Sunday, 20 November 2016

வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-24












சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-24
-
சுவாமிஜியும் அகண்டானந்தரும்...
--
வைத்தியநாதத்திலிருந்து காஜிபூர் வழியாக இருவரும் காசியை அமைந்தனர். காசியில் பிரமத தாஸின் வீட்டில் தங்கினர். காசியில் வாழ்ந்தாலும் இமயத்தின் பனிமலைச் சிகரங்களைக் காண்பதற்கான ஆர்வமே சுவாமிஜியின் சிந்தை முழுவதும் நிறைந்திருந்தது. ஒருநாள் சுவாமிஜியைச் சந்திக்கப் பலர் வந்திருந்தனர். அப்போது சுவாமிஜி ஏதோ ஆவேசம் வந்தவர்போல் பிரமத தாஸிடம், 'இப்போது நான் காசியிலிருந்து புறப்படுகிறேன். சமுதாயத்தின்மீது ஒருநாள் வெடிகுண்டுபோல் வெடிப்பேன். இந்தச் சமுதாயம் ஒரு நாய்போல் என்னைப் பின்தொடரும். அதுவரை இந்த நகரத்திற்கு வர மாட்டேன்' என்று கூறினார். பின்னர் அங்கிருந்து சுவாமிகள் இருவரும் கிளம்பினர்.
பத்ரி நாத் செல்வது அவர்களின் திட்டம். காசியிலிருந்து புறப்பட்ட அவர்கள் அயோத்தி, நைனிடால் வழியாக அல்மோரா சென்றனர். வழியில் காக்ரிகாட் என்ற இடத்தை அடைந்தனர். கோசி, சூயல் என்ற இரண்டு சிற்றாறுகள் சங்கமிக்கின்ற அழகிய மலைப் பகுதி அது. சங்கமத் தலத்திற்கு அருகில் பெரியதோர் அரச மரம். சுற்றிலும் உயர்ந்த மலைச் சிகரங்கள். 'இந்த இடம் மிகவும் அற்புதமாக உள்ளது. தியானத்திற்கு ஏற்ற இடம் இது' என்றார் சுவாமிஜி. சொன்னது மட்டுமல்ல, ஆற்றில் குளித்துவிட்டு கரையில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் மூழ்கவும் செய்தார்.
சுவாமிஜியின் வாழ்க்கையில் அது முக்கியமானதொரு நாளாக இருந்தது. அவரது பின்னாள் வாழ்க்கையிலும் சொற்பொழிவுகளிலும் திட்டங்களிலும் காணப்படுகின்ற ஓர் அற்புதமான கருத்தை அன்றைய தியானத்தில் ஓர் அனுபூதியாகப் பெற்றார் அவர். தியானம் கலைந்து எழுந்ததும் அவர் அகண்டானந்தரிடம், 'என் வாழ்க்கையில் மகோன்னதமான கணங்களுள் ஒன்றை இப்போது நான் கடந்து வந்தேன். வாழ்க்கைப் புதிர்களுள் மிகவும் முக்கிமான ஒன்றிற்குரிய தீர்வு இந்த அரச மரத்தின் அடியில் எனக்குக் கிடைத்தது. ஒற்றுமை நிலவுவதை நான் கண்டேன். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இந்த மனித உடம்பிலும் உள்ளது. பிரபஞ்சம் முழுவதையும் நான் ஓர் அணுவில் கட்டேன்' என்று கூறினார்.
--
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment