Tuesday, 3 January 2017

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-49


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-49
(சுவாமி விவேகானந்தர்)

நான் என்னையே வருத்திக் கொள்ள முடியுமா? நான் என்னையே கொல்ல முடியுமா? நான் என்னையே காயப்படுத்த முடியுமா? யாரைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்? நம்மைப் பார்த்தே நாம் பயப்பட முடியுமா? அப்போதுதான் எல்லா துன்பமும் மறையும். 
-
எனக்கு எது துன்பம் தர முடியும்? பிரபஞ்சத்தில் இருப்பது நான் மட்டுமே. அப்போது பொறாமைகள் எல்லாம் மறையும்; யாரைப் பார்த்துப் பொறாமைப்படுவது? என்னைப் பார்த்தேயா? அப்போது எல்லா தீய எண்ணங்களும் மறையும்.
-
யாருக்கு எதிராக என்னிடம் தீய எண்ணம் இருக்க முடியும்? எனக்கு எதிராகவா? பிரபஞ்சத்தில் இருப்பது நான் மட்டுமே.
-
ஞானம் பெற இதுதான் ஒரே வழி என்று வேதாந்தி கூறுகிறான். வேறுபாட்டை அழித்து ஒழியுங்கள். பன்மை உள்ளது என்ற மூட நம்பிக்கையை ஒழியுங்கள்.
-
பன்மை நிறைந்த உலகில் அந்த ஒன்றைக் காண்பவர் யாரோ, உணர்வற்ற இந்தப் பிரபஞ்சத்தில் அந்த ஒரே உணர்வுப் பொருளைக் காண்பவர் யாரோ, நிழல்கள் நிறைந்த இந்த உலகத்தில் சத்தியத்தைக் காண்பவர் யாரோ, அவனுக்கு மட்டுமே நிரந்தரமான அமைதி கிட்டுகிறது; வேறு யாருக்கும் இல்லை; வேறு யாருக்கும் இல்லை.
-
கடவுளைப் பற்றிய இந்திய மதச் சிந்தனையின் மூன்று முக்கியமான படிகளின் முக்கியமான அம்சங்கள் இவை.
-
பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ள சகுணமான கடவுள் என்ற கருத்துடன் அது ஆரம்பித்தது.
-
கடவுள், பிரபஞ்சத்திற்கு வெளியே இருக்கிறார் என்பதிலிருந்து, பிரபஞ்சத்தின் உள்ளே இருக்கிறார், எல்லா பொருட்களிலும் அந்தர்யாமியாக இருக்கிறார் என்ற கருத்திற்கு உயர்ந்தது.
-
கடைசியில், கடவுளும் இந்த ஆன்மாவும் வெவ்வேறல்ல, ஒன்றே தான்; அதன் வெளிப்பாடுதான் பிரபஞ்சத்திலுள்ள பல்வேறு தோற்றங்கள் என்ற உயர்ந்த கருத்தில் நிறைவுறுகிறது.
-
வேதங்களின் அறுதி வாக்கு இதுதான். துவைதமாக ஆரம்பித்து, விசிஷ்டாத்வைதமாகத் தொடர்ந்து, அத்வைதமாக முடிந்திருக்கிறது.
-
உலகத்தில் மிகச் சிலரே இந்தக் கடைசி முடிவுக்கு வருவார்கள். அதிலும் சிலரே இதை நம்புவார்கள். மிகமிகச் சிலரே இதைப் பின்பற்றும் துணிவு உடையவர்களாக இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும்.
-
-
தொடரும்...

No comments:

Post a Comment