Friday, 13 January 2017

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-51


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-51
(சுவாமி விவேகானந்தர்)
--
நாம் நம்மைச் சுற்றிக் காணும் மலர்களின் காட்சி எழில் நிறைந்தது. காலைக் கதிரவனின் உதயம் அழகு நிறைந்தது, இயற்கையின் வண்ணங்கள் எல்லாம் எழிலோவியங்களாக விளங்குகின்றன. பிரபஞ்சமே அழகு ததும்பித் திளைக்கிறது. மனிதன் உலகில் தோன்றிய காலந்தொட்டே இந்த அழகை அனுபவித்து வருகிறான். மலைகள், கடலைநோக்கி அடித்துப் புரண்டோடும் பெரிய ஆறுகள், திக்குத் தெரியாமல் பரந்து கிடக்கின்ற பாலைவனங்கள், விரிந்த பெருங்கடல், விண்மீன்கள் இறைந்து கிடக்கின்ற வானம் எல்லாமே எழில் மிக்கவை, நுட்பமானவை. ஆம், அவை எல்லாமே நுட்பானவையாக பயபக்தியை ஊட்டுபவையாக உள்ளன. இயற்கை என்று நாம் சொல்கின்ற இந்தப் பெரும் சக்தி, நினைவுக்கெட்டாத காலத்திலிருந்தே மனித மனத்தின்மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அது, மனித சிந்தனையையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. அந்தப் பாதிப்பினால் எழுந்தது தான் இவையெல்லாம் என்ன? எங்கிருந்து வந்தன? என்ற கேள்வி.
மனிதன் படைத்தவற்றுள் மிகமிகப் பழமையான வேதங்களில்கூட இதே கேள்வி எழுவதைக் காண்கிறோம்: இது எங்கிருந்து வந்தது? இருப்பு, இல்லாமை எதுவுமே இன்றி இருள் இருளில் மறைந்திருந்தபோது, இந்தப் பிரபஞ்சத்தை யார் படைத்தது? எப்படிப் படைத்தார்கள்? இந்த ரகசியம் யாருக்குத் தெரியும்?
இந்தக் கேள்விகள் இன்றும் நம்மிடையே கேட்கப் பட்டு வருகின்றன. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்குப் பலகோடி முயற்சிகள் நடந்திருக்கின்றன. இன்னும் பலகோடி முயற்சிகள் நடந்துகொண்டேயிருக்கும்
. இந்தியாவின் புராதனமான தத்துவ ஞானிகள் இந்தக் கேள்விக்கு அளித்த பதிலைத் தற்கால அறிவுடன் இணைத்து உங்கள் முன் வைக்க நான் முயல்கிறேன்.
கேள்விகளுக்கெல்லாம் முந்தியதான இந்தக் கேள்வியின் சில அம்சங்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளது. இருப்பு, இல்லாமை இரண்டுமற்ற காலம் ஒன்று இருந்தது என்பது முதல் அம்சம்.
அப்போது இந்த உலகம் இருக்கவில்லை. கடல்கள், சமுத்திரங்கள், ஆறுகள், மலைகள், நகரங்கள், கிராமங்கள், மனிதர்கள், மிருகங்கள், செடிகொடிகள், பறவைகள் இவற்றையெல்லாம் தன்னுள் அடக்கிய நமது அன்னை பூமி, கிரகங்கள், நட்சத்திர மண்டலங்கள், மற்றும் படைப்பின் எல்லையற்ற பல விசித்திரங்கள் எவையுமே அப்போது இருக்கவில்லை. இது நமக்கு நிச்சயமாகத் தெரியுமா?
இந்த முடிவு எப்படி வந்தது என்பதை ஆராய முயல்வோம்.
--
தொடரும்....
--

No comments:

Post a Comment