சுவாமி விவேகானந்தர் கண்ட ஸ்ரீ இராமானுஜர்

சுவாமி விவேகானந்தர் கண்ட ஸ்ரீ இராமானுஜர்
-

சங்கரர் திறந்த வழி அறிவு சார்ந்தது என்றாலும் பெருவாரியான மக்களால் அதை அடைய முடியாமல் போனது. இதற்கு முக்கியமானக் காரணம் சாதீயம் பற்றிய வரைமுறைகள்தான். அவ்வழியில் சாதாரணமானவர்களுக்கு மிகச் சிறிய இடம்தான் ஒதுக்கப்படுகிறது. அதில் வடமொழியை மாத்திரமே உபயோகிப்பதால், அதுவும் ஒரு தடையாக இருக்கிறது. ராமானுஜரது தத்துவமோ அன்றாட வாழ்க்கைக்கு ஒத்துப்போவதாக இருக்கிறது. ஆன்மிக ஆற்றல் முன்பு சாதித் தடைகள் விடுபட்டுப் போகின்றன. அன்றாடப் பேச்சுமொழியை உபயோகித்து மக்களை வேதநெறிக்கு அழைத்து வருகிறது.
ராமானுஜர் (1017-1137) நீண்ட ஆயுளைப் பெற்றிருந்தார். நல்லதொரு சீடனாகப் பெயர் பெற்ற ஸ்ரீ ராமானுஜர், நல்லதொரு ஆசானாகவும் புகழ் பெற்றார். அவர் பெற்ற தெய்வீக அனுபவங்கள் காரணமாக அவரால் உலகை மாயை என்று தள்ள முடியவில்லை. பிரம்மம் என்பது ஒன்றே பேருண்மை என்றார். ஆயினும், இந்தப் பிரும்மத்தில் மலர்ந்த இவ்வுலகம் என்பதும் உண்மையே என்றார். அதனால் தான் அவரது தத்துவ தரிசனத்தை விசிஷ்ட-அத்வைதம் (பிரத்தியேகமான அத்வைதம்) என்று அழைக்கிறோம்.
ராமானுஜரது வாழ்க்கையில் அவர் கருணையுடன் நடந்துகொண்ட காட்சிகள் பல உண்டு. தீண்டத்தகாதவர் என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களை அவர் அரவணைத்தது இவற்றில் முக்கியமானது. ஸ்ரீவைஷ்ணவர்களின் ஆன்மிக குருவாகவும் ஸ்ரீவைஷ்ணவர்களின் தலையாய திருவரங்கம் கோயிலை நிர்வகிப்பவராகவும் எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமானுஜர், பணிவே உருவானவர். இந்த ஆசான் முனைந்த சேவைகள் ஒன்றா, இரண்டா? ஆன்மிகம், தத்துவம், சமயம் சார்ந்த பணிகள், மருத்துவம், கல்வி, சமூக சேவை எனப் பலப்பல. தன்னையே ஒரு முன்னுதாரணமாக வைத்தவர். அதனால் அனைத்துச் சாதிகளின் நம்பிக்கையைப் பெற்றார். ஓர் எடுத்துக்காட்டு. காவிரியில் நீராடிவிட்டுத் திரும்பும்போது பார்ப்பனரல்லாத சீடர், உறங்காவில்லிதாசர் தோளில் அல்லவா தனது கையை ஊன்றிக்கொண்டு ராமானுஜர் மடத்திற்குத் திரும்புவார்.
சுவாமிகள் எழுதும்போது, சங்கரர் மாபெரும் அறிஞர். ஆனால் அவருக்கு ராமானுஜர் போல விசாலமான இதயம் இருந்ததா என்பது கேள்விக்குறி. ஸ்ரீ ராமானுஜரின் இதயம் பென்னம் பெரியது. தாழ்த்தப்பட்டவர்களுக்காக அவர் வருந்தினார். அவர்களுக்கு உதவ முனைந்தார்.
இறைவனை உருவம் மூலம் வழிபடுவதால் மனநிறைவு பெறும் மக்களுக்காகப் புது வழிபாட்டு முறைகளை ராமானுஜர் தோற்றுவித்தார். அதேசமயம், பிராமணனிலிருந்து பறையர் வரை இறைவனை அடையக் கூடிய உயர்ந்த வழிகளையும் முன்வைத்தார். இதுவே ராமானுஜரின் சாதனை. அவரது சாதனை வட இந்தியாவில் பரவியது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய ராமானுஜர், பக்தர்களில் தலையானவர், சைதன்ய மகாபிரபு.
அமெரிக்காவில் இருந்தபோது சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யத்தை ஊன்றிப் படித்தார். பிரம்ம சூத்திரங்களுக்கு வடமொழியில் இயற்றப்பட்டிருக்கும் இந்த அற்புதமான உரையை அவருக்கு அளசிங்கப் பெருமாள் அனுப்பிவைத்தார்.
அதில் மனம் ஒன்றிய சுவாமிகள், இந்த உரைக்கு ஆங்கில ஆக்கம் செய்யப்படவேண்டுமென்று விரும்பினார். அதன்படியே பேராசிரியர் ரங்காச்சாரியாரும் திரு. வரதராஜ அய்யங்காரும் மொழிபெயர்த்துச் சுவாமிகள் கட்டளைப்படி அளசிங்கப்பெருமாள் நடத்திவந்த ‘பிரும்மவாதின்’ பத்திரிகை வெளியீடாக 1899-இல் அது வெளிவந்தது. அற்புதமான வெளியீடு. இன்றுகூட இந்நூலின் பைண்டிங் உறுதியாக இருக்கிறது. என் தந்தையார் பழைய புத்தகக்கடையில் 1933-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதை வாங்கி இருக்கிறார். என்னுடைய பிறந்த வீட்டுச் சீர் என்றே சொல்லலாம்.
ஸ்ரீ ராமானுஜரிடம் சுவாமிகளுக்கு இருந்த ஈடுபாடு பற்றி நன்கறிந்தவர் ராமநாதபுரம் அரசர், ராஜா முத்துவிஜய பாஸ்கரசாமி சேதுபதி அவர்கள். அவர் இந்த வெளியீட்டிற்கு நிதியுதவி செய்துள்ளார். திலகர் நடத்திவந்த தி மராட்டா பத்திரிகை தனது மார்ச் 11, 1900 இதழில் இதற்கு நல்லதொரு விமரிசனம் வெளியிட்டது. முதன் முதலாக ராமானுஜரது ஸ்ரீபாஷ்ய உரையை ஆங்கிலத்தில் வெளியிடச் செய்து, விசிஷ்டாத்வைதத் தத்துவம் பற்றி மேலை நாடுகளில் ஆய்வு செய்யும் பேரறிஞர்களுக்கு உதவி செய்தவர் சுவாமிகள் என்பதை நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.
சிருஷ்டியை வேதாந்தபரமாகப் பார்க்கும்போது, சுவாமிகள் ஒரு அத்துவைதி. அதேசமயம் பிரம்ம சூத்திரங்களுக்கும், உபநிஷத்துகளுக்கும், கீதைக்கும் (இவை மூன்றும் பிரஸ்தான த்ரயம் எனப்படுபவை) இருந்த பல வடமொழி உரைகளைப் படித்து, ஆழமாகச் சிந்தித்தார்.
அவர் ராமனுஜரைப் பற்றிப் பேசும்போது ஒரு குழந்தைக்கூடப் புரிந்து கொள்ளும்படி எழுதுவார்:
ராமானுஜர், இறைவனுக்கு சைதன்ய நிலை உண்டு என்கிறார். முழு அத்துவைதிகள் இறைவனுக்கு எப்படிப்பட்ட நிலையும் இல்லை என்கிறார்கள். சத் (உள்ளது)திற்கு, நாமறியும் வகையிலே பொருளேதுமில்லை என்பர். ராமானுஜரோ இறைவன் சைதன்னிய அறிவே வடிவானவன், வேறுபாடுகள் அற்ற இச் சைதன்னியம், வேறுபடுத்தப்படும்போது உலகமாக ஆகிறது.
குமாரில பட்டர், ஆதிசங்கரர், ஸ்ரீ ராமானுஜர் என்று அனைத்துச் சனாதன தர்மச் சான்றோர்கள் சனாதன தர்மத்தைக் காப்பாற்றியதுமன்றி, இப்பழமையான தர்மம் புது சிகரங்களை எட்ட வழிகளும் வகுத்தனர். சரித்திரப் பிரக்ஞை நிறைந்த சுவாமி விவேகானந்தர், ராமானுஜர் நெறி ஏன் வேகமாக நாடெங்கும் பரவியது என்று சிந்தித்திருக்கிறார்.
கண்ணையும், மனத்தையும் கவரும் தெய்வ வழிபாடுகள் ஒரு காரணமே. திருமஞ்சனம், திருக்கல்யாணம், ஊஞ்சல் உத்சவம், தேருக்கு வடம் பிடித்தல் முதலியவை அனைவரையும் ஈர்த்தன. மேலும், பெருமாள் கோவில் என்றால், பொங்கல் போன்ற பிரசாதங்களும் ஒரு கவர்ச்சியான மகிழ்ச்சியே. அனைத்திற்கும் மேலான ஒன்றும் இருந்தது என்கிறார் சுவாமிகள்.
சுவாமி விவேகானந்தரின் சரிதத்தைப் படிக்கும்போது அவருக்கு வடமொழி சுலோகங்களைச் சொல்வது பிடிக்கும் என்று தெரிகிறது. பல வடமொழி சுலோகங்கள் இயற்றி இருக்கிறார். அவர் வடமொழியில் பெரும்புலமை பெற்றிருந்தார். பாணினியின் இலக்கணத்தை முழுமையாகக் கற்றவர். வடமொழியில் கடிதங்கள் எழுதுவார். ஆயினும், அவர் தம்புராவை மீட்டிக்கொண்டு பாட ஆரம்பித்தால், அதிகமாக வங்க மொழியில் உள்ள சியாமா சங்கீதம், பிரம்மோ சங்கீதம் பாடல்களையும் ரவீந்திரநாத் தாகூரின் வங்க மொழிப் பாடல்களையும் பாடுவதில் இன்பம் கண்டார்.
அவ்வப்பொழுது வங்கமொழிப் பாடல்கள் பகவான் ராமகிருஷ்ணரைச் சமாதி நிலைக்கு ஏற்றிட, அவர் நடனமாடுவார். உடன் மற்றவர்களும் ஆடுவார்கள். சுவாமிகளும் அவர்களுடன் சேர்ந்து கொள்வார். ஆதிசங்கரர் தமது எழுத்து, சொற்பொழிவு, துதிகள் அனைத்திற்கும் வடமொழியையே கையாண்டார். மக்களின் பேச்சு மொழியான மலையாளம், தமிழ் போன்றவற்றை உபயோகிக்கவில்லை. ஸ்ரீ ராமானுஜரோ தடங்கலின்றி ஆழ்வார்களது திவ்வியப்பிரபந்தப் பாசுரங்களைத் தமது பொழிவுகளில் உபயோகித்தார்.
அவரது முந்தைய ஆசாரியர்கள் தொடங்கி வைத்த திருவாய்மொழி -திருமொழி திருநாட்களை மீண்டும் விஸ்தரித்து அனைத்துக் கோவில்களிலும் நடத்தியதால், மக்களிடம் ஸ்ரீவைஷ்ணவம் பற்றிய ஆர்வம் பொங்கி எழுந்தது. வடமொழி வேதம்; தமிழ் மறை. ஆன்மிகத்தின் சிகரங்களை எட்டிய நாட்டின் வளமான பண்பாட்டினை இவ்விரண்டு வற்றா ஜீவ நதிகளும் வளர்த்தன. அவை ஒன்றுக்கு ஒன்று மாறுபடவில்லை.
இணைந்த நதிகள். தமிழ்மறை – வடமொழி வேதத்திலிருந்து மலர்ந்தவை. வடமொழி வல்லுனராக, ஸ்ரீ பாஷ்யத்தை அருளிய ராமானுஜர், திருவரங்கத்து வீதிகளில் பிக்ஷை எடுக்கப் போகும்போது ஆண்டாளது திருப்பாவை முப்பது பாசுரங்களையும் அனுசந்தித்தவாறு சென்றதால், அவரை திருப்பாவை ஜீயர் என்று மக்கள் அழைத்தார்கள். இப்படிப் பழகுமொழியினைச் சமயத்துடனும் ஆன்மிகத்துடனும் இணைத்ததே ஸ்ரீ ராமானுஜரது மிகச்சிறந்த கொடை என்று சுவாமிகள் நினைத்தார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனைத் தோற்றுவித்தபோது, சுவாமிகள் மக்களுக்கு ஜாதிப் பாகுபாடு பற்றிய ஒரு சிறந்த செய்தியைத் தெரிவிக்க எண்ணினார். 1898-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி அன்று ஐம்பது பிராமணரல்லாத ஆண்களுக்குப் பூணூல் போட்டு, காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார். இது மிகத் துணிச்சலான செயல். இன்றிலிருந்து நீங்கள் மறைகளை ஓதலாம் என்று கூறி, அவர்களது தலைமேல் ஸ்ரீ பாஷ்யப் பிரதியை வைத்து ஆசீர்வதித்தார். அன்று அவர்களுக்கு ராமானுஜரது சரித்திரத்தை அவர் சொல்லியிருக்கலாம். தீண்டத்தகாதவர்களுக்குத் திருக்குலத்தார் என்று பெயரிட்டு, நீங்களும் கோவிலுள் சென்று வணங்கலாம் என்ற உடையவரது மாண்பினை விளக்கியிருக்கலாம். அரங்கனைப் பற்றிப் பாடிய திருப்பாணாழ்வார் குறித்தும் பேசியிருக்கலாம்.
சுவாமிகள் தமது சொற்பொழிவுகளில் அநேகமுறை ஸ்ரீ ராமானுஜரது சரித்திரத்தை எடுத்துக்காட்டுகிறார். அவர் அடிக்கடி உடையவர் பற்றிப் பேசியதால், வங்க மக்களுக்கு இவ்வாச்சாரியர் மேல் மிகுந்த பிடிப்பு உண்டாயிற்று. அவர்கள் விருப்பத்திற்கிணங்க, சென்னையில் பல ஆண்டுகள் வசித்த சுவாமி இராமகிருஷ்ணானந்தர் ஸ்ரீ ராமானுஜரின் சரிதத்தை விவரமாக எழுதி வெளியிட்டார். இந்த நூல் தற்சமயம் வங்க இலக்கியத்தின் ஒரு பொற்சுடராகக் கருதப்படுகிறது.
--
திருமதி பிரேமா நந்தகுமார்
--
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?