Thursday, 19 January 2017

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-36


#தமிழ்நாட்டில் #சுவாமி #விவேகானந்தர்-பாகம்-36
-
கும்பகோணத்தில் சுவாமி விகோனந்தர் பேசியது-பாகம்-3
-
வினோதமானதோர் உண்மையைப் பாருங்கள். ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ நாடுகள் உலக மேடைக்கு வந்து, ஒரு சில கணங்கள் தங்கள் பாத்திரங்களை ஆரவாரமாக நடித்துவிட்டு, காலப் பெருங் கடலில் நீர்க்குமிழி போல், ஏறக்குறைய எந்த அடையாளத்தையும் நிறுத்தாமல் அழிந்து போய்விட்டன, இங்கு நாமோ நிரந்தரமானது போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மிகப் பெரும் தகுதி பெற்றதே வாழும் என்பதைப் பற்றிய புதிய பல கொள்கைகளையெல்லாம் அவர்கள் பெரிதாகப் பேசுகிறார்கள் ; வாழ்வதற்கான மிகப் பெரும் தகுதியாக உடல் வலிமையையே கருதுகிறார்கள். அது உண்மையென்றால் பிற நாடுகளை ஆக்கிரமித்ததான பழைய நாடுகளுள் ஒன்றாவது இன்றும் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும், ஒருபோதும் எந்த இனத்தையோ நாட்டையோ வெல்லாத பலவீனமான இந்துக்கள் அழிந்திருக்க வேண்டுமே ! ஆனால் நாம் முப்பதுகோடி பேர் இன்னும் வலிமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இனி, நமது ஆற்றல்கள் எல்லாம் செலவழிந்து விட்டன என்பதோ, நம் நாடு படிப்படியாக அழிந்து வருகிறது என்பதோ சிறிதும் உண்மை அல்ல. நம்மிடமிருந்து போதுமான வலிமை இருக்கிறது. தேவை ஏற்படும் போது சரியான நேரத்தில் அது வெள்ளமெனப் பொங்கியெழுந்து உலகை நிரப்பவே செய்கிறது.
மிகப் பழங்காலத்திலிருந்தே நாம் உலகத்திற்க்குச் சவால் விட்டுக்கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஒரு மனிதன் எவ்வளவு அதிகமாக வைத்துக்கொள்ள முடியும் என்ற பிரச்சனையைத் தீர்க்க மேலை நாட்டினர் முயன்று கொண்டிருக்கிறார்கள். இங்கோ ஒரு மனிதன் எவ்வளவு குறைவான உடைமைகளைக் கொண்டு வாழ முடியும் என்ற கேள்விக்கு விடைகாண முயன்று கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டமும் இந்த வேறுபாடும் பல நூற்றாண்டுகள் தொடரவே செய்யும்.
ஆனால் வரலாற்றில் ஏதாவது உண்மையாகி இருக்குமானால், ஆருடங்கள் எப்போதாவது உண்மையாகி இருக்கிறதென்றால், அது யார் குறைவான பொருட்களைக் கொண்டு வாழக் கற்றுக் கொள்கிறார்களோ, கட்டுப்பாட்டுடன் வாழ்கிறார்களோ அவர்களே முடிவில் வெல்கிறார்கள், யார் போகத்தின் பின்னாலும் ஆடம்பரத்தின் பின்னாலும் ஓடுகிறார்களோ அவர்ளின் வாழ்க்கை எவ்வளவு பரப்பரப்பாக அந்ந நேரத்தில் காணப்பட்டாலும் அவர்கள் அழிந்தே தீர வேண்டும், மாய்ந்தேயாக வேண்டும் என்பதுதான்.
மனித வாழ்க்கையில், ஏன் நாடுகளின் வரலாற்றில் கூட ஒரு வகையான களைப்பு, வேதனை தரத்தக்க வகையில் அதிகமாக நிலவுகின்ற சில நேரங்கள் உண்டு. அத்தகையதோர் அலை இப்போது மேலைநாடுகளில் மோதுவது போல் தோன்றுகிறது. அங்கும் மகத்தான சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். இப்படிப் பணம் பதவி என்று அவற்றின் பின்னால் ஓடுவது வெறுமையிலும் வெறுமை என்று அவர்களும் கண்டுபிடித்து விட்டார்கள். அங்குள்ள பலரும், ஏன், பண்பாட்டோருள் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் இந்தப் போட்டி, போராட்டம், வாணிப நாகரீகத்தின் காட்டு மிராண்டித்தனம் இவைகளால் ஏற்கனவே களைத்துப் போய்விட்டார்கள். மேலான ஒன்றை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதேவேளையில் ஐரோப்பாவின் தீமைகளுக்கெல்லாம் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களே ஒரே தீர்வுஎன்றும் சிலர் இன்னும் அங்கே பிடிவாதமாக நம்பிக்கொண்டுருக்கினர் கொண்டுதான் இருக்கின்றனர்
ஆனால் அங்குள்ள மகத்தான சிந்தனையாளர்களிடம் வேறு சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மனித வாழ்வில் எவ்வளவு தான் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் தீமைகளைத் தீர்க்க முடியாது என்பதை அவர்கள் கண்டு விட்டார்கள்.
அக வாழ்வில் ஓர் உறுதியான மாற்றம் மட்டுமே வாழ்க்கையின் தீமைகளை நீக்கும். படைகளோ அரசாங்கமோ சட்டக்கொடூரங்களோ எவ்வளவு தான் இருந்தாலும் ஓர்இனத்தின் நிலையை மாற்ற முடியாது. ஆன்மீகப் பண்பாடும் நீதிநெறிப் பண்பாடும் மட்டுமே மனித இனத்தின் தவறான போக்குகளை மாற்றி, அதை நல்ல வழியில் திருப்ப முடியும் ,எனவே மேலைநாட்டினர் ஏதாவது புதிய சிந்தனைகளையும் புதிய தத்துவங்களையும் பெறுவதற்காக ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.
. எனவே மேலை நாட்டின் அறிவுஜீவிகள், நம் பழைய தத்துவங்களில், அதிலும் குறிப்பாக வேதாந்தத்தில், தாங்கள் தேடிக் கொண்டிருக்கின்ற புதிய சிந்தனைத் துடிப்பையும் தங்கள் பசிக்கும் தாகத்திற்கும் ஏற்ற ஆன்மீக உணவையும் நீரையும் காண்கிறார்கள். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
-
-தொடரும்----
#விவேகானந்தர்விஜயம்

No comments:

Post a Comment