Thursday, 19 January 2017

கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-12


கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-12
(சுவாமி விவேகானந்தர்)
-
கடமை என்பது என்ன?-1
-
கர்மயோகத்தைப் பற்றி ஆராயும்போது கடமை என்றால் என்ன என்பதுபற்றி அறிய வேண்டியது அவசியமாகும். நான் ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால் முதலில் அது என் கடமை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும், அப்போது அதை என்னால் செய்ய முடியும்.
கடமை என்ற கருத்து பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக உள்ளது. தன் நூலாகிய குரானில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதுதான் என் கடமை என்று முகமதியன் கூறுகிறான். வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதுதான் தன் கடமை என்று சொல்கிறான் இந்து. கிறிஸ்தவனோ பைபிளில் கூறப்பட்டது தான் தன் கடமை என்கிறான், எனவே பல்வேறு வாழ்க்கை நிலைகளுக்கும், பல்வேறு வரலாற்று காலகட்டங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் ஏற்ப கடமை என்ற கருத்தும் பல்வேறு விதமாக மாறுபடுவதை நாம் காண்கிறோம்.
உலகம் தழுவியதான் சில நுண் கருத்துக்களை விளக்குகின்ற மற்ற சொற்களைப் போலவே கடமை என்னும் சொல்லின் பொருளையும் முழுமையாக விளக்க முடியாது. அதன் செயல்பாட்டு முறைகளையும் விளைவுகளையும் வைத்து ஓரளவுக்கு அதைப் புரிந்து கொள்ளலாம். அவ்வளவுதான்.
எல்லா இடங்களிலும் கடமையைப் பற்றிய பொதுவான கருத்து என்னவென்றால் நல்லவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனச்சாட்சிக்கு ஏற்ப நடந்து கொள்கிறார்கள். என்பதே.
ஒரு செயலைக் கடமையாக்குவது எது? ஒரு கிறிஸ்தவன் தனக்கு முன் சிறிது மாட்டிறைச்சியைக் காண்கிறான்; ஒன்று அவன் அதைச் சாப்பிட்டுத் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது இன்னொருவனுக்குக் கொடுத்து, அவன் உயிரைக் காக்க வேண்டும். இரண்டையும் செய்யவில்லை என்றால் கடமையிலிருந்து தான் தவறியாதகவே கட்டாயமாக எண்ணுவான்.
ஆனால் ஓர் இந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள மாட்டுஇறைச்சியை சாப்பிடத் துணிந்தாலோ அவனும் தன் கடமையிலிருந்து வழுவிவிட்டதாகவே நினைப்பான். பயிற்சியும் படிப்பும் ஓர் இந்துவை அப்படி நினைக்கச் செய்கின்றன.
சாதாரணமாக ஒருவன் தெருவில் சென்று மற்றொருவனைச் சுட்டுக் கொன்றுவிட்டால், தான் தவறு செய்துவிட்டதற்காக அவன் வருந்த வேண்டும், அது தான் சரி, அதே மனிதன் போர்வீரனாகப் படையில் சேர்ந்து ஒருவனை அல்ல, இருபது பேரைக் கொன்றாலும் தன் கடமையைச் சிறப்பாகச் செய்ததாகவே நிச்சயமாக மகிழ்வான். எனவே செயலைக் கொண்டு கடமை வரையறுக்கப் படுவதில்லை.
அதனால் கடமை என்பதற்குப் புறச்சார்பான விளக்கம் தருவது என்பது இயலாத ஒன்று. ஆனால் அகச்சார்பான விளக்கம் இருக்கிறது.
எந்தச் செயல் நம்மைக் கடவுளை நோக்கிச் செலுத்துகின்றதோ அது நற்செயல், நமது கடமை. எது நம்மைக் கீழ் நிலைக்கு இழுத்துச் செல்கிறதோ அது தீயது. நமது கடமை அல்ல.
அகச்சார்பான இந்தக் கோணத்தில் நாம் பார்த்தால் சில செயல்களில் நம்மை உயர்த்தவும் உன்னதமாக்குவதற்குமான போக்கு இருப்பதையும், மற்றும் சிலவற்றில் நம்மைச் சீரழித்து தீயவர்கள் ஆக்குகின்ற போக்கு இப்பதையும் காணலாம்.
எல்லா காலங்களிலும் எல்லா நெறியினருக்கும் எல்லா நாட்டினருக்குமான கடமையென்று மனிதகுலம் முழுவதுமே ஒருமனதாக ஏற்றுக்கொண்ட கருத்து ஒன்று இந்தியாவில் உள்ளது. எந்த உயிரையும் துன்புறுத்தக் கூடாது. எந்த உயிருக்கும் துன்பம் தராமல் இருப்பது புண்ணியம் எதையும் துன்புறுத்துவது பாவம்.
--
தொடரும்....
-
#விவேகானந்தர்விஜயம்

No comments:

Post a Comment