வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-32




 சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-32
-
சுவாமிஜி காட்டிய ஆன்மிகம்: பகுத்தறிவைப் பயன்படுத்துவாய்!
--
சுவாமிஜியுடன் சக பயணியாக ஒருசமயம் வந்து கொண்டிருந்தார் ஒருவர். அவர் நன்கு படித்திருந்தார். உலக விஷயங்கள் தெரிந்தவராகவும் புத்திக் கூர்மை உடையவராகவும் காணப்பட்டார். ஆனால் அற்புதங்களைப் பெரிதும் நம்புபவராக இருந்தார். சுவாமிஜி தாம் இமயமலையில் வாழ்ந்திருப்பது பற்றி கூறியதும் அவர், சுவாமிஜி அங்கே சித்தர் கணங்களைச் சந்தித்தீர்களா? என்று கேட்டார். அந்த மனிதர் எதுவரை போகிறார் என்பதைப் பார்க்க விரும்பிய சுவாமிஜி நிகழாத பல அற்புதங்களைத் தாராளமாக அவிழ்த்து விட்டார். மகாத்மாக்களான சித்தரக்ள் தம்மிடம் வந்ததாகவும், உலகின் முடிவைப் பற்றி தம்மிடம் தெரிவித்ததாகவும் கூறினார். இந்த யுகம் எப்போது முடியப் போகிறது, எப்போது பிரளயம் நிகழும் அடுத்த யுகம் பிறக்கும்போது எந்தெந்த சித்தர்கள் யார் யாராகப் பிறந்து எப்படி எப்படி மனித குலத்தை வழிநடத்தப் போகிறார்கள் என்றெல்லாம் சுவாமிஜி அளந்தார். அந்த சக பயணி பூரண நம்பிக்கையுடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு இவ்வளவு தூரம் தனக்கு உண்மைகளை உணர்த்திய சுவாமிஜியை நன்றியுடன் உணவருந்த அழைத்தார்.
அப்போதெல்லாம் சுவாமிஜி கையில் பணம் வைத்துக் கொள்வதில்லை. யாரேனும் டிக்கட் வாங்கிக் கொடுத்தால் அதை மட்டும் ஏற்றுக் கொண்டு பயணம் செய்வார். மற்றபடி, உணவு, உடை, இருக்கை இவை ஆண்டவன் விட்ட வழியாகட்டும் என்று இருந்து வந்தார். அன்று அந்த மனிதர் அளித்த உணவை ஏற்றுக் கொண்டார். பிறகு ஒரு கணம் அவரை அமைதியாகப் பார்த்தார். அந்த மனிதர் அறிவுக் கூர்மை, இதயம் இரண்டையும் பெற்றிருந்தார். ஆனால், இரண்டையும் கெடுத்தது அவருடைய மூட நம்பிக்கை. அவருக்கு உண்மையை விளக்க விரும்பிய சுவாமிஜி அன்புடன் அவரிடம் கூறினார்....
இவ்வளவு படிப்பும் அறிவும் உள்ள நீர், நான் கூறிய இந்தக் கற்பனைக் கதைகளை எல்லாம் நம்புகிறீரே! நண்பரே, நீர் புத்திசாலி. உம்மைப் போன்றவர்கள் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டாமா? ஆன்மீகம் என்பது அற்புதமும், சித்து விளையாட்டுகளும் அல்ல நண்பரே. இவற்றில் நாட்டம் இருக்கும் வரை ஒருவன் ஆசைகளுக்கு அடிமையாகவும் சுயநலவாதியாகவும்தான் இருப்பான். நற்பண்பு நன்னடத்தை ஆகியவற்றில்தான் உண்மையான சக்தி இருக்கிறது. அந்த சக்தியைப் பெறுவதே ஆன்மீகம். வேகங்களையும் ஆசைகளையும் வெல்வதுதான் ஆன்மிகம். வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீர்க்க உதவாத சித்து விளையாட்டுக்களைத் துரத்திச் செல்வது நமது ஆற்றலை விரயம் செய்வதே தவிர வேறில்லை. அது மனத்தைக் கெடுக்கும். இந்த அபத்தம்தான் இன்று நாட்டின் நெறியைக் குலைத்து வருகிறது. நம்மை மனிதனாகச் செய்வதற்கான வலு வாய்ந்த பகுத்தறிவையும் பொது நல உணர்ச்சியையும் தருகின்ற தத்துவமும் சமயமுமே இன்றைய தேவை... என்றார் சுவாமிஜி.
--
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்






Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?