Friday, 13 January 2017

கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-3


கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-3
(சுவாமி விவேகானந்தர்)
-
நம்மையே நாம் அமைதியாக ஆராய்ந்து பார்த்தோமானால் நமது கண்ணீர்கள், நமது புன்முறுவல்கள், நமது மகிழ்ச்சிகள், நமது கவலைகள், நமது அழுகைகள், நமது சிரிப்புகள், நமது சாபங்கள் நமது வாழ்த்துக்கள், நமது பாராட்டுக்கள், நமது ஏச்சுக்கள் என்று நமது எல்லா உணர்ச்சிகளும் செயல்களும் வெளியிலிருந்து தரப்பட்ட பல்வேறு தாக்குதல்களின் மூலம் நமக்குள்ளிருந்தே வெளியே கொண்டு வரப்பட்டன என்பதை அறியலாம். 
-
இந்தத் தாக்குதல்களை மொத்தமாக கர்மம் அல்லது செயல் என்று கூறுகிறோம்.
-
தூலநிலையாகட்டும், மனத்தளவில் ஆகட்டும், மனத்திற்குக் கொடுக்கின்ற அடிகள் ஒவ்வொன்றும், அங்கே ஏற்கனவே மறைந்திருக்கின்ற அதன் சொந்த ஆற்றலையும் அறிவையும் வெளிப்படுத்துகிறது. அதாவது அவை கண்டுபிடிக்கப்படுகின்றன.
-
இந்த ஒவ்வோர் அடியும் கர்மமே. இங்கு கர்மம் மிகப்பரந்த பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
-
இவ்வாறு நாம் எல்லோரும் எப்போதும் கர்மம் செய்துகொண்டிருக்கிறோம். நான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். இது கர்மம், நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதுவும் கர்மம்.
-
நாம் மூச்சு விடுகிறோம். அதுவும் கர்மம், நாம் நடக்கிறோம். அதுவும் கர்மம். உடலின் மூலமாகவும் மனத்தின் மூலமாகவும் நாம் செய்கின்ற எல்லாம் கர்மமே.
-
கர்மம் ஒவ்வொன்றும் நம் மீது ஒரு பதிவை விட்டுச் செல்கின்றன.
-
கடற்கரையில் நிற்பதாக வைத்துக்கொள்வோம். கடல் அலைகள் கரையில் மோதிச் சிதறுகின்றன. அதன் ஓசை தான் எவ்வளவு பெரிதாக இருக்கிறது. ஆனால் அந்த ஒரு பேரலை கோடிக்கணக்கான சின்னஞ்சிறு அலைகள் சேர்ந்து உருவானதே தவிர வேறல்ல.
-
சின்னஞ்சிறிய அலைகள் ஒவ்வொன்றும் ஓசை எழுப்புகின்றன. ஆனால் அவற்றை நாம் கேட்பதில்லை. அந்தச் சிற்றொலிகள் ஒன்றுசேர்ந்து ஒரு பேரொலியாக உருவெடுக்கும்போதுதான் நாம் அதைக் கேட்கிறோம்.
-
அதுபோல், இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் செயலே. சிலவகையான செயல்களை நாம் உணர்கிறோம். அவை நமக்குத் தெளிவாகப் புரிகின்றன. அதேவேளையில் அவை பல சிறிய செயல்களின் ஒட்டுமொத்தமே
-
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்-

No comments:

Post a Comment