சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-39
---
சீடர்..படைப்பு பற்றிய உங்கள் கருத்தை கூறுங்கள்.
-
சுவாமிஜி...படைப்பே வேதங்களிலிருந்துதான் தோன்றியது .வேதங்கள் என்பவை அனாதியான உண்மைகளின் தொகுதி.
-
வேத ரிஷிகள் அவற்றைத் தங்கள் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். புலன்களைக் கடந்து செல்லக் கூடியவர்களால் மட்டுமே இவற்றை அனுபவத்தில் காண முடியும்
-
வேதம் ஒலியின் இயல்பை உடையது: அதாவது கருத்தின் இயல்பை உடையது.
-
அது பல கருத்துக்களின் தொகுதி. சப்தம் அதாவது ஒலி என்ற சொல் நுண்கருத்து அதாவது நுண்கருத்தாக இருந்து பின்னர் தூலமாகி தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற ஒன்று என்றே வேதங்களில் பொருள்படுகிறது
-
எனவே படைப்பு அழியும்போது அடுத்த படைப்பிற்கான நுட்பமான விதைகள் வேதங்களில் ஒடுங்குகின்றன.
-
படைபின் போது முதலில் வேதம் வெளிப்படுகிறது.
பின்னர் அந்த வேதங்களிலிருந்து படிப்படியாகப் படைப்பு தோன்றியது.
-
அதாவது வேதங்களிலுள்ள சப்தங்களை ஆதாரமாகக் கொண்டே உலகிலுள்ள எல்லா தூலப் பொருட்களும் ஒவ்வொன்றாக உருவாயின.
-
ஏனெனில் எல்லா பருப் பொருட்களின் நுண்மையான வடிவம் சப்தமே அல்லவா! முந்தைய கல்பங்களிலும் இவ்வாறுதான் படைப்பு தோன்றியது.
-
இதுவே வைதீக சந்தியா மந்திரத்தில் ”ஸுர்யா சந்த்ர மஸெள தாதா யதாபூர்வமகல்பயத் ப்ருதிவீம் திவம் சாந்தரிக்ஷமதோ ஸ்வ:- ”சூரியன் சந்திரன் பூமி ஆகாசம் சொர்க்கம், மேல்உலகங்கள் மற்ற எல்லாவற்றையுமே பிரம்மா முந்தைய யுகங்களில் போலவே படைத்தார் என்று கூறப்பட்டுள்ளது. புரிகிறதா?
-
சீடர்: ஆனால் சுவாமிஜி உண்மையில் ஒருதூலப் பொருள் இல்லாதபோது ஒலி எதைக்குறிக்கும்?எப்படி அவற்றிற்குப் பெயர் தருவது?
-
சுவாமிஜி: எடுத்த எடுப்பில் இப்படித்தோன்றுவது இயல்புதான். ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பார்.
-
இந்தக் குடம் உடைந்து போகிறது என்று வைத்துக்கொள். அப்போது குடம் என்னும் கருத்தே அழிந்து மறைந்துவிடுமா? இல்லை.
-
ஏனெனில் குடம் தூலப்பொருள், ஆனால் குடம் என்னும் கருத்து குடத்தின் ஒலிநிலை அல்லது நுண்நிலை.
-
இப்படியே ஒவ்வொரு பொருளுக்கும் ஒலிநிலை உள்ளது. அதாவது நுண் நிலை உள்ளது.
-
நாம் காண்கின்ற கேட்கின்ற அனுபவிக்கின்ற தொட்டுணர்கின்ற பொருட்கள் எல்லாமே இவ்வாறு நுண்நிலை அல்லது ஒலிநிலையில் இருக்கின்ற பொருட்களின் தூல வெளிப்பாடுகளே.
-
இவற்றின் இடையில் உள்ள தொடர்பு காரணகாரியத் தொடர்பு போன்றது .
-
உலகமே அழிந்து போனாலும் கூட ஒலிநிலை அல்லது அந்த உலகின் உணர்வான தூலப் பொருட்கள் அனைத்தின் நுண் நிலையான பிரம்மத்தில் காரண வடிவில் நிலைபெறுகிறது.
-
படைப்பு தொடங்கும் முன்னர் முதலில் இந்த நுண் வடிவங்களின் தொகுதியான பொருள் விம்மிப் புடைப்பதுபோல் அதிர்கிறது.
-
அப்போது நுட்பமான ஆதி ஒலியான ”ஓம் ” தானாக வெளிப்படுகிறது.
-
பின்னர் படிப்படியாக அந்தத் தொகுதியிலிருந்து ஒவ்வொரு பொருளுடையவும் நுட்பமான ஒலி வடிவம் தோன்றுகிறது.
-
பின்னர் ,அது தூலமாக வெளிப்படுக்கிறது
-
புரிகிறதா?
-
சீடர்:இல்லை சுவாமிஜி தெளிவாகப் புரியவில்லை.
-
சுவாமிஜி:சரி உலகத்தில் உள்ள எல்லா குடங்களும் அழிந்துபோனாலும் ,குடம் என்னும் கருத்து அல்லது ஒலி வடிவம் இருக்கவே செய்யும் இதைப் புரிந்து கொள்கிறாய் அல்லவா?
-
அதுபோல் இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும் அதாவது பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ள எல்லா பொருட்களும் அணு அணு வாகச் சிதைந்து போனாலும் ,அந்தப் பொருட்களைப் பற்றிய உலகைப் பற்றிய கருத்து ஏன் இருக்கக் கூடாது? அவற்றிலிருந்து மீண்டும் படைப்பு ஏன் வர முடியாது.
-
சீடர்:ஆனால் சுவாமிஜி குடம் குடம் என்று கத்துவதால் குடம் வந்து விடுமா?
-
சுவாமிஜி: வராது. நீயோ நானோ கூச்சலிட்டால் ஒன்றும் நடக்காது. ஆனால் எண்ணியது எண்ணியவாறு நிறைவேறப் பெறுபவரான அதாவது ஸித்த சங்கல்பரான பிரம்மத்தில் குடம் பற்றிய எண்ணம் எழுமானால் குடம் வந்தே தீரவேண்டும் .
-
சாத்தியமற்றவை என்று சொல்லப் படுபவை சாதாரண சாதகர்களின் சங்கல்பத்தாலேயே நடைபெறும்போது, ஸித்த சங்கல்பரான பிரம்மத்தைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது?
-
படைப்பின் ஆரம்பத் தில் பிரம்மம் முதலில் ஒலி வடிவாகிறார்,
-
பின்னர்நாதம் அல்லது ஓம் வடிவாகிறார்
-
அடுத்த நிலையில் முந்திய யுகங்களில் இருந்த பூமி ,ஆகாசம், சொர்க்கம் அல்லது பசு, மனிதன், குடம், துணி முதலிய குறிப்பிட்ட ஒலிகள் அல்லது கருத்துக்கள் அந்த ஓம் என்பதிலிருந்து வெளிவருகின்றன.
-
ஸித்த சங்கல்பரான பிரம்மத்தில் இந்தக் கருத்துக்கள் ஒவ்வொன்றாகப் படிப்படியாகத் தோன்றுகின்ற கணமே அவற்றின் தூல வடிவங்களும் தோன்றி இந்த அற்புதப் பிரபஞ்சம் ஆகிறது
-
ஒலியே படைப்பின் அடிப்படை என்பது இப்போது புரிகிறதா
-
சீடர்:ஆம் ஏதோ சிறிது புரிகிறது. ஆனால் தெளிவாகப் புரியவில்லை
-
சுவாமிஜி : நல்லது மகனே தெளிவாகப் புரிந்து கொள்வது, அதாவது பிரத்தியட்ச அனுபவம் பெறுவது சாதாரண விஷயமா என்ன?
-
மனம் பிரம்மத்தில் மூழ்கும் போது ஒன்றன் பின்ஒன்றாக இத்தகைய நிலைகளை யெல்லாம் கடந்து, இறுதியாக நிர்விகல்ப சமாதியை அடைகிறது .
-
முதலில் இந்த உலகம் எண்ணமயமாகத் தெரியும்.
-
பிறகு எல்லாமே ஆழ்ந்த ஓங்காரத்திற்குள் ஒடுங்கும்.
-
பிறகு அதுவும் கேட்காமல் போய்விடும் .
-
அது இருக்கிறதா இல்லையா என்று தோன்றும் .இதுதான் அனாதி நாதம் .
-
பின்னர் மனம் சுத்தப் பிரம்மத்தில் ஒடுங்கிவிடும் அவ்வளவுதான் எல்லாம் அமைதி!
-
(சீடர் வாயடைத்து போனார்)
பிரம்மத்தை அடையும் இந்த நிலையைச் சொந்த அனுபவம் இல்லாத யாராலும் இவ்வளவு தெளிவாக விளக்க முடியாத என்று நினைத்தபடி சீடர் வாயடைத்துப் போய் உட்கார்ந்திருந்தார்.
--
--
----விவேகானந்தர் விஜயம்----
No comments:
Post a Comment