கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-10
(சுவாமி விவேகானந்தர்)
-
செயல்புரிய மட்டுமே நமக்கு உரிமைஉண்டு அதன் பலன்களில் அல்ல. பலன்களை அவற்றின் போக்கில் விட்டுவிடுங்கள். விளைவுகளைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?
-
ஒருவனுக்கு நீங்கள் உதவ விரும்பினால், அவன் உங்களிடம் எப்படி நடந்துகொள்வான் என்பதைப் பற்றியெல்லாம் நினைக்காதீர்கள்.
-
நீங்கள் மகத்தான ஒரு செயலை அல்லது நல்ல ஒரு செயலைச் செய்ய விரும்பினால் அதன் பலன் என்னவாக இருக்கும் என்பதை எண்ணி உங்களைக் குழப்பிக் கொள்ளாதீர்கள்
-
செயல்புரிதல் என்ற இந்த லட்சியத்தில் கடினமான கேள்வி ஒன்று எழுகிறது.
-
இடைவிடாது செயல்புரிதல் முக்கியம். நாம் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும், வேலை செய்யாமல் ஒரு நிமிடம்கூட நம்மால் உயிர் வாழ முடியாது. அப்படியானால் ஓய்வு என்பது எங்கே?
-
வாழ்க்கைப் போராட்டத்தின் வேலை என்ற சுழலில் சிக்கி ,வேகவேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றோம். மற்றொரு புறம் அமைதியான, அனைத்திலிருந்தும் விடுபட்ட துறவு, சுற்றியுள்ள எல்லாமே அமைதி மயம். ஓசைகள் என்று எதுவுமே இல்லையென்று சொல்லிவிடலாம். தன் விலங்குகள், மலர்கள் மலைகள் இவற்றோடு இயற்கை மட்டுமே உள்ளது.
-
ஆனால் இந்த இரண்டு காட்சிகளுமே முழுமை பெற்றவை அல்ல. ஏகாந்தத்தில் பழக்கப்பட்ட ஒருவனை அலைச்சல்மயமான உலக வாழ்க்கையில் கொண்டு வந்தால் அப்படியே நசுங்கிப் போவான்.
-
கடலின் அடி ஆழங்களில் வாழும் மீன், மேற்பரப்பிற்குக் கொண்டுவரப் பட்டால், நீரின் அழுத்தத்தால் இதுவரை ஒன்றாக இருந்த அதன் உடல் உறுப்புகள், இப்பொழுது அந்த நீரின் அழுத்தம் இல்லாத காரணத்தால் சிதறுண்டு போகும்.
-
அதுபோல் அலைச்சலும் ஆரவாரமுமான வாழ்க்கைக்குப் பழகிவிட்ட ஒருவன் அமைதியான இடத்தில் நிம்மதியாக வாழ முடியுமா? அவன் மிகுந்த வேதனைக்குள்ளாகிறான். ஒருவேளை அவனது மனநிலைகூடப் பாதிக்கப்படலாம்.
-
ஆனால் ஆழ்ந்த அமைதியிலும் ஏகாந்தத்திலும் இடையீடற்ற செயல்களைக் காண்பவனும், இடையீடற்ற செயல்களிடையே பாலைவனத்தின் அமைதியையும் ஏகாந்தத்தையும் காண்பவனுமான ஒருவனே லட்சிய மனிதன். அவன் சுயக்கட்டுப்பாட்டின் ரகசியத்தைக் கற்று விட்டான்.
-
-
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்-
No comments:
Post a Comment