Sunday, 20 November 2016

வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-23

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-23
-
சுவாமிஜியை மாற்றிய சகோதரியின் மரணம்!
---
1890 ஆகஸ்ட் இறுதியில் சுவாமிஜியும், அகண்டானந்தரும் அல்மோராவை அடைந்தனர். அங்கே அம்பா தத் என்வரின் தோட்ட வீட்டில் தங்கினர்.
சில நாட்கள் அங்கே தங்கிய சுவாமிஜி தனிமை வாழ்வை நாடி ஏங்கலானார். எனவே ஒருநாள் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு சில மைல் தொலைவில் இருந்த குகை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்கி தீவிரமான சாதனைகளில் ஈடுபடலானார். அந்தக் குகை காஸார் தேவி கோயிலுக்கு அருகில் இருந்தது. அடர்ந்த காட்டுப்பகுதி அது. சில காலம் அங்கே தங்கிய சுவாமிஜி ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பட்டவர்போல் மீண்டும் திரும்பி லாலாவின் வீட்டிற்கே வந்தார்.
தீவிர தவ வாழ்வின் விளைவாக சில நாட்கள் லாலாவின் வீட்டில் தங்கிய சுவாமிஜியை அதிர்ச்சியில் உறைய வைத்த செய்தி ஒன்று வந்தது. அவரது சகோதரிகளுள் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியில் மட்டுமல்ல, சுவாமிஜியைத் தீவிர சிந்தனையிலும் ஆழ்த்தியது இந்தச் சோக சம்பவம். சுவாமிஜியுடன் ஓடியாடிக் களித்தவர் அவர். சிம்லாவில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருந்த அவரது திருமணம் வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை. சிறுவயதிலேயே அவரது திருமணம் நடைபெற்றது. ஆசாரமிக்க புகுந்த வீட்டினருடன் அவரால் அனுசரித்துப் போக இயலவில்லை. திருமண நாள் முதலே கவலையையும் கண்ணீரையுமே அவர் கண்டிருந்தார். எல்லைமீறிய சோகம் ஆட்கொண்ட போது தமது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.
'பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இமயமலைக்குச் சென்றேன். இனி திரும்பி வரக்கூடாது என்ற முடிவுடன்தான் சென்றேன், ஆனால் என் சகோதரி தற்கொலை செய்து கொண்டு இறந்தாள். அந்தச் செய்தி அங்கே என்னை வந்தடைந்தது. என் பலவீன இதயம், நான் அமைதியை எதிர்நோக்கிய நிலையிலிருந்து என்னைத் தூர விட்டெறிந்து விட்டது என்று எழுதினார் சுவாமிஜி. 'பெண்களுக்குக் கல்வி அளிக்க வேண்டும், அவர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்குமாறு செய்ய வேண்டும்' என்று சுவாமிஜி பெண்கள் முன்னேற்றத்திற்காகத் கதறியதன் அடிப்படையை இந்தச் சோக சம்பவத்தில் நாம் காண முடியும்.
--
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment