Friday, 13 January 2017

சுவாமி விவேகானந்தரும் அவரது குரு-ஸ்ரீராமகிருஷ்ணரும்-பாகம்-7


சுவாமி விவேகானந்தரும் அவரது குரு-ஸ்ரீராமகிருஷ்ணரும்-பாகம்-7
-
கதாதரன் பல மாதங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு செல்ல தொடங்கினான்.
அந்த காலத்தில் ஒரிசாவிலுள்ள புரி திருத்தலத்திற்கு செல்பவர்கள் காமர்புகூர் வழியாக செல்வது வழக்கம். அவ்வாறு செல்பவர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்கு வசதியாக தென்கிழக்கு கோடியில் சத்திரம் ஒன்றை கட்டிவைத்திருந்தார்கள். சாதுக்களும், பக்தர்களும் அந்த சத்திரத்தில் தங்குவது வழக்கம். அங்கு தங்கியிருக்கும் நாட்களில் உணவுக்காக கிராமத்திலுள்ள பல வீடுகளுக்கு செல்வார்கள்.
சாதுக்களை காணும்போது கதாதரனின் உள்ளத்தில் இனம்புரியாத உணர்ச்சிகள் கிளர்ந்து எழும். உலக வாழ்வு நிலையற்றது என்பதை அறிந்து, அதனை துறந்து, இறைவனை சரண்புகுந்து வாழ்பவர்கள் இந்த பெருமக்கள் என்கின்ற எண்ணம் அவனது இளமனத்தை சிந்தனையில் ஆழ்த்தும்.
காலையிலும் மாலையிலும் துனி எனப்படும் தீ மூட்டி, அதனை சுற்றி அமர்ந்துகொண்டு தியானத்தில் மூழ்கியிருப்பதை காணும் போது, கதாதரனுக்கும் இவர்களைப்போல ஆகவேண்டும் என்ற எண்ணம் வரும்.
அங்கே வரும் துறவிகளுடன் மக்கள் பழகுவதில்லை, எங்கே தங்களையும் துறவிகளாக மாற்றிவிடுவார்களோ என்ற பயம் தான் காரணம். ஆனால் கதாதரன் அவர்களோடு பழக ஆரம்பித்தான். அவர்களுக்கு தண்ணீர் கொண்டு கொடுப்பது, சுள்ளிகளை பொறுக்கிக்கொடுப்பது, அவர்கள் பிச்சையாக பெற்றுவரும் உணவை உண்டு மகிழ்வது, அவர்கள் வளர்க்கும் நெருப்பின் அருகில் அமர்ந்து தியானம் செய்வது, அவர்கள் கூறும் கதைகளை கேட்டு மகிழ்வது என்று அவனது நேரம் பெரும்பாலும் அங்கேயே கழிய ஆரம்பித்தது.
கதாதரனுக்கு அப்போது எட்டுவயது ஆகியிருந்தது. அவன் துறவிகளுடன் பழகுவதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் வெகுநேரம் அவர்களுடன் செலவிட்டதை கண்ட பலரும் அதை தாய்சந்திராவிடம் எடுத்து சொன்னார்கள். அந்த துறவிகள் செல்லும்போது கதாதரனை அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள் என்று பயமுறுத்தினர்.
அவர்கள் பயந்ததுபோலவே ஒரு நாள் கதாதரன் துறவிகள் கட்டிக்கொள்ளும் கோவணத்தை கட்டிக்கொண்டு தாயின் முன்னால் வந்து நின்றான்.
இது சந்திராவை மிகவும் பாதித்தது. இந்த துறவிகள் தன்மகனது மனதை மயக்கி, இங்கிருந்து அழைத்து சென்றுவிடுவார்கள் என்று பயந்தான். எனவே இனி துறவிகளை சந்திக்க செல்லக்கூடாது என்று கண்டிப்புடன் கூறினாள்.
கதாதரனை காணாத துறவிகள், அவனை பார்க்க வீட்டிற்கு வந்தார்கள். அம்மா உங்கள் மகளை நாங்கள் எங்கேயும் அழைத்து செல்ல மாட்டோம், அவனை காண்பதாலும், அவனுடன் பேசுவதாலும் எங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவனுக்கு கெடுதல்விளைவிக்கும் வகையில் நாங்கள் நடந்துகொள்ள மாட்டோம் என உறுதியளித்தனர். அதன்பிறகே சந்திரா கதாதரனை அங்கு செல்ல அனுமதித்தாள்.
--
தொடரும்....
--

No comments:

Post a Comment