கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-11
(சுவாமி விவேகானந்தர்)
-
பெருநகரின் ஆரவாரமும் நடமாட்டமும் மிக்க தெருவின் வழியே போய்க்கொண்டிருந்தாலும், எந்த ஓசையும் உட்புகாத, ஒரு குகைக்குள் அமர்ந்து கொண்டிருப்பது போன்ற பேரமைதியில் அவனது மனம் ஆழ்ந்திருக்கும். அதன் ஊடே அவன் இடையீடற்ற செயலிலும் ஈடுபட்டிருப்பான். இதுதான் கர்மயோக லட்சியம்.
-
இதனை நீங்கள் அடைந்து விட்டீர்கள் என்றால் கர்மத்தின் ரகசியத்தை உண்மையில் அறிந்துவிட்டீர்கள்.
-
ஆனால் நாம் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். நம்மிடம் வருகின்ற வேலைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, நாள்தோறும் படிப்படியாக நம்மை மேன்மேலும் சுயநலமற்றவர்களாக மாற்றிக்கொண்டே வர வேண்டும்.
-
வேலை செய்ய வேண்டும், கூடவே, எந்த நோக்கம் நம்மை அந்த வேலையில் ஈடுபடத் தூண்டுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
-
விதிவிலக்கின்றி நமது நோக்கங்கள் சுயநலம் நிறைந்ததாகவே இருப்பதை நாம் ஆரம்ப வருடங்களில் காண்போம். விடாப்பிடியான முயற்சியால் இந்தச் சுயநலம் சிறிதுசிறிதாக மறையும். இறுதியில் ஒருநாள் சுயநலம் சிறிதும் இல்லாமல் செயல்புரிகின்ற மன நிலையைப் பெற்றுவிடுவோம்.
-
வாழ்க்கைப் பாதைகளில் போராடியவாறே சென்று கொண்டிருக்கின்ற நாம் முழுக்கமுழுக்கச் சுயநலம் இல்லாதவர்களாகின்ற வேளை என்றாவது ஒருநாள் வரவே செய்யும் என்று நாம் அனைவரும் நம்புவோம்.
-
அதை நாம் அடைகின்ற அந்தக் கணமே நமது ஆற்றல்கள் எல்லாம் ஒருமுகப்படும், நமக்கே உரிய அறிவும் வெளிப்படும்.
-
-
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்-
No comments:
Post a Comment