Sunday, 20 November 2016

ஞானப் பேரொளியே!

ஞானப் பேரொளியே! அறிவுச் சுடரே!
மகான் உன்னை நினைக்கின்றேன் -என்
மனமார நினைப் போற்றுகின்றேன்!
உலகம் செழிக்க,உன்னதம் பெற்றிட,
உலக மக்கள் உண்மையில் உறைந்திட
புதுநெறி புகுத்திய புதுமைத் துறவியே!
புதிய உலகம் படைக்க வேண்டியே
புவியெல்லாம் வலம் வந்தே – பல
புனிதர்களை படைத்த பிரம்மாவே!
புண்ணிய பூமியின் புனிதம் காக்க
மண்ணின் மைந்தர்கள் நல்மனத்தைத் துளைத்து
கருணை பொங்கும் மகத்துவம் செய்தோய்!
மானுடம் வாழ மறுபிறவி சிறக்க
பிறப்பின் லட்சியம் அதை -இப்
பிறவியிலே அடைய தியான மென்னும்
மெஞ்ஞான வழிகாட்டிய ஞானப் பெருங்கடலே!
இளைஞர் கூட்டத் தளபதியே!
நீயும், நின் சிந்தனை தந்த அமுதமும்
தேனுடன் பாலும் சேர்த்தாற் போல-
தேவனே! நீயுமென் சிந்தையில் சேர்ந்தாய்!
நீ புவிக்கு வந்த அந்தப் புனித நாளின்
நினைவில் திளைத்து களித்து -மனம் மயங்கி
விழித்து நின்னையே நின்னை நினைத்து
பேருவகை பெற்றிடும் இப்பொழுதில்…
பிறவிப் பெருங்கடல் நீந்த -என்னுள்
பேரொளி பெருக அந்தப் பரமனை
பேராவலில் உருகி வேண்டுகிறேன்.
விழித்தெழுவோம் நாம்!
ஆத்மா விழித்தெழ விடாது முயல்வோம்!
வாழ்க மானுட லட்சியம்!
வளர்ந்தெங்கும் பரவட்டும் வேதாந்த தத்துவம்!
உலகமே பேரொளியில் திளைத்து
பேரானந்தம் அடையட்டும்!
-
திரு. ஆலாசியம்.கோ,

No comments:

Post a Comment