கேரளத்தில் சட்டம்பி சுவாமிகளுடன்!
கொச்சி மாநிலத்திலுள்ள எர்ணாகுளத்திற்குப் படகில் சென்றார் சுவாமிஜி. அது டிசம்பர் 1892. சந்துலால், ராமையர் என்ற இருவர் அவரை முதன்முதலாகச் சந்தித்தனர். சுவாமிஜியால் மிகவும் கவரப்பட்ட அவர்கள் அவரைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
எர்ணாகுளத்திலுள்ள பலரும் அவரைக் காண வந்தனர். அந்த வேளையில் சட்டம்பி சுவாமிகளும் எர்ணாகுளத்தில் இருந்தார். சம்ஸ்கிருதத்தில் நல்ல புலமையும் சாஸ்திர அறிவும் உடையவர் அவர். சுவாமிஜியைப் பற்றி கேள்விப்பட்டு அவரைக் காண வந்த சட்டம்பி சுவாமிகள் அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு, சற்று தள்ளி நின்றே அவரைத் தரிசித்துவிட்டுச் சென்றார். பக்தர்களிடமிருந்து சட்டம்பி சுவாமிகளைப் பற்றி கேள்விப்பட்ட சுவாமிஜி, 'அவ்வளவு பெரிய மகானான அவர் என்னைத் தேடி வருவதா! நானே செல்கிறேன்' என்று கூறி அவரைக் காணச் சென்றார்.
சட்டம்பி சுவாமிகளுக்கு இந்தி தெரியாததால் இருவரும் சம்ஸ்கிருதத்தில் பேசினர். தனிமையில் பேச வேண்டும் என்பதற்காக சுவாமிஜியை ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்று அங்கே அவருடன் பேசினார் சட்டம்பி சுவாமிகள். பிறகு பேச்சு சின்முத்திரையைப் பற்றி திரும்பியது. 'சின்முத்திரையின் பொருள் என்ன? என்று கேட்டார் சுவாமிஜி. சட்டம்பி சுவாமிகள் தமிழ் நூர்களை நன்கு கற்றவர். எனவே சின் முத்திரைக்கு அற்புதமான விளக்கம் அளித்தார். சுவாமிஜி மிகவும் மகிழ்ந்து. அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு, 'மிகவும் நல்லது' என்று இந்தியில் கூறினார்.
சுவாமிஜியின் குரலால் மிகவும் கவரப்பட்டார் சட்டம்பி சுவாமிகள். தங்கக் குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்றது அவரது குரல்! ஓ, என்ன இனிமை!' என்பார் அவர். சுவாமிஜியின் கண்களையும் வெகுவாகப் புகழ்ந்தார் அவர். சட்டம்பி சுவாமிகளும் அவரது மாணவரான நாராயண குருவும் சவாமிஜியி‘யை மிகவும் போற்றிப் பாராட்டினர். 'சுவாமிஜி பறவைகளின் அரசனாகிய கருடன் என்றால் நான் வெறும் ஒரு கொசு' என்றார் சட்டம்பி சுவாமிகள். ஆனால் சுவாமிஜி அசைவ உணவு சாப்பிடுவதை மட்டும் அவர்களார் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. 'அந்த ஒரு குறை மட்டும் இல்லையென்றால் அவர் ஒரு தெய்வீக மனிதர்தான்' என்பாராம் சட்டம்பி சுவாமிகள். சுவாமிஜியும் சட்டம்பி சுவாமிகளால் மிகவும் கவரப்பட்டார். 'நான் ஓர் உண்மையான மனிதரைக் கேரளத்தில் சந்தித்தேன் ' என்று தமது குறிப்பில் எழுதினார் அவர்.
-
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்
-
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment