Sunday, 20 November 2016

வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-31

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-31
-
ஸ்ரீராமர் அனுப்பிய உணவு!
--
கோடைக்காலத்தில் ஒரு முறை சுவாமிஜி உத்தரப் பிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் பயணம் செய்தான் வியாபாரி ஒருவன். சுவாமிஜியிடம் பணமோ வேறு எந்த வசதியுயோ இல்லை என்பதைக் கண்ட அவன் அவரை ஏளனத்துடன் பார்ப்பதும் கேலி செய்வதுமாக இருந்தான். ஒவ்வொரு நிலையத்தில் ரயில் நிற்கும் போதும் நன்றாகச் சாப்பிட்டான். தவறாமல் சுவாமிஜியைக் கேலி செய்தான். கடைசியாக தாரிகாட் என்ற இடம் வந்தது. அது மதிய வேளை. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. நல்ல பசியும் தாகமும் சுவாமிஜியை வாட்டின. சுவாமிஜியிடம் ஒரு கமண்டலம் கூட இல்லை. ரயில் நிலையத்திலுள்ள கூரையின் கீழ் அமரச் சென்றார். சுமை தூக்கும் தொழிலாளி ஒருவன் அங்கே அவருக்கு இடம் தர மறுத்து விட்டான். எனவே அவர் வெயிலில் தரையில் அமர்ந்தார்.
அங்கும் அந்த வியாபாரி வந்து அவர் காணும்படி நல்ல இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான். உணவு வரவழைத்து அவருக்கு முன்னாலேயே சாப்பிட்டான். இத்துடன் நில்லாமல் சுவாமிஜியிடம், 'ஏய் சன்னியாசி! பணத்தைத் துறந்ததால் வந்த கஷ்டத்தைப் பார்த்தாயா? சாப்பிடவோ தாகத்தைத் தீர்த்துக் கொள்ளவோ உனக்கு வழியில்லை. என்னைப்போல் நீயும் ஏன் சம்பாதிக்கக் கூடாது? நன்றாகச் சம்பாதித்தால் வேண்டுமட்டும் அனுபவிக்கலாமே!' என்று வம்பு பேசினான்.
திடீரென்று காட்சி மாறியது! அங்கே வந்தான் ஒருவன். அவனது கையில் ஒரு பொட்டலம். தண்ணீர், டம்பளர், இருக்கை போன்றவை இருந்தன. இருக்கையை ஒரு நிழலில் விரித்துவிட்டு நேராக அவன் சுவாமிஜியிடம் வந்தான். 'சுவாமிஜி, நான் உங்களுக்காக உணவு கொண்டு வந்திருக்கிறேன். வாருங்கள்' என்று அழைத்தான். சுவாமிஜி இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
வந்தவன் மீண்டும் சுவாமிஜியிடம், 'சுவாமிஜி, வாருங்கள் சீக்கிரம் வந்து சாப்பிடுங்க' என்றான்.
சுவாமிஜி: 'இதோ பாரப்பா, என்னை நீ வேறு யார் என்றோ தவறுதலாக நினைத்து அழைக்கிறாய். நான் உன்னைப் பார்த்ததுகூட இல்லை.'
வந்தவன்: 'இல்லை சுவாமிஜி, நான் கண்ட துறவி நீங்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லையே!'
சுவாமிஜி (வியப்புடன்): 'நீ என்னைக் கண்டாயா? எங்கு கண்டாய்?'
வந்தவன்: ' நான் இனிப்புக் கடை வைத்திருக்கிறேன். மதிய உணவிற்குப் பிறகு வழக்கம் போல் சற்று கண்ணயர்ந்தேன். அப்போது ஸ்ரீராமர் என் கனவில் தோன்றினார். உங்களைக் காண்பித்து, "இதோ என் மகன் இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருக்கிறான். உடனே எழுந்து பூரி, இனிப்பு எல்லாம் எடுத்துக் கொண்டு ரயில்நிலையத்திற்குப் போ" என்றார். நான் விருட்டென்று எழுந்தேன். அப்போது தான் அது கனவு என்பது புரிந்தது. எனவே அதனை ஒதுக்கித் தள்ளிவிட்டு மீண்டும் படுத்துத் தூங்கினேன். ஸ்ரீராமர் மீண்டும் வந்து என்னை உலுக்கி எழுப்பினார். அதன்பிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அவர் கூறியதுபோல் அனைத்தையும் தயாரித்து எடுத்துக் கொண்டு வந்தேன். நான் கனவில் கண்ட அதே நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். தொலைவிலிருந்தே உங்களை நான் கண்டு கொண்டேன். வாருங்கள், மிகவும் பசியாக இருப்பீர்கள். எல்லாம் ஆறிப்போகுமுன் சாப்பிடுங்கள்.'
இவை அனைத்தையும் கண்டு கொண்டிருந்தான் வியாபாரி. சாட்சாத் ஸ்ரீராமரே வந்து உணவு அனுப்பியிருக்கிறார் என்றால் அவர் எத்தகைய உயர்ந்த மகானாக இருப்பார் என்பதை எண்ணிப் பார்த்த அவனார் அதன்பிறகு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. உடனே எழுந்து ஓமோடி வந்து சுவாமிஜியின் திருப்பாதங்களில் கூழ்ந்து மன்னிப்பு கேட்டான். சுவாமிஜி மௌனமாக அவனை ஆசீர்வதித்துவிட்டு சாப்பிடச் சென்றார்.
--
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment