சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-30
-
-
விலகிய புலி!
-
ஒரு முறை சுவாமிஜிக்கு தோன்றியது.. என் உடம்பும், கை கால்களும் நன்றாகத்தானே இருக்கின்றன. நான் வீடு வீடாகச் சென்று பிச்சை வாங்கி உண்பது சரிதானா? என்று.
-
ஒரு முறை சுவாமிஜிக்கு தோன்றியது.. என் உடம்பும், கை கால்களும் நன்றாகத்தானே இருக்கின்றன. நான் வீடு வீடாகச் சென்று பிச்சை வாங்கி உண்பது சரிதானா? என்று.
அவர் சிந்திக்கலானார். இந்த எண்ணம் எழுந்ததும் அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
எனக்கு உணவு தரும் ஏழைகளுக்கு என்னால் என்ன பயன்? அவர்கள் ஒரு பிடி அரிசி மீதம் பிடிக்க முடியுமானால் சொந்தக் குழந்தைகளுக்கே அது ஒரு நாள் உணவாகுமே. அதெல்லாம்தான் போகட்டும், இந்த உடலைக் காப்பாற்றி என்ன ஆக வேண்டும்? இனி நான் பிச்சையெடுக்க மாட்டேன் என்று தீர்மானம் செய்து கொண்டார் சுவாமிஜி. அந்த எண்ணம் தீவிரமாயிற்று. ஏதாவது காட்டிற்குச் சென்று தவம் புரிந்து, உடல் வற்றி உலர்ந்து, காய்ந்து சருகுபோல தானாக விழும்வரை உண்ணா நோன்பிருப்பது என்று உறுதி செய்து கொண்டார்.
இந்த எண்ணத்துடன் ஒரு காட்டிற்குள் நுழைந்து அன்ன ஆகாரம் இல்லாமல் ஒரு நாள் முழுவதும் நடந்தார். மாலை வேளை வந்த போது மயக்க நிலையில் மரம் ஒன்றின் கீழே சாய்ந்து பகவானைத் தியானிக்கலானார்.
சிறிது தியானம் கலைந்த போது...
ஆகா.. அதோ தெரியும் இரண்டு கனல் துண்டுகள்..
அவை.. சந்தேகமேயில்லை! புலியின் கண்கள் தாம்!
அதோ, அந்தக் கண்கள் நெருங்கி நெருங்கி வந்தன. இதோ வந்துவிட்டன!
சுவாமிஜியின் உடலும் சரி, உள்ளமும் சரி இம்மிகூட அசையவில்லை. அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்த அந்த புலியும் ஏனோ அவருக்குச் சற்று தூரத்தில் படுத்துக் கொண்டது.
புலியை அன்புடன் நோக்கினார் சுவாமிஜி.
ஒரு வறட்டுச் சிரிப்பு அவரது முகத்தில் படர்ந்தது. சரிதான். என்னைப் போல் இந்தப் புலியும் பட்டினி கிடந்ததாகத் தெரிகிறது. இருவரும் பட்டினி. இந்த என் உடலால் உலகுக்கு எந்த நன்மையும் விளையுமென்று தோன்றவில்லை. இந்தப் புலிக்காவது பயன்படும் என்றால் அது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று எண்ணிக் கொண்டார். அமைதியாக, அசைவின்றி தம்மை மரத்தில் நன்றாகச் சாய்த்துக் கொண்டார். கண்களை மூடி, இதோ இப்போது புலி என் மீது பாயப் போகிறது என்று நினைத்தபடி அமர்ந்திருந்தார். ஒரு கணம், இரண்டு கணம், ஒரு நிமிடம் என்று நேரம் கடந்தது. புலி பாயக் காணோம். சற்றே சந்தேகம் எழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தார். அங்கே புலி இல்லை, அது சென்றுவிட்டிருந்தது. ஆகா! பரம்பொருள் தம்மை எப்படியெல்லாம் காத்து வருகிறார் என்பதை அகம் உருகி நினைத்துப் பார்த்தார். அன்றைய இரவை அங்கேயே ஆத்ம சிந்தனையில் கழித்தார். பொழுது விடிந்தது. முந்தின நாளின் களைப்பு, சிரமம் எதுவும் உடம்பில் இல்லை. உடம்பும் மனமும் ஒரு புது ஆற்றலைப் பொற்றது போல் இருந்தது. தமது யாத்திரையைத் தொடர்ந்தார்.
-
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்
-
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment