Sunday, 27 November 2016

பொன்மொழிகள் .பகுதி-54

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-54
--
. என் மகனே! மரணம் நேரு வதைத் தடுப்பதற்கில்லை கற்களைப் போலவும் கட்டைகளைப் போலவும் செத்து மடிவதைவிட வீரர்களைப் போல இறப்பது மேலானது அல்லவா? நிலையில்லாத இந்த உலகிலே இரண்டொரு நாள் அதிகமாகவே வாழ்ந்து விடுவதனால் பெறப் போகிற பயன்என்ன? வாழ்க்கை என்னும் கத்தி துருப்பிடித்து அழிந்து போவதை விடத் தேய்ந்து அழிவதே மேலானது. அதிலும் குறிப்பாக மற்றவர்களுக்கு ஒரு சிறிதளவிற்கு நன்மை செய்வதற்காக அழிந்துபோவது மிகவும் நல்லது.
--
. பாராட்டப்படுகிறேனோ இல்லையோ, இந்த இளைஞர்களை ஒன்று திரட்டிச் செயலில் இடுபடச் செய்வதற்காக நான் பிறந்திருக்கிறேன். அது மட்டுமல்ல, ஒவ்வொரு நகரத்திலும் நூற்றுக்கணக்கான பேர் என்னுடன் சேர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தவே முடியாத அலைகளைப் போலப் புரட்டி அடித்துக்கொண்டு போகும் வகையில் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்க விரும்புகிறேன் . அவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாகவும் சமுதாயத்தால் நசுக்கப்பட்டவர்களாகவும் உள்ளவர்களின் வீட்டு வாசலுக்கே சென்று வசதி ஒழுக்கம் மதம் கல்வி ஆகியவற்றைக் கொண்டு சேர்ப்பார்கள். இதை நான் சாதித்தே தீருவேன் அல்லது செத்து மடிவேன்.
--
.நீங்கள் உண்மையிலேயே என்குழந்தைகளானால் எதற்குமே அஞ்சி ஸ்தம்பித்து நின்று விடமாட்டீர்கள், நீங்கள் சிங்க ஏறுகளைப் போலத் திகழ்வீர்கள். இந்தியாவையும், இந்த உலகம் முழுவதையுமே நாம் தட்டியெழுப்பியாகவேண்டும். தங்களுடைய பணியை செய்து முடிப்பதற்காகத் தீயில் குதிப்பதற்கும் என் குழந்தைகள் தயாராக இருக்க வேண்டும்.
--
.எங்கெல்லாம் கொள்ளை நோய் பரவுகிறதோ பஞ்சம் ஏற்படுகிறதோ மக்கள் துன்பத்தில் வாடுகிறார்களோ அங்கெல்லாம் நீங்கள் அனைவரும் சென்று அவர்களுடைய துன்பத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். மிஞ்சிப் போனால் இந்த முயற்சியில் அதிகபட்சம் நீங்கள் உயிரிழக்க நேரிடலாம். அதனாலென்ன? உங்களைப் போல எத்தனை எத்தனையோ பேர் நாள்தோறும் புழுக்களைப் போலப் பிறப்பதும் இறப்பதுமாக இருக்கிறார்கள். அதனால் இந்தப் பரந்த உலகத்திற்கு என்ன குறைந்து போய்விட்டது ? மரணம் வருவதோ உறுதி ஆனால் இறப்பதற்கு என்று மேலான இலட்சியத்தைக் கொண்டிரு மேலானதொரு குறிக்கோளுக்காக வாழ்ந்து இறந்தபோவது மிகவும் சிறந்தது.
--
. இந்த வாழ்க்கை வருவதும் போவதுமாக இருக்கிறது. செல்வம் புகழ், இன்பங்கள் இவைஎல்லாமே ஏதோ ஒரு சில நாட்களுக்குத் தான் நிலைத்திருக்கப் போகின்றன. உலகப் பற்று நிறைந்த ஒரு புழுவைப் போல இறந்து போவதைவிட உண்மையை எடுத்துப்போதித்துக்கொண்டே கடமை என்னும் களத்திலே உயிரை விடுவது மிக மிக மேலானது முன்னேறிச் செல்!
--
.உண்மை ,தூய்மை, சுயநல மின்மை ஆகிய இந்த மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ, அவற்றைப் பெற்றிருப்பவர்களை நசுக்கக்கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ மண்ணுலகிலோ எங்குமே கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து நிற்கக் கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.
--
.வாழ்க்கையில் எனக்கு உள்ள ஒரே பேராவல் இதுதான்; ஒவ்வொருவரின் இருப்பிடத்துக்கும் உயர்ந்த கருத்துக்களைக் கொண்டு செல்லக்கூடிய ஓர் இயக்கத்தை ஏற்படுத்தி அதை நடத்தி வைக்க வேண்டும். அதன் பிறகு ஆண்களும் பெண்களும் தங்கள் விதியைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளட்டும். வாழ்க்கையின் மிக முக்கியமான பிரச்சனைகளைக் குறித்து நம் முன்னோர்களும் மற்ற நாட்டவர்களும் கொண்டிருந்த கருத்துக்களை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். குறிப்பாக இப்போது மற்ற நாட்டவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் பார்த்து அதன் பிறகு அவர்கள் ஒரு முடிவுக்கு வரட்டும்.
--
இரசாயனப் பொருள்களை ஒன்று சேர்த்து வைப்பதுதான் நமது வேளையாகும் இயற்கையின் நியதியையொட்டி அவை தாமாகவே படிகங்களாக மாறுதலடைந்துவிடும். கடுமையாக உழை உறுதியாக இரு. பாமர மக்களின் மதத்துக்கு ஊறு விளைவிக்காமல் அவர்களை முன்னேற்றமடையச் செய்வதே உன் இலட்சியமாக இருக்கட்டும்.
-
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்கு தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும்.
--
.கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகிலே மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது இது என் உறுதியான நம்பிக்கை.
--
படித்த இந்துக்களிடையே நீ காணும் அந்தச் சாதிவெறி பிடித்த, மூடநம்பிக்கை கொண்ட இரக்கமற்ற போலித்தனம்மிக்க நாத்திக மனம் கொண்ட கோழைகளில் ஒருவனாக வாழ்ந்து இறந்து போவ தற்காகப் பிறந்தவன் என்றா என்னை நீ நினைக்கிறாய்! கோழைத்தனத்தை நான்வெறுக்கிறேன் கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியலாகும்.மற்றவை எல்லாம் வெறும் குப்பைதான்.
-
.நீயே தூய்மை பொருந்தியவன ஓ மாபெரும் வீரனே! கண்விழித்து எழுந்திரு இந்த உறக்கம் உனக்குப் பொருந்தாது. விழித்துக்கொள். எழுந்து நில். இந்த உறக்கம் உனக்கு ஏற்றதல்ல துன்பப்படுபவனாகவும் பலவீனனாகவும் உன்னை நீ நினைக்காதே எல்லாம் வல்ல ஆற்றல் படைத்தவனே விழித்தெழுந்து உன் இயல்பை நீ வெளிப்படுத்து. உன்னைநீயே பாவி என்று நினைப்பது உனக்குப் பொருந்தாது. உன்னை நீயே பலவீனன் என்று நீ கருதுவதும் உனக்குப் பொருந்தாது. இந்த உண்மையை உலகிற்கு எடுத்துச்சொல். உனக்கும் சொல்லிக் கொள். அப்போது உன் வாழ்க்கையில் ஏற்படும் விளைவை நீ கவனி. மின்னல் வேகத்தில் எப்படி எல்லாம் மாறிவிடுகிறது என்பதைப் பார். பின்பு அந்த உண்மைகளை மனிதகுலத்திற்கு எடுத்துச் சொல் . அதன் மூலம் மக்களுக்கு அந்த உண்மைகளின் ஆற்றலை எடுத்துக்காட்டு.
---
. உன்னைப் போன்ற மக்களிடம் தான் நான் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். என் சொற்களின் உண்மையான கருத்தைப் புரிந்துகொண்டு அந்த ஒளியில் உன்னைச் செயலில் ஈடுபடுத்திக்கொள் உனக்கு நான் போதுமான அளவுக்கு அறிவுரைகளை வழங்கியிருக்கிறேன் .இப்போது அதில் சிறிதளவாவது செயலுக்குக் கொண்டுவா என் அறிவுரைகளை கேட்டதன் பயனாக வாழ்க்கையில் நீ வெற்றி யைப்பெற்றாய் என்பதை உலகம் புரிந்து கொள்ளட்டும்.
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment