Friday, 13 January 2017

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-56


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-56
(சுவாமி விவேகானந்தர்)
----
மரம் விதையிலிருந்து தோன்றி, மறுபடியும் விதைக்குள்ளேயே ஒடுங்குகிறது. ஆரம்பமும் முடிவும் ஒன்றாகத்தான் இருக்கின்றன. பூமி அதன் காரணத்திலிருந்து வெளிவந்து அதற்குள்ளேயே ஒடுங்குகிறது.
ஆரம்பம் தெரிந்தால் முடிவும் தெரிந்துவிடும் என்பது நமக்குத்தெரியும். அதேபோல், முடிவு தெரிந்தால் ஆரம்பமும் தெரிந்துவிடும்.
பரிணாமவாதிகள் கூறும் முதல் உயிரணுவிலிருந்து படிப்படியாக பரிணாமமம் அடைந்த முழுமனிதன் வரை உள்ள அத்தனையையும் எடுத்துக்கொள்வோம்
ஒரு முனையில் முதல் உயிரணுவும், மற்றொரு முனையில் நிறைநிலை அடைந்த மனிதனும் உள்ள பரிணாம வளர்ச்சித் தொடரை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்தத் தொடர் முழுவதும் ஒரே உயிர்தான். பரிணாம வளர்ச்சியின் முடிவில் நிறைமனிதன் இருப்பதால், தொடக்கத்திலும் நிறைமனிதன்தான் இருந்திருக்க வேண்டும்.
ஆகவே மிக உயர்ந்த அறிவின் ஒடுக்கமே முதல் உயிரணுவாக இருக்க வேண்டும். நமக்கு அது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த ஒடுங்கிய அறிவு சிறிதுசிறிதாகத் தன்னை விரிவுபடுத்தி, கடைசியில் நிறைமனிதனாக வெளிப்படுத்துகிறது.
இதைக் கணித முறையில் நிரூபிக்க முடியும்.
சக்தியின் அளவு எப்போதும் மாறுவதில்லை .ஒரு சக்திதான் இன்னொரு சக்தியாக மாறுகிறது என்பது நியதி
முதலில் ஓர் எந்திரத்தில் எதையும் செலுத்தாமல் ,அதிலிருந்து எதையும் வெளிக்கொணர முடியாது. நீராவி எந்திரத்திற்குள் நீராகவும் நிலக்கரியாகவும் எவ்வளவு சக்தியைச் செலுத்துகிறோமோ, அதற்கு ஈடான வேலையைத்தான் அதிலிருந்து நாம் பெற முடியுமே தவிர, சிறிதுகூட அதிகமாகவோ குறைவாகவோ பெற முடியாது.
காற்று, உணவு, மற்றும் பல பொருட்கள் மூலமாக என் உடலிற்குள் எவ்வளவு சக்தி சென்றிருக்கிறதோ, அதே அளவு வேலையைத்தான் நான் செய்ய முடியும். ஒரு வகைச் சக்தி, இன்னொரு வகைச் சக்தியாக மாறுதலடைந்து வெளிப்படுகிறது, அவ்வளவுதான்.
இந்தப் பிரபஞ்சத்திற்குள் ஏற்கனவே இருக்கும் சக்திக்கு மேல் சிறிதளவு சக்தியைக்கூடச் சேர்ப்பதோ, இருக்கும் பொருளுக்கு மேல் அணுவளவு பொருளைக்கூடச் சேர்ப்பதோ முடியாது. அல்லது, இருக்கும் பொருளிலிருந்து அணுவளவு பொருளை எடுப்பதோ முடியாத காரியம்.
அப்படியானால் இந்த அறிவு என்பது என்ன?
--
தொடரும்....
--

No comments:

Post a Comment