Sunday, 27 November 2016

பொன்மொழிகள் .பகுதி-50

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-50
-
இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை .
-
வலிமை நிறைந்த ஒரு களஞ்சியமாக உன்னை உருவாக்கிக் கொள். முதலில் உலக மக்களின் துன்பங்களைக் குறித்து நீ வருந்து..... வெறுப்பு உணர்ச்சியாலோ, பொறாமையாலோ, உன்னுடைய மனம் அலைக்கழிக்கப்படாமல் இருக்கிறதா என்று உன்னையே நீ கேட்டுக்கொள். உலகின் மீது வெறுப்புணர்ச்சி, கோபம் ஆகியவை அடுக்கடுக்காகச் சுமத்தப்பட்டு வருகின்றன. அது காரணமாக நல்ல காரியங்கள் தொடர்ந்து பலகாலமாக நிறைவேற்றப்படாமற் போயிருக்கின்றன. மாறாகத் தீமையே விளைவிக்கப்பட்டிருக்கிறது.
-
நீ தூய்மை உள்ளவனாக இருந்தால் வலிமை உள்ளவனாக இருந்தால் நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாவாய்.
-
.மற்றவர்களுடைய நன்மைக்காக என்னுடைய இந்த வாழ்க்கை அழிந்து போகிற அந்த நாளும் வருமா? இந்த உலகம் வெறும் குழந்தை விளையாட்டு அல்ல மற்றவர்களின் நன்மைக்காகத் தங்களுடைய இதயத்தின் இரத்தத்தைச் சிந்தி, பாதை அமைப்பவர்கள்தாம் பெரியோர்கள் ஆவார்கள். ஒருவர் தமது உடலைத் தந்து பாலம் ஒன்றை அமைக்கிறார். அந்தப் பாலத்தின் உதவியால் பல்லாயிரக் கணக்கான மக்கள் அந்த ஆற்றைக் கடந்துவிடுகிறார்கள். இப்படி நீண்ட நெடுங்காலமாக நடந்துகொண்டு வந்திருக்கிறது. இந்த முறை அப்படியே இருக்கட்டும் அப்படியே இன்றைக்கும் இருக்கட்டும்.
--
. சுயநலம் சுயநலமின்மை என்பவற்றைத் தவிரக் கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. கடவுளுக்குத் தெரிந்த அளவுக்குச் சாத்தானுக்கும் எல்லாம் தெரியும், கடவுளுக்குச் சமமான ஆற்றல்கள் சாத்தானுக்கு உண்டு. ஆனால் தெய்விகத் தன்மை மட்டும்தான் அதனிடம் இல்லை. எனவே அது சாத்தானாகவே இருக்கிறது.
இந்தக் கருத்தை நவீன உலகத்தோடு ஒப்பிட்டுப் பார். தெய்விகத் தன்மை இல்லாமல் பெறுகிற மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைச் சாத்தான்களாக்கி விடுகின்றன.
-
.சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து தங்கத்தாலான அரண்மனையில் வாழ்ந்தபோதும் அறவே சுயநலம் இல்லா தவனாக இருக்கலாம். அப்போது அவன் கடவுளிடமே இருக்கிறான். மற்றொருவன் குடிசையில் வாழ்ந்து கந்தைத் துணியை உடுத்துபவனாக இருக்கலாம் . அவனுக்கு உலகின் செல்வம் எதுவுமே இல்லாமலிருக்கலாம். அப்படி இருந்தும் அவன் சுயநலம் உடையவனாக இருந்தால் அவன் இலௌகிகத்தில் ஒரேடியாக மூழ்கியவனே ஆவான்.
-
.இரசாயனமும் இயற்கை விஞ்ஞானமும் எப்படி இந்தப் பௌதிக உலகம் பற்றிய உண்மைகளைக் கையாள்கின்றனவோ, அதைப் போலவே மதம் அரிய தத்துவ உண்மைகளைக் கையாள்கிறது. ஒருவன் இரசாயனத்தைக் கற்க இயற்கை என்னும் புத்தகத்தைப் படிக்க வேண்டும். உன்னுடைய மனம், இதயம் ஆகியவைதாம் மதத்தைக் கற்பதற்கு நீ படிக்க வேண்டிய நூல்களாகும்.
-
ஞானி பெரும்பாலும் பௌதிக விஞ்ஞானம் பற்றித் தெரியாதவராக இருக்கிறார். ஏனென்றால், அவர் தமக்குள் இருக்கும் புத்தகத்தைப் படிக்ககிறார். அது பௌதிக விஞ்ஞானத்தைத் தெரிந்து கொள்வதற்குத் தவறான புத்தகமாகும்.
-
விஞ்ஞானியுங்கூடப் பெரும்பாலும் மதத்தைப் பற்றித் தெரியாதவராக இருக்கிறார். ஏனென்றால் அவருங்கூடத் தவறான புத்தகத்தையே படிக்கிறார்; அதாவது அவர் தமக்கு வெளியே உள்ள புத்தகத்தைப் படிக்கிறார்.
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment