Sunday, 20 November 2016

கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை

கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை
----
மைசூரில் இருந்து கொச்சிக்குப் புறப்படத் தயாரானார் சுவாமிஜி. அவருக்கு ஏராளம் பரிசுப் பொருட்கள் காணிக்கையாக அளிக்க விரும்பினார் மன்னர். ஆனால் சுவாமிஜி எதையும் ஏற்கவில்லை.
பின்னர் 'நீங்கள் எனக்கு ஏதாவது செய்தேயாக வேண்டும் என்றால் ரயில் பயணச்சீட்டு ஒன்று வாங்கிக் கொடுங்கள்' என்று கூறிவிட்டார். அவ்வாறே இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கட் ஒன்றும் கொச்சி திவானான சங்கரய்யாவிற்கு ஒர் அறிமுகக் கடிதமும் கொடுத்தார் பிரதம மந்திரி. மைசூரிலிருந்து புறப்பட்டார் சுவாமிஜி.
அன்று கொச்சிக்கோ திருவாங்கூர் சமஸ்தானத்திற்கோ ரயில் வசதி கிடையாது. எனவே திருச்சூருக்குப் போக வெண்டுமானால் இருபத்தொரு மைல் தூரத்திலுள்ள ஷோனூர் வரை ரயிலில் சென்று, பிறகு வேறு ஏதாவது வழியில்தான் போக முடியும். சுவாமிஜி அந்த இருபத்தொரு மைல் தூரத்தை மாட்டு வண்டியில் கடந்தார். அவர் செல்லும் வழியில் சுப்பிரமணிய ஐயரின் வீடு இருந்தது. அவர் கொச்சி சமஸ்தானத்தின் கல்வி அதிகாரி. வீட்டிற்கு வெளியில் நின்றிருந்த அவரைக்கண்ட சுவாமிஜி அவரிடம், 'இங்கே குளிப்பதற்கான இடங்கள் உள்ளனவா?' என்று கேட்டார். சுவாமிஜியின் தோற்றத்திலும் வசீகரத்திலும் கட்டுண்ட ஐயர் அவர் குளிப்பதற்கான வசதிகளைச் செய்து கொடுத்ததுடன், தமது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் அவர் தங்கவும் ஏற்பாடு செய்தார். அப்போது சுவாமிஜி தொண்டை வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தார் ஜயர்.
திருச்சூரில் சில நாட்கள் தங்கிய சுவாமிஜி கொடுங்நல்லூருக்குச் சென்றார். அந்த இடம் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியது. அங்குள்ள பகவதி கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. சுவாமிஜி அந்தக் கோயிலுக்குச் சென்ற போது அவரை உள்ளேவிட மறுத்து விட்டனர். கேரளத்திற்கு வெளியிலிருந்து வருகின்றன அவரது ஜாதி தெரியாத காரணத்தால் அவர் உள்ளே போகக் கூடாது என்று கோயில் அதிகாரிகள் கூறிவிட்டனர். சுவாமிஜி கோயிலின் அருகில் ஓர் ஆலமரத்தடியில் அமைதியாக அமர்ந்து தேவியை மனமார எண்ணி வழிபட்டார்.
சற்று நேரத்தில் கொடுங்ஙல்லூர் இளவரசர்களான கொச்சுண்ணித் தம்பிரானும், பட்டன் தம்பிரானும் கோயிலுக்கு வந்தனர். அவர்களை சுவாமிஜியிடம் அழைத்துச் சென்றான் ஓர் இளைஞன். இளவரசர்கள் இருவரும் சம்ஸ்கிருதம் மற்றும் சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களிடம் பல விஷயங்களை சமஸ்கிருதத்தில் பேசினார் சுவாமிஜி. தாம் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படாததன் காரணத்தையும் அவர்களிடமிருந்தே அறிந்தார் சுவாமிஜி. அவருடன் சிறிது நேரம் பேசியதிலிருந்தே அவரது ஆன்மீக உயர்வையும் சாஸ்திர அறிவையும் உணர்ந்து கொண்ட இளவரசர்கள் அவரைக் கோயிலுக்குள் அழைத்துச் செல்ல விரும்பினர். ஆனால் தாம் வட்டார வழக்கங்களை மீற விரும்பவில்லை என்று கூறி சுவாமிஜி வெளியிலிருந்தே தேவியை வழிபட்டார்.
--
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment