Sunday, 27 November 2016

பொன்மொழிகள் .பகுதி-49

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-49
--
பெரியவர்கள் பெருந் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனித குலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை நீ உலக வரலாறு முழுவதிலும் காணலாம். 
-
உனது சொந்த முக்திக்காக எல்லாவற்றையும் நீ துறந்துவிட விரும்பினால் அது அவ்வளவு ஒன்றும் பாராட்டுவதற்கு உரியதில்லை. உலகத்தின் நன்மைக்காக உன் முக்தியையும் நீ தியாகம் செய்து விட விரும்புகிறாயா? அப்படி நீ செய்தால் கடவுளாகவே நீ ஆகிவிடுவாய். இதைச் சற்றுச் சிந்தித்துப் பார்.
-
.புனிதமான வாழ்க்கையின் விளைவாக எழும் உற்சாகத்தினால் எழுச்சி அடைந்தவர்கள்; கடவுளிடம் அழியாத நம்பிக்கை என்பதை அரணாகப் பெற்றவர்கள்; ஏழை எளியவர்களிடமும் தாழ்ந்தவர்களிடமும் ஒடுக்கப்பட்டவர்களிடமும் கொண்ட இரக்கம் காரணமாகச் சிங்கத்தைப் போன்ற தைரியம் அடைந்தவர்கள் இத்தகைய ஆண்களும் பெண்களும் நூறாயிரம் பேர் வேண்டும். இவர்கள் மோட்சம் பரோபகாரம், தாழ்ந்தவர்களின் முன்னேற்றம், சமூக சமத்துவம் ஆகிய இந்த உயர்ந்த கொள்கைகளைப் பிரசாரம் செய்தபடி இந்த நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைவரை செல்வார்கள்
-
.என் மகனே ! உனக்கு எனது சொற்களின் பேரில் ஏதாவது மரியாதை இருக்குமானால் ,
முதலாவதாக உன்னுடைய அறையின் எல்லாக் கதவுகளையும் ஜன்னல் களையும் திறந்துவிடு. இதுவே நான் உனக்குத் தரும் முதல் அறிவுரையாகும். கீழ்நோக்கிச் சென்றபடியும் துன்பத்தில் மூழ்கியபடியும் ஏராளமான ஏழை மக்கள் நீ வாழும் பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நீ அவர்களை அணுகிச் சென்று உன்னுடைய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் செலுத்தி அவர்களுக்கு தொண்டுசெய். நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்து வகைகளை வழங்க ஏற்பாடு செய். உன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தி அந்த நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்குக் கல்வியறிவைப் புகட்டு. என் மகனே நான் உனக்குச் சொல்கின்ற இந்த முறையில் உன்னுடைய சகோதரர்களாகிய மக்களுக்கு நீ தொண்டு செய்ய ஆரம்பிப்பாயானால் நிச்சயமாக உனக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கும்.
-
.அந்நாளில் நிலவிய தொண்டு மனப்பான்மை, கீழ்ப்படிதல் தன்னடக்கம் ஆகிய வீரனுக்கு உரிய பண்புகள் இன்று எங்கே போய்விட்டன? போருக்குச் செல்லும் வீரன் தன்னைத் தியாகம் செய்து கொள்கிறனேயன்றி, தனது நலத்தைக் கருதுவதில்லை. ஒருவன் மற்றவர்களுடைய இதயங்களின் மீதும் வாழ்க்கையின் மீதும் ஆணை செலுத்த வேண்டுமானால் முதலில் கட்டளைக்கு உட்பட்டு முன்னேறிச் சென்று தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
--
. பணம் படைத்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இருக்கிறார்களே, அவர்களிடம் நம்பிக்கை வைக்க வேண்டாம். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைவிட, செத்துப்போனவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். பணிவும் தாழ்மையும் கொண்டு, அதே சமயத்தில் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய உங்களிடம்தான் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
-
கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள் திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால் ஆகப்போவதும் ஒன்றுமில்லை. துன்பத்தால் வாடுகிறவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள். பிறகு உதவிக்காகக் கடவுளை நோக்குங்கள். உங்களுக்குத் தேவைப்படும் உதவி நிச்சயமாக வந்தே தீரும்.
-
... குளிராலோ பசியாலோ இந்த நாட்டிலேயே(அமெரிக்காவில்) நான் அழிந்து போக நேரலாம். ஆனால் இளைஞர்களே ஏழைகள், அறியாமை மிக்கவர்கள், நசுக்கப்பட்டவர்கள் ஆகியோருடைய நலனுக்காகப் போராடும் என்னுடைய இரக்கம், முயற்சி ஆகியவற்றை உங்களிடம் நான் ஒப்படைக்கிறேன். நாள்தோறும் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்த முப்பது கோடி மக்களின் நல்வாழ்வை மீட்டுத் தருவதற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பதாகச் சபதம் மேற்கொள்ளுங்கள்.
--


சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment