Thursday, 17 November 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -49

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -49
-- 
சுவாமிஜியின் ஊர்வலம் சிந்தாதிரிப்பேட்டை, நேப்பியர் பார்க், மௌண்ட் ரோடு, வாலாஜா ரோடு, சேப்பாக்கம், பைக்ராப்ட்ஸ் ரோடு, கடற்கரை சாலை வழியாகச் சென்றது. சிந்தாதிரிப்பேட்டையிலும் வேறு பல இடங்களிலும் பெண்கள் சுவாமிஜிக்கு கற்பூர ஆரதி காட்டினர். தெய்வ விக்கிரகங்களை வீதி உலாவிற்காக வெளியே கொண்டு செல்லும் போது என்னென்ன மரியாதைகளும் வழிபாடுகளும் செய்யப்படுமோ அத்தனையும் சுவாமிஜிக்குச் செய்யப்பட்டது.
ஊர்வலம் சேப்பாக்கத்தை அடைந்த போது பஜனைக் குழு ஒன்று இணைந்து கொண்டது. அங்கே ராஜா ஈஸ்வரதாஸ் பகதூர் எழுப்பிய அழகிய அலங்கார வளைவு ஒன்று இருந்தது. ஊர்வலம் அதைக் கடந்தபோது பான்ட் குழு ஒன்று சேர்ந்து கொண்டது. கேஸில் கெர்னன் வரை இந்தக் குழு வாத்தியக் கருவிகளை இசைத்தபடி வந்தது.
கடைசியாக ஊர்வலம் கடற்கரைச் சாலையை அடைந்தது. அங்கும் ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் இணைந்தார்கள். இவர்களில் மாணவர்கள் மிக அதிகமாக இருந்தார்கள். இந்த மாணவர்கள், சுவாமிஜி எவ்வளவோ தடுத்தும், குதிரைகளை அவிழ்த்துவிட்டுவிட்டு, தாங்களே சுவாமிஜியின் வண்டியை இழுக்க ஆரம்பித்தார்கள். கேஸில் கெர்னன் வர மாணவர்களே இழுத்தார்கள். அற்புதக் காட்சி அல்லவா அது.
-
சுவாமிஜி சென்னையில் ஒன்பது நாட்கள் தங்கினார். அது சென்னை மக்களுக்கு ஒரு நவராத்திரிதான். ஒவ்வொரு நாளும் சுவாமிஜியின் சொற்பொழிவு, பேட்டி என்று கேஸில் கெர்னன் ஓர் ஆனந்தச் சந்தையாக மாறிவிட்டிருந்தது. அந்தத் தெய்வ மனிதருடன் வாழும் பேற்றைப் பெற்ற ஒவ்வொருவரும் ஆனந்தத்தில் மிதந்தார்கள். குறிப்பிட்ட சிலநேரம்தான் சுவாமிஜியைச் சந்திக்க இயலும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நடந்தது வேறு. காலையிலிருந்து மதாலை வரை, அதுபோல் இரவிலும் தொடர்ந்து ஆண்களும் பெண்களும் வந்து சுவாமிஜியைத் தரிசித்த வண்ணம் இருந்தனர். சுவாமிஜி திருஞான சம்பந்தரின் அவதாரம் என்ற கருத்து வேறு பரவத் தொடங்கியதால் கூட்டம் இன்றும் அதிகமாயிற்று.
தினமும் பல பெண்கள் வந்து சுவாமிஜியின் திருப்பாதங்களில் மலரிட்டு வழிபட்டனர். திருப்பதியிலிருந்து வந்த முதியவர் ஒருவர் சுவாமிஜியின் பாதங்களில் பணிந்து, மலர் மாலைகள் அணிவித்து, 'நீங்கள் வைகானஸரின் அவதாரமே' என்று கூறி, கண்களில் கண்ணீருடன் விடை பெற்றார்.
வந்தவர்கள்அனைவரும் சுவாமிஜியை வரவேற்பதற்கும் வழிபடுவதற்கும் மட்டுமே வந்தார்கள் என்பதில்லை. அவருடன் வாதிட்டு, அவரைத் தங்கள் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று சிலர்; அவரது அறிவுத் திறமையைச் சோதிப்பதற்காகச் சிலர்; அவரையே சோதிப்பதற்காகச் சிலர் என்று பலதரப்பட்டவர்கள் அங்கே கூடினர். இவை ஒன்றும் சுவாமிஜிக்குப் புதியவை அல்ல. எல்லா சூழ்நிலைகளையும் அதற்கேற்ப எதிர்கொண்டு, வெற்றி வீரராகத் திகழ்ந்தார் சுவாமிஜி.
சுவாமிஜிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு!
பிப்ரவரி 8ம் தேதி அன்று அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த நாள். அன்றுதான் மாலை 4.30 மணிக்கு சுவாமிஜிக்கு விக்டோரியா ஹாலில் பொது வரவேற்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விக்டோரியா ஹாலின் அருகில், செல்லும் வழிகளில், ரோட்டில் என்று கூட்டம் அலை மோதியது. சுவாமிஜி வந்து சேரும் முன்னரே ஹால் நிரம்பி வழிந்தது. குறைந்தது பத்தாயிரம் பேராவது வெளியில் நின்றார்கள். சுவாமிஜி வந்து சேரும் முன்னரே ஹால் நிரம்பி வழிந்தது. குறைந்தது பத்தாயிரம் பேராவது வெளியில் நின்றார்கள். சுவாமிஜி கூட்டத்தில் மிகவும் சிரமப்பட்டே மேடையை அடைய முடிந்தது. பிரமுகர்கள் பலர் ஏற்கனவே மேடையில் அமர்ந்திருந்தனர். சென்னை வரவேற்புக் குழு, வைதீக வித்வத் கதாபிரசங்க சபா, சென்னை சமூக சீர்திருத்த சங்கம் ஆகியவை வரவேற்புரைகளை அளித்தன. கேத்ரி மன்னர் அனுப்பிய வரவேற்புரை படிக்கப்பட்டது. இவை தவிர சம்ஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இருபது வரவேற்புரைகள் படிக்கப்பட்டன.
இதற்குள் வெளியில் நின்றிருந்த கூட்டம் கட்டுக்கடங்காததாக ஆகியது. சுவாமிஜி வந்து திறந்த வெளியில் பேச வேண்டும் என்று குரல்கள் எழத் தொடங்கின. அதன்பிறகு சுவாமிஜியால் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. அங்கிருந்து விருட்டென்று எழுந்து, 'நான் மக்களுக்காக வந்தவன். வெளியில் இருப்போரையும் சந்தித்தாக வேண்டும்' என்று கூறிவிட்டு வெளியில் வந்தார். அவருக்காகக் காத்திருந்த 'கோச்' வண்டியின் மீது ஏறி நின்றார். அங்கே பெரும் திரளாகக் கூடியிருந்த மக்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. அந்தக் கூட்டத்தில்பேச வேண்டும், அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். என்று பேச ஆரம்பித்தார்.
'நாம் ஒன்று நினைக்கிறோம், தெய்வம் மற்றொன்று நினைக்கிறது. இந்த வரவேற்பும் சொற்பொழிவும் ஆங்கில முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடவுளோ அதனை வேறு வகையில் நடத்தத் திருவுள்ளம் கொண்டுள்ளார் சிதறிக் கிடக்கின்ற இந்த மக்கள் கூட்டத்தில் இதோ இந்த ரதத்திலிருந்து கீதை பாணியின் பேசுகிறேன்.' என்று தொடங்கி சில நிமிடங்கள் பேசியிருப்பார். அதற்குள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போயிற்று. எனவே உங்கள் மீது வருத்தம் எல்லையற்ற திருப்தியையே அளிக்கிறது. அளவு கடந்த இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள், நண்பர்களே இப்போதைக்கு விடைபெற்றுக் கொள்கிறேன். நீங்கள் எல்லோரும் கேட்கக்கூடிய வகையில் பேச முடியாது. எனவே இன்றைக்கு என்னைப் பார்த்தவரையில் திருப்தியடையுங்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் சொற்பொழிவு நிகழ்த்துவேன். உற்சாகம் மிக்க உங்கள் வரவேற்புக்கு நன்றி' என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.
--
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment