Tuesday, 3 January 2017

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-38


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-38
(சுவாமி விவேகானந்தர்)
-
இந்தத் தேவர்கள் என்பது என்ன?
-
அவை சில நிலைகள், சில பதவிகள். உதாரணமாக, தேவர்களின் அரசனாகிய இந்திரன் என்பது ஒரு பதவி; மிக உயர்ந்த நிலைக்குச் சென்றுவிட்ட ஓர் ஆன்மா. அது இந்தக் கல்பத்தில் அந்தப் பதவியை நிரப்புகிறது. இந்திரனாக இருந்தவன் இந்தக் கல்பம் முடிந்ததும் பூமியில் மனிதனாகப் பிறக்கிறான். இந்தக் கல்பத்தில் மிகவும் நல்லவனாக இருந்தவன் அடுத்த கல்பத்தில் அந்த இந்திரப் பதவியை நிரப்புகிறான்.
மற்ற தேவர்களின் நிலையும் கதியும் இதுதான். கோடிக்கணக்கான ஆன்மாக்கள் மாறிமாறி நிரப்பிய பதவிகளே இவை. அந்தப் பதவிகளை வகித்தபின் அவர்கள் பூமியில் மனிதர்களாகப் பிறக்கிறார்கள்.
-
சொர்க்கத்தை அடையும் எண்ணத்துடனேயோ, புகழ் பெறுவதற்காகவோ இந்த உலகில் நற்காரியங்கள் செய்பவர்கள் இறந்தபின் அந்த நற்செயல்களுக்கான பலனை அடைவார்கள். அவர்கள் இந்தத் தேவர்கள் ஆவார்கள். ஆனால் இது முக்தியல்ல. பலனை எதிர்பார்த்து வேலை செய்தால் முக்தி கிடைக்காது.
-
மனிதன் எதை விரும்பினாலும் அதைக் கடவுள் கொடுக்கிறார். அவன் அதிகாரத்தை விரும்புகிறான், கவுரவத்தை விரும்புகிறான், தேவர்கள் அனுபவிப்பது போன்ற இன்பங்களை விரும்புகிறான், அவை நிறைவேறவும் செய்கின்றன.
-
ஆனால் எந்தச் செயலானாலும் அதன் பலன் நிரந்தரமானதல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தப் பலன் தீர்ந்துவிடும். தீர்வதற்குப் பல யுகங்கள் ஆகலாம்; ஆனால் அது தீரவே செய்யும். அப்போது தேவர்கள் மறுபடியும் பூமியில் மனிதர்களாகப் பிறந்து, முக்திக்கு வழி தேட மறுபடியும் ஒரு வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.
-
தாழ்ந்த மிருகங்கள் உயர்ந்து, மனிதர்களாகின்றன; பிறகு தேவர்கள் ஆகின்றன. ஒருவேளை மறுபடியும் மனிதர்களாகலாம் அல்லது மிருகங்களாகலாம். இன்பம் அனுபவிக்கும் ஆசையையும், வாழ்க்கை மீதுள்ள மோகத்தையும், நான், எனது என்ற பற்றுக்களைப் பிடித்துக் கொண்டிருக்கும் உடும்புப் பிடியையும் விடும்வரை இப்படியேதான் நடந்து கொண்டிருக்கும்.
-
நான், எனது என்பவைதான் எல்லா தீமைகளுக்கும் மூலகாரணமாகும். ஒரு துவைதியைப் பார்த்து, இந்தக் குழந்தை உன்னுடையதா? என்று கேட்டால், இல்லை, கடவுளுடையது; என் சொத்துக்களெல்லாம் எனக்குச் சொந்தம் அல்ல, கடவுளுக்கே சொந்தம் என்று அவன் சொல்வான். எல்லாவற்றையுமே கடவுளுக்குச் சொந்தமானதாகத்தான் கருத வேண்டும்.
--
தொடரும்....

No comments:

Post a Comment