Sunday, 27 November 2016

பொன்மொழிகள் .பகுதி-51

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-51
--
நான் மதப்பற்று உள்ளவனாக இருக்க விரும்பினேன். இந்தத் தத்துவங்களை எல்லாம் அனுபவித்து அறிந்து கொள்ள விரும்பினேன். ஆனால் அவ்விதம் அவற்றை என்னால் அனுபவித்து அடைய முடியாமற் போய்விட்டது. ஆதலால் நான் எதையுமே நம்புவது கிடையாது என்று சொல்லுகிற பல மனிதர்களை நீ இந்த உலகிலே பார்க்கலாம். படித்தவர்களில் கூட இப்படிப்பட்டவர்கள் இருப்பதை நீ காணலாம். என் வாழ்நாள் முழுவதும் மதப்பற்று உள்ளவனாக இருப்பதற்கு நான் முயற்சி செய்தேன்; ஆனால் அதிலே ஒன்றுமில்லை என்று மக்களில் பலர் உன்னிடம் சொல்வார்கள். வேதியியல் விஞ்ஞானி ஒருவர் இருக்கிறார். அவர் உன்னிடம் வந்து வேதியியல் பற்றிச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நான் வேதியியல் விஞ்ஞானியாக திகழ வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் அப்படியிருந்தும் என் முயற்சியில் நான் ஒன்றும் வெற்றி பெற்ற தாகத் தெரியவில்லை. எனவே வேதியியல் பற்றிய எதையும் நான் நம்புவதில்லை என்று நீ அவரிடம் சொல்வாயானால் அவர் உன்னைத் திருப்பி, எப்போது நீ முயற்சி செய்தாய் ? என்று கேட்பார். நான் தூங்கச் செல்லும் போது, ஓ வேதியியல்! நீ என்னிடம் வா என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தேன் . அது என்னிடம் வரவே இல்லை என்று நீ சொல்வாய். வேதியியல் விஞ்ஞானி உன்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு , அப்பனே ! வேதியியல் பற்றித் தெரிந்துகொள்வதற்கு அது வழியே அல்ல. நீ வேதியியல் பரிசோதனைச்சாலைக்குச் சென்று எல்லா வகையான அமிலங்களையும் காரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு சோதனை செய்ய வேண்டும்,அவ்வாறு சோதனை செய்யும்போது பல வேளைகளில் கைகளில் பட்டு கை பொசுங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. நீ அவ்வாறு முயற்சி செய்தாயா?. நீ அப்படிச் செய்திருந்தால் வேதியியல் பற்றியஞானம் உனக்கு வந்திருக்கும் என்று சொல்லுவார் .மதம் சம்பந்தமாக அப்படிப்பட்ட பெரிய முயற்சியை நீ எடுத்துக்கொள்கிறாயா?
மதம்கூறும் ஒழுக்கப்பயிற்சிகளை பயிற்சிசெய்திருக்கிறாயா?ஒவ்வொரு துறைக்கும் அதைக் கற்பதற்கென்று ஒரு தனி வழிமுறை இருக்கிறது. அத்தகைய முறையில் தான் மதத்தையும் கற்கவேண்டும்.
--
.ஒரு மனிதன் மிகவும் அருமையான நடையில் சிறந்த கருத்துக்களைப் பற்றிய பேசுபவனாக இருக்கலாம் . ஆனால் அது மக்களைக் கவருவதாக இருக்காது. மற்றொருவன் பேச்சில் அழகிய மொழி கருத்து என்னும் இவற்றுள் எதுவும் இல்லாமலிருக்கலாம். ஆனால் அவனுடைய சொற்கள் கேட்பவர்களின் உள்ளங்களைக் கவர்கின்றன. அவனுடைய ஒவ்வொரு செயலும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இந்தச் சக்தி ஓஜஸ்ஸினால் வருவதாகும்... கற்பொழுக்கம் உடைய ஆண்களும் பெண்களும் மட்டுமே ஓஜஸ்ஸை மேலே எழுப்பி மூளையில் சேமித்து வைக்க முடியும் . ஆகையால் தான் பிரம்ம சரியம் எப்போதும் மிகவும் உயர்ந்த ஒழுக்கமாகக் கருதப்பட்டு வருகிறது. ஒருவன் பிரம்மசரியத்திலிருந்து தான் வழுவியதாக உணர்ந்தால் ஆன்மிகச் சக்தி அவனிடமிருந்து போய்விடுகிறது. அத்தகையவன் தன் மன உறுதியை இழந்து விடுகிறான். இதனால்தான் மகத்தான ஆன்மிக வலிமையைப் பெற்ற பெரியோர்களை உருவாக்கித் தந்த உலகிலுள்ள எல்லா மதச் சம்பிரதாயங்களும் பரிபூர்ணப் பிரம்மசரியத்தை எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கின்றன.
-
. இந்தியா அழிந்துவிடுமா? அது அப்படி அழிந்துவிடுமானால் உலகிலிருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும். சமயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும். எல்லா உயர்ந்த இலட்சியங்களும் மறைந்து போய்விடும். அவை இருந்த இடத்திலே காமமும் ஆடம்பரமும் ஆண் தெய்வமாகவும் பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும், பணமே அங்குப் பூசாரியாக உட்கார்ந்துகொள்ளும். வஞ்சகம், பலாத்காரம், போட்டி ஆகிய வற்றையே அது தன்னுடைய பூஜைக் கிரியை முறைகளாக வைத்துக் கொள்ளும். மனித ஆன்மாவையே அது பலி பீடத்தில் பலியாக்கும் . ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்றுமே நடக்கப்போவதில்லை.....
-
உயர்ந்த பண்பு ஒழுக்கம், ஆன்மிகம் ஆகிய எல்லாச் சிறந்த பெருமைகளுக்கும் பிறப்பளித்தவள் நமது இந்தியத்தாய். முனிவர்கள் பலர் வாழ்ந்த நாடு இந்த நாடு கடவுளுக்குச் சமமான மகான்கள் இன்னமும் இந்த நாட்டிலே தான் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய இந்தியாவா அழிந்து போய்விடும்?
-
எனது அருமைச் சகோதரா! ஒரு பழைய கைவிளக்கை எடுத்துக்கொண்டு இந்தப் பரந்த உலகிலுள்ள நாடு நகரங்கள் பட்டி தொட்டிகள் காடு கழனிகள் எல்லாவற்றின் ஊடேயும் உன்னை நான் பின்தொடர்கிறேன். உன்னால் முடியுமானால் , இந்தியாவில் வாழ்ந்தது போன்ற இப்படிப்பட்ட தலை சிறந்த மகான்களை வேறு எந்த நாட்டிலாவது தேடிக் காட்டு பார்க்கலாம்.
-
.மற்ற நாடுகளின் முன்னேற்றத்தின் முன்பு இந்தியாவின் முன்னேற்றம் ஒளி மங்கிக் காணப்படுவதற்கான காரணத்தை நீ சொல்ல முடியுமா? இந்தியத்தாய் அறிவாற்றலில் குறைந்தவளா? அல்லது திறமையில் தான் குறைந்தவளா? அவளுடைய கலை கணித அறிவு தத்துவங்கள் ஆகிய இவற்றைப் பார். பிறகு அறிவாற்றலில் இந்திய அன்னை குறைந்தவள் என்று நீ சொல்ல முடியுமா? அவள் தன்னுடைய மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனது நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும். இந்த ஒன்றுதான். உலக நாடுகளின் முன்னணியில் தனக்கு உரிய உயர்ந்த இடத்தை அவள் திரும்பப் பெறுவதற்குத் தேவை யாகும்.... துறவும் தொண்டுமே இந்தியாவின் இலட்சியங்கள் இந்தப் பாதையிலே மேலும் மேலும் . அவளை ஈடுபடுத்துங்கள். மற்றவை தாமாக வந்து சேரும்.
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment