Friday, 13 January 2017

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-37


சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-37
---
-
சீடர் : சுவாமிஜி நேராகப் பார்க்காமலோ கேட்காமலோ உண்மையை பற்றி நம்பிக்கை வராது என்றே எனக்குத் தோன்றுகிறது.
-
சுவாமிஜி: நம்பிக்கையற்றவன் கண்டாலும் நம்ப மாட்டான் : அதை மனத்தின் பிரமை அல்லது கனவு அல்லது வேறு என்னவோ ஒன்று என்று நினைப்பான். கிருஷ்ணரின் விசுவரூப தரிசனத்தை துரியோதனனும் பார்த்தான் , அர்ஜுனனும் பார்த்தான். அர்ஜுனன் நம்பினான் துரியோதனன் மாயவித்தை என்று நினைத்தான்
-
கடவுளே உணர்த்தாமல் நாம் எதையுமே உணர முடியாது பார்க்காமலோ கேட்காமலோகூடச் சிலருக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது. பன்னிரண்டு வருடங்களாக அற்புதக் காட்சிகளைப் பெற்றும் சந்தேகத்தில் மூழ்கிக் கிடப்பவர்களும் உண்டு அவரது அருளே சாரம் . ஆனால் அருளைப் பெற இடைவிடாத முயற்சி வேண்டும்.
-
சீடர்: சுவாமிஜி இந்த அருளைப் பெறுவதுபற்றி ஏதாவது நியதி இருக்கிறதா?
-
சுவாமிஜி: உண்டு என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம்.
-
சீடர்: அது எப்படி?
சுவாமிஜி: உடல் மனம் பேச்சு முதலியவற்றில் புனிதமானவர்கள் , ஆழ்ந்த பக்தி உடையவர்கள் உண்மை உண்மையற்றது பற்றி ஆராய்பவர்கள், கடவுளின் சிந்தனையிலும் தியானத்திலும் விடாமுயற்சியுடன் இருப்பவர்கள் இவர்களுக்கு மட்டுமே இறையருள் கிடைக்கும்
-
ஆனால் கடவுள் இயற்கையின் எல்லா நியதிகளுக்கும் அப்பாற்பட்டவர் எந்தச் சட்டதிட்டங்களுக்கும் உட்படாதவர். ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது போல் குழந்தையின் இயல்பு கொண்டவர் அவர். ஆதலால் தான் சிலர் பல்லாயிரம் பிறவிகளாக அவரைப் பிரார்த்தித்திருந்தாலும் எந்தவிதப் பயனையும் பெற வில்லை
-
அதேவேளையில் பாவிகள் செய்த பாவத்திற்கு வருந்துபவர்கள் நாத்திகர்கள் என்றெல்லாம் நாம் கூறும் ஒருவருக்குக் கணப்பொழுதில் ஞான ஒளி கிடைத்து விடுகிறது அவர் கேட்காமலே இறையருள் அவர்மீது பொழிந்துகொண்டே இருக்கிறது . இவர்கள் முற்பிறவியில் புண்ணியங்கள் செய்து சேர்த்து வைத்திருந்தார்கள் என்று நீ சொல்லலாம் ஆனால் இந்த ரகசியத்தைப் புரிந்து கொள்வது கடினம்
-
சீடர்: சுவாமி ஜி இது மிகவும் கடினமான விஷயம் எந்த ஆராயச்சியும் இங்குச் செல்லாது என்று நினைக்கிறேன்.
-
சுவமாஜி : எல்லா பகுத்தறிவும் வாதங்களும் மாயையின் எல்லைக்குள் இருப்பவை காலம் இடம் காரணகாரிய நியதி இவற்றின் கட்டுப்பாட்டில் இருப்பவை. கடவுளோ இவை அனைத்திற்கும் அப்பால் இருக்கிறார்.
-
நாம் அவருடைய நியதியைப்பற்றிப் பேசுகிறோம், அவரோ எல்லா நியதிகளுக்கும் அப்பால் இருக்கிறார், இயற்கை விதிகள் என்று நாம் கூறும் அனைத்தையும் படைத்து,தாமே அவையாகி நிற்கிறார்: எனினும் அவற்றிற்கு அப்பாலாகியும் நிற்கிறார் .அவரது அருளைப் பெருபவன் அந்த வினாடியே எல்லா நியதிகளையும் கடந்து போகிறான்.
-
அவரது அருளுக்கு நியதியில்லை என்பது இதனால் தான் . அருள் என்பது அவரது விளையாடல் இந்தப் படைப்பே அவரது விடளயாடல்தான் ”லோகவத்து ,லீலா கைவல்யம்” மனிதர்களின் விளையாட்டுபோல் இதுவும் அவரது வேடிக்கையான விளையாட்டே.
-
இந்த உலகங்களையே விளையாட்டு போல் படைக்கவும் அழிக்கவும் செய்பவரால் , ஒரு கொடிய பாவியிடம் அருள் கொண்டு அவனுக்கு முக்தி அளிப்பது முடியாத காரியமா என்ன? ஆனால் சிலரைக் கடுமையான சாதனைகள் புரிய வைக்கிறார்கள், சிலரை அதில்லாமல் செய்கிறார் - எல்லாம் அவரது விளையாடல் அவரது சித்தம்.
-
சீடர்: சுவாமிஜி என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
-
சுவாமிஜி: புரிந்தால் மட்டும் என்ன சாதித்து விடுவாய் முடிந்தவரை மனத்தை அவரிடம் வை செய்தாயானால் இந்த உலகம் என்னும் மாயவித்தை தானாகவே கலைந்துவிடும் அதற்கு விடாமுயற்சியுடன்போராட வேண்டும் மனத்தைக் காமம் மற்றும் பண ஆசைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் உண்மை உண்மை யற்றது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
-
நான் இந்த உடம்பு அல்ல என்ற எண்ணத்துடன் உடம்பற்ற நிலையில் இருக்க வேண்டும். எங்கும் நிறைந்த ஆன்மாவே நான் என்பதை அனுபவத்தில் உணர வேண்டும் .இத்தகைய இடையறாத முயற்சிதான் புருஷகாரம் எனப்படுகிறது. இதனால் கடவுளிடம் உண்மையான நம்பிக்கை உண்டாகும் அதுதான் மனித முயற்சியின் குறிக்கோள்.
-
----விவேகானந்தர் விஜயம்----

No comments:

Post a Comment