Sunday, 27 November 2016

பொன்மொழிகள் .பகுதி-53

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-53
--
எனது அருமைக் குழந்தைகளே! முன்னேறிச் செல்லுங்கள். பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது. இந்தியா மட்டும் அத்தகைய ஒளியைப் பெற்றிருக்கிறது. ஜால வித்தையிலே இந்தியா அந்த விளக்கைப் பெற்றிருக்கவில்லை. போலித் தன்மை யினாலும் அந்த விளக்கைப் பெற்றிருக்க வில்லை. ஆனால் உண்மையான மதத்தின் தலைசிறந்த சமய போதனையாகவும் மிகவும் உயர்ந்த ஆன்மிக உண்மையாகவும் அந்த விளக்கை இந்தியா பெற்றிருக்கிறது. ஆகையால் தான் பலவிதமான இன்ப துன்பங்களில் இருந்தும் இன்று வரையிலும் கடவுள் இந்தியாவைப் பாதுகாத்து வைத்திருக்கிறார், இப்போது அதற்கு உரிய சரியான நேரம் வந்து விட்டது.
எனது வீரக் குழந்தைகளே, நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்துநின்று வேலை செய்யுங்கள்.
-
. மிருகபலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக அமைதி அன்பு ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும் ..... புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்து விட்டாள். தனது அரியணையிலே அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள் இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போலத் தெளிவாக நான் பார்க்கிறேன் அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்.
-
. கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும்! மீனவர்கள், சக்கிலியர்கள் தோட்டிகள் ஆகியவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழட்டும் ! பல சரக்குக் கடைகள் பலகாரக் கடைகளிலிருந்து அவள் தோன்றட்டும் தொழிற்சாலைகள் கடைவீதிகள் சந்தை ஆகியவற்றிலிருந்தெல்லாம் புதிய இந்தியா எழுந்து வெளிவரட்டும்!
-
. பாமர மக்களைப் புறக்கணித்து ஒதுக்கியதுதான் நமது நாடு செய்த பெரும்பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் பாமர மக்களுக்குச் சிறந்த கல்வியையும் நல்ல உணவு வசதிகளையும் கொடுத்து, அவர்களை நன்றாகக் கவனிக்க வேண்டும். அந்தப் பாமர மக்கள் தாம்நம்முடைய கல்விக்கு வரியாகப் பணம் தருகிறார்கள் அவர்களே நமது கோயில்களையும் கட்டு கிறார்கள். ஆனால் அவற்றுக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைப்பதோ வெறும் உதைகள்தான் நடைமுறையில் அவர்கள் நம் அடிமைகளாகவே இருக்கின்றனர் இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால் இந்தப் பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.
-
. செய்துமுடிக்கப்பட வேண்டிய பணிகள் மிகவும் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவற்றை நிறைவேற்றி முடிப்பதற்கான வசதிகளோ இந்த நாட்டில் இல்லை. நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் பணி புரிவதற்கான கைகள்தாம் இல்லை . நம்மிடம் வேதாந்தக் கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய ஆற்றல் இல்லை. நமது நூல்களில் உலக சமத்துவம் பற்றிய கொள்கை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையிலோ நாம் பெருமளவுக்கு வேற்றுமை பாராட்டுகிறோம். இதே இந்தியாவில்தான் மிகவும் உயர்ந்த சுயநல மற்ற பயன் கருதாத பணியைக் குறித்த உண்மைகள் போதிக்கப்பட்டன; ஆனால் நடைமுறையில் நாம் மிகவும் கொடூர மானவர்கள்; இதயம் இல்லாதவர்கள். நமது சதைப்பிண்டமாகிய உடலை தவிர வேறு எதைப்பற்றியுமே நினைக்க முடியாதவர்கள்.
-
செல்வச் செழிப்பை இழந்து அதிர்ஷ்டத்தை இழந்து, பகுத்தறிவையும் அறவே இழந்து நசுக்கப்பட்டு என்றைக்கும் பட்டினியால் வாடியபடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டவர்களாகவும் பொருமை கொண்டவர்களாகவும் உள்ள இந்த இந்திய நாட்டு மக்களை யாரேனும் ஒருவர் மனப்பூர்வமாக நேசித்தால் இந்தியா மீண்டும் விழித்துக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.
-
எப்போது பரந்த இதயம் படைத்த நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் வாழ்க்கையின் ஆடம்பரங்களையும் எல்லா இன்பங்களையும் துறந்துவிட்டு ஆதரவற்ற நிலை அறியாமை ஆகிய நீர்ச்சுழலில் சிறிது சிறிதாக மிகக் கீழ் நிலைக்கு மூழ்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டு கோடானுகோடி மக்களின் நல்வாழ்விற்காக வருந்தித் தங்களின் முழு ஆற்றலையும் செலுத்தி உழைக்க முன்வருவார்களோ அப்போதுதான் இந்தியா விழித்தெழும்.
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment