கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-5
(சுவாமி விவேகானந்தர்)
-
உலகில் நாம் காண்கின்ற எல்லா செயல்களும் சமுதாயத்தின் எல்லா இயக்கங்களும், நம்மைச் சுற்றி நடக்கும் வேலைகள் அத்தனையும் வெறும் எண்ணங்களின் வெளித்தோற்றமே.
-
எந்திரங்கள், கருவிகள், நகரங்கள், கப்பல்கள், போக்கப்பல்கள் இவையெல்லாமே மனிதனது சுயேச்சையின் வெளிப்பாடுகளே, இந்தச் சுயேச்சை குணத்தால் அமைகிறது.
-
குணமோ செயல்களால் உருவாக்கப்படுகிறது.
-
செயல் எத்தகையதோ அத்தகையதே சுயேச்சையின் வெளிப்பாடும்.
-
உலகம் இதுவரை தோற்றுவித்துள்ள உறுதிவாய்ந்த சுயேச்சை கொண்டவர்கள் எல்லோரும் மாபெரும் செயல்வீரர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
-
காலங்காலமாகத் தொடர்ந்து செய்துவந்த செயல்களின்மூலம் பெற்ற ஆற்றல் வாய்ந்த தங்கள் சுயேச்சையால் உலகையே மாற்றியமைக்க வல்ல மாபெரும் மனிதர்களாக இருந்தார்கள் அவர்கள்.
-
புத்தருக்கும் ஏசுவிற்கும் இருந்தது போன்ற மாபெரும் சுயேச்சை ,ஒரே பிறவியில் கிடைத்து விடுவதில்லை.
-
இவர்களின் தந்தையர் யார் என்பது நமக்குத் தெரியும். இந்தத் தந்தையர் மனித குலத்தின் நன்மைக்காக ஒரு வார்த்தையாவது பேசினார்களா என்பது சந்தேகமே!
-
ஜோசப்பைப் போன்று லட்சக்கணக்கான தச்சர்கள் வந்துபோய் விட்டனர்; லட்சக்கணக்கானோர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
-
புத்தரின் தந்தையைப் போன்ற எண்ணற்ற சிற்றரசர்கள் உலகம் முழுவதும் இருந்திருக்கின்றனர். பரம்பரையின் காரணமாக குணம் அமையும் என்றால், ஒருவேளை தன் சொந்த ஏவலர்கூட அடிபணியாத இந்தச் சிற்றரசரால் இன்று உலகில் பாதிக்கு மேற்பட்டவர்களால் கடவுளாக வழிபடப்படுகின்ற ஒரு மகனை எப்படி உருவாக்க முடிந்தது?
-
இன்று லட்சக்கணக்கான மக்களால் வணங்கப்படுகின்ற ஏசுவுக்கும் சாதாரண தச்சரான அவரது தந்தை ஜோசப்பிற்கும் இடையேயுள்ள பெரும் வித்தியாசத்தை எப்படி விளக்குவீர்கள்? பரம்பரைக் கோட்பாட்டை வைத்துக்கொண்டு இவற்றை யெல்லாம் விளக்க முடியாது.
-
புத்தரும் ஏசுவும் இந்த உலகின்மீது பரப்பிய மாபெரும் சுயேச்சை எங்கிருந்து வந்தது?
-
இத்தகைய மொத்த ஆற்றல் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? இந்த ஆற்றல் காலம் காலமாக அங்குதான் இருந்திருக்க வேண்டும். அது சிறுகச்சிறுக வளர்ந்து பிரம்மாண்டமான ஆற்றலாகி, ஒரு புத்தராக, ஓர் ஏசுவாக சமுதாயத்தின்மீது பாய்கிறது. இன்றும் பாய்ந்து பரவிக் கொண்டிருக்கிறது.
-
இவையெல்லாமே கர்மத்தால், செயலால்தான் நிச்சயிக்கப்படுகின்றன.
--
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்-
No comments:
Post a Comment