Sunday, 20 November 2016

சுவாமிஜியின் தாய்ப்பாசம்

சுவாமிஜியின் தாய்ப்பாசம்!
--
பெற்ற தாயையும் பிறந்த வீட்டையும் உற்ற சகோதர சகோதரிகளையும் சுவாமிஜி பிரிந்து வந்து நீண்ட காலம் ஆயிற்றுஆனால் அவர்களைப் பற்றிய நினைவு, அவர்ககளது நன்மைக்கான பிரார்த்தனைகள் அனைத்தும் அவரது வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்தது. தாயின் நினைவு அவரிடமிருந்து நீங்கவே இல்லை. தாம் வாழ்நாளில் பெற்ற அனைத்து பெருமைகளும் தமது தாய்க்கே உரியவை என்று அவர் பலமுறை குறிப்பிட்டதும் உண்டு. எத்தனையோ காலம் பிரிந்திருந்தும், இறுதிவேளையில் ஓடோடி வந்த தாயின் ஈமக்கடன்களைத் தனியொருவராகவே செய்த ஆதிசங்கரரும், உன்னத நிலைத் துறவியாக இருந்தும் தாய் கேட்டுக் கொண்டாள் என்ற ஒரே காரணத்திற்காக அவளது காலம்வரை ஊர் எல்லையைத் தாண்டாமல் வாழ்ந்த பட்டினத்தாரும் வந்த துறவியர் பரம்பரையில் தோன்றியவர் அல்லவா சுவாமிஜி!
திடீரென ஒருநாள் அவர் கண்ட கனவு அவரை நிலைகுலையச் செய்தது. தம் தாய் இறந்துவிட்டதாகக் கண்டார் சுவாமிஜி. அவரது மனம் விவரிக்க இயலாத வேதனையில் ஆழ்ந்தது. அது ஒரு பக்கம்! அவரை மேலை நாடு செல்லுமாறு அன்பர்கள் வற்புறுத்துவது மறுபக்கம். இரண்டிற்கும் இடையில் ஊசலாடியது சுவாமிஜியின் உள்ளம். தமது உள்ளத்தை மன்மதரிடம் வெளியிட்டார் சுவாமிஜி. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள வலங்கைமான் என்ற ஊரில் வாழ்ந்த குறிசொல்பவர் ஒருவரைக் காணலாம் என்று ஆலோசனை கூறினார் மன்மதர். அவரது பெயர் கோவிந்தசெட்டி. அவரது கிராமத் தமிழை அளசிங்கர் சுவாமிஜிக்காக மொழிபெயர்த்தார். பிறகு அவர் பென்சிலால் சில படங்களை வரைந்தார். சிறிது நேரத்தில் அவரது மனம் ஆடாமல் அசையாமல் ஒருமுகப்பட்டு நின்றதை சுவாமிஜி கவனித்தார். அப்படியே சிறிதுநேரம் கழிந்தபிறகு அவர் சுவாமிஜியின் பெயர், பரம்பரையிலுள்ள முன்னோர்களின் பெயர்கள் போன்ற விவரங்களை தங்குதடையின்றி கூறினார். அத்தனையும் சரியாக இருந்தன. இறுதியாக ஸ்ரீராம கிருஷ்ணர் சுவாமிஜியைக் காத்து வருவதைத் தெரிவித்தார். 'நீங்கள் நாடெங்கும் சுற்றித் திரிந்தபோது, ஒவ்வொரு கட்டத்திலும் அவர் உங்களுடனேயே இருந்தார். உங்கள் தாயைப்பற்றிய செய்தி தவறானது. நீங்கள் கலங்க வேண்டாம். அதுமட்டுமல்ல, ஆன்மீகத்தைப் போதிப்பதற்காக நீங்கள் விரைவில் தொலைதூர நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும்' என்றும் கூறினார் அவர்.
சுவாமிஜியின் மனச்சுமை அகன்றது. அனைவரும் அங்கிருந்து சென்னைக்குத் திரும்பினர். அந்தக் குறி சொல்பவர் கூறியதை மெய்ப்பிப்பதுபோல், அந்த வேளையில் கல்கத்தாவிலிருந்து தந்தியும் வந்தது. சுவாமிஜியின் தாயார் நலமாகவே இருந்தார்.
--
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment