பொன்மொழிகள் .பகுதி-48

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-48
--
நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி ஆக்ஞேயவாதியாக இருந்தாலும் சரி, அல்லது வேதாந்தியாக இருந்தாலும் சரி; கிறிஸ்தவனாக இருந்தாலும் சரி , அல்லது இஸ்லாமியனாக இருந்தாலும் சரி , உன்னுடைய சுக துக்கங்களை மறந்து நீ வேலை செய். இதுதான் நீ இப்போது கற்றுக்கொள்ள வேண்டிய முதற் பாடமாகும்.
-
. எந்தவிதமான சுயநல நோக்கமும் இல்லாமல் பணம் புகழ் மற்றும் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொண்டு செய்பவன் தான் சிறப்பாகப் பணியாற்றுகிறான். இத்தகைய மனநிலையில் ஒருவன் பணியாற்ற வல்லவனாகும்போது, அவன் ஒரு புத்த பகவான் ஆகிவிடுவான். உலகத்தையே மாற்றி அமைக்கக்கூடிய வகையில் வேலை செய்யும் சக்தி அத்தகையவனிடமிருந்து வெளிப்படுகிறது.
-
.உன்னால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக உன்னால் சேவை தான் செய்ய முடியும். கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டு செய். உனக்கு அப்படித் தொண்டு செய்யும் பாக்கியம் இருந்தால் அவர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம் ஆண்டவனுக்கே நீ தொண்டு செய்தவனாகிறாய்
-
தனது குழந்தைகளில் யாரேனும் ஒரு வருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால் அதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய். ஆனால் அது காரணமாக உன்னைப்பற்றி நீ மிகவும் பெருமையாக நினைத்துக் கொள்ளாதே மற்றவர்களுக்குக் கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு உனக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் நீ பாக்கியசாலி ஆகிறாய். எனவே நீ செய்யும் இந்தச் சேவையைக் கடவுள் வழிபாடாகவே செய்.
-
.கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிரத் தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்துகொண்டிருக்கிறேன் மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்.
-
.உலகமாகிய இந்த நரகத்தில் ஒருவனால் ஒரே ஒரு நாளைக்காகிலும் ஒரே ஒருவனுடைய இதயத்திற்குச் சிறிது இன்பமும் மகிழ்ச்சியும் அளிக்க முடியுமானால் அந்த ஒன்றே ஒன்று மட்டும்தான் உண்மையாகும். இந்த உண்மையை வாழ்நாளெல்லாம் பட்ட கஷ்டங்களுக்குப் பிறகு நான் உணர்ந்துகொண்டேன். மற்றவை எல்லாம் பொருளற்ற வெறும் பகற்கனவுகள் என்று தான் சொல்லவேண்டும்.
-
. உலகிற்கு யார் ஒளிதரப் போகிறார்கள்? பண்டைக் காலத்தில் தியாகம் தான் வாழ்க்கைக்கு உரிய விதியாக இருந்தது. இனி வரப்போகும் பல கோடி நூற்றாண்டுகளுக்கும் இந்த விதி அப்படியே தான் இருக்கப் போகிறது. பலரின் நன்மைக்காக, அனைவரின் சுகத்திற்காக, உலகில் தைரியமும் சிறப்பும் பெருமளவில் பெற்றிருப்பவர்கள் தங்களைத் தியாகம் செய்துகொண்டுதான் ஆகவேண்டும். என்றென்றும் நிலைத்த மாறாத அன்பும் கருணையும் பொருந்திய பல நூறு புத்தபிரான்கள் இப்போது தேவைப்படுகிறார்கள்.
-
.தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக்கொள்வதில் நமது சக்தியைச் சிதற விடாமல், அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்க பூர்வமான பணிகளில் நாம் ஈடுபடுவோமாக. யார் ஒருவர் எதைப் பெறுவதற்குத் தகதி உடைய வராக இருக்கிறாரோ, அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் முடியாது. இந்தக் கருத்தை நான் மனப் பூர்வமாக நம்புகிறேன். கடந்த காலம் மிகவும் பெருமைக்கு உரியதாக இருந்தது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் எதிர்காலம் மேலும் சிறப்பாக அமையப்போகிறது என்பதை நான் முழுமனதுடன் நம்புகிறேன்.
-
. மோகமாகிய முதலையின் வாயில் மக்கள் எப்படிப் பரிதாபமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள் அந்தோ! இதயத்தைப் பிளக்கக் கூடிய அவர்களின் சோகக் குரலை கேளுங்கள் முன்னேறிச் செல்லுங்கள்! கட்டுண்டு கிடக்கும் மக்களைப் பந்த பாசங்களிலிருந்து விடுவிப்பதற்காகவும் எளியவர்களின் துன்பச் சுமையைக் குறைப்பதற்காகவும் அறியாமையில் மூழ்கியிருக்கும் இருண்ட கிணறுகள் போன்ற உள்ளங்களை ஒளி பெறச் செய்வதற்காகவும் ஏ வீரர்களே முன்னேறிச் செல்லுங்கள்! அஞ்சாதே அஞ்சாதே என்று வேதாந்த முரசு முழங்கிக் கொண்டிருப்பதைக் கேளுங்கள்.
-
. தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான் . சிவபெருமானை விக்கிரகத்தில் மட்டும் காண்பவனுடைய வழிபாடு ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது.
-
. கிராமம் கிராமமாகச் சென்று மனிதகுலத்திற்கும் பரந்த இந்த உலகத்திற்கும் நன்மை செய். மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கும் செல்ல வேண்டும். மரணம் வருவது இவ்வளவு உறுதியாக இருக்கும் போது நல்ல ஒரு காரியத்திற்காக உயிரை விடுவது மேல்.
---


சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6