் வகையில் எத்தகைய சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதையெல்லாம் எடுத்துக் கூறினார். சுவாமிஜியின் விஜயமும் அவர் சட்டம்பி சுவாமிகள் போன்றோரைச் சந்தித்துப் பேசியதும் கேரளம் பின்னாளில் கண்ட சமுதாயப் புரட்சிகளுக்கு ஒரு விதையாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஒன்பது நாட்கள் திருவனந்தபுரத்தில் பழித்துவிட்டு, 1892 டிசம்பர் இறுதியில் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்குப் புறப்பட்டார் சுவாமிஜி.
--
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment