Thursday, 19 January 2017

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-45




தமிழ்நாட்டில் #சுவாமி #விவேகானந்தர்-பாகம்-45
-
கும்பகோணத்தில் சுவாமி விகோனந்தர் பேசியது-பாகம்-12
--
பல நூற்றாண்டுகளாகவே நம் மக்களின் மனத்தை ஆக்கிரமித்திருப்பவையும் வெறுப்டையச் செய்து. வருபவையுமான ஜாதி மற்றும் சமூகச் சீர்திருத்தம் பற்றிய கடினமான சில கேள்விகள் இந்த இடத்தில் இயல்பாகவே எழுகின்றன.
நான் ஜாதிகளை உடைப்பவனோ, வெறும் சமூகச் சீர்திருத்தவாதியோ அல்ல என்பதை வெளிப்படையாக உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் ஜாதிகளிலோ சமூகச் சீர்த்திருத்தத்திலோ நேரடியாக எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் அதற்காக ஏன் மற்றொருவனை, மற்றொரு ஜாதியை நீங்கள் வெறுக்க வேண்டும்?
நான் போதிப்பது அன்பு, அன்பு ஒன்றை மட்டுமே. பிரபஞ்சம் முழுவதன் ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்ற மகத்தான வேதாந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் நான் பிரச்சாரம் செய்கிறேன்.
ஏறக்குறைய கடந்த நூறு ஆண்டுகளாக நமது நாடு சமூகச் சீர்திருத்தவாதிகளாலும் பல வகையான சமுதாயச் சீர்திருத்தத் திட்டங்களாலும் மூழ்கடிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சீர்திருத்தவாதிகளிடம் என்னால் தவறு எதையும் காண முடியவில்லை அவர்களுள் பெரும்பாலானோர் நல்லவர்கள், தெளிவான சிந்தனையுடையவர்கள், சில விஷயங்களில் அவர்களது நோக்கங்கள் கூடப் பாராட்டத் தக்கவையாகவே உள்ளன அதேவேளையில், இந்த நூறு ஆண்டுகளின் சமுதாயச் சீர்த்திருத்தம் உருப்படியான, பாரட்டத்தக்க, நிலையான எந்த விளைவையும் இந்த நாட்டில் எங்குமே தோற்று விக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை
ஆயிரக்கணக்கானோர் மேடையில் முழங்குகிறார்கள். அப்பாவியான இந்து இனத்தின் மீதும் அதன் நாகரீகத்தின் மீதும் மூட்டை மூட்டையாகக் கண்டனங்கள் சுமத்தப்படுகின்றன. ஆனாலும் நடைமுறையில் எந்த நல்ல பலனையும் காணோம்.
ஏன் ?இதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அது அவர்களின் கண்டனத்திலேயே உள்ளது. நான் முன்பு கூறியது போல், முதலில் காலங் காலமாக நாம் பெற்று வந்துள்ள நமது நாட்டின் பண்பைக் பாதுகாக்க முயல வேண்டும் .அடுத்ததாக பிற நாடுகளிலிருந்து பல விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், வெளியிலிருந்து பல பாடங்களை நாம் கற்றாக வேண்டும்
. ஆனால் பெரும்பாலான நமது நவீனச் சீர்த்திருத்த இயக்கங்கள் சிறிதும் சிந்திக்காமல் மேலை முறைகளைக் காப்பியடிப்பவைகளாக உள்ளன. இது இந்தியாவிற்கு ஏற்றதல்ல என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதனால்தான் நமது சமீப காலச் சீர்த்திருத்த இயக்கங்கள் எதுவும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை
இரண்டாவதாக, கண்டனம் ஒருபோதும் நன்மை செய்வதற்கான வழியல்ல. நம்முடைய சமூகத்தில் சில கேடுகள் இருக்கின்றன, இதை ஒரு குழந்தையாலும் காண முடியும். எந்தச் சமூகத்தில்தான் தீமைகள் இல்லை?
என் நாட்டு மக்களே, நான் பார்த்த பல்வேறு இன மற்றும் பல நாட்டு மக்களோடு , நம் மக்களை ஒப்பிட்டபின் நான் கண்ட முடிவை இந்த வேளையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
என்னவென்றால், நம் மக்களே எல்லோரையும் விட மிகவும் ஒழுக்கம் வாய்ந்தவர்கள், மிகவும் தெய்வீக மானவர்கள். நமது சமுதாய அமைப்புக்களே மனித குலத்தை மகிழ்ச்சிகரமாக்க, அமைப்பிலும் நோக்கத்திலும் மிகவும் பொருத்தமானவை. எனவே நான் எந்த சீர்திருத்தத்தையும் விரும்பவில்லை. எனது லட்சியம் வளர்ச்சி, விரிவு, தேசியப் பாதையில் முன்னேற்றம்.
நம் நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது, இந்த உலகம் முழுவதிலும் எந்த நாடும் இதைப்போல மனித மனத்தின் வளர்ச்சிக்காக அதிகமான காரியங்களைச் செய்யவில்லை என்பதைக் நாம் காண முடியும். எனவே என் நாட்டை நிந்திக்கும் எந்த வார்த்தையும் என்னிடம் இல்லை. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், நீங்கள் நன்றாகச் செய்திருக்கிறீர்கள், இன்னும் நன்றாகச் செய்ய முயலுங்கள் என்பது தான்.
இந்த நாட்டில் மகத்தான காரியங்கள் கடந்த காலத்தில் செய்யப்பட்டுள்ளன. அதைவிடச் சிறப்பான காரியங்களைச் செய்வதற்கான நேரமும் வாய்ப்பும் இப்போது உள்ளது. எதுவும் செய்யாமல் நம்மால் இருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும் என்பது உறுதி. எதுவும் செய்யாமலிருந்தால் செத்துப்போவோம்.
ஒன்று நாம் முன்னே செல்ல வேண்டும் அல்லது பின்னே செல்ல வேண்டும்; முன்னேற வேண்டும் அல்லது வீழ்ச்சி அடைய வேண்டும். கடந்த காலத்தில் நம் முன்னோர்கள் மகத்தான காரியங்களைச் செய்தார்கள். நாமும் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, அவர்கள் செய்ததை விட மகத்தான சாதிக்க வேண்டும் .
இந்த நிலையில் நம்மால் எப்படிப் பின்னே சென்று நம்மை நம்மையே இழிவுபடுத்திக் கொள்ள முடியும்? அது முடியாது, அப்படிச் செய்யவும் கூடாது. பின்னால் செல்வது என்பது இந்த நாட்டை நாசத்திற்க்கும் மரணத்திற்க்குமே அழைத்துச் செல்லும். எனவே முன்னேறிச் செல்வோம் மகத்தான காரியங்களைச் செய்வோம். நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது இதுதான்.


No comments:

Post a Comment