Sunday, 20 November 2016

மைசூர் திவானின் உதவி

மைசூர் திவானின் உதவி!
-
மைசூர் திவான் சுவாமிஜிக்குப் பரிசுகள் தர விரும்பினார். ஒருநாள் அவர் தமது உதவியாளர் ஒருவரை சுவாமிஜியுடன் கடைவீதிக்கு அனுப்பி, அவர் என்ன விரும்பினாலும் வாங்கித் தருமாறு கூறினார். கடைக்குச் சென்ற சுவாமிஜி ஒரு சிறுவனின் குதூகலத்துடன் ஒவ்வொரு பொருளையும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தார். பிறகு அந்த உதவியாளரிடம், 'உங்கள் திவான் கட்டாயமாக எனக்கு ஏதாவது தர விரும்பினால் இந்த ஊரில் உள்ள மிகச் சிறந்த சுருட்டு ஒன்றை வாங்கிக் கொடுங்கள். அதுபோதும்' என்று கூறிவிட்டார். அவ்வாறே கொடுத்த போது அதை ஆர்வத்துடன் புகைத்தார். அதன் விலை ஒரு ரூபாய்.
ஒருநாள் சுவாமிஜியும் பிரதம மந்திரியும் மன்னரைக் காணச் சென்றனர். அப்போது மன்னர் சுவாமிஜியிடம், 'சுவாமிஜி, உங்களுக்காக நான் என்ன செய்யட்டும்?' என்று கேட்டார். சுவாமிஜி அதற்கு நேரடியான பதில் எதையும் சொல்லவில்லை. ஆனால் அவர் கூறியதில் அவரது எதிர்காலத் திட்டத்தின் ஒரு சுருக்கமே இருந்தது. முதலில் இந்தியாவின் பெருமை, அதன் ஆன்மீக மகிமை போன்றவற்றை சுமார் ஒரு மணி நேரம் கூறினார். பிறகு மேலை விஞ்ஞானக் கருத்துக்களும், இயக்கரீதியாகப் பணி செய்வதுமே இந்தியாவின் அப்போதைய தேவை என்பதை எடுத்துக் கூறினார். இந்தியாவின் ஆன்மீகப் பொக்கிஷம் மேலை நாடுகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார். தாம் மேலை நாடு சென்று பிரச்சாரம் செய்ய இருப்பதை இவ்வாறு மறைமுகமாகத் தெரிவித்தார் அவர்.
இறுதியாக, 'மன்னா, எனக்கு என்ன வேண்டும் என்றுதானே கேட்டீர்கள்! எனது தேவை இதுதான். மேலை நாடு நமக்கு உதவ வேண்டும். எப்படித் தெரியுமா? நமது பொருளாதார நிலைமையை உயர்த்துவதன் மூலம் நமக்கு உதவி செய்ய வேண்டும். நமது மக்களுக்கு நவீன விவசாயம், நவீன தொழில்நுட்பங்கள், நவீன விஞ்ஞானம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும்' என்று கூறினார். சுவாமிஜியின் உணர்ச்சி பூர்வமான கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருந்த மன்னர், சுவாமிஜி மேலை நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் அதற்கான செலவைத் தாமே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். ஏனோ அந்த உதவியை சுவாமிஜி உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.
--
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment