Tuesday, 3 January 2017

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-41


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-41
(சுவாமி விவேகானந்தர்)
-
வேதாந்தத் தத்துவம் உண்மையில் விசிஷ்டாத்வைதத்திலிருந்துதான் தொடங்குகிறது.
-
காரியம், காரணத்திலிருந்து ஒருபோதும் வேறுபடுவதில்லை. காரணத்தின் வேறுபட்ட உருவமே காரியம்.
-
பிரபஞ்சம் காரியமாகவும் கடவுள் காரணமாகவும் இருந்தால், பிரபஞ்சம் என்பது கடவுளேதான்; வேறு எப்படியும் இருக்க முடியாது.
-
கடவுள்தான் படைப்பவர். பிரபஞ்சத்திற்குக் காரணமான மூலப்பொருளும் அவரே. (தானே படைப்பவராகனவும் , பிரபஞ்சமாகவும் ஆகிறார்)
-
(படைப்பு) என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை சமஸ்கிருதத்தில் இல்லை. ஏனெனில் மேலை நாடுகளில் நம்புவதைப்போல் சூன்யத்திலிருந்து எதையோ உருவாக்குவது என்ற கருத்தை இந்தியாவின் எந்த மதப் பிரிவினரும் நம்புவதில்லை.
-
ஒரு காலத்தில் இதுபோன்ற எண்ணமுள்ள சிலர் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு வெகுசீக்கிரமே வாய்ப்பூட்டு போடப் பட்டுவிட்டது. தற்காலத்தில் இப்படி நம்பும் இந்திய மதப் பிரிவு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
-
ஏற்கனவே இருக்கும் ஒன்றின் வெளிப்பாடு தான் படைப்பு என்பதே எங்கள் கருத்து. விசிஷ்டாத்வைதத்தின் கருத்துப்படி பிரபஞ்சம் என்பது கடவுளேதான். பிரபஞ்சத்திற்குக் காரணமான மூலப்பொருளும் அவர்தான்.
-
சிலந்தி தன் உடலிலிருந்தே நூலெடுத்து வலை பின்னுகிறது..., அது போல் கடவுளிடம் இருந்தே பிரபஞ்சம் முழுவதும் வெளிவந்திருக்கிறது. என்று நாம் வேதங்களில் படிக்கிறோம்.
-
காரணமே காரியமாகத் தோன்றியிருக்கிறது என்றால் ஜடப்பொருள் அல்லாத, நிரந்தரமான பேரறிவு படைத்த கடவுளிடமிருந்து, ஜடப்பொருளான மந்தமான அறிவற்ற பிரபஞ்சம் தோன்றியது எப்படி?
-
-
தொடரும்....

No comments:

Post a Comment