Sunday, 20 November 2016

வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-26

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-26
-
அன்னையின் ஆசிகள்...
--
மடம் வளர வேண்டும், கோயில் எழ வேண்டும் இவையெல்லாம் சுவாமிஜியை அலைக்கழித்த எண்ணங்கள் தான். ஆனால் இவை அனைத்தையும் மீறி அவரது மனம் தனிமை வாழ்க்கைக்காக ஏங்கியது. இமயப் பகுதிகளில் சில காலம் செலவழித்திருந்த அகண்டானந்தர் அப்போதுதான் திரும்பியிருந்தார். அவர் கூறிய வர்ணனைகளும் யாத்திரைக் கதைகளும் சுவாமிஜியின் ஆர்வத்திற்குத் தூபமிட்டன.
அகண்டானந்தரை உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்து, அவருடன் சென்று அன்னை ஸ்ரீ சாரதா தேவியைத் தரிசித்தார். அம்மா மிக மேலான அனுபூதியை அடையாமல் நான் திரும்ப மாட்டேன்' என்று அன்னையிடம் கூறினார் சுவாமிஜி. ஸ்ரீராமகிருஷ்ணரின் திருப்பெயரால் அன்னை அவரை ஆசிர்வதித்தார். பிறகு அகண்டானந்தரிம், 'மகனே, என் செல்வத்தையே (சுவாமிஜி) உன்னிடம் ஒப்பமடைக்கிறேன். உனக்கு இமய மலைப் பகுதியைப்பற்றி நன்றாகத் தெரியும். நரேன் உணவிற்குத்திண்டாடாமல் பார்த்துக்கொள்' என்று கூறினார். இவ்வாறு அன்னையின் ஆசிகள் பெற்று 1890 ஜூலை இறுதியில் புறப்பட்டார் சுவாமிஜி. 'நான் ஒருமுறை தொட்டால் ஒருவனது வாழ்க்கை மாற்றம் காண வேண்டும். அத்தகைய ஆற்றலைப் பெறாமல் திரும்ப மாட்டேன்' என்று தமது சகோதரத் துறவிகளிடம் தெரிவித்துவிட்டு, நீண்ட பயணத்திற்காகப் புறப்பட்டார் சுவாமிஜி.
கங்கைக் கரை வழியா நடந்தே செல்ல எண்ணினார் சுவாமிஜி. ஆகஸ்ட் மாதம் சுவாமிஜியும் அகண்டானந்தரும் பாகல்பூரை அடைந்தனர். அந்த ஊரில் பிரபலமான குமார் நித்தியானந்த சிங் தனது நண்பரான மன்மதநாத் சௌதுரி என்பவரின் வீட்டில் சுவாமிஜியும் அகண்டானந்தரும் தங்க ஏற்பாடு செய்தார்.
இந்த இரண்டு துறவிகளையும் பற்றி ஆரம்பத்தில் மன்மத நாத் பெரிதாக எண்ணவில்லை. எத்தனையோ துறவிகள் வந்து போகின்றனர், அவர்களைப்போல் இருவர் என்று தான் நினைத்தார் அவர். ஒருநாள் மதிய உணவிற்குப் பிறகு அனைவரும் ஓய்வாக அமர்ந்திருந்தனர். மன்மத நாத் அவர்களிடம் பேசவே விரும்பாததுபோல் சற்று தள்ளி அமர்ந்து புத்த மதம் பற்றிய ஆங்கில நூல் ஒன்றை வாசிக்கலானார். சிறிதுநேரம் கழிந்தது. சுவாமிஜி அவரிடம், 'அது என்ன புத்தகம்?' என்று கேட்டார். அதற்கு மன்மத நாத் புத்தகத்தின் பெயரைக் கூறிவிட்டு, 'உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?' என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி,'ஏதோ கொஞ்சம் தெரியும்' என்றார். உரையாடல் தொடர்ந்தது. ஆங்கில இலக்கியங்கள் பலவற்றிலிருந்து மேற்கொள் காட்டி தடையின்றிப் பேசலானார் சுவாமிஜி. பிரமித்துப் போனார் மன்மத நாத். ஒரு துறவி ஆங்கிலத்தில், அதுவும் இவ்வளவு சரளமாகப் பேசுவது என்பது அந்த நாளில் அபூர்வம்! சிறிது நேரத்திற்குள் சுவாமிஜியின் புலமையையும் அறிவின் ஆழத்தையும் புரிந்து கொண்டார் மன்மத நாத் யோகம், உபநிஷதம் போன்ற பல விஷயங்களில் சுவாமிஜியின் ஆழ்ந்த அறிவும் தொடர்ந்த நாட்களில் அவருக்குப் புலப்பட்டது.
--
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment